எஃப்ஆர்டிஐ சட்டமுன்வடிவு திரும்பும்போது
மீண்டும் அறிமுகப்படுத்தும்போது, எஃப்ஆர்டிஐ சட்டமுன்வடிவு நிதி ஸ்திரமற்ற தன்மை தொடர்பான விவகாரங்களைச் சந்திக்குமா?
The translations of EPW Editorials have been made possible by a generous grant from the H T Parekh Foundation, Mumbai. The translations of English-language Editorials into other languages spoken in India is an attempt to engage with a wider, more diverse audience. In case of any discrepancy in the translation, the English-language original will prevail.
2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 7ஆம் தேதி நடைபெற்ற நிதி ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சி கவுன்சிலின் சமீபத்திய கூட்டத்தில், தற்போதைய அரசு, 2017 நிதி தீர்மானம் மற்றும் வைப்புநிதிக் காப்பீடு சட்டமுன்வடிவினை, (FRDI Bill-Financial Resolution and Deposit Insurance Bill) மீண்டும் புதுப்பிக்கும் என்ற ஊகம் தோன்றி இருக்கிறது. நாட்டின் நிதித்துறையின் கட்டமைப்பை வலுவாக்கும் முயற்சி இந்தக் கவுன்சிலின் நிகழ்ச்சிநிரலில் உள்ளது. இந்த சட்டமுன்வடிவில் உள்ள “மீட்பு” பிரிவு குறித்த பரவலான எதிர்மறை எண்ணத்தால், இந்த சட்டமுன்வடிவு அறிமுகப்படுத்தப்பட்டு ஓராண்டிற்குள்ளேயே அரசு இதனைத் திரும்பப் பெற்றது. இந்தப் பிரிவினால், ஒரு தோல்வியுற்ற நிதி நிறுவனத்தில் வைப்பு நிதி வைத்தவர்கள் அவர்களது வைப்பு நிதியின் பகுதியை அந்த நிறுவனத்தின் சுமைக்காக விட்டுக்கொடுக்க வேண்டும் என்று இருந்தது. கடந்த இருபது ஆண்டுகளாக, இந்தியாவின் குடும்ப நிதி சேமிப்பு நடவடிக்கை வங்கி வைப்புகளுக்கு முன்னுரிமை கொடுத்துள்ளது. எனவே இந்த வைப்பு நிதியின் பாதுகாப்பு மிகவும் முக்கியத்துவம் பெற்றது. ஊடகங்கள் அளித்த அறிக்கையின்படி, 2017 எஃப்ஆர்டிஐ சட்டமுன்வடிவின் சட்டத் திருத்தங்கள் - தற்போது 2019 நிதித்துறை வளர்ச்சி மற்றும் ஒழுங்கமைவு (தீர்மானம்) சட்டமுன்வடிவு என்று மூன்ற முக்கிய அம்சங்களுடன் பெயர் மாற்றப்பட்டிருக்கிறது. முதலாவதாக, வாடிக்கையாளர்களின் வைப்பு நிதிக்கான காப்பீட்டை அதிகரிப்பது, இரண்டாவதாக, “மீட்பு” பிரிவில் உள்ள சர்ச்சைக்குரிய விஷயங்களை மாற்றுவது, மூன்றாவதாக, இந்தத் தீர்மான கட்டமைப்பு பொதுத்துறை வங்கிகளுக்குப் பொருந்துமா என்று முடிவு செய்வது. பொதுத்துறை நிறுவன வங்கிகள் மோசமான கடன்கள் குறித்த அழுத்தத்தின் கீழ் வரும்போது, வைப்பு நிதிக்கான காப்புறுதி வரம்பை அதிகரிப்பது வரவேற்கத்தக்க முடிவு. இதனால் வைப்பு நிதி வாடிக்கையாளர்களுக்கு வங்கித்துறை மீதான நம்பிக்கை, அதிலும் குறிப்பாக பொதுத்துறை வங்கிகளின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும்.
