ISSN (Print) - 0012-9976 | ISSN (Online) - 2349-8846

விவசாயக் கடன் தள்ளுபடியில் குறுகிய பார்வை

மிகவும் ஆழமாக வேரூன்றியுள்ள விவசாய நெருக்கடி, வலுவான நீண்டகாலத் தீர்வுகளை அவசியமாக்கி இருக்கிறது

 

The translations of EPW Editorials have been made possible by a generous grant from the H T Parekh Foundation, Mumbai. The translations of English-language Editorials into other languages spoken in India is an attempt to engage with a wider, more diverse audience. In case of any discrepancy in the translation, the English-language original will prevail.

 

விவசாய நெருக்கடியைத் தீர்ப்பதற்கு பரிசீலனைகள் மேற்கொள்வதைக் காட்டிலும், அதனை தேர்தல்கால அவசரத் தேவைக்குப் பயன்படுத்திக் கொள்வது என்பது அதிகமாகி இருக்கிறது. விவசாயக் கடன் தள்ளுபடிகள் குறித்துப் பேசுவது அரசாங்கங்களின் சாதகமான கொள்கையாக மாறியிருக்கிறது. விவசாயிகள், அதிகரித்து வரும் கடனிலிருந்து மீள்வதற்காகக் கடன் தள்ளுபடி கோரி வந்தார்கள். மேலும், விலைவாசி ஏற்ற இறக்கங்கள் மிகவும் வடுப்படுத்தக்கநிலையில் இருந்ததாலும், தாங்கள் கடன் வலையில் வீழ்வது என்பது மிகவும் அதிகமாக இருந்ததாலும், தாங்கள் உற்பத்தி செய்யும் விவசாயப் பொருள்களுக்கு நிலையான மற்றும் கட்டுப்படியாகக் கூடிய விலை உத்தரவாதம் செய்திட பொருத்தமான ஏற்பாடுகள் தேவை என்றும் கோரி வந்தார்கள். நிச்சயமற்ற வானிலையின் காரணங்களால் இது மேலும் அதிகரிக்கலாம்.

மகாராஷ்ட்ராவில் புதிதாக அமைந்துள்ள மகா விகாஷ் ஆகாதி அரசாங்கம், 2015 மார்ச் 1 முதல் 2019 செப்டம்பர் 30 வரையிலான காலத்திற்கான விவசாயக் கடன்களில் 2 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி செய்வதைக் குறியாகக் கொண்டு சமீபத்தில், மகாத்மா ஜோதிராவ் புலே விவசாயக் கடன் தள்ளுபடித் திட்டம் என்று ஒரு திட்டத்தை அறிவித்திருக்கிறது. இத்திட்டத்தை மூன்று முதல் ஆறு மாதங்களுக்குள் அமல்படுத்திடலாம் என அரசாங்கம் நம்புகிறது. தேர்தல் சமயத்தில், முந்தைய அரசாங்கம்கூட, மகாராஷ்ட்ராவில் மாநிலந்தழுவிய அளவில் விவசாயிகள் கிளர்ச்சிப் போராட்டங்கள் நடந்ததற்குப் பின்னர், 89 லட்சம் விவசாயிகளுக்கு நிவாரணம் அளித்திடுவதற்காக, 2017 ஜூனில் 34,044 கோடி ரூபாய் அளவிற்கு கடன் தள்ளுபடித் திட்டம் ஒன்றை அறிவித்திருந்தது. ஆயினும், இந்தத் திட்டத்தின் அமலாக்கமானது விவசாயக் கடன்களுக்குத் தகுதி குறித்த நிபந்தனைகளில் இருந்த சிக்கல்கள், மிகவும் கடினமான இணையவழி (ஆன்லைன்) நடைமுறைகள் மற்றும் அரசாங்கத்திடமிருந்து வங்கிகளுக்குச் சீரான முறையில் பணம் செலுத்தப்படுவதில் இருந்த சிக்கல்கள் முதலானவற்றால் தடுக்கப்பட்டது. இந்தக் காரணிகள் அனைத்தும் கடன் தள்ளுபடிக்கு உரிமை கோருவதற்கான நடைமுறையை சிக்கலாக்கி இருந்தது.

