ISSN (Print) - 0012-9976 | ISSN (Online) - 2349-8846

அலை அலையாக அதிகரித்துக் கொண்டிருக்கும் மாணவர் கிளர்ச்சிகள்

ஜேஎன்யு-வில் முகமூடிகளின் பயங்கரவாதம் கட்டவிழ்த்துவிடப்பட்டது, அதற்கு இணையான உணர்வுகளுடனும், ஒருமைப்பாட்டுடனும் எதிர்கொள்ளப்பட்டிருக்கிறது

 

The translations of EPW Editorials have been made possible by a generous grant from the H T Parekh Foundation, Mumbai. The translations of English-language Editorials into other languages spoken in India is an attempt to engage with a wider, more diverse audience. In case of any discrepancy in the translation, the English-language original will prevail.

 

2020 ஜனவரி 5 அன்று, முகமூடி அணிந்த குண்டர் கும்பல் ஒன்று, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு)-த்தின் வளாகத்திற்குள் ஓர் அமைதிப் பேரணி நடத்திக்  கொண்டிருந்த மாணவர்களையும், ஆசிரியர்களையும் கொடூரமான முறையில் தாக்கியது. இந்தத் தாக்குதல் மூலமாக மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் நேரடியாகவே காயங்களை விளைவித்திட வேண்டும் என்பதோடு மட்டுமல்லாமல், அவர்களிடையே என்றென்றும் அச்ச உணர்வையும், பயத்தையும் ஏற்படுத்திட வேண்டும் என்பதும் குண்டர் கும்பலின் வெளிப்படையான நோக்கமாக இருந்தது. ஜேஎன்யு-விலிருந்து வந்து கொண்டிருக்கும் சித்திரங்களும், ஊடகங்களில் காட்டப்படக்கூடியவைகளும் ஏராளமான கேள்விகளை எழுப்புகின்றன. இந்த சித்திரங்கள் அனைத்தும்  புத்தகங்கள் நிரம்பி வழிந்த பழைய மர அலமாரிகளுடனும், மிகச்சிறிய அளவிலான ஹீட்டர்-ஸ்டவ் போன்ற அடிப்படைத் தேவைகள் இருந்த அலமாரி மற்றும் மிதிபட்ட மெத்தைகள் மற்றும் போர்வைகள் தரைகளில் சிதறிக்கிடக்கும் நிலையில் இருந்த சூறையாடப்பட்ட அறைகளைக் காட்டின. ஊடகங்களில் வெளியாகியுள்ள அறிக்கைகளிலிருந்து, கதவுகளில் பி.ஆர். அம்பேத்கர் படங்கள் இருந்த அறைகள், அல்லது அந்த அறையிலிருந்தவர்கள் ஒரு குறிப்பிட்ட சமூக அடையாளத்துடன் இருந்தவர்கள் என்று கண்டறிந்த அத்தகைய அறைகள் உள்நோக்கத்துடன்  தெரிவு செய்யப்பட்டு, குறி வைத்துத் தாக்கப்பட்டிருக்கின்றன என்பதையும் சுட்டிக்காட்டுகின்றன.

ஜேஎன்யு மாணவர்கள் பகட்டான வாழ்க்கை ஒன்றும் வாழவில்லை என்பது அனைவருக்கும் தெரியும். எனினும், ஜேஎன்யு எண்ணம் போல் வாழ்க்கையும், விமர்சனரீதியாகவும், படைப்புத்திறனுடனும் சிந்தனைகள் சிறகடித்துப் பறக்கும் ஒரு கலாச்சாரத்தையும், பல்வேறுபட்ட உலகச் சிந்தனைகள் மலர்வதை ஊக்குவிக்கும் ஒரு வளமான வாழ்க்கையையும் அளித்திடும்.  இவற்றில் இடதுசாரிகளாக இருப்பது என்பதும் ஒன்றாகும். இது கண்ணியத்தையும், நம்பிக்கையையும் அளிக்கக்கூடிய ஒரு வாழ்க்கையாகும். வெறுமனே பயிற்சி அளிப்பதற்கும் மேலாக, மாணவர்களைக் கற்பிப்பதிலும் நம்பிக்கைகொண்ட ஒரு பல்கலைக் கழகமாகும். இங்கே பயிலும் மாணவர்களில் பலர், நாட்டின் வெகுதூரங்களிலிருந்தும், மிகவும் உரிமைகளற்று அடித்தட்டு நிலையில் வாழும் சமூகப் பின்னணியிலிருந்தும் வந்துள்ளவர்களாவார்கள். ஜேஎன்யு மாணவர்கள், அறிவை விருத்தி செய்திடவும், விழுமியங்களைப் பாதுகாத்திடவும் பல்வேறுவிதமான சொற்பொழிவுகள் மற்றும் நடைமுறைகளில் திறந்த மனதுடன் பங்கேற்கும் பாரம்பர்யத்தைப் பெற்றிருக்கிறார்கள். இவை நம் சமூகத்தில் மனிதாபிமானத்தையும், அறநெறி ஒழுங்கு முறைகளையும் நிலைநிறுத்திட மிகவும் முக்கியமாகும். மேலும் அப்பல்கலைக்கழகமானது அங்கே வசிப்பவர்களுக்கு, கடந்த பல பத்தாண்டுகளாகவே சுதந்திரமான மற்றும் பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்கித் தந்திருக்கிறது. எந்தவொரு பல்கலைக்கழகத்தையும் நடத்துவதற்கு இது மிகவும் முக்கியமாகும்.

