ISSN (Print) - 0012-9976 | ISSN (Online) - 2349-8846

பிரகாசமான ஆரஞ்சு வானங்கள் விடுக்கும் முன்னெச்சரிக்கைகள்

ஆஸ்திரேலியாவின் மாபெரும் காட்டுத்தீ, காலநிலை நெருக்கடி என்றால் உண்மையில் என்ன என்பதை மீண்டும் காண்பித்திருக்கிறது

 

The translations of EPW Editorials have been made possible by a generous grant from the H T Parekh Foundation, Mumbai. The translations of English-language Editorials into other languages spoken in India is an attempt to engage with a wider, more diverse audience. In case of any discrepancy in the translation, the English-language original will prevail.

 

காட்டுத்தீக்கள் ஆஸ்திரேலியாவின் அன்றாட பாரம்பரிய பேச்சுவழக்கின் முக்கிய பகுதியாக இருந்தது. அந்நாட்டு கதைசொல்லலில் கூட காட்டுத்தீக்கள் பற்றிய கதைகள் அதிகம் உண்டு. ஆனால் தற்போதைய சூழல் குறித்த புனைவுகளையும் சராசரியான பாரம்பரிய கதைசொல்லல் மரபையும் தற்போதைய காலநிலை நெருக்கடி மாற்றியுள்ளது. சூழ்நிலை மண்டலங்கள் மீண்டெழ முடியாத எல்லைக்கு சம்பவங்கள் மிகவும் அபாயகரமானதாக மாறியுள்ளன. ஒவ்வோர் ஆண்டும் சராசரியாக நடக்கும் காட்டுத்தீயைப் போல் அல்லாமல், இந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தொடங்கிய காட்டுத்தீ பல்வேறு மாதங்கள் தொடர்ந்து எரிந்துகொண்டிருந்தது. மிகவும் அச்சுறுத்தக்கூடிய வீச்சு மற்றும் கடுமையுடன் இந்த தீ பரவியதால் அந்நாடு இதுவரை கண்டிராத வெப்பமான வறட்சியான ஆண்டை சந்தித்தது. இந்த பேரழிவுக்குரிய நெருப்புக்கு முன்பு வரை ஆஸ்திரேலியாவின் சராசரி காலநிலையானது, முந்தைய தொழில்மட்ட அளவுகளுக்கு மேலான 1.4 டிகிரி செல்சியசாக இருந்தது. சர்வதேச சராசரி வெப்பம் 1.1 டிகிரி செல்சியசில் உள்ளது.

ஆஸ்திரேலியாவின் சராசரி கோடை வெப்பநிலை அதிகரிக்கும்போது வெப்ப காற்றுக்கள் மற்றும் வறட்சிகள் தீவிரமாக அதிகரித்துள்ளன. சராசரியான மழைபொழிவு குறைந்துள்ளதால், கடந்த மூன்று ஆண்டுகளாக அந்நாட்டின் பெரும்பான்மையான பகுதி வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியப் பெருங்கடலின் நேர்மறையான இருதுருவ நிகழ்ச்சி 2019ஆனது எப்போதையும் விட வலுவாக இருப்பதால் இந்தப் பிரச்சினை மேலும் சிக்கலாகி உள்ளது. இருபுறமும் கடல் வெப்பநிலை கடுமையாக உள்ளது என்பதே இதன் பொருள். இதனால் மேற்குப் பகுதியில் ஆஸ்திரேலியாவை நோக்கி வெம்மையான கடல்பரப்பு வெப்பநிலை ஏற்பட்டு வறட்சி போன்ற நிலைகள் உருவாகியுள்ளன. கிழக்கு ஆப்பிரிக்காவில் குளிரான வெப்பநிலைகள் தோன்றி வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

இத்தகைய சூழ்நிலையால் தென்கிழக்கு ஆஸ்திரேலியா முழுவதும் நூற்றுக்கணக்கான காட்டுத்தீக்கள் உருவாகியுள்ளன. குறிப்பாக 200 அடி உயரம் வரை எழும்பும் தீ ஜ்வாலைகள், நியு சவுத் வேல்ஸ் மற்றும் விக்டோரியா வரை பரவி, வடகிழக்கு திசையில் க்வீன்ஸ்லேண்ட் வரை பரவியுள்ளன. நாடு முழுவதும் 1 கோடி ஹெக்டேர்கள் பரப்பளவிலான காடுகள் எரிந்து சாம்பலாகியுள்ளன. இதன் விளைவாக பாதுகாப்பு கருதி ஆயிரக்கணக்கான மக்கள் இடம் பெயர்க்கப்பட்டு கடற்கரைகளில் தஞ்சமடைந்துள்ளனர். வனவிலங்குகள் அழியும் காட்சி விவிலியத்தில் சொல்லப்பட்ட “பேரழிவுக் காட்சிகள்” போல் இருந்தது. 100 கோடிக்கும் அதிகமான விலங்குகள் இறந்துள்ளன, காயம் அடைந்துள்ளன. கங்காருகள் தீயில் கருகி இறந்ததன் பல்வேறு புகைப்படங்கள் வெளிவருகின்றன. கங்காரு தீவு போன்ற பகுதிகளில் பாதுகாப்பிற்காக மர உச்சியில் சுற்றிக்கொண்ட கோலா கரடிகள் தூக்கிவரப்பட்டு காப்பாற்றப்பட்டுள்ளன. அழிந்துவிடுமோ என்று அச்சப்பட்ட பல்வேறு உயிரினங்கள் அழிந்தேவிட்டன. மேலும் பல உயிரினங்கள் அழிந்துவிடும் அபாயத்தில் உள்ளன. ஆஸ்திரேலியாவின் காட்டுத்தீ உருவாக்கிய நாசமும் சேதங்களும் பிரேசிலின் அமேசான் காடுகளில் ஏற்பட்ட அழிவையும், அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் ஏற்பட்ட அழிவையும் சிறியதாக்கியுள்ளன.

