ISSN (Print) - 0012-9976 | ISSN (Online) - 2349-8846

ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் பங்குகள் விற்பனை

ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் பங்குகளை பொதுமக்களுக்கு விற்பதற்கான முன்மொழிவு, ஓர் அரசியல் நிலைப்பாட்டிற்கும் மேலான ஒன்றா?

The translations of EPW Editorials have been made possible by a generous grant from the H T Parekh Foundation, Mumbai. The translations of English-language Editorials into other languages spoken in India is an attempt to engage with a wider, more diverse audience. In case of any discrepancy in the translation, the English-language original will prevail.

 

2020 பட்ஜெட்டில், மத்திய அரசாங்கம் இந்தியாவில் இன்சூரன்ஸ் துறையில் மிகப் பெரும் நிறுவனமாக விளங்கும், எல்ஐசி என்னும் ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் பங்குகளை அடுத்த நிதி ஆண்டில், விற்பதற்கு முன்மொழிந்திருக்கிறது. ஐபிஓ எனப்படும் ஓர் ஆரம்ப பொது விற்பனை (initial public offering) மூலமாக எல்ஐசி-யின் 10 சதவீதப் பங்குகளைத் தனியாருக்கு விற்பதற்கு முடிவு செய்திருக்கிறது. இது, அரசாங்கத்தின் தனியார்மய சார்பு மற்றும் நாட்டின் பொதுச் சொத்துக்களைப் பணமாக்கும் உத்தியின் கொள்கையோடு ஒத்துப்போகிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஊடகங்களில் வந்துள்ள தகவல்களின்படி, 2021 நிதியாண்டில் அரசாங்கம் தனியாருக்குத் தாரைவார்த்திட குறியீடாக வைத்திருக்கிற 2.1 டிரில்லியன் ரூபாய்கள் மதிப்பீட்டில், எல்ஐசியிடமிருந்து மட்டும் மூன்றில் ஒரு பங்கு விற்பதற்கு முடிவு செய்திருக்கிறார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், தனியாருக்குத் தாரை வார்த்திடும் துறைகளில் எல்ஐசி-யையும் பட்டியலிட்டிருப்பதென்பது ஏதோ நடப்பு அரசாங்கத்தின் மூளையில் உதித்த திட்டம் என்று நினைத்திட வேண்டாம். இதற்கு முந்தைய காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கமும் இந்த சிந்தனையைக் கொண்டிருந்தது. எனினும் அவர்கள் இதனை உண்மையில் அமல்படுத்துவதைத் தவிர்த்து ஒதுங்கி இருந்தார்கள்.  எல்ஐசியின் கட்டமைப்பும் அதன் முதலீட்டுத் துறைகளும் மிகவும் சிக்கலானவைகளாக இருந்தபோதிலும், அதன் 100 சதவீதப் பங்குகளும் அரசாங்கத்திற்கே சொந்தமானதாக இருப்பதால், எல்ஐசி ஆளும் அரசாங்கத்தின் “கறவைப் பசுவாக” இருந்து, நெருக்கடிகளில் சிக்கித் தவிக்கும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு நிதி அளித்து அவற்றை நெருக்கடிகளிலிருந்து விடுவிக்க முடியும். அதிகாரபூர்வ அறிக்கையைத் தவிர, எதார்த்தத்தில் எல்ஐசி-யைத் தனியாருக்குத் தாரைவார்ப்பதற்காகப் பட்டியலிட்டதில், முந்தைய ஆட்சியாளர்களின் உணர்வுகளிலிருந்து இன்றைய ஆட்சியாளர்களின் சிந்தனையோட்டம் எந்த விதத்தில் வித்தியாசமானது?