கடன் தள்ளுபடிக் கொள்கை விவசாயிகளின் கடன் சுமையைக் குறைப்பதற்கு ஒரு குறுகிய கால வலி நிவாரணியாகச் செயல்பட முடியும் என்று கூறும் அதே சமயத்தில், அனுபவ ஆய்வுகள் காட்டுவதென்னவெனில் கடன் தள்ளுபடிகள் பயனுள்ள விதத்தில் தாக்கங்களை ஏற்படுத்தவில்லை என்பதேயாகும். எனவே, இது தொடர்பாக, இத்தகைய திட்டங்கள் குறித்து மேலும் சிறந்ததொரு கொள்கைச் சிந்தனை தேவைப்படுகிறது. பொதுத்துறை வங்கிகளில் பெற்ற கடன்கள் மட்டுமல்லாது, தனியார்களிடம் வாங்கிய கடன்களையும் அடைக்கக்கூடிய விதத்தில், விளிம்புநிலை, சிறிய மற்றும் நடத்தர விவசாயிகள் அனைவருடைய கடன்களையும் தள்ளுபடி செய்வதை உத்தரவாதம் செய்யக்கூடிய விதத்தில் கடன்தள்ளுபடி திட்டங்களை மிகவும் கவனத்துடன் முறையாக அமல்படுத்த வேண்டியது அவசியமாகும். 2006ஆம் ஆண்டில் செயல்பாட்டுக்கு வந்த கேரள மாநில விவசாயிகள் கடன் நிவாரண ஆணையம், இதுதொடர்பாக ஒரு முன்மாதிரியை அளித்திருக்கிறது. அதனைக் கடன் தள்ளுபடி திட்டத்திற்கான ஓர் ஒருங்கிணைந்த மற்றும் உள்ளீடான திட்டமாகப் பயன்படுத்த முடியும். வேளாண் நிபுணர்கள், விவசாயிகளின் பிரதிநிதிகள் மற்றும் முன்னாள் நீதிபதிகளை உள்ளடக்கியுள்ள இதன் நிரந்தர அமைப்பு, விவசாயிகளுக்கும், அவர்களுக்குக் கடன் கொடுத்தவர்களுக்கும் இடையேயான கடன்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காகவும், அவற்றை மாற்றியமைப்பதற்காகவும் தனிநபர்களிடமிருந்து விண்ணப்பங்களை பெற்றுப் பரிசீலிக்கிறது. விவசாயிகளுக்கு அளிக்கப்படும் ஆதரவு என்பது தேர்தல் சுழற்சியிலிருந்து துண்டிக்கப்பட்டிருக்கிறது என்பது இத்தகைய ஆணையத்தின் அனுகூலமாகும்.

