ISSN (Print) - 0012-9976 | ISSN (Online) - 2349-8846

தேஜகூ-வின் இடைக்கால பட்ஜெட்டின் எதிர்காலம் என்ன?

நடைமுறை சாத்தியமற்ற வெகுமக்களியம் உருவாக்கும் நம்பிக்கைகள் கவர்ச்சியான பேச்சு என்பதற்கப்பால் செல்வதில்லை.

 

The translations of EPW Editorials have been made possible by a generous grant from the H T Parekh Foundation, Mumbai. The translations of English-language Editorials into other languages spoken in India is an attempt to engage with a wider, more diverse audience. In case of any discrepancy in the translation, the English-language original will prevail.

 

இடைக்கால பஜெட் என்பது தங்களது ஆட்சி முடிந்து வெளியேறும் நிலையிலுள்ள அரசாங்கங்கள் வருகின்ற தேர்தலை சந்திப்பதற்கான மந்திர தாயத்து போன்றது. தேசிய ஜனநாயக கூட்டணி (தேஜகூ) அரசாங்கத்தின் இடைக்கால பட்ஜெட் அறிக்கையும் இதற்கு விதிவிலக்கல்ல. (நடப்பதற்கு சாத்தியமற்ற) வருமான ஆதரவு மற்றும் வரி விலக்குகளை ஏராளமாக கொண்டிருக்கும் இந்த பட்ஜெட்டை நாம் எதிர்பார்த்ததைப் போலவே அரசாங்கமானது பாதிக்கப்பட்டுள்ள தனது பிம்பத்தை சரிசெய்துள்ள பயன்படுத்துகிறது. ஆனால் முன்னெப்போதும் இருந்திராத விஷயம் என்னவெனில், மிகக் குறைந்த காலத்திற்கான “இடைக்கால” பட்ஜெட் நீண்ட கால அரசியல் லாபங்களுக்காக பயன்படுத்தப்படுவதுதான். மற்றொரு தேர்தலில் போட்டியிடுவதற்கான ஆளும் கட்சியின் அறிக்கையாக மட்டுமிராமல் இந்த பட்ஜெட்டானது இப்போது ஆட்சியிலிருப்பவர்களின் நம்பிக்கை அரசியலை திறம்பட பயன்படுத்துவதற்கானதாகவும் இருக்கிறது.

உதாரணமாக, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள சிறு விவசாயிகளுக்கான ஆண்டு வருமான உதவி 6,000 அல்லது பிரதான் மந்திரி கிஸான் சம்மான் நிதி திட்டத்தை எடுத்துக்கொள்ளுங்கள்.  இந்தத் தொகை போதுமானதா என்ற விவாதத்தைத் தாண்டி இந்தத் திட்டத்தின் ஆழமான அரசியல் விளைவைப் பார்க்கவேண்டும். முதல் தவணையான 2000 தேர்தலுக்கு முன்னரே கொடுக்கப்படும் எனில் வாக்குகளை பணத்திற்கு வாங்குகிறது என்ற குற்றச்சாட்டிற்கு இப்போதுள்ள அரசாங்கத்தை ஆளாக்கும். பணம் தரப்படுவது தேர்தலுக்குப் பிறகு என்று தள்ளிப்போடப்பட்டு பாரதீய ஜனதா கட்சித் (பாஜக) தலைமையிலான அரசாங்கம் அதிகாரத்திற்கு வருமெனில் எதிர்க்கட்சிகள் வாக்காளர்களின் தேர்வு குறித்து குற்றச்சாட்டுகளை எழுப்பும் என்பதுடன் வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை எனில் பொய் சொன்னதாக மேலும் குற்றச்சாட்டு எழும். பாஜக அல்லாத அரசாங்கத்திற்கு செயல்திறனை காட்டுவதற்கான நெருக்கடி இன்னும் அதிகரிக்கும். இத்தகைய திட்டத்திற்கு கிடைக்கும் மக்கள் ஆதரவின் காரணமாக அரசின் கருவூலமே பிரச்ச்னைக்குள்ளாகும் எனினும் எந்தவொரு அரசாங்கமும் இதிலிருந்து பின்வாங்க முடியாது. தொகையின் அளவு குறைவாக இருப்பதை விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள் தங்களை சங்கடமான நிலைக்கு ஆளாக்கிக்கொள்கின்றன. இவர்கள் ஆட்சிக்கு வந்தால் தொகை இன்னும் அதிகரிக்கப்படும் என்ற நம்பிக்கையை தங்களது வாக்கு வங்கிகளிடம் இவை உருவாக்குவதுடன் மக்களின் இத்தகைய எதிர்ப்பார்ப்பிலிருந்து சற்று விலகினாலும் தங்களது ஆட்சிக்கு எதிரான சூழல் உருவாகும் நிலைக்கு தங்களை ஆளாக்கிக்கொள்கின்றன. அமைப்புசாரா துறைகளில் ஓய்வூதியம், பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மந்தன் போன்ற திட்டங்களிலும் இதே போன்ற ஆபத்திருக்கிறது.

