ISSN (Print) - 0012-9976 | ISSN (Online) - 2349-8846

தேசிய புலனாய்வு முகமையின் கையில் சென்ற எல்கார் வழக்கு

தேசிய புலனாய்வு முகமையின் கைக்கு எல்கார் வழக்கினை மாற்றம் செய்தது மகாராஷ்டிர அரசின் நிர்வாக திறனை குறைத்து மதிப்பிடுவதாகும்.

 

The translations of EPW Editorials have been made possible by a generous grant from the H T Parekh Foundation, Mumbai. The translations of English-language Editorials into other languages spoken in India is an attempt to engage with a wider, more diverse audience. In case of any discrepancy in the translation, the English-language original will prevail.

 

ஜனவரி மாதம் 24ஆம் தேதி, மத்திய உள்துறை அமைச்சகம், எல்கார் பரிஷத் வழக்கின் புலன் விசாரணையை மகாராஷ்டிரா காவல்துறையிடமிருந்து மாற்றி தேசிய புலனாய்வு முகமையிடம் (என்ஐஏ) ஒப்படைத்துள்ளது. மாநிலங்களின் உரிமைகளை மீறி என்ஐஏ எவ்வாறு கூட்டாட்சி தத்துவத்திற்கு அச்சுறுத்தல் விளைவிக்கிறது என்பதை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. மத்திய அரசு இவ்வாறு வரம்பு மீறுவது மாநிலங்களுடன் மோதலை உருவாக்கும். இதனால் பாரதீய ஜனதா கட்சியின் ஆட்சி இல்லாத மாநிலங்களில் ஸ்திரமற்ற தன்மை உருவாகும். இந்த வழக்கைப் புலனாய்வு செய்யும் காவல்துறை அதிகாரிகளை மகாராஷ்டிராவின் துணை முதலமைச்சரும் உள்துறை அமைச்சரும் சந்தித்த பிறகு, இந்த வழக்கை மத்திய அரசுக்கு உடனே மாற்றும் முடிவு எடுக்கப்பட்டது என்பதைக் கவனிக்க வேண்டும். இந்த வழக்கை மாற்றும் முடிவு எடுப்பதற்கு முன்னர், மாநில அரசுடன் எந்தவித கலந்தாலோசனையோ அல்லது தொலைத் தொடர்போ மேற்கொள்ளப்படவில்லை என்று மாநில உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். தங்களுடைய அதிகார வரம்பில் உள்ள ஒரு வழக்கை அந்த மாநில அமைச்சர்கள் மறுபரிசீலனை செய்து தீர்க்க முற்படுகையில் மத்திய அரசு ஏன் அதிகமாக அதிர்ச்சியடைய வேண்டும்? தற்போதுள்ள ஆளும் கூட்டணியும் அதன் தலைமையும் எல்கார் பரிஷத் மற்றும் பீமா கோரிகன் வழக்குகளில் முன்பிருந்த அரசின் நடத்தையையும் செயல்களையும் கேள்வி கேட்கத் தொடங்கியுள்ளன.

சென்ற மாதம், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரான சரத் பவார், ஒன்பது செயற்பாட்டாளர்கள் மற்றும் வழக்கறிஞர்களை எல்கர் பரிஷத் வழக்கில் புனே போலீசார் கைது செய்து தொடர்ச்சியாக சிறையிலடைக்கப்பட்டுள்ளது குறித்து வருத்தம் தெரிவித்தார். முந்தைய அரசின் செயற்பாடுகளும் புலன் விசாரணையும் மிகவும் சந்தேகத்திற்குரியதாகவும் வேறு ஒருவரால் தூண்டப்படுவதாகவும் உள்ளது. இது குறித்து பவார் ஏற்கெனவே மகாராஷ்டிரா முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்தச் சூழ்நிலையின் பின்னணியில்தான் இந்த மறுபரீசிலனை கூட்டத்தைப் பார்க்க வேண்டும். இத்தகைய சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டதன் விளைவானது பாஜக கூட்டத்தின் முதுகெலும்பில் நடுக்கத்தை உருவாக்கியுள்ளது. இதனால் தூண்டப்பட்டு இந்த விவகாரத்தை மாநில அரசின் கையிலிருந்து பறிக்கக்கூடிய சாத்தியக்கூறுக்கு மத்திய அரசு வழி வகுக்கிறது. முன்னாள் முதல்வரின் நடுக்கமும் அளவுக்கு மீறிய உத்வேகமும் இந்த வழக்கை மாற்றி அவருக்கு ஆதரவான போக்கை (குறிப்பாக அவருக்கு நிம்மதி கொடுக்கும் வகையில்) தெரிவிக்கிறது. அவரது ஆட்சியின் கீழ் இந்தப் புலன்விசாரணை மேற்கொள்ளப்பட்டபோது அதன் நேர்மை குறித்து அவர் உறுதியாக இருந்திருந்தால், இந்த வழக்கு மாற்றப்படுவது தன்னைக் குற்றம் சாட்டுவது போல் என்று அவர் ஏன் உணரவில்லை என்பது ஆச்சர்யமே. அதிலும் அவர் உள்துறை அமைச்சகத்தை அப்போது தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.