எனினும், மிகவும்  ஆழமாக  வேரூன்றியுள்ள விவசாய நெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்கு மிகவும் நிலைத்துநிற்கக்கூடிய விதத்தில் நீண்ட காலத் தலையீடுகள் தேவைப்படுகிறது. ஏனெனில், விவசாயத்தில் மிகவும் நீண்ட காலமாகவே நெருக்கடி நிலைமை இருந்து கொண்டிருக்கிறது. கட்டமைப்பு மாற்றங்கள் எதையும் செய்யாவிட்டால், நெருக்கடி காலப்போக்கில் மீண்டும் தொடரும்.   கடன் தள்ளுபடிகள் உயர்ந்து வரும் வேளாண் செலவினங்களால் ஏற்படும் பிரச்சனைகளுக்கும், வேளாண் விளைபொருள்களின் விலைகள் குறைவதால் உற்பத்தியாளர்களுக்கு லாபம் குறைவதிலிருந்தும் தீர்வு காண முடியாது. இவை இரண்டும்தான் விவசாய நெருக்கடி மிகவும் மோசமாகியிருப்பதற்குப் பிரதான காரணமாகும். மேலும், அனுபவம் காட்டுவ தென்னவெனில், கடன் தள்ளுபடிக் கொள்கைகள் நிறுவனரீதியாக கடன் வாங்கியவர்களுக்குப் பயன் அளித்திருப்பதுடன், வசதி படைத்த விவசாயிகளுக்கே அளவுக்கு மீறிய அளவில் பயன் அளித்திருக்கிறது. தொடர்ந்து கடன் தள்ளுபடிகள் செய்யப்படுவது, ஏற்கனவே செயல்படா சொத்துக்களின் விளைவாக தத்தளித்துத் தடுமாறிக்கொண்டிருக்கிற வங்கிகளைக் கடுமையாகப் பாதிப்பதுடன், தகுதி படைத்த விவசாயிகள் மத்தியில் அறநெறி ஆபத்தை ஏற்படுத்தி இருக்கிறது, கிராமப்புற கடன் கொடுக்கல் வாங்கல் முறையை அரிக்கச் செய்திருக்கிறது. மேலும், கடன் தள்ளுபடிகள் அரசாங்கத்தின் நிதி ஆதாரங்களையும் வடிய வைத்துவிடுகின்றன. இவை, விவசாயத்தில் பொது முதலீடுகளையும் கடுமையாகப் பாதிக்கிறது. எனவே இது நீண்டகாலத்திற்கு சாத்தியமில்லை.

இப்போது மிகவும் பொருத்தமான கேள்வி என்னவென்றால், கடன் நிவாரணம் என்பது வறட்சியாலும், அதிகரித்துள்ள செலவினங்களாலும், போதுமான அளவிற்கு நிர்ணயிக்கப்படாத பயிர்களின் விலைகளாலும், வீழ்ச்சியடையும் வருமானங்களாலும் ஏற்படக்கூடிய விவசாய நெருக்கடிக்குத் தீர்வுகாண முறையானத் தீர்வாக இருக்குமா என்பதேயாகும்.  நெருக்கடி,  விவசாய விளைபொருள்களை உற்பத்தி செய்பவர்கள்குறித்துக் கவலைப்படாமல், அவற்றின் நுகர்வோர் குறித்து மட்டும் வெளிப்படையாகக் கவனம் செலுத்துவதனால் ஏற்பட்டுள்ள பணவீக்கத்தின் மீது கவனம் செலுத்தும் கொள்கைகள் காரணமாகவும் ஏற்பட்டிருக்கிறது. மேலும் விவசாயக் கட்டமைப்பிலும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. விவசாய வேலைகளில் அதிக அளவில் பணமுதலீடு மற்றும் எந்திரங்கள் பயன்படுத்துவது அதிகரித்திருப்பதும் விவசாயம் பணப் பயிர்களை நோக்கி மாற்றம் அடைந்திருப்பதும் தோட்டக்கலைப் பொருட்களை சந்தைப்படுத்தலுக்கும், உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி இருப்பு வைத்துக்கொள்வதற்கும் அதிக முதலீடு தேவைப்படுகிறது. விவசாய விளைபொருள்களின் விலை ஏற்ற இறக்கங்கள் காரணமாக விவசாயி மிகவும் வடுப்படும் நிலைக்கு ஆளாகி, கடன் வலைக்குள் வீழ்வது அதிகரித்துக் கொண்டிருக்கிறது. விவசாயப் பொருள்களின் விலைகள் வீழ்ச்சி அடைவதும், விலைகளின் ஏற்ற இறக்கம் அதிகரித்துக் கொண்டிருப்பதும் விவசாய நெருக்கடியை மோசமாக்கி இருக்கின்றன.

