இட ஒதுக்கீடு மீதான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு

இட ஒதுக்கீடுகள் அமலாக்கம் அரசமைப்புச்சட்டத்தின்கீழ் கட்டாயமாக்கப்பட்டிருப்பதாகும்.  அதனை அரசுகளின் விருப்பு வெறுப்புக்கு விட்டுவிட முடியாது.

The translations of EPW Editorials have been made possible by a generous grant from the H T Parekh Foundation, Mumbai. The translations of English-language Editorials into other languages spoken in India is an attempt to engage with a wider, more diverse audience. In case of any discrepancy in the translation, the English-language original will prevail.

 

உச்சநீதிமன்றம் மீண்டும் பொது நுண்ணாய்வுப் புயலின் மையமாக மாறியிருக்கிறது. இதற்கு இட ஒதுக்கீடுகள் தொடர்பாக சமீபத்திய அதன் தீர்ப்புக்கு நன்றி சொல்ல வேண்டும். முகேஷ் குமார் (எதிர்) உத்தர்காண்ட் மாநில அரசு (2020) வழக்கில் நீதிமன்றம், “பதவி உயர்வில் இட ஒதுக்கீடுகள் தனிநபர் கோரும் அளவிற்கு அது அடிப்படை உரிமை அல்ல,” என்று சர்ச்சைக்குரிய விதத்தில் அவதானித்திருக்கிறது. இது சர்ச்சையை ஏற்படுத்தி நாடாளுமன்றத்தையும் எட்டியிருக்கிறது. அரசமைப்புச்சட்டத் திருத்தத்தின் மூலமாக இந்தத் தீர்ப்புரையைப் புரட்டிப்போட வேண்டும் என்று அறைகூவல்களும் முன்வைக்கப்பட்டுள்ளன.  அநேகமாக இது ஓர் அதிகப்படியான நடவடிக்கையாகவே தெரிகிறது. இத்தீர்ப்பினைச் சொல்லியுள்ள பின்னணியை வைத்துப் பார்த்தால் அல்லது பார்க்கும்போது, நீதிமன்றம் உண்மையில் நன்கு நிறுவப்பட்ட சட்ட விதியை மட்டுமே கூறிக் கொண்டிருக்கிறது. அதாவது, நீதிமன்றம் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்காக குறிப்பிட்ட சதவீத அளவிற்கு இடங்களை ஒதுக்கீடு செய்ய அரசாங்கங்களை கட்டளையிட முடியாது என்கிறது.  தீர்ப்பின் சாராம்சங்களை நாம் பார்க்கும்போது இது வெளிப்படையாகவே மாறியிருக்கிறது:

“இந்த நீதிமன்றம் வகுத்துள்ள சட்டத்தின் பார்வையில், இட ஒதுக்கீடுகளை ஏற்படுத்த வேண்டிய கடமை மாநில அரசாங்கத்திற்கு இல்லை என்பதில் சந்தேகம் இல்லை. பதவி உயர்வில் இட ஒதுக்கீடுகள் தனிநபர் கோரும் அளவிற்கு அது அடிப்படை உரிமை அல்ல. இட ஒதுக்கீடுகள் அளித்திட வேண்டும் என்று மாநில அரசாங்கங்களுக்கு நீதிமன்றத்தால் ஆணை பிறப்பிக்கப்பட முடியாது.”

நிச்சயமாக, சட்டமும் அரசமைப்புச்சட்டமும் சில சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடுகள் அளித்திட வேண்டும் என்று கூறும்போது, நீதிமன்றம் அதன்கீழ் அத்தகைய சமூகத்தைச் சேர்ந்த உறுப்பினருக்கு அந்த உரிமையை செயல்படுத்திட வேண்டும். எனினும், குறிப்பிட்ட சமூகத்தினருக்கு குறிப்பிட்ட அளவில் இட ஒதுக்கீடுகள் வழங்க வேண்டும் என்று மாநில அரசாங்கத்திற்குக் கட்டளை பிறப்பித்திடுவதற்கான அதிகாரத்தை நீதிமன்றத்திற்கு கொடுப்பது என்பதும் ஓர் ஆபத்தான நடவடிக்கையாகும்.

சாதி இந்துக்களில் உயர் மத்திய வகுப்பினரின் கட்டுப்பாட்டில் உள்ள நீதித்துறைக்கு அத்தகைய அதிகாரத்தைக் கொடுக்கும்பட்சத்தில், அதன் அடிப்படையில் தாங்கள் போதுமானத் “தகுதிகள்” இருப்பதாகக் கருதும் சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடுகள் அளிப்பதற்குப் பொருத்தமான விதிகளை நீதிமன்றம் அமைத்தால், அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்று நினைத்துப்பார்த்தோமானால் நடுக்கத்தை ஏற்படுத்துகிறது.  