உண்மையில், 2018-19இல் நெருக்கடிக்கு ஆளாகி நிலைகுலைந்து தள்ளாடிக்கொண்டிருந்த இண்டஸ்ட்ரியல் டெவலப்மெண்ட் பேங்க் ஆப் இந்தியா-வின் 51 சதவீதப் பங்குகளை எல்ஐசி கையகப்படுத்தியதன் மூலம், தன்னுடைய இருப்புநிலைக் குறிப்பில் பிரச்சனைகள் வந்தபோதிலும் கூட, அதனைக் காப்பாற்றிடும் “கடைசிப் புகலிடமாக” எல்ஐசி இருந்திருக்கிறது. மத்தியில் ஆட்சியில் அரசியல் கட்சிகள் மாறியிருந்தபோதிலும், எதார்த்தம் இதுதான். எல்ஐசியில் ஒரு பகுதியைத் தனியாருக்கு விற்பது என்கிற நடைமுறை இத்துடன் நின்றுவிடுமா என்பதும் சந்தேகமே. ஏனெனில், இப்போது தனியாருக்குத் தாரைவார்த்திட இருக்கும் பங்குகள் தாரைவார்க்கப்பட்டபின்பும்கூட, எல்ஐசியிடம் 90 சதவீதப் பங்குகள் மீதமிருக்கும். பொருளாதாரத்தின் மேலாண்மைக்காக நாட்டின் சொத்துக்களைப் பணமாக்கும் அரசின் நடைமுறை என்பது நமக்குப் புதிதான ஒன்று அல்ல என்றபோதிலும், நடப்பு அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் கவலைப்பட வேண்டிய அம்சம் என்னவெனில், பொதுத்துறை நிறுவனங்களின் உபரியை வெளிப்படுத்த வெட்க்க்கேடான முறையில் மறுப்பதும், நாட்டின் எதார்த்த பொருளாதார நிலையைக் காட்டிடும் அமைப்புகளின் தரவுகளை வெளிப்படுத்தாமல் நசுக்குவதும் மற்றும் எவ்விதக் காரணமுமின்றி பொதுத்துறை நிறுவனங்களை பொதுவாகத் தனியாருக்குத் தாரைவார்த்திட விரும்புவதுமாகும். பொருளாதாரத்தின் மாபெரும் பிழை மேலாண்மை காரணமாக நாட்டின் பொதுச் சொத்துக்களைப் பணமாக்குவதை இந்த அரசாங்கம் குறியாகக் கொண்டிருக்கிறதா என்பது விவாதிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

இந்த சமயத்தில், எல்ஐசியின் பங்குகளில் கொஞ்சம் தனியாருக்குத் தாரைவார்ப்பது 1956ஆம் ஆண்டு எல்ஐசி சட்டத்தின் திருத்தத்தின் அடிப்படையில்தான் என்று ஒருவர் வாதிடலாம் என்கிற அதே சமயத்தில், பல்வேறு இதர காரணங்களால் இதனை அவ்வாறு நீர்த்துப்போக விட்டுவிட முடியாது. முதலாவதாக, எல்ஐசி சாமானிய மனிதர்களின் “பணத்தின் காவலர்” என்று மனதால் உணரக்கூடிய சித்திரத்தை எதிரணியில் உள்ள அரசியல் கட்சிகளில் சில கொண்டிருந்தபோதிலும், இவ்வாறு எல்ஐசியின் பங்குகளை விற்பதுதொடர்பாகக் கொண்டுவரப்பட்டிருக்கும் திருத்தங்களை உண்மையிலேயே முழுமையாக அவை எதிர்க்கின்றனவா என்பதும் ஆய்வுக்குரிய ஓர் அம்சமாகும். ஏனெனில், ஆட்சி புரிந்த அனைத்து அரசியல் கட்சிகளுமே தங்கள் நிதி மேலாண்மைக்காக கழகத்தின் கருவூலத்தைப் பயன்படுத்தி வந்திருக்கின்றன என்பதுதான் வரலாறு. மேலும், இப்போதைய அரசாங்கம் நாடாளுமன்றத்தில் மிகவும் அரசியல் கூருணர்வுமிக்க சட்டமுன்வடிவுகளை நிறைவேற்றியிருக்கும் சூழ்நிலையில், எல்ஐசி சட்டத்தை திருத்துவதற்காக ஒரு சட்டமுன்வடிவைக் கொண்டுவந்து, அதுவும் அது ஓர் நிதிச்சட்டமுன்வடிவாக இல்லாத நிலையில், அதனை நிறைவேற்றுவது என்பது இந்த அரசாங்கத்திற்கு அநேகமாக சிரமமான ஒன்றாக இருக்காது. இரண்டாவதாக மற்றும் மிகவும் முக்கியமாக, மிகவும் கவலையளிக்கும் அம்சம் என்னவெனில், இந்தச் சட்டமுன்வடிவு நிறைவேறும்போது, இதன் பங்குகள் தனியாருக்கு விற்கப்படும் போது அதன் பாதிப்புகள் என்னவாக இருக்கும் என்பது குறித்து இன்சூரன்ஸ் நிறுவனம் மட்டுமல்ல, காப்பீடு எடுத்துக் கொண்டுள்ள பாலிசிதாரர்களும் கவலைப்படத் தொடங்கியிருப்பதாகும்.