காட்டுத்தீக்கள் பல்வேறு சிறிய அளவிலான வணிகங்களையும் எரித்துள்ளன. பூச்செடிகள், பூங்கொத்து வியாபாரங்கள், பழங்களை அளிக்கும் மரங்கள், விவசாயம் மற்றும் சுற்றுலா என்று பல்வேறு துறைகளை சிதைத்துள்ளன. உலக வெப்பமயமாதலால் தூண்டப்பட்ட இந்த காட்டுத்தீ ஒரு விஷ வட்டத்தை உருவாக்கியுள்ளது. இந்த ஆஸ்திரேலியாவின் காடுகள் மீண்டும் உருவாகவும், இவை இழந்த 400 மில்லியன் மெட்ரிக் டன்கள் கார்பன் டை ஆக்சைடை மீண்டும் உறிஞ்சவும், பல்வேறு பத்தாண்டுகள் தேவைப்படும். இந்த இடைப்பட்ட காலத்தில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும். மேலும், இந்த காட்டுத்தீக்கள் மிகவும் அபாயகரமான காலநிலைகளையும் ஏற்படுத்தியுள்ளது. இதிலிருந்து கிளம்பிய புகையானது இடிமுழக்கங்களை ஏற்படுத்தி மேலும் தீயை உருவாக்கியுள்ளது. நெருப்பு சூறாவளிகளை உருவாக்கி மிரட்டியுள்ளது. மணல் புயல்கள், கோல்ஃப் பந்து அளவிலான ஆலங்கட்டிமழைகள், திடீர் வெள்ளப்பெருக்கு ஆகியவற்றை ஜனவரி மாதம் மத்தியிலிருந்து ஏற்படுத்தியுள்ளது. அடர்ந்த சிவப்பு தூசியினால் ஏற்பட்ட ஏராளமான மேகங்கள் பல்வேறு நகரங்களை மூச்சுத் திணறடித்துள்ளன. இந்த நகரங்கள் இதற்கு முன்னர் தீயினால் எப்போதுமே பாதிக்கப்பட்டதில்லை. அந்த நாட்டின் பல்வேறு பகுதி வாழ்வதற்கு தகுதியற்றதாக மாறிவிட்டது.

ஆத்திரமடைந்து கொந்தளித்த ஆஸ்திரேலிய மக்கள், “நாங்கள் எரியும்போது, நீங்கள் கற்றுக்கொள்வீர்களா?” என்று சுவரொட்டிகள் ஒட்ட ஆரம்பித்துவிட்டனர். இந்த பேரிடரின் வெம்மையை எதிர்கொள்ளும் அம்மக்கள், அரசியல்வாதிகளின் கவனத்தைப் பெற எழுப்பிய முழக்கங்கள் ஒட்டு மொத்த உலகின் முன்னும் பல்வேறு கேள்விகளை வைக்கிறது. வெப்பநிலையை அதிகரிக்க விட்டால் என்ன நடக்கும் என்பதற்கான காட்சி இது. பாரிஸ் உடன்படிக்கையின் கீழ் பசுமைக் கூட்டு வாயுக்கள் வெளியேற்றத்தை குறைப்பதற்கான உலகளாவிய பொறுப்புக்கள் இருக்கும்போதும், உலகம் வெப்பமயமாதல் அச்சுறுத்தலை 2 டிகிரி செல்சியசுக்கும் குறைவாக வைத்திருப்பது சிரமம்தான். ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி அடைந்த நாடுகள் இந்த பொறுப்புக்களை ஏற்றுக் கொள்ள மறுத்துள்ளன. அந்நாட்டில் ஒவ்வொரு தனிநபருக்குமான வெளியேற்றங்கள் உலகிலேயே மிகவும் அதிகமாக உள்ளது. “க்ரேட் பாரியர் ரீஃப்பின்” அழிவு வடிவில் பல்வேறு தீக்கள் ஏற்படும் என்று முந்தைய எச்சரிக்கைகள் இருந்தபோதும் ஆஸ்திரேலியா இதனைப் பின்பற்றவில்லை.