முகேஷ் குமார் வழக்கின் தீர்ப்புரையில் பிரச்சனைகள் இல்லாமல் இல்லை. தலித்துகள் மற்றும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடுகள் அளிக்கப்படாமல் பதவி உயர்வின்போது இட ஒதுக்கீடு அளிப்பது தொடர்பாக உத்தர்காண்ட் மாநிலத்தில் ஹரிஷ் ராவத் தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கத்தால் 2012இல் மேற்கொள்ளப்பட்ட பிரச்சனைக்குரிய முடிவின் மீது அத்தீர்ப்பு அமைந்திருந்தது. இத்தீர்ப்பானது, உத்தர்காண்ட் உயர்நீதிமன்றம், (2006) எம்.நாகராஜ் மற்றும் இதரர்கள் (எதிர்) மத்திய அரசு மற்றும் இதரர்கள் வழக்கில் அளிக்கப்பட்டிருந்த நடைமுறைகளைப் பின்பற்றாமல், பதவி உயர்வின்போது இட ஒதுக்கீடு அளித்திட காங்கிரஸ் அரசாங்கம் முடிவு எடுத்திருந்தது. எனவேதான் அதனை ரத்து செய்து, உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. எனினும், மாநில அரசின் பணிகளில் தலித்/பழங்குடியினர்களில் போதுமான அளவிற்குப் பிரதிநிதித்துவம் இல்லை என்பதைக் காட்டுவதற்கு போதுமான அளவிற்குத் தரவுகள் உள்ளபோதிலும், உத்தர்காண்ட் மாநில அரசு எவ்விதமான இட ஒதுக்கீடுகளும் இல்லாமல் பதவி உயர்வு அளித்திட மர்மமானமுறையில் நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது. (2018) ஜர்னாயில் சிங் (எதிர்) லெட்சுமி நாராயண் குப்தா வழக்கின்படி, தலித்/பழங்குடியினர் பணிகளில் போதுமான அளவிற்குப் பிரதிநிதித்துவம் இல்லை என்று அரசாங்கம் திருப்தியுறும்பட்சத்தில், பதவி உயர்வில் அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க முடியும்.  எனினும், தரவுகளின்படி மிகவும் மோசமானமுறையில் பிரதிநிதித்துவம் குறைவாக இருப்பதாக அரசாங்கத்திற்குத் தெரிந்தபின்னரும், அரசாங்கம் இட ஒதுக்கீடுகள் அளித்திட மறுக்க முடியுமா? இந்தக் கேள்விதான் நீதிமன்றத்தின் முன் நிலுவையில் இருந்தது. இந்த நுட்பமான வேறுபாட்டை நீதிமன்றம் முற்றிலுமாக விவாதிப்பதைத் தவிர்த்துவிட்டது. இந்த அடிப்படைக் கேள்விக்குப் பதிலளிக்கையில், பதவி உயர்வுகளில் இட ஒதுக்கீடுகள் வழங்காதிருந்தமைக்கு உத்தர்காண்ட் அரசாங்கமே பொறுப்பு என தீர்ப்பளித்திருக்க வேண்டியது நீதிமன்றத்தின் கடமையாகும். தலித்/பழங்குடியினரில் குறைந்த அளவு பிரதிநிதித்துவம் இருந்தாலும் எவ்விதமான இட ஒதுக்கீடுகளும் அளிக்கப்படுவதற்கு அதனைத் தகுதியாக எடுத்துக்கொள்ள முடியாது என்று எந்த அடிப்படையில் உத்தர்காண்ட் அரசாங்கம் முடிவெடுத்தது என்று நீதிமன்றம் கேட்பதன் மூலம் இதனை மிக எளிதாகச் செய்திருக்க முடியும். இட ஒதுக்கீடுகளை இல்லாது ஒதுக்கிவைத்திட போதிய அளவிற்குத் தரவுகள் இல்லை என்பதைச் சாக்காக சொல்லும்போது, அவை இருக்கும்பட்சத்திலும் இட ஒதுக்கீடுகள் வழங்க அவை போதுமான அளவிற்கு இல்லை என்று சொல்வது பொருந்தாவாதமாகவே தோன்றுகிறது. நீதிமன்றத்தில் இது எவரொருவருடைய வழக்காகவும் இல்லை என்றபோதிலும், நீதிமன்றமானது உத்தர்காண்ட அரசாங்கத்திற்கு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு, ஒரு குறிப்பிட்ட அளவு இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிட்டிருக்க வேண்டும். பதவி உயர்வுகளில் இட ஒதுக்கீடு வழங்காது ஒதுக்கிவைத்திருப்பதற்குப் பரிகாரம் காணும் விதத்தில், தன் முன் உள்ள சங்கதிகளின் அடிப்படையில் நீதிமன்றம் பகுத்தாய்ந்து புதிதாக முடிவு செய்திருந்தாலும் இப்போதைய வழக்கிற்குப் போதுமானதாகும்.  