வைப்புநிதிக் காப்புறுதித் திட்டத்தின் செயல் எல்லை அளவில் காணப்படும் “உள்ளீடானது” அல்லது வேறுவகையிலானது என்பது குறித்த வாதம் எப்படியிருந்தபோதிலும், ஒட்டுமொத்தத்தில் இத்தீர்மானத்தின் கட்டமைப்பு, முறையான ஸ்திரத்தன்மையின் லென்ஸ் மூலம், குறிப்பாக, தற்போதைய இந்திய வங்கித்துறையில் காணப்படும் பிரச்சனைகளின் அடிப்படையின் கீழ், இதில் மேற்கொள்ளப்பட்டிருக்கிற திருத்தங்களைப் பார்க்கின்ற பொருத்தமான அணுகுமுறை தேவைப்படுகிறது. எனினும், நிதி ஸ்திரத்தன்மையையொட்டி, “உடமையாளர்கள்” என்ற முறையில் வங்கிகளின் பங்களிப்பு என்பது, நாட்டில் மிகவும் விவாதிக்கப்படக்கூடிய பிரச்சனையாக மாறி இருக்கிறது. இந்திய ரிசர்வ் வங்கி, நிதி ஸ்திரத்தன்மையை எட்டுவதில் வங்கிகளின் அரசாங்க உடைமையாளர்களுக்கு ஆக்கபூர்வமான பங்கு இருப்பதாகக் கூறியுள்ள அதே சமயத்தில், நிதி நிறுவனங்களின் தீர்மானம் மீது வரைவுச் சட்டத்தை உருவாக்குவதற்காக அமைக்கப்பட்ட குழு, நிதித்துறையில் இவற்றினிடையே “போட்டி மனப்பான்மை குறைவாக” இருப்பதாகக் குறை கூறியிருக்கிறது.
இக்குழுவானது, பொதுத்துறை மற்றும் தனியார்துறை நிதிநிறுவனங்களுக்கு இடையே “போட்டி மனப்பான்மையை உருவாக்கும்” விதத்தில் சம அளவில் வாய்ப்புகள் அளிக்கப்பட வேண்டியது அவசியம் என்றும் அதற்கு, அனைத்து நிதிநிறுவனங்களும் ஆதாயம் அடையக்கூடிய விதத்தில், ஒரு நீண்டு வளையும் தீர்மானக் கட்டமைப்புக்கான கருத்தாக்கம் தேவை என்றும் வாதிட்டுக் கொண்டிருக் கிறது. இந்தக் கண்ணோட்டத்தின் அடிப்படையில்தான், இதற்காக நாட்டில் உள்ள பல்வேறு நிதித்துறைகளுக்காகவும் இருந்து வருகின்ற 20 சட்டங்களை முறைப்படுத்தி, 2017 எஃப்ஆர்டிஐ சட்டமுன்வடிவு, திருத்தப்பட வேண்டும் என்று கோரப்பட்டு வருகிறது. இவ்வாறு திருத்தப்பட வேண்டிய நிறுவனங்கள் என்பனவற்றில் இந்திய ரிசர்வ் வங்கியிலிருந்து, வங்கிப்பணிகளை ஆற்றாத நிதிக் கழகங்கள், இன்சூரன்ஸ் சந்தைகளுக்கான இன்சூரன்ஸ்முறைப்படுத்தல் மற்றும் வளர்ச்சி அதிகாரக்குழுமம், செக்யூரிட்டி மற்றும் மியூசுவல் ஃபண்டுகளுக்கான இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI), ஓய்வூதிய நிதியை ஒழுங்குபடுத்துவதற்காக அமைக்கப்பட்ட ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையம் ஆகியவையும் அடங்கும். இதன்பின்னே அமைந்துள்ள சிந்தனையோட்டம் என்னவெனில், நாட்டில் இயங்கும் நிதி நிறுவனம் எதுவாக இருந்தாலும், அது எந்த வகையிலானதாக இருந்தாலும் அதனை தீர்மானக் கழகம் என்னும் ஒரே குடையின்கீழ் கொண்டுவருவது என்பதேயாகும். இத்திருத்தங்களின் ஆற்றல் வளம் எப்படியிருந்தபோதிலும், இந்த சமயத்தில் எஃப்ஆர்டிஐ சட்டமுன்வடிவை மீளவும் அறிமுகப்படுத்துவதற்கான அவசியம் என்ன என்கிற புதிரான கேள்வி எழுந்துள்ளது. நாட்டில் தற்போது வெகுவாக விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிதி ஸ்திரத்தன்மைக்கு, இவ்வாறு உருவாக்கப்படும் தீர்மானக் கழகம் உண்மையிலேயே பயனளிக்கக்கூடிய விதத்தில் அமைந்திடுமா என்பதேயாகும்.
