அரசமைப்புச்சட்டத்தின் உறுதிமொழி
.
The translations of EPW Editorials have been made possible by a generous grant from the H T Parekh Foundation, Mumbai. The translations of English-language Editorials into other languages spoken in India is an attempt to engage with a wider, more diverse audience. In case of any discrepancy in the translation, the English-language original will prevail.
சமீபகாலம் வரை, இந்திய அரசமைப்புச் சட்டம் என்பது ஒரு முக்கியமான முறைப்படுத்தும் ஆவணம் என்றும், அதிலும் குறிப்பாக 1950 ஜனவரி 26இலிருந்து மிகுந்த முக்கியத்துவம் உடையது என்றும்தான் ஒரு பொதுவான புரிதல் இருந்து வந்தது. மேலும், அதே நாளில் தில்லி, ராஜபாதையில் ராணுவத்தின் வல்லமையைக் காட்டும் நிகழ்வு நடந்தபோது, அது தங்களைப் பாதுகாத்திடும் என்ற நம்பிக்கையையும், ஒரு வலுவான நாடுதான் என்ற உணர்வையும் குடிமக்கள் மத்தியில் உருவாக்கியதும் உண்மைதான். அரசமைப்புச்சட்டக் கொள்கைகள், நம்மில் சிலருக்கு கவர்ச்சியற்றதாகத் தோன்றக்கூடும். எனினும், இதன் பொருள் நாம் அரசமைப்புச்சட்டத்துடன் தொடர்பு இல்லாதவர்கள் என்பதல்ல. பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்கள் என்னும் பல்வேறு மட்டங்களில் போதிப்பதன் மூலமாக அரசமைப்புச் சட்டத்துடன் நமக்குப் பரிச்சயம் ஏற்பட்டிருக்கிறது என்று அழுத்தம் தரவேண்டிய தேவையில்லை. அதேபோன்று, மத்தியிலும் மாநிலங்களிலும் அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொள்ளும்போது நடைபெறும் நிகழ்வுகளிலும் அரசமைப்புச்சட்டத்தின்கீழ் வேண்டிக்கொள்வதை ஒருவர் பார்க்க முடியும். இவ்வாறு, பல்வேறு அரசாங்கத்தின் பணிகளில் பணியாற்றும் உயர்மட்ட அதிகாரிகளின் ஒரு முக்கியமான அம்சமாக அரசமைப்புச்சட்டமும், பதவிப் பிரமாணமும் விளங்குகிறது. பதவிப் பிரமாணங்கள் ஒருவருக்குத் தேவைப்படுவதாலும், தேவைப்படும்போதும் அளிக்கப்பட்டு எடுத்துக் கொள்ளப்படுகின்றன. அரசமைப்புச்சட்டத்திற்கு இவ்வாறான அறநெறிக் கடப்பாட்டு நிலை, பதவிப் பிரமாண நிகழ்வுகள் மூலம் தனிநபர்களுக்கு, சட்ட ரீதியாக மேற்கொள்ளப்படுகிறது.
இத்தகைய பின்னணியுடன், பல்வேறு இடங்களில், கிளர்ச்சிப் போராட்டங்களில் ஈடுபட்டிருப்பவர்கள் பெரும் திரளாக இத்தகைய பதவிப் பிரமாண நிகழ்வுகளை மேற்கொண்டிருப்பதன் மீது நம் கவனத்தைக் குவிப்பது மிக முக்கியமாகும். குடிமக்கள், அரசமைப்புச்சட்டத்தில் பொறிக்கப்பட்டுள்ள அனைவருக்குமான கொள்கைகளுக்குத் தங்களின் கடப்பாட்டு நிலையை உறுதிப்படுத்துவதற்கு, இப்புனிதப் பாதையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். நாட்டில் ஜனநாயகப் பாரம்பர்யங்களை வலுப்படுத்தும் விதத்தில், தங்கள் அரசமைப்புச்சட்டக் கடமையைச் செய்யத் தவறியவர்களும் அரசு நிறுவனங்களில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டிருக்கிறார்கள். அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர்களிடம், தாங்கள் அரசமைப்புச்சட்டத்தின் கடமையைச் செய்யத் தவறியிருக்கிறார்களா என்று நேரடியாகக் கேட்கும்போது, அவர்கள் உடன்பாடான பதில்களைச் சொல்வது என்பது அநேகமாகக் கிடையாது. அரசாங்கத்தில் அதிகாரத்தில் உள்ளவர்கள் அரசமைப்புச்சட்டத்தினைப் பின்பற்றுவதாக முழுமையாக உறுதிபூண்டிருப்பதாக கூறிக்கொள்வதில் முற்றிலும் நம்பிக்கையுடன் இருப்பார்கள். மேலும் அவர்கள், தாங்கள் அரசமைப்புச்சட்டத்தினைப் பின்பற்றுவதாகத்தான் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டதாகக் கூறுவார்கள்.
