ISSN (Print) - 0012-9976 | ISSN (Online) - 2349-8846

ஜம்மு-காஷ்மீரில் அடைத்து வைத்திருப்பதன் அரசியல்

ஜனநாயகத் தலைவர்களை தொடர்ந்து அடைத்து வைத்திருப்பது, சமரசத்திற்கான வாய்ப்புகளைச் சுருக்கிக்கொண்டிருக்கிறது.

 

The translations of EPW Editorials have been made possible by a generous grant from the H T Parekh Foundation, Mumbai. The translations of English-language Editorials into other languages spoken in India is an attempt to engage with a wider, more diverse audience. In case of any discrepancy in the translation, the English-language original will prevail.

 

ஜம்மு-காஷ்மீரில் மூத்த அரசியல் தலைவர்களுக்கு எதிராகப் பொது பாதுகாப்புச் சட்டத்தைப் பிரயோகித்திருப்பது, மத்திய அரசாங்கம் காஷ்மீர் தொடர்பாக ஒரு ஜனநாயக-சமரச அணுகுமுறையைப் பின்பற்றிட வெறுப்புடன் இருப்பதையே மீண்டும் ஒருமுறை அடிக்கோடிட்டுக் காட்டியிருக்கிறது.  2019 ஆகஸ்டில் அரசமைப்புச் சட்டத்தின் 370ஆவது பிரிவு ரத்து செய்யப்பட்டதிலிருந்தே பல அரசியல் தலைவர்கள், குறிப்பாக தேசிய மாநாட்டுக் கட்சியின் உமர் அப்துல்லா, ஜம்மு-காஷ்மீர் பிடிபி என்னும் பீப்பிள்ஸ் டெமாக்ரடிக் கட்சியின் மெஹபூபா முப்தி முதலானவர்கள் அடைப்புக்காவலில்/வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்கள். குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 107ஆவது பிரிவின்கீழ் ஒருவரை ஆறுமாதங்களுக்கு மேல் இவ்வாறு அடைத்து வைக்க முடியாது. அவ்வாறு அடைத்து வைக்கப்பட்டிருப்பவர்களை நீதிமன்றத்தின் முன் ஆஜர் செய்ய வேண்டியது அவசியமாகும். இவ்வாறு, கிரிமினல் நீதி பரிபாலன அமைப்பின் முறையான விதிமுறைகளைப் பின்பற்றாது அவர்களைத் தொடர்ந்து அடைத்து வைக்க வேண்டும் என்பதற்காக, இந்த அரசாங்கம் பொதுப் பாதுகாப்புச் சட்டத்தை பிரயோகித்திருப்பது போல் தோன்றுகிறது.  தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமாகிய ஃபரூக் அப்துல்லாவும் பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் 2019 செப்டம்பரிலிருந்து காவலின் கீழ் இருந்து வருகிறார். அரசமைப்புச் சட்டத்தின் கீழ் அளிக்கப்பட்ட சட்டத்தின் ஆட்சிக்குக் கட்டுப்பட்டு, தேர்தல் நடைமுறைகளில் தொடர்ந்து பங்கேற்று வந்த பிரதான ஜனநாயக நீரோடையில் பங்குகொண்ட தலைவர்களுக்கு எதிராக இத்தகைய அதீத நடவடிக்கைக்கு என்ன விளக்கம் அளிக்க முடியும்? ஜம்மு-காஷ்மீர் காவல்துறையினர் இத்தலைவர்களுக்கு எதிராகத் தயாரித்துள்ள கோப்புறைகள், இவர்கள் பொதுப் பாதுகாப்புக்கும், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கும் அச்சுறுத்தலாக இருந்தார்கள் என்பதை மெய்ப்பிக்கப் போதுமான அளவிற்கு விவரங்களுடன் இல்லை. உண்மையில், தேசிய மாநாட்டுக் கட்சி மற்றும் பிடிபி தலைவர்களுக்கு எதிராகச் சுமத்தப்பட்டுள்ள சில குற்றச்சாட்டுகள் கேலிக்குரியனவாகவும், சில வசதி கருதி சிலரை குறிவைத்துத் தாக்கக்கூடிய விதத்திலும் அமைந்திருக்கின்றன.

