ISSN (Print) - 0012-9976 | ISSN (Online) - 2349-8846

கட்டித்தழுவல் உத்தியும், உலகளாவிய வலதுசாரி தணலும்

டிரம்ப் - மோடி நட்பு ஓர் உயர் அளவிலான தூதரக ஒருமைப்பாட்டுக்கும், சித்தாந்த ஒருங்கிணைப்புக்கும் அடையாளமாக இருக்கிறது.

 

The translations of EPW Editorials have been made possible by a generous grant from the H T Parekh Foundation, Mumbai. The translations of English-language Editorials into other languages spoken in India is an attempt to engage with a wider, more diverse audience. In case of any discrepancy in the translation, the English-language original will prevail.

 

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இந்தியாவில் மேற்கொண்ட சூறாவளிச் சுற்றுப்பயணம் மாபெரும் வெற்றியாக சித்தரிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.  பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க ஜனாதிபதிக்கு ராஜ வரவேற்பு அளித்திருக்கிறார். டிரம்ப், தன்னுடைய பயணம் “மிகமிக அற்புதமாக” இருந்ததாக விவரித்து, மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொண்டிருக்கிறார்.

இந்த நிகழ்வு தூதரக உறவு மற்றும் அரசியலில் நல்லதொரு கலவையாகும். சந்திப்பின்போது இரு அரசாங்கங்களுக்கும் இடையே அதிகரித்துவரும் நேசவுணர்வு வெளிப்படுத்தப்பட்டது. இவற்றின் விளைவாக, இந்தியாவும், அமெரிக்காவும் இப்போது “ஒருங்கிணைந்த உலக அளவிலான போர்த்தந்திரக் கூட்டாளிகளாவர்.”

டிரம்ப், மிகவும் சந்தோஷமாக இருப்பது நன்றாகவே தெரிகிறது. ஏனெனில், அவர் சுமார் 3 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள ராணுவ ஒப்பந்தத்துடனும், இந்திய ராணுவப் படைகள், அமெரிக்காவின் நட்பு நாடுகளுடன் தன்னுடைய இயங்குதன்மையை அதிகரித்துக்கொள்ளும் என்று மோடியிடமிருந்து ஓர் உறுதிமொழியையும் பெற்று, தாயகம் திரும்பி இருக்கிறார். இதன் பொருள், இந்தியா, அமெரிக்காவிடமிருந்து மேலும் அதிக அளவில் ராணுவ ஆயுதங்கள் கொள்முதல் செய்யும் என்பதும், அவை அமெரிக்காவின் ராணுவ  சேவையகங்களுடன் தொடர்பினை ஏற்படுத்திக்கொள்ளும் என்பதுமாகும்.

மேலும் இந்தியா, “ப்ளூ டாட் நெட்வொர்க்” (“Blue Dot Network”) கிற்கும் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த வலைப்பின்னலில் சேர்வது என்பதன் பொருள், இந்தியா தான் மேற்கொள்ளும் அனைத்து உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சித் திட்டங்களும், அமெரிக்க சர்வதேச வளர்ச்சி நிதிக் கழகத்தால் தீர்மானிக்கப்பட்டுள்ள தர நிர்ணயத்தின்படி சான்றிடப்பட்டிருக்க வேண்டும் என்பதாகும்.

அமெரிக்க சமூக, அரசியல், பொருளாதார மற்றும் ராணுவ வலைப்பின்னல்களுடன் இந்தியா தன்னையும் செருகி, உபயோகிக்கும் விதத்தில் விருப்பத்தினை வெளிப்படுத்தி இருப்பது என்பதன்மூலம், டிரம்ப் தன் தாய்நாட்டிற்கு திருப்தியுடன் திரும்பிச்செல்ல வைத்திருக்கிறது. சீனாவுக்கு எதிராக தான் எடுக்கும் நிலைபாடுகளுக்கு இந்தியா ஓர் வலுவான கூட்டாளியாக இருக்கும் என அமெரிக்காவுக்கு மீளவும் உறுதி அளித்திருக்கிறது.

மோடி, இரு விஷயங்களைத்தான் டிரம்பிடமிருந்து ஆவலுடன் விரும்பினார். ஒன்று, தன்னுடைய வெளிநாட்டுப் பயணங்களுக்கு முட்டுக்கட்டை விதித்த மேற்கத்திய லிபரல்களுக்கு எதிராக வலுவான அடி தர வேண்டும். இரண்டாவது, அரசமைப்புச்சட்டத்தின் 370ஆவது பிரிவை ரத்து செய்தமைக்காக அமெரிக்கா தன்னை ஆதரிக்காது போகலாம் என்றிருந்த அச்சத்திலிருந்து நிவாரணம். டிரம்ப் இவ்விரண்டினையும் அளித்திருக்கிறார். ஆனாலும், பாகிஸ்தானை நேரடியாகப் பகைத்துக்கொள்வதன்மூலம் மோடிக்கு உதவிடவில்லை.