இந்த சந்தர்ப்பத்தில், எண்ணற்ற அடிப்படைப் பிரச்சனைகள் முன்னுக்கு வருகின்றன. முதலாவதாக, உடைமையில் நடுவுநிலைமைத்தன்மையைத் திணிக்க வேண்டுமென்றே மேற்கொள்ளப்படும் முயற்சியின் மூலமாக உருவாகும் வாய்ப்பு வசதிநிலையாகும். இதன்மூலமாக, பொதுத்துறை மற்றும் தனியார் நிதி நிறுவனங்களை (இவற்றின் செயல்வகைகள் வெவ்வேறாக இருந்தபோதிலும்கூட) அவை அனைத்தையும் ஒரே பொதுவான தீர்மானத் திட்டத்தின்கீழ் கொண்டுவருவதன் மூலம், அவற்றுக்கிடையே போட்டி ஏற்படும். தனியார் நிதி நிறுவனங்களின் அடிப்படைக் குறிக்கோள்கள் இலாபம் ஈட்டுவது என்று இருக்கக்கூடிய அதே சமயத்தில், பொதுத்துறை நிறுவனங்களோ சமூகத்திலுள்ளவர்களை பொருளாதாரரீதியாக மேம்படுத்திட வேண்டும் என்பது போன்று எண்ணற்ற சமூகக் கடப்பாடுகளைக் கொண்டிருக்கின்றன. இவற்றின் விளைவாக, பொதுத்துறை நிறுவனங்கள், குறிப்பாக பொதுத்துறை வங்கிகளைப் பொறுத்தவரையில், அவற்றில் அரசாங்கத்தின் பொறுப்புணர்வு (அல்லது உடைமை), வழக்கமாக இருந்துவருவதுபோன்று, சாமானிய மக்களின் நம்பிக்கையை அவர்களின் சேமிப்பு தொடர்பாக படிப்படியாக முன்னேற்றக்கூடிய விதத்தில் அமைந்திருக்க வேண்டும் என்கிற உண்மையைத் தள்ளுபடி செய்வது கடினம். இத்தகைய “உடைமைக்” காரணியை, நடுநிலையானதாக மாற்றுவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகள், அரசாங்கம் இவை தொடர்பாக அளித்துவந்த உத்தரவாதங்களையும், அரசுக்கு இருந்த அதிகாரங்களையும் அரசாங்கத்தின் பொது வெளியிலிருந்து முற்றிலுமாக நீக்கிவிட்டு, அவற்றை சில தீர்மானக் கழகங்களிடம் ஒப்படைத்தால், அது நிதி பரிபாலன அமைப்புமுறையையே ஸ்திரமற்றதாக மாற்றிவிடலாம்.
முதல் பிரச்சனையுடனே சேர்ந்து இரண்டாவதாக ஏற்பட்டிருக்கும் கருத்து வேறுபாடு என்பது திவாலானவர்கள் குறித்து உருவாக்கப்பட்டிருக்கும் மீட்டுறுதி (bail-in) சட்டப்பிரிவாகும். வைப்புநிதிக் காப்பீட்டின் பாதுகாப்பு வரம்புக்கு வெளியே ஏதேனும் வைப்புநிதி இருக்குமாயின், அது இச்சட்டப்பிரிவிற்கு உட்படுத்தப்படும். அதாவது, 2017 எஃப்ஆர்டிஐ சட்டமுன்வடிவானது, வங்கிகளில் வைப்புநிதி வைத்திருப்போரின் தொகை ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் இருக்குமாயின் (தற்போது அது ஒரு லட்சம் என்று வரையறுக்கப்பட்டிருக்கிறது), அத்தொகை திவாலான நிறுவனங்களைக் காப்பாற்றுவதற்காக மீட்டுறுதித் தொகையாக எடுத்துக்கொள்ளப்படும் என்பதாகும். மேலும், நிதி ஸ்திரமற்றதன்மைக்கு எதிராக இந்திய ரிசர்வ் வங்கியின் எச்சரிக்கையையும் பொருட்படுத்தாது, குறுகிய காலக் கடன்கள் மற்றும் வகைப்படுத்தப்படாத வாடிக்கையாளர்களின் சொத்துக்களும்கூட இந்த வகையில் எடுத்துக் கொள்வதற்கு வகை செய்யப்பட்டது. 2017 நிதி ஸ்திரத்தன்மை அறிக்கையானது நாட்டிலுள்ள ஷெட்யூல்ட் வங்கிகளில் வைப்புத்தொகையின் ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சி விகிதம் 3.3 சதவீதம் வீழ்ச்சியடைந்து கொண்டிருப்பதாக வெளிப்படுத்திய சமயத்தில்தான் இந்த ஷரத்துக்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. என்னே நகைமுரண்! இது ஏராளமான முக்கிய கேள்விகளை எழுப்பியிருக்கிறது. நிதி ஸ்திரத்தன்மைக் குறைந்து கொண்டிருக்கும் பின்னணியில், அரசாங்கம் ஏன் இத்தகைய தீர்மான சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்? இது, வைப்புநிதி வைத்திருப்போர் உள்நாட்டு நிதிநிறுவனங்களில் வைத்திருக்கும் நம்பிக்கையை மேலும் அரித்து வீழ்த்தாதா? இவற்றையெல்லாம் கணக்கிலெடுத்துக்கொள்ளும்போது, இந்தச் சட்டமுன்வடிவு மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டால், மேற்கொள்ளப்படும் திருத்தங்கள் நம்பிக்கையளிக்கக்கூடிய விதத்தில் அமைந்திடும் என்று எப்படி நம்பமுடியும்?