இதுவரை, பூனா நகர காவல்துறையினர் இரண்டு குற்றப்பத்திரிக்கைகளை இந்த வழக்கில் தாக்கல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்கள் மீது சாட்டப்பட்ட இரண்டு கொடிய குற்றங்களை மெய்ப்பிக்கும் வகையில் எந்தவிதமான வலுவான தடயங்களும் அளிக்கப்படவில்லை. அதாவது பிரதமரை கொலை செய்வதற்காக சதி தீட்டப்பட்டது மற்றும் பீமா கோரிகானில் வன்முறையைத் தூண்ட சதி தீட்டப்பட்டது என்பனவே அந்தக் குற்றச்சாட்டுக்கள். உண்மையில், 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் தேதி பீமா கோரிகனில் வன்முறையைத் தூண்ட எல்கார் பரிஷத் திட்டம் தீட்டியது என்ற விவாதத்தை அப்போதைய முதலமைச்சர் கூட, 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிக்கை அளிக்கும் போது குறிப்பிடவில்லை. அதில் இந்துத்துவா அமைப்புகளுக்கு பங்குள்ளது என்று ஒப்புக்கொள்ளும் நிர்ப்பந்தம் அவருக்கு இருந்தது. ஆரம்பத்திலிருந்தே சந்தேகத்தின் தூண்டில் இந்துத்துவா தீவிர அமைப்புகளையும் அவர்களது அடியாட்களையும் நோக்கியே தொங்கிக் கொண்டிருக்கிறது. பூனாவின் கிராமப்புற காவல்துறையினரின் புலன் விசாரணை அந்த திசையிலேயே சென்றது. பீமா கோரிகன் வன்முறையில் எல்கர் பரிஷத் அமைப்பையும் அதனுடன் தொடர்புடைய நபர்களையும் இணைப்பது - அந்த அமைப்புடன் தொடர்பு இல்லாதவர்களையும் இணைப்பது, இந்துத்துவா சக்திகளைப் பாதுகாப்பதற்காக வழக்கைத் திசைதிருப்பும் முயற்சியாகப் பலராலும் பார்க்கப்பட்டது. சிறப்புப் புலனாய்வுக் குழுவின் பாரபட்சமான புலனாய்வு இந்தத் திட்டங்களை வெளிப்படுத்தியிருக்கும். பல்வேறு சமூகங்களுக்கு மத்தியில் சமூக நல்லிணக்கத்தை சீர்குலைத்து பிரிவுண்டாக்கும் பாஜகவின் பங்கினை முன்னுக்குக் கொண்டு வந்திருக்கும். மேலும், இந்தக் கைதுகளும் ஒட்டுமொத்த வழக்குமே, மத்திய அரசையும் ஆளும் கட்சியையும் விமர்சிப்பவர்கள் மீது ஒரு சதி தீட்டுகிறார்கள் என்ற கட்டுக்கதையை கட்டமைக்கும் நோக்கில், அரசியல் ரீதியாக தூண்டிவிடப்பட்டது என்று நம்புவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.

