ISSN (Print) - 0012-9976 | ISSN (Online) - 2349-8846

தில்லியில் மதவெறி வன்முறை அரசியல்

அரசு எந்திரத்தின் மிகவும் திட்டமிடப்பட்ட தோல்வி, மாபெரும் அளவில் மக்களின் உயிரிழப்பிற்கும், உடைமைகள் சேதத்திற்கும் இட்டுச்சென்றிருக்கிறது

 

The translations of EPW Editorials have been made possible by a generous grant from the H T Parekh Foundation, Mumbai. The translations of English-language Editorials into other languages spoken in India is an attempt to engage with a wider, more diverse audience. In case of any discrepancy in the translation, the English-language original will prevail.

 

தில்லியின் சில பகுதிகளில் நடைபெற்ற வன்முறை வெறியாட்டங்கள் கடுமையான மனிதத் துயர்நிகழ்வாகும். இவை நம் குடியரசு எதிர்கொண்டிருக்கிற ஆட்சியாளர்களிடம் காணப்படும் அறநெறியின்மையையும், அரசியல் நெருக்கடி களையும் தெரிவிக்கிறது. வட கிழக்கு தில்லியில் பல்வேறு பகுதிகளில், இதுவரையிலும் 38 பேர் உயிரிழந்துள்ளார்கள் என்றும், நூற்றுக்கணக்கானவர்கள் மிகவும் மோசமான விதத்தில் காயங்கள் அடைந்துள்ளார்கள் என்றும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரின் உயிரிழப்புகளும், பொருளிழப்புகளும் கணக்கிலடங்கா நிலையில் இருக்கும் அதே சமயத்தில், இதர சமூகத்தினரின் துன்பங்களை ஆளும் கட்சி தன்னுடைய பிளவுவாத வார்த்தை ஜாலத்தைக் கூர்மைப்படுத்துவதற்குப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது.