எல்ஐசி பங்குகளை விற்பதை நிறுவனரீதியான கண்ணோட்டத்தில் பார்ப்போமானால், எல்ஐசி-யின் இன்றைய நடப்பு மூலதன அடித்தளம்  100 கோடி ரூபாயாக (இதன் மொத்த சொத்துக்களின் மதிப்பு 32 லட்சம்  கோடி ரூபாயாகும்.)விரிவாக்கம் செய்யப்படுவது குறிப்பிடத்தக்க பங்கினையாற்றும். இம் மூலதன அடித்தளத்தை எப்படி மறுகட்டமைப்பு செய்யப்போகிறோம் என்று அரசாங்கம் எங்கேயும் குறிப்பிடாத அதே சமயத்தில், இன்சூரன்ஸ் நிறுவனத்தின் முதலீடுகள் மற்றும் நிதி வல்லமை போன்றவற்றை அதன் பங்குகளைத் தனியாருக்கு விற்பதற்கு முன் வெளிப்படுத்துவது கட்டாயமாகும். மறுபக்கத்தில், எல்ஐசியின் பங்குகளை வாங்குபவர்களும், எல்ஐசியின் தற்போதைய அந்தஸ்திலும், பாலிசிதாரர்களின் நம்பிக்கைக்கு மிகவும் முக்கியமான உபரி விநியோகம் மற்றும் இறையாண்மை உத்தரவாதம் ஆகியவை தொடர்பாகவும் திருத்தங்களைக் கொண்டுவரக் கோருவார்கள்.

கடந்த எழுபது ஆண்டுகளில் எல்ஐசி அநேகமாக பங்கேற்பு வணிகத்தைப் புரிவதில் ஒரு முன்மாதிரியாக இருந்து வந்திருக்கிறது. பங்குதாரரின் பங்கு, இன்சூரன்ஸ் நிறுவனத்தின் லாபத்தில் 10 சதவீதத்திற்கு மேலாக இல்லாது இருப்பதை அனுமதித்து, 2011இல் இன்சூரன்ஸ் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்திருந்த போதிலும், 2013இலிருந்தே அரசாங்கம் எல்ஐசியிடமிருந்து 10 சதவீத உபரியைக் கோரி வந்திருக்கிறது. எல்ஐசி நிறுவனமும் தன் உபரியில் 5 சதவீதத்தை மத்திய அரசாங்கத்துக்குக் கொடுத்து வந்திருக்கிறது. மீதம் உள்ள 95 சதவீதத்தை போனஸ் வடிவத்தில் பாலிசிதாரர்களுக்கு வழங்கி வந்திருக்கிறது. இப்போது எல்ஐசியின் பங்குகள் தனியாருக்கு விற்கப்படுவதன் காரணமாக, பாலிசிதாரர்களின் போனஸ் தொகை குறைந்து, அரசாங்கம் கூடுதலாக ஆதாயம் அடைவதை நிராகரித்திட முடியாது. எல்லாவற்றிற்கும் மேலாக,  எல்ஐசியின் “இறையாண்மை உத்தரவாதத்தின்” மீது ஏற்படுத்தக்கூடிய எவ்விதமான தலையீடாக இருந்தாலும், அது ஊகமான ஒன்றாக இருந்தாலும்கூட,  எல்ஐசி மீது பாலிசிதாரர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையில் ஊறு விளைவிக்கும் என்பது கற்பனையல்ல.

எல்ஐசியின் வருமான அறிக்கைகள், கடந்த ஐந்தாண்டுகளில், பிரிமியம் வருமானம் சுமார் 60 சதவீதம் என்றும், அதன் வருமானத்தில் கிட்டத்தட்ட 90 சதவீதம் இன்சூரன்ஸ் தொகைகளை அளிப்பதற்கும், அதன்மூலம் மிகவும் குறைந்த அளவிலேயே மொத்த லாப ஈவு இருந்து வந்திருப்பதையும் காட்டுகின்றன. இந்நிலையில், வர்த்தக மேலாண்மையில் விவேகமின்றி இருப்பது பாலிசிதாரர்களை சங்கடத்திற்குள் தள்ளிடும்.   பிரிமியம் வருமானத்தில் எல்ஐசிக்கு ஏற்படும் வளர்ச்சி, பரும வளர்ச்சியால் வரையறைக்கு உட்படுத்தப்படும் அதேசமயத்தில், இதற்கு முற்றிலும் முரண்பாடான முறையில், எல்ஐசி மிகவும் மோசமான முறையில் பங்குச்சந்தை வணிகத்தில் கடந்த ஐந்தாண்டுகளாக ஈடுபட்டு வந்திருக்கிறது.  இது இன்சூரன்ஸ் நிறுவனத்தின் முதலீட்டு உத்தியின்மீது மேற்கொள்ளப்பட்ட அரசியல் நிர்ப்பந்தங்களின் பிரதிபலிப்பாக இருக்குமாயின், பின், இப்போது எல்ஐசியின் பங்குகள் தனியாருக்கு விற்கப்படும் முன்மொழிவின்மீதும் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டியது நமக்கு அவசியமாகும்.

..

Back to Top