இது மாணவர்களின் உரிமைகளைத் துல்லியமானமுறையில் பாதுகாத்து வந்திருக்கிறது, உயர்கல்வியை மேலும் வணிகமயமாவதிலிருந்து தடுத்து, தரமான கல்வியை அளித்து வந்திருக்கிறது. அதன் காரணமாகத்தான் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக விடுதிக் கட்டணங்களை உயர்த்திட முன்மொழியப்பட்டிருப்பதற்கு எதிராக மாணவர்கள் மிகவும் பெருமளவு எண்ணிக்கையில் கிளர்ச்சி செய்துகொண்டிருக்கிறார்கள். எனினும் இதில் தீர்வுகாண்பதற்காக எவ்விதமான முயற்சியையும் நிர்வாகம் தவிர்த்து வந்திருக்கிறது. ஜேஎன்யு-வின் சமூக-அறிவார்ந்த கட்டமைப்பினை அரித்து வீழ்த்திக் கொண்டிருப்பதுடன், ஜேஎன்யு மாணவர்களை, தேச விரோதிகள் என முத்திரைகுத்தி சட்டபூர்வமற்றவர்களாக மாற்றுவதற்கும், அவர்களை ஒட்டுண்ணிகள் என்று கேவலப்படுத்தவும் கடந்த காலங்களில் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இப்போது மோசமானமுறையில் மிகப்பெரிய அளவில் மாணவர்கள் மீது நேரடித் தாக்குதலும் அனுமதிக்கப் பட்டிருக்கிறது. இவ்வளவும் அங்கே பாதுகாப்புக்கு என்று 17 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஒதுக்கிய நிலையிலும் இவ்வாறு நடந்திருக்கிறது. இத்தொகையானது அங்கே நூலகத்திற்குச் செலவு செய்வதற்காக ஒதுக்கிய தொகையைவிட நான்கு மடங்குக்கும் மேலாகும். பழைய பாதுகாப்பு ஊழியர்களுக்குப் பதிலாக, ஓய்வுபெற்ற ராணுவத்தினரைப் பணியமர்த்தியிருப்பது, ஆட்சியாளர்களுக்குத் தலையாட்டும் பொம்மை ஆசிரியர்களை நியமனம் செய்திருப்பது போன்ற நடவடிக்கைகள் எந்த அளவிற்கு வளாகம், ஆட்சியாளர்களின் ஆதரவு குண்டர்கள் அவர்களின் மிருகபலத்தைக் காட்டுவதற்காக வசதி செய்து தரப்பட்டிருக்கிறது என்பதைக் காட்டுகின்றன.

