ISSN (Print) - 0012-9976 | ISSN (Online) - 2349-8846

மக்களாகிய, நாம்…

.

The translations of EPW Editorials have been made possible by a generous grant from the H T Parekh Foundation, Mumbai. The translations of English-language Editorials into other languages spoken in India is an attempt to engage with a wider, more diverse audience. In case of any discrepancy in the translation, the English-language original will prevail.

 

தற்போது இந்தியாவில் நடந்து கொண்டிருக்கும் குடியுரிமைத் திருத்தச் சட்டமுன்வடிவிற்கு எதிரான கிளர்ச்சிப் போராட்டங்கள், இந்திய அரசமைப்புச்சட்டத்திற்கு முகப்புரையுடன் தொடங்கும் வாசகமான, “மக்களாகிய, நாம்…” என்பது தொடர்பாக குறைந்தபட்சம் இருவிதமான கருத்தாக்கங்களை முன்மொழிவதற்கு ஒருவரை இட்டுச்செல்கிறது. முகப்புரையில் தொடங்கும் இவ்வாசகம், தனிப்பட்டமுறையில் எவரையுமோ அல்லது சமூகக் குழுக்களையோ குறித்திடவில்லை, மாறாக அச்சொற்றொடர் ஒரு கருத்துருவாக்கத்தின் அடிப்படையிலேயே பார்க்கப்பட வேண்டியதாகும் என்று வாதிடலாம். 1950 ஜனவரி 26 அன்று எதிரொலித்த இவ்வாசகம், அரசமைப்புச்சட்டத்திற்கு மக்களின் ஒப்புதல் கிடைத்ததாகக் கருதி ஓர் அனுமானத்தின் அடிப்படையிலேயே அமைந்தது. இதனைப் பல்வேறு சமூகக் குழுக்களின் செய்தித்தொடர்பாளர்களும் தாங்கள் சார்ந்திருக்கும் குழுக்களின் சிந்தனை யோட்டத்தின்படியே அர்த்தப்படுத்திக்கொண்டிருக்கின்றனர்.

“மக்களாகிய, நாம் …” அரசமைப்புச்சட்டத்தின் முதன்மையான வெளிப்பாடு, நுட்பமான உணர்வுடன் இல்லாவிட்டாலும், ஓர் அனுமானத்தையே குறிக்கிறது. பொதுவாகச் சொல்வதென்றால், “நாம்” என்கிற வார்த்தை, 1950 ஜனவரியில் அரசமைப்புச்சட்டம் பிரகடனம் செய்யப்பட்ட சமயத்தில், இந்தியாவிற்குச் சொந்தமானவர்களை அடையாளப்படுத்தும் விதத்தில் வெளிப்பட்டது. “நாம்” என்கிற வார்த்தை மேலும், மேற்படி வெளிப்பாட்டின்கீழ் வரும் மக்கள் அனைவரும், அவர்களின் மதம், பிராந்தியம், சாதி, பாலினம் என குறிப்பிட்ட சாய்மானம் எதுவாக இருந்தாலும் அவற்றையெல்லாம் கடந்து, அவர்கள் அனைவருக்கும் இந்தியா சொந்தம் என்று ஒரு பொதுவான அடையாளத்திற்குச் சொந்தக்காரர்கள் என்று குறிப்பிடுகிறது. எனினும், அரசமைப்புச்சட்டம் உருவாகும்போது மிகவிரிவான அளவில் பல்வேறு குரல்களில் பல்வேறுவிதமான கருத்துக்கள் வெளிவந்தன என்பதும் வரலாற்று உண்மையாகும். ஆனாலும், இவ்வாறு பல்வேறு குரல்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய தலைவர்களும், முகப்புரையில் பதிக்கப்பட்ட வார்த்தைகளின் உண்மையான அர்த்தம் குறித்து ஒரு கருத்தொற்றுமைக்கு வரவேண்டியிருந்தது. இதன் அசல் அர்த்தம் அரசமைப்புச்சட்டத்தின் அடிப்படைக் கொள்கைகளுக்கு இட்டுச்செல்வதால், இறையாண்மை, சோசலிசம், மதச்சார்பின்மை மற்றும் ஜனநாயகக் கோட்பாடுகளின் முக்கியத்துவத்தை ஏற்றுக்கொள்வதற்கு, மக்களைக் கோட்பாட்டுரீதியாகத் தூண்டியது.  “நாம்,” என்பது இவ்வாறு இக்கொள்கைகளின் கூட்டு ஒப்புதலாகவே பார்க்கப்பட்டது. “மக்களாகிய, நாம்” என்னும் கருத்தாக்கம் அல்லது வெளிப்பாடு இப்படித்தான் கருத்தொற்றுமை மூலமாக உற்பத்தி செய்யப்பட்டது.

