ISSN (Print) - 0012-9976 | ISSN (Online) - 2349-8846

தில்லி தேர்தல் பிரச்சாரத்தின் தொனியும் குணமும்

இரண்டு பிரச்சார மாதிரிகளில் தேர்தல் முடிவை நிர்ணயிக்கப்போவது எது?

 

The translations of EPW Editorials have been made possible by a generous grant from the H T Parekh Foundation, Mumbai. The translations of English-language Editorials into other languages spoken in India is an attempt to engage with a wider, more diverse audience. In case of any discrepancy in the translation, the English-language original will prevail.

 

தில்லியில் இரண்டு போட்டியிடும் கருத்தியல்களின் இரைச்சலுக்கு மத்தியில், மக்களின் குரலைத் தெளிவாகக் கேட்பது அவ்வளவு எளிதல்ல. இந்தத் தேர்தல் இரண்டு அரசியல் மாதிரிகளுக்கு இடையில் நடக்கும் போட்டி. அண்டை வீட்டாரின் அரசியலை முன்னிருத்தி, அன்றாடத் தேவைகளை நியாயமான விலைவில் வழங்குவதற்கான உத்தரவாதத்தை அளிக்கும் அரசியல் ஒரு புறம். மத ரீதியான தேசியவாதத்திற்கு தீவிரமாகக் குரல் கொடுக்கும் விவகாரம் மறுபுறம். வளர்ச்சிக்கும் மதரீதியான தேசியவாதத்திற்கும் இடையில் நடந்த இந்த போராட்டம் தில்லி தேர்தலுக்கான தேதி நெருங்க நெருங்க தீவிரமடைந்தது.

தேர்தல் பிரச்சாரம் தொடங்கும் போதே ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவான போக்கு தென்பட்டது. கடந்த ஐந்து ஆண்டுகால ஆட்சியில், அந்தக் கட்சி தனது முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளது என்று தன் நம்பகத்தன்மையை நிரூபித்துள்ளதாக கள அறிக்கைகள் தெரிவித்தன. கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளில் கணிசமான பணியை இந்தக் கட்சி செய்துள்ளது. இறங்குமுகத்தில் சென்று கொண்டிருந்த அரசு பள்ளி அமைப்பு, இந்த ஆட்சிக்காலத்தில் புத்துயிர் பெற்றுள்ளது.

அதைப் போலவே, இந்தக் கட்சியின் மொஹல்லா மருத்துவமனைக்கான முயற்சி, சுகாதாரத்துறை சீர்திருத்தத்திற்கான புதிய மாதிரியாக மாறியுள்ளது. இது மற்ற மாநிலங்களின் அரசுகளால் பின்பற்றப்படுகிறது. இதன் சுகாதாரத்துறை முன்முயற்சிகளை பாராட்டுவோர்களில் தில்லியின் மத்தியதர வகுப்பினரும் உள்ளனர். இவர்கள் இந்த சேவைகளைப் பயன்படுத்த துவங்கியுள்ளனர். இந்த பிரச்சாரத்தின் போது மோடிகேர் மற்றும் மொகல்லா மருத்துவமனைக்கு இடையிலான விவாதம் அர்த்தமற்றதாகிப் போனது, ஏனெனில் மோடிகேர் என்பது இன்னும் கற்பனையாகவே உள்ளது. ஆனால் மொஹல்லா மருத்துவமனைகள் ஓர் உறுதியான அனுபவமாக உள்ளது.

வாக்காளர்களில் விளிம்புநிலை பிரிவினர்களின் மத்தியில் ஆம் ஆத்மி கட்சி தன் அடித்தளத்தை ஸ்திரப்படுத்தி உள்ளது. இத்தகு சூழலில் மற்ற கட்சிகள் நுழைவது கிட்டத்தட்ட சாத்தியமல்லாத ஒன்றாகவே உள்ளது. இந்து தேசியவாதம் என்ற கோஷங்களால் அவற்றை அசைக்க முடியாது. சில அங்கீகாரமற்ற குடியிருப்புக்களை ஒழுங்கமைத்து அதன் மூலம் தில்லிவாசிகளைக் கவர பாரதீய ஜனதா கட்சி முயற்சித்தது. ஆனால் இத்தகு முயற்சியால் எந்தத் தாக்கமும் ஏற்படவில்லை.