 

தாக்குதல் தொடர்பாக வெளியாகியிருக்கும் சித்திரங்கள், அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்துடன் நேசமாக இருக்கின்ற ஆசிரியர்களும், மாணவர்களும் சம்பந்தப்பட்டிருப்பதைத் தெளிவாகக் காட்டுகின்றன. தாக்குதல் நடைபெற்றிருக்கும் வழியைப் பார்க்கும்போது, தாக்குதல் தொடுத்தவர்கள் இதனால் தங்களுக்கு எவ்விதத் தண்டனையும் கிடைக்காது என்ற உறுதியுடனேயே செய்திருப்பது தெரிகிறது. ஆட்சியாளர்கள் மற்றும் நிர்வாகத்தினரின் வழிகாட்டுதல் மற்றும் உடந்தையுடன் இது நடந்திருப்பது அப்பட்டமாகத் தெரிகிறது.  நிர்வாகத்தினர் தொடர்ந்து பிடிவாதமாக இருந்துவருவதும், அவர்களின் முரட்டுத்தனமான அணுகுமுறையும், பேச்சுவார்த்தை அல்லது எவ்விதமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் அவற்றிற்கு எதிராக  அடக்குமுறையை ஏவுகின்ற, நடப்பு ஆட்சியாளர்களின் நிலைப்பாட்டை ஒத்திருப்பதுபோன்றே தோன்றுகிறது. ஓர் அங்குலம் கூட விட்டுத்தரமாட்டோம் என்கிற கர்வத்துடன், நிர்வாகத்தினர் மிகவும் கொடூரம் மிக்க பாஷையைப் பேசிக் கொண்டிருக்கிறார்கள், அனைத்துப் பொறுப்புகளையும் மீறிக்கொண்டிருக்கிறார்கள், தாங்கள் சேவை செய்ய வேண்டும் என்று தாங்கள் அமர்த்தப்பட்டுள்ள நிறுவனங்களையே, குண்டர்களைக்கொண்டு தாக்குவதற்கு வசதி செய்து தந்து கொண்டிருக்கிறார்கள்.

ஜேஎன்யு-வில்  நடைபெற்றுள்ள அனைத்து நிகழ்வுகளும் அங்கே நடைபெற்ற வன்முறை மிகவும் நன்கு முன்கூட்டியே திட்டமிடப்பட்டது என்பதற்கு, 2019 டிசம்பரில் தில்லியில் ஆற்றிய உரை ஒன்றில், மத்திய உள்துறை அமைச்சர், துக்தே துக்தே கேங்”- ஐத் (இடதுசாரிக் கும்பலைத்) தண்டித்திட அழைப்புவிடுத்தது தெளிவான அறிகுறியாகும். தாக்கிய குண்டர்கள், சமூகத்தில் பிளவினை மேலும் உந்தித் தள்ளக்கூடிய விதத்தில், உண்மையில் தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டிருப்பவர்கள் யார் என்பதை பிரதிபலிப்பதை நிறுத்தவில்லை. தில்லிக் காவல்துறை, மிகப்பெரிய அளவில் அங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போதிலும், முகமூடி குண்டர்கள் வளாகத்தைவிட்டு எவ்வித அச்ச உணர்வையும் காட்டாது வெளியேறும் வரை அலட்சியமாகவே நின்றுகொண்டிருந்தார்கள். இவ்வாறு மிகவும் நகைக்கத்தக்க விதத்திலும், உருப்படாத கையாலாகாத விதத்திலும் நடந்துகொண்ட இதே காவல்துறைதான், ஜனவரி 9 அன்று மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின்முன் கிளர்ச்சியில் ஈடுபட்ட மாணவர்களை கொடூரமான முறையில் தடியடி நடத்தி தன் சுறுசுறுப்பைக் காட்டியது.