கோப்புறைகளில் கண்டுள்ளபடி இத்தலைவர்கள் பாதுகாப்புக்கும், சட்டம்-ஒழுங்குக்கும் மாபெரும் அச்சுறுத்தலாக இருப்பார்கள் எனில், ஆரம்பத்திலேயே அவர்களை ஏன் பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வில்லை? அவர்களுடைய முந்தைய  நடவடிக்கைகள் சாட்சியமாகக் காட்டப்பட்டிருப்பதால், அவை குறித்து நன்கு தெரிந்தும் மத்தியில் ஆளும் கட்சியானது அவர்களுடன் ஏன் விவாதங்கள் நடத்தியது, அல்லது அவர்களுடன் இணைந்து ஆட்சியில் அங்கம் வகித்தது?  தர்க்க ரீதியாகக் கேட்கப்படும் இத்தகைய கேள்விகளுக்கு அரசாங்கத்திடமிருந்து நம்பும்படியான விளக்கம் வராது. இவ்வாறு இந்தத் தலைவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் என்பவை ஆழமானப் புலனாய்வு எதன் அடிப்படையிலும் கிடையாது என்றே தோன்றுகிறது. மாறாக,  தங்களுடைய தடையற்ற வெளிப்பாடுகளுக்கு இவர்கள் வெளியே இருந்தால் அசவுகரியமாக இருக்கும் என்பதால், ஆட்சியாளர்களின் நோக்கம், காஷ்மீரில் பிரதான ஜனநாயகக் குரல்களை அடக்கிவைக்க வேண்டும் என்பதேயாகும். உண்மையில், இவ்வாறு சிறை வைக்கப்பட்டிருக்கிற தலைவர்கள் சிலரின் அறிக்கைகள் ஏற்கத்தக்கதல்ல என்று பிரதமரே அத்தலைவர்கள் அடைத்து வைக்கப்பட்டிருப்பதை நியாயப்படுத்தி இருக்கிறார். இத்தகைய வாதம், மிகவும் கலகலத்துப்போன காரணங்களின் அடிப்படையில் இருப்பதால், இதனை ஏற்றுக்கொள்வதில் ஆழமான பிரச்சனை இருக்கிறது. அரசாங்கத்தால் சொல்லப்படும் கதைகளை அப்படியே ஏற்றுக்கொள்வோம் எனில், பின் அரசியலில் எதிர்க்கட்சிகள் இருப்பது என்பதே மீமிகையாகிவிடும்.  

இது, காஷ்மீரில் ஒவ்வொரு நாள் பொது வாழ்விலிருந்தும் நிறுவனமய ஜனநாயக அரசியல் சக்திகளை இல்லாது அறவே ஒழித்துக்கட்டிவிடும், அல்லது அவர்களுக்கு இருந்துவரும் இடத்தை மிகவும் சுருக்கிவிடும். மேலும் இவ்வாறு அரசியல் வாகனங்களின் செயல்பாடுகள் வலுவான முறையில் ஒழித்துக் கட்டப்படுவதால்,  காஷ்மீர் மக்கள் தங்கள் கருத்துக்களை வெளியிடுவதற்கான ஜனநாயகரீதியான வாய்ப்பு வாசல்களையும் மூடிவிடும். இவ்வாறு ஜனநாயக நடைமுறைகளைப் பின்பற்ற முடியாத விதத்தில் ஒருவித அரசியல் சூன்ய நிலை உருவாக்கப்படுவதில் என்னவிதமான பகுத்தறிவு இருக்க முடியும்? மனிதாபிமான, இயல்பான உரிமைகள் மற்றும் நீதி ஆகியவற்றை விட்டு விடுங்கள், ஒரு குறுகிய, சட்டம்-ஒழுங்கு கண்ணோட்டத்தில்கூட இது விரும்பத்தக்கதல்ல.

தேசிய மாநாட்டுக் கட்சி மற்றும் பீப்பிள்ஸ் டெமாக்ரடிக் கட்சி போன்றவை இந்திய அரசியலமைப்பின் கீழான அரசியல் மற்றும் காஷ்மீர் மக்களுக்கு இடையே ஜனநாயகத் தொடர்பினை மிகவும் வலுவான முறையில் பெற்றிருக்கின்றன. எனவே, இந்த இணைப்பைத் துண்டிப்பது ஒரு விவேகமான செயல் அல்ல. அதிலும் குறிப்பாக, அரசமைப்புச் சட்டத்தின் 370 மற்றும் 35ஏ பிரிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையிலும், இரு யூனியன் பிரதேசங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், அதனைத் தொடர்ந்து மாநிலம் முழுமையாக ராணுவம் மற்றும் போலீசாரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டிருத்தல் நிலையில், இத்தகைய நடவடிக்கைகள் ஜம்மு-காஷ்மீர் மக்கள் மத்தியில் ஆட்சியாளர்கள் மீது நம்பிக்கையின்மையையும், கோபத்தையும், தங்களுக்குத் துரோகம் இழைக்கப்பட்டு விட்டதான எண்ணத்தையும் மிகவும் தீவிரமான விதத்தில் ஏற்படுத்தி இருக்கின்றன. இதனை அகற்றுவதற்கு ஏதேனும் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டுமானால் அதற்கு பிரதான அரசியல் கட்சிகளையும் சம்பந்தப்படுத்திட வேண்டியது அவசியமாகும். அப்போதுதான் அவற்றின் மூலம் மக்களின் மத்தியில் ஜனநாயக வெளிப்பாடுகளை வெளிக்கொணர்ந்து ஒரு சமரச சூழ்நிலையை ஏற்படுத்திட வழிவகுத்திட முடியும்.  எனினும், அத்தகைய ஜனநாயக வெளிப்பாடை வெளிக்கொணர்வதற்கு அல்லது மக்கள் மத்தியில் உள்ள அதிருப்தியை அகற்றுவதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்காது இந்த அரசாங்கம் மக்களின் இயல்பு வாழ்க்கையைத் தொடர்ந்து தாக்கிக் கொண்டிருக்கிறது. போலித்தனமாக அமைக்கப்பட்ட அல்லது செயற்கையாக உருவாக்கப்பட்ட இயல்பு நிலையினை உலகத்தின் முன் காட்டிக்கொண்டிருக்கிறது. இயல்பு நிலை திரும்பவிட்டது போன்று ஒரு நாடகத்தை உருவாக்கி உலகத்தின்முன் காட்டுவதே அரசாங்கத்தின் பிரதான குறிக்கோளாக மாறி இருக்கிறது.  மாறாக, அது தன்னுடைய அவசரகதியில் ஆற்றிய முரட்டுத்தனமான நடவடிக்கைகளால் ஏற்பட்டுள்ள சங்கடங்களைச் சரி செய்திட வெளிப்படைத்தன்மையுடன் முயல வேண்டும்.