காலநிலை மாற்றத்திற்கான பல்வேறு அரசுகள் சார்ந்த குழுமம் 2007இல் துவங்கி தனது மதிப்பீட்டு அறிக்கைகளில் காலநிலை மாற்றத்தினால் அதிகரிக்கவிருக்கும் காட்டுத்தீக்கள் குறித்து மீண்டும் மீண்டும் எச்சரித்துக் கொண்டிருந்தது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றத்திற்கான மாநாட்டில் மற்ற நாடுகளால் ஆஸ்திரேலியா விமர்சிக்கப்பட்டது. தங்களுடைய குறைப்பு இலக்குகளை அடைய க்யோட்டா ப்ரோட்டாகாலில் சொல்லப்பட்ட உறுதிமொழிகளை மீறி கார்பன் வெளியேற்றத்தை திட்டமிட்டு அரங்கேற்றியதன் மூலம் சர்வதேச காலநிலை ஒப்பந்தங்களை ஆஸ்திரேலியா சதி செய்து ஏமாற்றியுள்ளது என்று அந்நாடுகள் குற்றம் சாட்டின. காலநிலை நெருக்கடியின் பின்னணியில் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் தனது கீழ்படியாமைக்கும் பாறை படிமங்களை அதிகமாக சுரண்டுவதைக் குறைப்பது குறித்து மறுபரிசீலனை செய்யாமல் இருப்பதற்காகவும் விமர்சிக்கப்பட்டார். இருப்பினும் நிலக்கரி தொழிற்சாலை குறித்து தனது ஆதரவை வெளியிட்ட அவர், பொறுப்பற்ற வேலை அழிவு எச்சரிக்கைகளை தான் பொருட்படுத்த மாட்டேன் என்று கூறியுள்ளார்.

நிலக்கரி மற்றும் இயற்கை எரிவாயுவின் மாபெரும் ஏற்றுமதியாளர்களுள் ஆஸ்திரேலியாவும் ஒன்று. க்ளைமேட் கவுன்சில் என்ற சுயேச்சை நிறுவனம் காலநிலை மாற்றத்திற்கான தொடர்பு நிறுவனமாகும். இந்நிறுவனம் அந்நாடு முன்மொழிந்துள்ள சில நிலக்கரி சுரங்கங்களை எதிர்த்துள்ளது. வெளியில் உள்ளவர்களின் ஆதரவுடன் மிகவும் பெரிய நிலக்கரி சுரங்கம் உருவாவதை வேலைவாய்ப்பு அளிக்கும் நடவடிக்கையாக அரசு ஆதரித்துள்ளது. இந்த சுரங்கம் ஒரு கார்பன் அணுகுண்டு என்றும் காலநிலை கொள்கையின் அப்பட்டமான எதிர்மறை என்றும் இந்த கவுன்சில் கவலை தெரிவித்துள்து. ஏனெனில் அந்த நாட்டின் தற்போதைய கார்பன்டை ஆக்சைடு வெளியீட்டை மேலும் 1.3 மடங்கு அதிகரிக்கும் திறன் இந்த சுரங்கத்திற்கு உண்டு என்று அந்த கவுன்சில் தெரிவித்துள்ளது. அது மட்டுமல்லாமல் ஒவ்வோர் ஆண்டும் 12 பில்லியன் லிட்டர்கள் தண்ணீர் பயன்படுத்தப்படும். வேலைவாய்ப்பு அளிப்பதற்காக பாறை படிமங்கள் செறிந்த தொழில்துறை தொடர வேண்டும் என்ற விவாதம் ஆய்வு செய்யப்பட வேண்டும். இத்தகைய சுரண்டல்கள் பல்வேறு மக்களின் தற்போதைய வாழ்வாதாரத்தையும் பாதிக்கும். மாற்று வேலைவாய்ப்பு உருவாவதும் நீடித்த வேலைவாய்ப்பு உருவாவதும் மறுக்கப்படுகிறது. இத்தகைய ஒட்டுமொத்த அழிவைத் தோற்றுவிப்பதில் இது முக்கியமாகக் கருதப்படுகிறது. இது தன்னைத்தானே அழிக்கும் விவாதம் போல தோன்றுகிறது. தன்னுடைய தேசத்தின் எல்லைகள் தாண்டி காலநிலை நெருக்கடி தோற்றுவிக்கும் விளைவுகளுக்கான தார்மீக பொறுப்பை ஆஸ்திரேலியா மறுக்கிறது. நுகர்வு கலாச்சாரம் சுமத்தியுள்ள நிலைமைகளை வென்றெடுக்க வேண்டிய காலமிது. புதிய காலநிலைக்கான கதை சொல்லல்களை எழுத வேண்டியுள்ளது.

Updated On : 25th Feb, 2020

Comments

(-) Hide

EPW looks forward to your comments. Please note that comments are moderated as per our comments policy. They may take some time to appear. A comment, if suitable, may be selected for publication in the Letters pages of EPW.

Back to Top