2019ஆம் ஆண்டு குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகவும், முன்மொழியப்பட்டுள்ள தேசியக் குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராகவும், அரசியல் என்றாலே கூச்சப்படும் வளாகங்கள் இருந்த இடங்கள் கூட மற்றும் சில  மக்கள் பிரிவினர்கூட, எவ்விதமான பயமுமின்றி, கோபத்துடனும், தைர்யமாகவும் தன்னெழுச்சியான முறையில் கிளர்ச்சி நடவடிக்கைகளில் நாள்தோம் ஈடுபட்டு வருவதையும், அவை மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டிருப்பதையும் பார்க்கிறோம். மக்கள் மத்தியில் காணப்படும் இத்தகைய கூட்டு உணர்வு நம்பிக்கை அளிக்கிறது.   கிளர்ச்சியாளர்கள், தங்களுடைய வீர்யம்மிக்க போராட்ட வடிவங்களின் மூலமாக, மேலும் மேலும் மக்களைத் தங்களுக்கு ஆதரவாக ஈர்த்துக்கொண்டிருக்கிறார்கள், அவர்களைத் தங்களுடைய புதிய ஒருமைப்பாட்டாளர்களாக ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். பெற்றோர்கள், இக்கிளர்ச்சிப் போராட்டங்களில் தங்கள் குழந்தைகளையும் இணைந்துகொள்ளக் கட்டாயப்படுத்தும் நிலை ஏற்பட்டிருப்பது எவ்வளவு மோசமான விஷயம் என்று நகைச்சுவையுடன் கூறிக்கொண்டிருக்கிறார்கள். ‘நாம் பார்க்கத்தானே போகிறோம் என்று பொருள்படும் ஹம் தேகேங்கே (Hum Dekhenge) என்ற புரட்சிகரப் பாடல்மூலம், காவல்துறையினர் எள்ளிநகையாடப்படுகிறார்கள். அவர்கள், நாங்கள் எதையும் பார்ப்பதற்கு மட்டுமே, என்று தீர்மானித்திருக்கிறார்கள் என்று கேலிசெய்யப்பட்டு வருகிறார்கள். எனினும், தற்போதைய ஆட்சியாளர்களுக்கு அவர்களிடமிருக்கின்ற அகந்தை மற்றும் விரோத மனப்பான்மையின் காரணமாக இத்தகைய நகைச்சுவையுணர்வை புரிந்துகொள்வதற்கோ அல்லது பாராட்டுவதற்கோ சிரமமாக இருக்கலாம். மாறாக, அவர்கள் இத்தகைய குரல்களை மேலும் வெறித்தனமாக நசுக்குவதற்கான வேலைகளில் இறங்கக் கூடும்.

ஜேஎன்யு-வில் நடைபெற்ற வன்முறை வெறியாட்டங்கள், ஜமியா மிலியா இஸ்லாமியா, அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம் உட்பட இதர பல்கலைக் கழகங்களிலும், உத்தரப்பிரதேசத்திலும் நடைபெற்ற தாக்குதல்களின் தொடர்ச்சியேயாகும். முந்தைய நிகழ்வுகளில், வலுக்கட்டாயத்திற்கு ஆளான அரசு எந்திரம் மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திடவும், நூலகங்களைத் தாக்கிடவும், சிறிதுகூட வெட்கப்படாத அதே சமயத்தில், இப்போதுள்ள நிகழ்வில் இரும்புக்கம்பிகள் மற்றும் அதுபோன்ற ஆயுதங்களுடன் வந்த தனியார் குண்டர் கும்பல்  மாணவர்கள்மீது வன்முறை வெறியாட்டங்களைக் கட்டவிழ்த்துவிட மிகவும் தாராளமான முறையில் அனுமதிக்கப்பட்டது. இந்த முகமூடிக் குண்டர்கள் 2016இல் முகமூடி அணிந்து, பல்கலைக்கழகத்தை சிறுமைப்படுத்துவதற்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டு  முழக்கமிட்டவர்களை (அவர்கள் இதுவரையிலும் அடையாளம் காட்டப்படவில்லை) நினைவுகூர்கிறார்கள்.  எனினும், இந்தக் குண்டர்களை, அவர்கள் என்னதான் முகமூடி அணிந்திருந்தபோதிலும், அவர்களின் உடைகளிலிருந்தும், தங்களுக்கு தண்டனை கிடைக்கும் என்கிற அச்சம் சிறிதுமின்றி மிகவும் அப்பட்டமானமுறையில் வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்டதிலிருந்து அவர்களை அடையாளம் காண்பது மக்களுக்கு எளிதாகவே இருக்கிறது.  மாணவர்களின் கிளர்ச்சிகள் இதரர்களின் கிளர்ச்சிகள் அனைத்தைக் காட்டிலும் உறுதி மற்றும் அளவில் அரசாங்கத்திற்கு மாபெரும் சவாலாக விளங்குவதால், தங்களுக்கு எதிராகக் கருத்து வேறுபாடுகளைக் கூறுவோர் எவராக இருந்தாலும், அதிலும் முக்கியமாக அத்தகைய தாக்குதல்கள் கல்வி வளாகங்களுக்குள்ளிருப்பவர்கள் கூறுவோரை, மிரட்டிப் பணியவைத்திடும் தெளிவான  நோக்கத்துடன் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இத்தகைய தாக்குதல்கள் இப்போது மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

 

Comments

(-) Hide

EPW looks forward to your comments. Please note that comments are moderated as per our comments policy. They may take some time to appear. A comment, if suitable, may be selected for publication in the Letters pages of EPW.

Back to Top