உயரடுக்கு இந்தியர், நாடு எம்எச்-60ஆர் கப்பல்படை ஹெலிகாப்டர்கள் மற்றும் ஏஎச்-64இ அபாச்சி ஹெலிகாப்டர்கள் வாங்க இருப்பது குறித்தும், ஹக்கானி வலைப்பின்னல் மற்றும் பாகிஸ்தானில் இயங்கிடும் டெஹ்ரிக்-ஐ-தலிபான் ஆகிய இயக்கங்களையும் பயங்கரவாதக் குழுக்களின் பட்டியலில் இணைத்திட டிரம்ப் உறுதி அளித்திருப்பதற்கும் அதிகமாகவே மகிழ்ச்சி கொள்ளலாம். மொத்தத்தில், புது தில்லி, வாஷிங்டன் தங்களை உதாசீனம் செய்திடவில்லை என்று திருப்தி அடைந்திருக்கிறது.

இவ்வாறு மிகவும் தம்பட்டம் அடிக்கப்பட்ட ராஜதந்திர நிகழ்வு, வட கிழக்கு தில்லியில் நடைபெற்ற வன்முறை வெறியாட்டங்களால் வெடித்ததன் விளைவாகத் தகர்க்கப்பட்டிருக்கிறது. மோடியும், டிரம்பும் சபர்மதி ஆற்றங்கரையில் ஒருவரையொருவர் ஆரத் தழுவிக்கொண்டும், காந்தி ஆசிரமத்தில் அமைதி குறித்து பாடங்களைக் கற்றுக்கொண்டிருந்த அதே சமயத்தில், யமுனை அருகில் மதவெறி யுத்தம் நாசத்தை விளைவித்தது. இறந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருப்பதை மறந்துவிட்டு, மோடியும் டிரம்பும் ஒருவர் முதுகை மற்றொருவர் தட்டிக்கொடுப்பதைத் தொடர்ந்தனர். இந்த ராஜதந்திரக் காட்சி எவ்வித இடையூறுமின்றி தொடர்ந்தது.

நடைபெற்று வந்த கொலைகள் குறித்து இவ்விரு தலைவர்களுமே அசிரத்தையுடன் இருந்ததற்குக் காரணம் அவர்களிடம் ஊறிக்கிடக்கும் வலதுசாரி அரசியல் சித்தாந்தமேயாகும். ஜனநாயக நிறுவனங்களை அழித்து ஒழிப்பது,  குடியேற்ற எதிர்ப்பு உணர்வு, முஸ்லீம்களுக்கு எதிரான உணர்வு போன்ற பொதுவான குணக்கேடுகளை மோடி, டிரம்புடன் பகிர்ந்துகொள்கிறார். தங்கள் பாரம்பரிய நாகரிகத்தை பலவீனப்படுத்துவதற்கு இத்தகைய தாராளமயம்தான் காரணம் என்று இருவருமே நினைக்கிறார்கள்.

இரு அரசியல்வாதிகளுமே நெருக்கடியிலிருந்து எந்த அளவிற்கு முடியுமோ அந்த அளவிற்குத் தங்களுக்குச் சாதகமாகக் கறந்துகொள்ள முயலலாம் என்று எதிர்பார்க்கக்கூடிய அதே சமயத்தில், டிரம்பின் வருகைக்கு ஒரு மாதத்திற்கு முன்பாவே தில்லியில் நிலைகொண்ட அமெரிக்க ரகசியத் துறை பேர்வழிகள் இந்தியாவின் தலைநகரில் பாதுகாப்பு நிலைமை சீர்கேடு அடைந்துகொண்டுவந்தது குறித்து எச்சரிக்கை ஒலி எதுவும் எழுப்பாதது ஆச்சர்யமாக இருக்கிறது. தில்லியில் நீறுபூத்த நெருப்பாக எரிந்துகொண்டிருந்த மதவெறித் தீயை மதிப்பிட அமெரிக்க உளவுத்துறை முற்றிலுமாகத் தவறிவிட்டது.  

அமெரிக்காவிற்கு இந்தியத் தூதராக இருந்த வர்தன் ஷ்ரிங்லா (தற்போது அயல்துறைச் செயலாளர்), அமெரிக்க சித்தாந்தவாதியும், அமெரிக்க வெள்ளை மாளிகையில் ஒரு முறை தலைமைப் போர்த்தந்திரவாதியாகவுமிருந்த ஸ்டீவ் பானனை இந்தியத் தூதரகத்தில் சென்ற ஆண்டு செப்டம்பரில் சந்தித்தபோதே, இத்தகைய சித்தாந்தம் மற்றும் ராஜதந்திரத்தின் கூட்டுக் கலவை துவங்கிவிட்டது.