ஜஃப்ராபாத்தில் பாரதிய ஜனதா கட்சி (பாஜக)யின் தலைவர் ஒருவர், குடியுரிமைத் திருத்தச் சட்டத்தினை எதிர்த்து, கிளர்ச்சிப் போராட்டங்களில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு எதிராக, வன்முறையை ஏவும் விதத்தில் மிகவும் நாணமற்றமுறையில் நெருப்பைக் கக்கிய பேச்சு, வன்முறை வெறியாட்டங்களை முடுக்கி விடுவதற்கான உடனடிக் காரணமாக இருக்கும் அதே சமயத்தில், பாஜக தில்லியில் தேர்தல் பிரச்சாரத்தின்போது உருவாக்கிய பொதுவான வெறுப்பு சூழல் விரைவில் ஏதோ நடைபெறக்கூடும் என்கிற தீய அறிகுறியை ஏற்படுத்தி இருந்தது. இப்போது மிகவும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள பகுதிகளில் பாஜக தலைவரும், மத்திய உள்துறை அமைச்சரும் உரையாற்றும் சமயத்தில் மதவெறி அடிப்படையில் குற்றச்சாட்டுகளை அடுக்கியது தற்செயலானதா? மேலும், பாஜக வென்ற எட்டு தொகுதிகளில் ஐந்து தொகுதிகளில் இப்போது வன்முறை வெறியாட்டங்கள்  நடைபெற்றிருப்பதைப் பார்க்கும்போது, அவர்கள் கட்டவிழ்த்துவிட்ட வெறுப்புப் பிரச்சாரத்தின் வீர்யம் எந்த அளவிற்கு இருந்திருக்கிறது என்கிற உண்மையை ஒருவர் பார்க்காமல் இருந்துவிட முடியாது. “கோலி மாரோ” (சுட்டுக் கொல்லுங்கள்) என்கிற இவர்களின் கோஷத்திற்கும், வன்முறை வெறியாட்டங்களின்போது காயம் அடைந்துள்ள நபர்களில் மூன்றில் ஒருவருக்கு குண்டு காயம் ஏற்பட்டிருப்பதற்கும் இடையேயான தொடர்பை, ஒருவர் எப்படிப் பூசி மெழுகிட முடியும்? குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய மக்கள்தொகைப் பதிவேடு, தேசியக் குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக அமைதியாகப் போராடி வருபவர்களை, அதிலும் குறிப்பாக முஸ்லீம் சமூகத்தினரைக் குறிவைத்து ஆளும் கட்சித் தலைவர்கள் துஷ்டத்தனமாகத் தொடர்ந்து பேசிவந்தது அவர்கள் மீது வன்முறை வெறியாட்டங்களை ஏவுவதற்கு அனுமதியளித்திடும் உணர்வை உருவாக்கியது என்றால் அது தவறல்ல. இத்தகைய அரசியல்ரீதியான தத்துவார்த்தரீதியான அனுமதியுடன் மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின்  நேரடிக்கட்டுப்பாட்டின்கீழ் இயங்கிடும் தில்லி காவல்துறையும் இணைந்துகொண்டிருப்பது ஆழமான கேள்விகளை எழுப்பி இருக்கின்றன.  இந்தக் கால கட்டத்தில், தில்லிக் காவல்துறையின் நடவடிக்கைகள் (அல்லது நடவடிக்கைகளின்மை) அதன் அலட்சியமான செயலற்ற தன்மையின் காரணமாக மிகவும் மோசமாக இருந்திருக்கின்றன. பிளவுவாத கோஷங்களை எழுப்பிய வன்முறைக் கும்பல்களுக்கு, காவல்துறை கேடயமாக சென்றிருக்கின்றன என்றும், அல்லது, காவல்துறையே இத்தகைய இழி நடவடிக்கைகளில் ஈடுபட்டன என்றும், குறிப்பிட்ட ஒரு சமூகத்தினரைக் அடித்து நொறுக்கின என்றும், அவர்களிடம் தேசிய கீதத்தைப் பாடுமாறு வலியுறுத்தின என்றும், அல்லது கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்வதற்காக ஆம்புலன்ஸ் வண்டிகள் வருவதைத் தடுத்தன என்றும் செய்திகள் வெளியாகியிருப்பது, எந்த அளவிற்கு காவல்துறை தங்கள் கடமையிலிருந்து தவறியிருக்கின்றன என்பதையும், சட்டத்தின் ஆட்சியை உயர்த்திப்பிடிப்பதிலிருந்து தவறி இருக்கின்றன என்பதையும் காட்டுகின்றன. மேலும், வன்முறை நிகழ்வுகளுக்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக உளவு ஸ்தாபனங்கள் அளித்திட்ட அறிக்கைகளின்மீது தில்லி காவல்துறை எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. உண்மையில், வன்முறை வெறியாட்டங்கள் தொடங்குவதற்கு முன்பு, பாஜக தலைவர் நெருப்பைக் கக்கும் பேச்சை உமிழ்ந்துகொண்டிருந்த சமயத்தில் அவருக்கு வலது பக்கத்தில்தான் தில்லி காவல்துறை அதிகாரி நின்று கொண்டிருந்திருக்கிறார். தில்லிக் காவல்துறை வெறுமனே மேலிருந்து வரும் கட்டளைகளுக்கு உட்பட்டுதான் செயல்பட்டது என்றால், பின் இவ்வன்முறை வெறியாட்டங்கள் அனைத்திற்கும் மத்திய உள்துறை அமைச்சகமும் மற்றும் மத்திய உள்துறை அமைச்சரும்தான் குற்றப்பொறுப்பாகிறார்கள். இது தொடர்பாக உள்துறை அமைச்சர் எதுவும் கூறாது கள்ள மவுனம் கடைப்பிடிக்கிறார். வேறு பல அம்சங்கள் முன்னணியில் இருப்பதால் இவ்வாறு இவர் தொடர்ந்து வராதிருக்கிறாரா என்று ஒருவர் ஆச்சர்யப்படலாம். நிலைமைகள் பூதாகரமான பின்னர் கட்டுப்படுத்தக்கூடிய அளவிற்கு போதுமான அளவிற்கு பாதுகாப்புப் படையினர் இல்லை என்று ஒரு வாதம் முன்வைக்கப்படுகிறது. ஆனால், இதனைக் கட்டுப்படுத்துவதற்காக துணைப் பாதுகாப்புப் படையினரை அனுப்ப மறுத்தது குறித்தோ அல்லது ராணுவத்தை அனுப்பாதது குறித்தோ பதில் இல்லை. ஆளும் இரட்டையர்களின் கடந்தகால வரலாற்றுப் பதிவுகளுடன் இப்போது ஏற்பட்டிருக்கும் மாபெரும் அளவிலான பிழைகள் மற்றும் விடுபடல்களை ஆராயும்போது, இந்த அரசாங்கத்தின் நோக்கம் குறித்து சந்தேகம் எழுகிறது.