எனவே, நீதிமன்றமானது உத்தர்காண்ட் அரசாங்கத்தை அதனுடைய 2012 முடிவினை நியாயப்படுத்திடவும், பதவி உயர்வுகளில் இட ஒதுக்கீடுகளை மறுத்ததற்கான அடிப்படையையும் கேட்டிருக்க வேண்டும்.  அவ்வாறு செய்யமுடியவில்லை எனில், இது தொடர்பாக மறுபரிசீலனை செய்வதற்காக, திருப்பி அனுப்பி இருக்க வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, நீதிமன்றத்தால் எவ்விதமான விளக்கமும் கோரப்படவில்லை. உத்தர்காண்ட் அரசாங்கமும் எவ்விதமான பதிலையும் அளிக்கவுமில்லை. பதவி உயர்வுகளில் இட ஒதுக்கீடு இல்லாதிருப்பது ஒரு “நெறிமுறையாகவே” மாறியிருப்பதும், தலித்/பழங்குடியின சமூகத்தினர் தாங்கள் ஏன் அத்தகைய இட ஒதுக்கீடுகளுக்குத் தகுதியுடையவர்கள் என்பதைக் காட்ட வேண்டும் என்பதும் ஓர் உறுதிப்படுத்தப்படாத அனுமானமாக இருக்கிறது.  “தகுதி” என்று மேல்தட்டு/பிராமணீய கருத்தின் அடிப்படையில் அமைந்துள்ள இந்த அனுமானம், வலுவான சமத்துவம் குறித்த அரசமைப்புச்சட்டத்தின் கட்டளைக்கு முன்பாக பறக்கிறது. மேலும், முகேஷ் குமார் வழக்கு, தலித்/பழங்குடியினர் பிரச்சனைகளுக்கு நீதித்துறையானது முற்றிலும் கூருணர்ச்சியற்ற முறையில் இருப்பதை உயர்த்திப்பிடிக்கிறது. நீதிமன்றம், தன் முன்னுள்ள தரவுகள் தலித்/பழங்குடியினர் போதுமான அளவிற்குப் பிரதிநிதித்துவம் தரப்படவில்லை என்று தெளிவாகக் காட்டியுள்ள போதிலும், பதவி உயர்வுகளில் இட ஒதுக்கீடுகள் அளிப்பதில்லை என்று மிகவும் எளிதானமுறையில் மாநில அரசாங்கத்தால் அளிக்கப்பட்டுள்ள மொட்டையான அறிக்கையை அப்படியே ஏற்றுக்கொண்டிருக்கிறது. ஏன் அவ்வாறு அளிப்பதில்லை என்று அரசாங்கத்தை நீதிமன்றம் கேட்கவில்லை. சமூகத்தில் சமத்துவத்தை உத்தரவாதப்படுத்துவதற்காக அரசமைப்புச்சட்டத்தால் உருவாக்கப்பட்டுள்ள கடமையின் ஓர் அங்கம் என்று பார்ப்பதற்குப் பதிலாக, இட ஒதுக்கீடுகள் என்பதை அரசாங்கத்தின் விருப்பத்திற்கிணங்க அளிக்கப்படும் “கருணை” என்று கருதும் உள்ளார்ந்த நம்பிக்கையையே இது பிரதிபலிக்கிறது. மேலும், முகேஷ் குமார் தீர்ப்புரையை, ரவிதாஸ் கோவில், வனங்களிலிருந்து பழங்குடியினரை வெளியேற்றுதல், தலித்/பழங்குடியினர் (வன்கொடுமைத் தடைச்) சட்டத்தின் ஷரத்துக்களை நீர்த்துப்போகச் செய்தல் போன்றவற்றில் பிறப்பிக்கப்பட்ட சமீபத்திய தீர்ப்புரைகளின் பின்னணியில் பார்த்திட வேண்டும். நீதிமன்றத்தின் ஆணைகள் மற்றும் தீர்ப்புகள் பெரும்திரளான மக்கள் அளித்திட்ட நிர்ப்பந்தத்தின் காரணமாக, திரும்பப் பெறப்பட்டிருக்கின்றன, நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன மற்றும் தலைகீழாக புரட்டிப்போடப்பட்டிருக்கின்றன என்றாலும், அவை நீதிமன்றத்தில் நிலவும் மேல்சாதி ஆதிக்கத்தினரின் பிரதிபலிப்பேயாகும்.  பழங்குடியினர், தலித்துகள் மற்றும் சிறுபான்மையினர் ஆகியோரின் பிரதிநிதித்துவம் அங்கே பெயரளவில் மட்டுமே இருந்து வருகிறது. எனவே, இத்தகையதொரு அமைப்பு, அரசமைப்புச்சட்டம் வகுத்துத் தந்துள்ள விதத்தில் சமூக நீதி அல்லது சமத்துவம் அளித்திட உண்மையான உறுதியுடன் செயல்படும் என எதிர்பார்ப்பது அதீதமான ஒன்றேயாகும்.

..

Comments

(-) Hide

EPW looks forward to your comments. Please note that comments are moderated as per our comments policy. They may take some time to appear. A comment, if suitable, may be selected for publication in the Letters pages of EPW.

Biden’s policy of the “return to the normal” would be inadequate to decisively defeat Trumpism.