எனினும், அளிக்கப்பட்டிருக்கிற உடனடித் தீர்வுகள், துண்டுதுண்டானவை மட்டுமே, தற்காலிகமாக மட்டுமே நிவாரணம் அளிக்கும். இதன்மூலம் நெருக்கடிக்கு மூல காரணங்களாக உள்ள பிரச்சனைகள் மீது கவனம் செலுத்தப்படவில்லை.  வருமானத்தில் தேக்க நிலைமை ஏற்பட்டிருப்பதும், விவசாய விளைபொருட்களின் விற்பனையில் வேகத்தேய்வு ஏற்பட்டிருப்பதும் கிராமப்புற நெருக்கடியின் தனித்தன்மைகளாக மாறியிருக்கின்றன. ஆனாலும், விவசாயம் சாராத் துறைகள் உட்பட ஒட்டுமொத்த கிராமப்புற பொருளாதாரமும் உற்பத்திப் பொருள்களை வாங்குபவர்களின் எண்ணிக்கையில் கடும் வீழ்ச்சி அடைந்திருப்பதால் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. முறைசாராத் தொழில்களில் முடக்கம் ஏற்பட்டிருப்பதும் வேலையின்மையை அதிகரிப்பதற்கு இட்டுச் சென்றிருக்கிறது. இது கிராமப்புற மக்களின் தேவைகளிலும் வீழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

நெருக்கடியைப் போக்க வேண்டுமானால், கொள்கை நடவடிக்கைகள் உற்பத்தித் திறனை உயர்த்திடக்கூடிய விதத்திலும், விவசாய இடுபொருட்கள் மற்றும் விவசாய செலவினங்களைக் குறைக்கும் விதத்திலும், சாமினாதன் ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் கட்டுப்படியாகக் கூடிய விலைகள் அளிக்கக்கூடிய விதத்திலும், விளைபொருள்கள் கொள்முதல் செய்யப்படுவதற்கு  உறுதியான முறையில் உத்தரவாதம்  அளிக்கக்கூடிய விதத்திலும் அமைந்திட வேண்டும். மேலும், நில உரிமையாளர்கள் ஒருங்கிணைக்கப்பட வேண்டும். பொதுத்துறை வங்கிகள் மூலம் கடன் கொடுப்பது விரிவாக்கப்பட வேண்டும். உள்கட்டமைப்பு வசதிகளுக்கான பொது முதலீடு உயர்த்தப்பட வேண்டும். வலுவானப் பயிர்க் காப்பீட்டுத் திட்டங்களை நிறுவிட வேண்டும். வேளாண்மை சார்ந்த தொழில்களை மேம்படுத்திட வேண்டும். இவை அனைத்தையும் செய்ய வேண்டியது தேவையாகும். வேளாண்மையில், கட்டமைப்பு வசதிகளைசெய்திடுவதற்கு தொடர்ந்து வந்த அரசாங்கங்கள் கவனம் செலுத்தவில்லை. மேலும், சிறந்த தொழில்நுட்பம், ஆராய்ச்சி மற்றும் விரிவாக்கும் திட்டங்கள் மற்றும் விவசாயப் பொருள்களுக்கான சேமிப்பு மற்றும் கிடங்கு உள்கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றை மேம்படுத்திடும் விதத்தில் முதலீடுகளும் தேவையாகும்.  எல்லாவற்றிற்கும் மேலாக, விவசாயிகளை ஏமாற்றும் விதத்தில் சந்தைகளில் கூட்டுச் சதி மேற்கொள்ளப்படுவதைத் தடுக்கும் விதத்தில் சந்தைகள் சீர்திருத்தப்பட வேண்டியதும், ஒரு சீரான ஏற்றுமதி - இறக்குமதிக் கொள்கை உருவாக்கப்பட வேண்டியதும் மிகவும் முக்கியமாகும். 

Back to Top