பதவிப் பிரமாணம், அரசமைப்புச்சட்டக் கட்டளையைப் பின்பற்றி, அதன் அடிப்படையில் செயல்படுவதற்கேற்றவிதத்தில் ஒருவிதமான உறுதிமொழியை உட்படுத்துகிறது. எனினும், பதவிப்பிரமாணம் என்பது ஒழுங்கமைக்கப்பட்ட நிறுவன வளாகங்களில் ஒரு புனிதமான நடவடிக்கையாக இருந்ததிலிருந்து விலகிச் சென்றிருக்கிறது. இப்போது அது இந்திய நகரங்கள் பலவற்றின் வீதிகளுக்குச் சரியாகவே வந்திருக்கிறது. இந்தப் புனித நடவடிக்கை வெகுஜனக் குணாம்சத்தைப் பெற்றிருக்கிறது. மக்கள் பெரும் திரளாக பதவிப் பிரமாணம் எடுத்துக்கொள்வது, மூன்று முக்கியமான அறநெறிக் காரணங்களால் தனித்துவமிக்கதாகிறது. முதலாவதாக, இது ஓர் அறநெறி அறிக்கையாக நிறைவேற்றப்பட்டிருக்கிறது அல்லது அரசமைப்புச்சட்டத்தின் கொள்கைகளை அதிகாரிகள் தங்கள் பகுத்தறிவுத்திறனைப் பயன்படுத்தி உண்மையாகப் பின்பற்றவேண்டும் என்று சுட்டிக்காட்டும் விதத்திலும் அமைந்திருந்தது. இவ்வாறு, மக்கள்திரள் பதவிப் பிரமாணங்கள் எடுத்துக்கொள்வது என்பது இதனை மீறும் அதிகாரிகளுக்கு ஒரு நினைவூட்டாகவும் இருக்கிறது. இரண்டாவதாக, எவ்விதமான மத ஏணியிலும் ஏறாமல், அனைவருக்கும் சமமான விதத்தில், குடியுரிமை வழங்கவேண்டும் என்பதற்கான கிளர்ச்சிப் போராட்டங்கள், அதனை எவரேனும் வந்து தொடங்கி வைத்திட வேண்டும் என்று எதிர்பார்க்காமல் தாமாகவே அறநெறிவுணர்வுடன் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது என்பதையும் மனதில் கொள்ளவேண்டியது முக்கியமாகும். இப்புனிதமான நடவடிக்கை, சுயமரியாதை என்கிற அறநெறி சக்தியின் அடிப்படையில் அமைந்திருக்கிறது. மூன்றாவதாக, இவ்வாறு கூட்டாக பதவிப்பிரமாணங்கள் எடுத்துக்கொள்வது, அரசமைப்புச்சட்டத்தை மதித்து நடப்பவர்கள் மத்தியில் ஊக்கத்தையும் உத்வேகத்தையும் அதிகரிப்பதற்கு ஓர் அறநெறி உந்துசக்தியாகவும் விளங்குகிறது. அரசமைப்பச் சட்டத்திற்கு உண்மையாக இருப்போம் என்று காட்டுவதற்காக எடுத்துக்கொள்ளப்படும் பதவிப் பிரமாணங்கள் மக்கள் மத்தியில் ஜனநாயக உணர்வை உருவாக்குவதற்கும் அதனை மேலும் வலுப்படுத்துவதற்குமான நடைமுறைக்கு பெரிய அளவில் ஆதரவை அளித்திருக்கிறது.
அரசமைப்புச்சட்டத்தின்கீழ் இயங்கவேண்டிய சமூகத்தினர் உருவாவதற்கான சாத்தியக்கூறு, “அரசமைப்புச்சட்டத்தின்கீழ் இயங்கும் நபர்களைக்” கட்டுப்படுத்திட ஓர் உறுதிமொழியை அளிக்கிறது, அல்லது அரசமைப்புச்சட்டத்தின் ஆதரவாளர்களை மேலும் தீர்மானகரமான முறையில் ஒருங்கிணைக்கிறது. மேலும் இது பதவிப்பிரமாணங்கள் எடுத்துக்கொண்டவர்கள் அதன் புனித சக்தியை மற்றும் சாரத்தை ஏற்க மறுத்து போலித்தனமாக இயங்கும் நபர்களைத் தனிமைப்படுத்திடுவதற்கான உறுதியையும் பெற்றிருக்கிறது. பதவிப் பிரமாணங்கள் போலித்தனமானவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று நமக்கு நினைவூட்ட வேண்டிய தேவையில்லை. அரசமைப்புச்சட்டத்தைக் காப்போம் என்று பதவிப் பிரமாணங்கள் எடுத்துக்கொள்வது, ஜனநாயகத்தைப் பாதுகாப்போம் என்று உறுதிமொழியையும், அரசமைப்புச்சட்ட சமூகத்தினரை உருவாக்குவதையும் உட்படுத்துகிறது. சமீபத்தில் நடைபெற்ற மக்கள்திரளினரின் சத்தியப் பிரமாணங்களை, அரசமைப்புச்சட்டத்தின் அபிலாசையின் ஒரு வெளிப்பாடாக, நாட்டில் அரசமைப்புச்சட்டத்தைப் பாதுகாத்திடுவோம் என்று கிளர்ச்சிப் போராட்டங்களில் ஈடுபட்டிருப்போருக்கு உத்தரவாதம் அளிக்கக்கூடிய ஓர் ஆவணமாகப் பார்த்திட அவசரப்பட்டுவிடக் கூடாது. அரசமைப்புச்சட்டத்திற்கான சத்தியப் பிரமாணங்கள், அரசமைப்புச்சட்ட உணர்வுமட்டத்தை உயர்த்திப்பிடித்திட வேண்டும் என்கிற உறுதிமொழியை ஒவ்வொருவரும் கடைப்பிடித்திட வேண்டும் என்பதைப் பரிந்துரைக்கின்றன. உண்மையில், இப்புதிய முயற்சிகள் அரசமைப்புச்சட்டத்தின் உறுதிமொழியின் ஓர் வெளிப்பாடாகும். சத்தியப் பிரமாணங்கள் மூலமாக சிறந்ததொரு எதிர்காலத்திற்கான உறுதிமொழிக்கு ஒரு புதிய அழுத்தத்துடன், இவ்வாறு, அரசமைப்புச்சட்டத்தின்மீது பொது மக்கள் சத்தியங்கள் மேற்கொண்டிருப்பது, முறையான சட்டரீதியான செயல்பாடுகளுக்கும் மேலாக வெகுதூரம் சென்றிருக்கிறது.