பீகார் மற்றும் உத்தரபிரதேசத்திலிருந்து இடம் பெயர்ந்த பூர்வாஞ்சலி மக்கள்தொகைதான் தில்லி தேர்தல்களுக்கான முக்கிய திறவுகோல். கடந்த 25 ஆண்டுகளில் அவர்கள் கணிசமான அளவில் வளர்ந்துள்ளனர். இந்திய பிரிவினைவாதத்தை அனுபவித்த இந்துக்கள் மற்றும் சிறிய வணிக வர்க்கம்தான் முன்னர் பாஜகவின் ஆதரவு தளமாக இருந்தது. பாஜகவின் பாரம்பரிய வாக்கு வங்கிக்கும் புலம் பெயர்ந்த பூர்வாஞ்சலி வாக்காளர்களுக்கும் இடையிலான எதிர்பார்ப்புக்களின் மோதலாக இது இருந்தது. பூர்வாஞ்சலி மக்கள் அரசியல் ரீதியாக முக்கியமற்றவர்கள், அதனால் அவர்களை பாஜகவும் காங்கிரஸ் கட்சியும் புறக்கணித்து வந்தது. இந்த சந்தர்ப்பத்தை ஆம் ஆத்மி கட்சி புரிந்துகொண்டு அவர்களுக்கு கணிசமான பிரதிநிதித்துவத்தை வழங்கியது. இந்த முக்கியத்துவத்தை உணர்ந்த பாஜக, தற்போது மனோஜ் திவாரியை முதலமைச்சர் வேட்பாளர்களில் ஒருவராக முன்னிருத்துவதன் மூலம் அந்த மக்களை கவரப்பார்க்கிறது. இந்த தலைமைக்கான தேர்தல் முரண்பாடுகள் அற்றது அல்ல. ஏனெனில் பாஜகவின் மூத்த தலைவர்களுள் பலருக்கு தில்லியின் பஞ்சாபிக்கள் மத்தியில் அடித்தளம் உள்ளது.

வளர்ச்சிக்கான அலுவல் நிரலில் பாஜக தோற்றுக்கொண்டிருக்கிறது. இந்த விவாதத்தின் அம்சங்களை மாற்றுவதற்கான எந்த முயற்சியையும் பாஜக விட்டுவைக்கவில்லை. குடியுரிமைத் திருத்தச் சட்டம் மற்றும் குடிமக்கள் தேசியப் பதிவேட்டிற்கு எதிரான இயக்கங்களை இந்துக்களுக்கு எதிரானது மற்றும் தேச விரோதமானது என்று முன்னிறுத்துவதன் மூலம் அரசியல் இலாபம் பார்க்க பாஜக விரும்பியது. “மோடி”யை மையமாக வைத்த தேசியவாதத்தை உயர்த்திப் பிடிக்க “துகள் துகளான கூட்டம்” என்ற முழக்கத்தை அந்தக் கட்சி உருவாக்கியது. இந்து தேசியவாதிகளுக்கு மத்தியில் ஒரு கிளர்ச்சியான பிம்பத்தை தனக்கு உருவாக்குவதற்கு பாஜகவின் சில தலைவர்கள் அவர்களுக்குள்ளேயே போட்டியிட்டுக் கொண்டு சினமூட்டும் கோஷங்களை முழங்கினர். “நாட்டிற்கு துரோகம் விளைவிக்கும் கூட்டம்“ என்ற முழக்கம் சிலரை வன்முறையாளர்களாக தவறான வழியில் தூண்டுவதற்கான ஆற்றல் பெற்றிருந்தது.