சம்பவத்தின்போது பெரும் நெருப்பை விளைவிப்பதற்குக் காரணமாக இருந்த வெறுப்புப் பேச்சுக்களைப் பேசிய நபர்களைக் காப்பாற்றுவதற்கு அரசாங்கம் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருவதும் இத்தகைய சந்தேகத்திற்கான அடிப்படைகளாக அமைந்திருக்கின்றன. அரசாங்கத்தின் இரண்டாவது இடத்தில் இருக்கும் உயர் சட்ட அலுவலர் தில்லி உயர்நீதிமன்றத்தில் வாதிடும்போது, இவ்வாறு வெறுப்பை உமிழ்ந்த நபர்களுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்வதற்கு கால அவகாசம் கேட்டது சட்டத்தின் ஆட்சியின் கேலிக்கூத்தாகும். இந்த நபர்கள் மீது முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட வேண்டும் என்று அவசரப்படுத்தியதோடு, காவல்துறையினரின் செயல்பாடுகள் குறித்து கேள்விகள் எழுப்பிய நீதிபதி, அவசர அவசரமாக மாற்றப்பட்டார். அவருக்குப் பின் அமைந்த புதிய அமர்வாயம் அரசாங்க வழக்கறிஞர் கோரிய கால அவகாசத்தை அளிக்கிறது. இவை அனைத்தும் நீதி மறுக்கப்பட்டதற்கான அடையாளம் மட்டுமல்ல, ஆளும் கட்சியின் உறுப்பினர்களைப் பாதுகாத்திட அரசாங்கம் எந்த அளவிற்குச் சுறுசுறுப்பாக இயங்கி இருக்கிறது என்பதற்குமான அடையாளமாகும். இந்த வன்முறை வெறியாட்டங்கள் இதற்கு முன்பு ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பான வழக்கு மற்றும் ஜமியா மிலியா இஸ்லாமியா மத்தியப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற வன்முறை தொடர்பான வழக்குகளில் விசாரணை செய்ததன் மூலம் கெட்டபெயர் எடுத்துள்ள அதே அதிகாரிகள் விசாரிப்பார்கள் என்கிற உண்மையானது, இந்த அரசாங்கமானது உண்மையையும் நீதியையும் வெளிக்கொணர்வதில் எந்த அளவிற்கு உறுதியாக இருக்கிறது என்பதில் சந்தேகத்தைக் கூடுதலாக்கி இருக்கிறது.

இத்தகைய விழுமியங்களின் மீது ஆளும் கட்சியின் உறுதிமொழி எப்போதுமே இரண்டகமாக இருந்திருக்கிறது என்கிற அதே சமயத்தில், தில்லி அரசாங்கத்தின் பங்கு மற்றும் அதன் அரசியல் தலைமையும் நடந்துள்ள நெருக்கடியின்போது எப்படி நடந்துகொண்டிருக்கிறது என்பதும் மிகவும் விரும்பத்தக்கதாக இல்லை.  இதற்கு நிலைமையைச் சமாளிக்கக்கூடிய அளவிற்கு நிர்வாகத் திறமை இல்லை என்று சொன்னாலும்கூட, இது அமைதியையும் நல்லிணக்கத்தையும் கொண்டுவரக்கூடிய விதத்தில் தன் சக்திகளை அணிதிரட்டி இருக்க வேண்டும் என்றும் அதன்மூலம் தார்மீகரீதியாகவும், அரசியல்ரீதியாகவும் முன்னுக்கு வந்திருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. வெறுப்புத் தீயை அணைத்து மனித உயிர்களைக் காப்பாற்ற அதனால் முடியவில்லை என்றால், இந்த அளவிற்குப் பெரும்பான்மை பெற்றதனால் என்ன பயன்? நடந்துள்ள வன்முறை வெறியாட்டங்கள் ஒரு குறிப்பிட்ட அரசியல் நடவடிக்கையின் விளைவு என்று கருதப்படக்கூடிய நிலையில், நிச்சயமாக அதனை நிர்வாகரீதியாக மட்டும் சமாளித்திட முடியாது. நிச்சயமாக அதனை தில்லி அரசாங்கத்தால் செய்திட முடியாது. எனினும்கூட, பாதிப்புக்கு உள்ளான பகுதிகளுக்கு விரைந்து சென்று, மத்திய அரசாங்கத்தின்மீது நிர்ப்பந்தம் ஏற்படுத்துவதற்கு தன்னுடைய அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி இருக்க வேண்டும். ஆம் ஆத்மி கட்சி, ஆளும் கட்சியின் தத்துவார்த்த சவாலை எதிர்கொள்வதில் எப்போதுமே அடக்கியே வாசித்து வந்திருக்கிறது. மதவாத-பிளவுவாத சித்தாந்தத்திற்கு ஆளாகியுள்ள சக்திகளுக்கு, ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மீதான வன்முறை தாங்கள் தூக்கிப்பிடித்திடும் வெறுப்பு சித்தாந்தத்தை ஒருமுகப்படுத்துவதற்கு உதவிடும். அவர்களைக் காப்பவர்களாகவும்கூட காட்டிடும். இப்போது நடைபெற்ற நிகழ்வுகளின்போது மத்திய அரசாங்கம் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவதில் மிகவும் மோசமானமுறையில் தோல்விஅடைந்துள்ளபோதிலும், அதன் பிளவுவாத சித்தாந்தத்தால் எரியூட்டப்பட்ட பெரு நெருப்பு ஜுவாலைகள் மிகவும் வேகமாக முன்னுக்கு வந்துகொண்டிருக்கின்றன. இந்தச் சவாலை எதிர்கொண்டிட, நாட்டு மக்களை ஒற்றுமைக்காகவும், சமூக நல்லிணக்கத்திற்காகவும் அணிதிரட்ட வேண்டிய பணியை எதிர்க்கட்சிகள் உடனடியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.                   

Back to Top