அரசமைப்புச்சட்டத்தை உருவாக்கியவர்கள், 1950இல் இந்த வார்த்தையை ஏற்றுக்கொண்டபோதும், அதனை முகப்புரையின் ஓர் அங்கமாக இணைத்தபோதும், “மக்களாகிய, நாம்” என்பதன் சரியான அர்த்தத்தைத் துல்லியமாகப் பார்த்ததைப்போல் தோன்றவில்லை. குடிமக்கள் போன்ற மேலும் துல்லியமானதொரு பொதுவான அடையாளத்திலிருந்து இதனைச் செதுக்கியிருப்பதற்கான தேவை ஏற்பட்டிருக்கலாம். முகப்புரையில் “பிரஜை” என்கிற வார்த்தை மிகவும் நுட்பமானது மற்றும் அரசமைப்புச்சட்டத்தின் துல்லியமான இடத்தைப் பெற்றிருக்கிறது என்று குறிப்பிடத் தேவையில்லை. இது, அரசமைப்புச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஷரத்துக்களின் வரையறைக்குட்பட்டு, குடிமக்கள் அனுபவிப்பதற்கான உரிமைகளை வரையறுத்தது. இவ்வாறு, குடியுரிமை என்பது “மக்களாகிய, நாம்” என்பது போன்ற மிகவும் விரிவான வெளிப்பாட்டின் விளைவாகும். அதனால்தான், குடியுரிமை என்னும் சொல், முகப்புரையில் “மக்களாகிய, நாம்” என்பதற்குப் பின்னர் வருகிறது. இந்த ஆழமான வெளிப்பாடு சமத்துவத்தை ஏற்றுக்கொண்டதன் மீதான பொதுக் கருத்தொற்றுமையைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. எனவேதான் இது அரசமைப்புச்சட்டத்தின் அடிப்படைக் கொள்கைகளாகவும் மாறுகிறது. இவ்வாறு, “மக்களாகிய, நாம்” என்பது அரசமைப்புச்சட்டத்தின் அசலான உண்மையான அர்த்தத்தை நிறைவேற்றியது. இது தொடர்பாக நாம் மனதில் கொள்ளவேண்டியது என்னவெனில், இதுபோன்றதொரு அர்த்தம், அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்களின் நோக்கத்திலிருந்து வரவில்லை, மாறாக மக்களின் வாழ்நிலை அனுபவங்களை உண்மையில் அவர்கள் நன்கறிந்திருந்ததன் விளைவாக அதிலிருந்து உருவானதாகும். மக்களின் வாழ்நிலை அனுபவம் ஒருவிதத்தில் மிகவும் துயரார்ந்தமுறையில் இருந்தது. தலித்துகள் சுரண்டப்பட்டார்கள், பெண்கள் அடிமைப்படுத்தப்பட்டிருந்தார்கள், பழங்குடியினர் தனிமைப்படுத்தப்பட்டு மிகவும் அலங்கோலமான நிலையில் இருந்தார்கள். மற்றொரு பக்கத்தில், வாழ்நிலை அனுபவம் என்பது கலாச்சாரத்துறையிலும் மனிதர்களுக்கிடையே வேற்றுமைகளை விளைவிக்கக்கூடிய விதத்தில், அமைந்திருந்தது. அரசமைப்புச்சட்டம், வறியநிலையில் வாடுகின்றவர்களுக்குச் சமத்துவத்தையும், சலுகை பெற்று வாழ்கிறவர்களுக்கு சமூக ஒழுங்கின்மையிலிருந்து பாதுகாப்பையும் அளிப்பதாக உறுதிமொழி அளித்திருந்தது.

“மக்களாகிய, நாம்”  என்னும் சொற்றொடரின் வெளிப்பாடு, மீண்டும் இப்போது குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடந்துவரும் கிளர்ச்சிப்போராட்டங்களில் எதிரொலித்துக்கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இது, இதன் ஒரிஜினல் அர்த்தத்தின் அடித்தளக் கொள்கைகள் முற்றிலும் சரி என்று காட்டுவதாக இருப்பதோடு மட்டுமல்லாமல், ஒரிஜினல் அர்த்தத்தை உயர்த்திப்பிடிக்கும் விதத்தில் உறுதிமொழி எடுத்துக்கொள்வதுபோன்றும் இருப்பதைப் பார்க்க முடிகிறது.  நடந்துவரும் கிளர்ச்சிப் போராட்டங்கள், “மக்களாகிய, நாம்” என்னும் வெளிப்பாட்டை மீட்டெடுப்பதைத் தவிர வேறல்ல. கிளர்ச்சிப் போராட்டங்கள், அரசமைப்புச்சட்டத்தின் அடிப்படைக் கொள்கைகளைப் பாதுகாத்திட மேற்கொள்ளப்பட்டிருக்கும் மக்களாட்சியின் தெளிவான நடவடிக்கையாகப் பார்க்கப்பட வேண்டும். அரசமைப்புச் சட்டத்தின் ஒரிஜினல் அர்த்தத்தை உயர்த்திப்பிடிக்கும் விதத்தில் உறுதிமொழி எடுத்துக்கொள்வதன்மூலம், அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்களையும், அரசமைப்புச்சட்டத்தையும் அடையாளபூர்வமாகக் கொண்டாடுவதன் மூலம் அதற்கு மேலும் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறது. “மக்களாகிய, நாம்” என்னும் வெளிப்பாடு பொதுவெளியில் மீளவும் தலைதூக்கி இருப்பதுபோன்று தோன்றுகிறது. “நாம்,” என்னும் சொல் இன்றைய பின்னணியில், அரசமைப்புச்சட்டத்தின்பக்கம் நிற்பதற்கான அறநெறி உறுதியைக் காட்டுகிறது. மேலும் அது, ஒரு “சூப்பர் இறையாண்மை”-க்கு சரணடைவதற்கான எவ்வித நடவடிக்கையாக இருந்தாலும் அது நிராகரிக்கப்படும் என்பது போன்றும் தோன்றுகிறது.

Back to Top