ஜம்மு-காஷ்மீரில் நிலைமை இயல்பாக இருக்கிறது என்றால், சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது குறித்தும், மாநில அந்தஸ்து பறிக்கப்பட்டது குறித்தும் மாபெரும் மக்கள் ஆதரவும், மக்களிடையே உற்சாகமும் இருக்கிறது என்றால், பின் ஏன் இந்த அரசாங்கம் எதிர்க்கட்சிகளை செயல்பட அனுமதிக்கக் கூடாது? அரசாங்கத்தின் தரப்பில் கூறப்படுபவை அனைத்தும் உண்மையானால், பின் இந்த எதிர்க்கட்சித் தலைவர்கள் எல்லாம் மக்கள் மத்தியில் எவ்விதமான ஈர்ப்பையும் பெற்றிருக்க மாட்டார்கள். மக்களும் மத்தியில் ஆளும் கட்சியின் பக்கம் ஈர்க்கப்பட்டிருப்பார்கள். அரசாங்கம் சொல்லும் சித்திரம் சரி என்றால், அது காவலில் வைக்கப்பட்டிருக்கிற தலைவர்கள் மக்களைத் தங்களுக்குச் சாதகமாக வாக்களித்திடக்கூடிய வல்லமையைப் பெற்றிருப்பார்கள் என்று அஞ்சத் தேவை இல்லை. மாறாக, புதிய இந்தியாவில், புதிய காஷ்மீரை மேம்படுத்துவதற்காக நடவடிக்கைகள் எடுத்திட்ட இந்த ஆட்சியாளர்களை ஜம்மு-காஷ்மீர் மக்கள் அபரிமிதமான வாக்களித்து ஆதரிக்க மாட்டார்களா?

எனினும், ஜம்மு-காஷ்மீரின் இயல்பு நிலை குறித்து என்னதான் அரசாங்கம் அறிவித்த போதிலும் அங்குள்ள எதார்த்த நிலை என்ன என்பதை அது நன்றாகவே அறிந்திருக்கிறது.    தன்னுடைய வழக்கமான வீரப்பிரதாப வாய்ச்சொற்களுக்குப் பின்னே ஒளிந்துகொண்டு, எதார்த்த நிலையை அங்கீகரிக்க மறுத்துக் கொண்டிருக்கிறது, அங்குள்ள நிலைமைகளைச் சரிசெய்திடவும் முன்வர மறுக்கிறது. ஓர் அங்குலம் கூட பயனைத் தராத இத்தகைய இறுமாப்பு குணம்தான் இந்த அரசாங்கத்தின் வரையறுக்கப்பட்ட அம்சமாகவும், குறிப்பாக ஆளும் இரட்டையரின் குணமாகவும் இருந்து வந்திருக்கிறது. ஆகவேதான், விதிவிலக்கான நடவடிக்கைகளைத் திணிப்பதையும், அதீதமான சட்டங்களை அமல்படுத்துவதையும் தாங்கள்  பின்பற்றும் ஒரே பாதையாக இந்த அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.  காஷ்மீரில் இப்போதுள்ள நிலைமை ஆளும் கட்சியின் கற்பனையில் இயல்பான ஒன்றாக இருக்க முடியும். ஆனாலும், காஷ்மீரின் தலைவர் ஒருவர் கோபத்துடன் கூறியதுபோல, ஒட்டுமொத்த ஜம்மு-காஷ்மீரையும் ஒரு சிறைக்கூடம் என அறிவித்திட வேண்டும் என்று கூறியது மிகையான ஒன்று என பார்க்க முடியாது. 

Back to Top