படுகொலை செய்வதற்காக சதி தீட்டப்பட்டது என்ற குற்றம் குறித்து குற்றப்பத்திரிக்கை என்ன சொல்கிறது? இந்த குற்றச்சாட்டுக்கு சான்று என்று கூறப்பட்ட கடிதங்கள் மற்றும் மின்னஞ்சல்களில் எந்தவிதமான சந்தேகத்திற்குரிய குறிப்பிட்ட தடயமும் இல்லை என்று 2018ஆம் ஆண்டு நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் புனே நகரக் காவல்துறையினர் தெரிவித்தனர். ஒரு மறுப்பளிக்கும் தீர்ப்புரையில் ஓர் உச்ச நீதிமன்ற நீதிபதியும் பம்பாய் உயர் நீதிமன்றமும் காவல்துறையின் இத்தகைய நடவடிக்கைகளைக் கண்டித்தார்கள் என்பதை ஒருவர் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த வழக்கு நீதிமன்ற விசாரணையில் இருக்கும்போது காவல்துறையின் இத்தகைய நடவடிக்கை ஊடகங்களின் விசாரணைக்கு வழிவகுக்கும் என்று காணப்பட்டது. உண்மையில், கைது செய்யப்பட்ட நபர்களை விடுவிப்பதற்காக அளிக்கப்பட்ட மனு, உச்ச நீதிமன்ற தலைமையிலான சிறப்பு விசாரணைக் குழுவிற்கான அவசியத்தை குறிப்பிட்டிருந்தது. சிறப்பு விசாரணைக் குழு தேவை என்ற தற்போதைய கோரிக்கை உச்சநீதிமன்றத்தாலேயே முன்னர் பரிந்துரைக்கப்பட்டது என்பதால், இதனை அரசியல் ரீதியாகத் தூண்டப்பட்டது என்ற விமர்சனத்தைப் புறந்தள்ளலாம். இந்த வழக்கில் புனே நகர காவல்துறையினரின் அணுகுமுறையானது இல்லாதவற்றை ஆலோசனையாகத் தருவதையே இலக்காக கொண்டுள்ளதால், இதில் நேர்மையும் பொறுப்புணர்வும் தேவை என்று மனுவில் கோருவது அரசியல் ரீதியானது அல்ல. நகர்ப்புற நக்சல்களை குறித்து கட்டமைக்கப்பட்ட கதையுடன் இவர்களது அணுகுமுறை ஒத்துப்போகிறது. ஒரு பாரபட்சமற்ற புலனாய்வின் மூலம் இந்த கட்டுக்கதையை புறக்கணிப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதால், மத்தியில் உள்ள ஆளும் கட்சியின் செயல்திட்டம் நிறைவேறாமல் போகும். அவசர அவசரமாக இந்த வழக்கை மாற்றுவது, இந்தப் புலனாய்வின் போக்கில் தனது அதிகாரத்தை உறுதி செய்வதற்காகும். இதனால் வழக்கு நடத்தி தண்டனை அளிப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகம்.

இந்த வழக்கு தேசியப் புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டாலும், மகாராஷ்டிராவில் உள்ள மூன்று கட்சி கூட்டணி அரசானது பீமா கோரிகன் வன்முறை வழக்கில் புலன் விசாரணையைத் தொடர்ந்து நடத்தி அதன் குற்றவாளிகளையும் அதற்குப் பின் சதித்திட்டம் தீட்டியவர்களையும் குற்றத்தின் முன் கொண்டுவரலாம். எல்கார் பரிஷத் வழக்கினை ஆய்வு செய்த காவல்துறை அதிகாரிகளின் பங்கு மற்றும் நடத்தை குறித்தும் அந்த அரசு புலன் விசாரணை செய்யலாம். உண்மை மற்றும் நீதி ஆகிய விழுமியங்களைக் கருத்தில் கொள்ளாமல் ஆளும் கட்சியின் அரசியல் இலாபங்களுக்கே அவர்கள் முன்னுரிமை கொடுத்துள்ளனர். இதே வழியில் சென்றால் முந்தைய அரசு மற்றும் முன்னாள் முதலமைச்சரின் நடவடிக்கைகளை சோதனைக்கு கொண்டு செல்ல வேண்டியிருக்கும். இந்த வழக்கை மாற்ற வேண்டும் என்பதற்குப் பின் உள்ள அரசியல் கணக்கீடுகளை இது படம்பிடித்துக் காட்டலாம். நீதித் துறை சார்ந்த சவால்களில் இதற்கு எந்தத் தொடர்பும் இல்லை என்றாலும் பாஜகவிற்கு எதிரானவர்களைத் தார்மீக ரீதியாக வலுப்படுத்த இது உதவும்.

Comments

(-) Hide

EPW looks forward to your comments. Please note that comments are moderated as per our comments policy. They may take some time to appear. A comment, if suitable, may be selected for publication in the Letters pages of EPW.

Back to Top