தன்னுடைய தூதரக அந்தஸ்தையெல்லாம் ஓரங்கட்டிவைத்துவிட்டு, ஷ்ரிங்கலா மிகவும் துணிவுடன் பானனுடன் அவருடைய படத்தையும் பதிவேற்றி, ட்விட்டரில், அவரை “புகழ்மிக்க சித்தாந்தவாதி மற்றும் ‘தர்மத்தின்’ போர்வீரன்” என்று புகழ்ந்திருந்தார். இதே சமயத்தில் பானனின் உலகக் கண்ணோட்டம் குறித்து எர்ரல் மோரிஸ் என்பவரால் இயக்கப்பட்ட ஆவணப்படத்தின் பெயர் “அமெரிக்கன் தர்மா”  என்று அமைந்திருந்தது தற்செயலானதா என்று தெரியவில்லை. பானன், அவருடைய நிறவெறி மிகுந்த வீறாப்பு உரைகளால் அறியப்பட்ட நபராவார். இதன்மூலம் அவர், தங்களைப்போன்றே சர்வதேச அளவில் இயங்கிடும் சக பயணிகளின் அரசியல் நலன்களைப் பாதுகாப்பதற்கான தீவிர வலதுசாரி சர்வதேச இயக்கங்களுக்கு ஒளிவிளக்காக இருந்து வருகிறார்.

டிரம்ப், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெடான்யாஹூவும், பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சனும் தேர்தல்களில் வெற்றிபெறுவதற்கு உதவி இருக்கிறார். மேலும் அதேபோன்று அவர் மோடியின் தேர்தல் அதிர்ஷ்டங்கள் சரியத் தொடங்கியிருப்பதால் அவரைக் காப்பாற்றுவதற்காகவும் வருவார். மோடியும், ஏற்கனவே டிரம்பின் தேர்தல் வெற்றிவாய்ப்புகளுக்காக, இந்திய அமெரிக்கர்கள் மத்தியில் போதுமான அளவிற்கு ஊக்குவிப்பு உரைகளை மேற்கொண்டிருக்கிறார். இவ்வாறு மிகவும் முரண்பாடான முறையில்,   தேசியவாதம் மற்றும் உலகமய எதிர்ப்புக் கொள்கையை உயர்த்திப்பிடித்திடும் ஜாம்பவான்கள் உலக அளவிலான வலதுசாரி அரசியல் திட்டத்தின் முன்னணிப்படையாக இருக்கின்றனர்.

மோடி இந்தியாவில் குடியுரிமைக் கட்டமைப்பைத் தகர்த்திட மேற்கொண்டிருக்கும் முயற்சிகள் குறித்து, டிரம்ப் கள்ள மவுனம் மேற்கொண்டிருப்பதற்கான காரணம் என்ன? என்னவென்றால், அது “தேசம்-அரசு”(“nation-state”) என்கிற இஸ்ரேலின் புதிய சட்டத்திலிருந்து எவ்விதத்திலும் வித்தியாசமாக இல்லாதிருப்பதுதான்.

மோடி, தெற்கு ஆசியாவின் நெடான்யாஹூ என்று டிரம்ப் நம்புவதாகத் தெரிகிறது. யூதவியம் (Zionism) போன்றே, பிராமண இந்துத்துவாவும் டிரம்பின் மேலாதிக்கக் கருத்தியலுடன் (supremacism), தனி நெருக்கத்தைப் பெற்றிருக்கிறது. யூதர்கள் பாலஸ்தீனர்களை நடத்துவதுபோன்றே முஸ்லீம்களுக்கு உரிமைகளைப் பறித்திடும் இந்துத்துவா திட்டங்கள் குறித்தும், முஸ்லீம்களை நடத்தும் விதம் குறித்தும், டிரம்ப் மிகவும் திருப்தியடைந்திருப்பது போலவே தெரிகிறது.

டிரம்ப், நெடான்யாஹூவை பங்காளியாகக் கொண்டு, “மத்திய கிழக்கு அமைதி ஒப்பந்தம்” ஒன்றை ஏற்படுத்தியிருக்கிறார். அதேபோன்று ஒருதலைப்பட்சமான காஷ்மீர் திட்டத்தையும், காஷ்மீர் பிராந்தியத்தை மேலும் ஸ்திரமின்மையாக்கும் விதத்தில் டிரம்ப், மோடிக்குக் கூறியிருக்கக் கூடும்.

1984 சீக்கியர்களுக்கு எதிரான கலவரங்களுக்குப் பின்னர், தில்லியில் மிகவும் மோசமான முறையில் மதவெறித் தீ எரிந்துகொண்டிருந்த சமயத்தில், மோடி அமெரிக்க ஜனாதிபதியுடன் இருந்ததென்பது, மோடியின் அரசியல் வாழ்வில் அவருக்குக் அடுத்த “உயர் பரிசு” (“high point”) ஆகும். இங்கு நடந்துள்ளவை குறித்து அமெரிக்காவிடம் சென்று அவருக்கு எதிராக முறையிட முடியாது என்று தாராளவாதிகளுக்கு (liberals) கூறும் தைர்யத்தை அவர் நிச்சயமாகப் பெற்றிருக்கிறார்.  

Comments

(-) Hide

EPW looks forward to your comments. Please note that comments are moderated as per our comments policy. They may take some time to appear. A comment, if suitable, may be selected for publication in the Letters pages of EPW.

Back to Top