இரண்டு கட்சிகளுக்குமே ஷாஹீன் பாக் ஓர் அரசியல் கற்பனையின் களமாகத் தோன்றியது. இவர்களால் யாருக்கு பலன் என்று எவருக்கும் தெரியாது. தனது ஆதரவை தெரிவிக்க அங்கு செல்லவோ அல்லது அதிகமாக பேசவோ கூடாது என்று அரவிந்த் கேஜ்ரிவால் தொடக்கத்தில் முடிவெடுத்தார். “துகள் துகளான கூட்டம்” என்ற கூட்டத்தின் முத்திரை தன் மீதும் உடனடியாகக் விழுந்துவிடுமோ என்ற அச்சம் அவருக்கு இருந்தது. அந்த இயக்கத்தை காங்கிரஸ் வெளிப்படையாகவே ஆதரித்தது. அந்தக் கட்சியின் சார்பாக அந்த போராட்ட களத்தின் மேடையிலேயே காங்கிரஸ்காரர்கள் மேடையைப் பகிர்ந்துகொண்டனர். இந்த கிளர்ச்சியாளர்களுக்கு தன் ஆதரவை ஸ்திரமாக அளிக்க ஆம் ஆத்மி கட்சி மறுத்துவிட்டதன் பின்னணியில் இயந்திரத்தனமாக தேர்தல் கணக்குகளை பின்பற்ற வேண்டும் என்று அக்கட்சி சிந்தித்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யாததால், ஒரு கொள்கை சார்ந்த முடிவெடுப்பதில் ஆம் ஆத்மி கட்சி ஒரு குறிக்கோள் அடிப்படையிலான பதவியை தேர்ந்தெடுப்பதற்கான தார்மீக துணிச்சலும் இல்லாததையே காட்டுகிறது.

தில்லியில் நான்கு விதமான வாக்காளர்கள் உள்ளனர். முதலாவதாக, கட்சி ஊழியர்கள். அவர்கள் அந்த குறிப்பிட்ட கட்சி பற்றுடையவர்கள். என்ன நடந்தாலும் அந்த கட்சிக்குத்தான் வாக்களிப்பர். இரண்டாவதாக, வலைப்பின்னல் வாக்காளர்கள். இவர்கள் எந்தக் கட்சியையும் சார்ந்தவர்கள் அல்ல, ஆனால் சில விவகாரங்களின் அடிப்படையில் அல்லது தொண்டர்களின் தாக்கத்தால் வாக்களிப்பவர்கள். மூன்றாவதாக, கவரக்கூடிய வாக்காளர்கள். இவர்கள் கட்சி ஊழியர்களால் கவரப்படுபவர்களாயினும், சில விவகாரங்களின் அடிப்படையில் வாக்களிப்பவர்கள். நான்காவதாக, மிதக்கும் வாக்காளர்கள். இவர்கள் கடைசி இரண்டு நாட்களில் தங்கள் வாக்கினை முடிவு செய்வார்கள். அப்போது போட்டியிடும் வாதங்களை எடைபோட்டு அதற்கேற்ப முடிவெடுப்பவர்கள். தற்போது, இவர்களுள் எந்த விதமான வாக்காளர்கள் ஒரு கட்சிக்கு வாக்களிப்பார்கள் என்பது அவசர சூழ்நிலைகளைப் பொறுத்தது. 2015ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல்களில் பாஜக தோல்வி அடைந்ததற்கான காரணம் என்னவென்றால், அந்தக் கட்சியின் தொண்டர்கள் அந்தக் கட்சிக்கே வாக்களித்தார்கள் என்றாலும் மற்ற மூன்றுவிதமான வாக்காளர்களையும் அணிதிரட்ட பாஜக தொண்டர்கள் எந்தவிதமான முயற்சிகளையும் எடுக்கவில்லை. அப்போது முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்பட்ட கிரேன் பெடி அவர்கள் தொண்டர்களுடன் நட்புறவு பேணவில்லை. பாஜகவின் தொண்டர்களுள் பலர் இராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கம் எனும் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள். இந்துத்துவா குடும்பத்திற்கு வெளியே உள்ளவர் என்று அவர் கருதப்பட்டார்.

தற்போதைய நிலையில் அரசியல் நோக்கர்கள் என்ன கூறுகிறார்கள்? ஆம் ஆத்மி கட்சியின் விவாதங்கள்  அதன் வளர்ச்சிக்கான அலுவல்நிரலின் அடிப்படையில் இருப்பதால், அந்த கட்சிக்கு சற்று ஆதரவு அதிகமாக உள்ளது என்று கருதுகின்றனர். ஆம் ஆத்மி கட்சியின் அலுவல்நிரலை கேலிக்குரியது என்று நிரூபிப்பதிலேயே எதிர்க்கட்சிகள் நிறைய நேரம் செலவிட்டுள்ளன. தில்லி வாக்காளர்களின் அரசியல் மனநிலையையும் புத்திசாலித்தனத்தையும் சோதிக்கும் விதத்தில் இந்த தேர்தல் அமையும்.

Comments

(-) Hide

EPW looks forward to your comments. Please note that comments are moderated as per our comments policy. They may take some time to appear. A comment, if suitable, may be selected for publication in the Letters pages of EPW.

Back to Top