 “வேலையின்மை” பிரச்னையானது எதிர்க்கட்சியான காங்கிரசுக்கு தேர்தல் பிரச்சாரத்திற்கான முக்கியமான விஷயமாகும். வேலை(யின்மை) என்பது அடிப்படையில் உழைப்புச் சந்தையின் கட்டமைப்புரீதியான பிரச்னை, முழுமனதுடனான கொள்கை நடவடிக்கைகள் மூலம் தீர்க்கப்படவேண்டிய பிரச்னை என்றபோதிலும் வேலையின்மை பெரிதும் அதிகரித்ததற்காக ஆளும் அரசாங்கத்தை ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்தத்துடன், பல அரசியல் கூட்டங்களில் வேலைகளை உருவாக்குவதாக தேர்தல் வாக்குறுதியளித்துள்ளார். ஆனால் இது தொடர்பான கொள்கை விவாதங்கள் எங்கே? குறிப்பாக காங்கிரசாகட்டும், அல்லது பொதுவாக எதிர்க்கட்சிகளாகட்டும், தாங்கள் குற்றம்சாட்டும் பாஜகவைப் போலவே தாங்களும் வெறும் பேச்சளவில்தான் இருக்கின்றன. சவாலுக்கு எதிர் சவால் என்ற இந்த அரசியலில் கொள்கை அல்லது சித்தாந்த அடிப்படையிலான வித்தியாசம் என்பது கட்சிகளிடையே மேலும் மேலும் மொண்ணையாகிவருகிறது, தேர்தலில் தெரிவு செய்வது என்பது ஆளுமை பொறுத்த விஷயமாகிவருகிறது. வாக்காளர்கள் தங்களது “பிரதிநிதியை” அவரைப் பற்றிய தங்களது ”பார்வையின்” அடிப்படையில் தங்களது சமூக-பொருளாதார சூழல் மற்றும் கவலைகளை பிரதிநிதித்துப்படுத்துபவரை தேர்ந்தெடுக்கிறார்கள். இங்கேதான் அமைப்புசாரா துறைக்கான ஓய்வூதிய திட்டமானது பல காரணங்களால் ஆளும் கட்சியின் அதிரடி அரசியலாக விளங்குகிறது. ஒன்று, வேலைவாய்ப்பு புள்ளிவிவரங்கள் தொடர்பாக இப்போது நடந்துகொண்டிருக்கும் சர்ச்சைகளில் இந்திய வேலைச் சந்தையானது எளிதில் பாதிக்கப்படும் நிலையில் உள்ளதை இது அமைதியாக அங்கீகரிப்பதாகும். இரண்டு, பிரச்னை இருப்பதை ஒப்புக்கொள்வது என்பது அதைத் தீர்ப்பதற்கான வாக்குறுதிகளால் தொடரப்படவேண்டும். குறைந்தபட்சம் இது, அதிக வேலைவாய்ப்புகளை வழங்கும் ஆனால் காலங்காலமாக புறக்கணிக்கப்படும் துறையிலாவது நடந்தாக வேண்டும். மூன்று, அவ்வாறு நடக்கிறபோது ஆட்சியிலிருந்து வெளியேறும் அரசாங்கம் அதையடுத்து வரும் அரசாங்கத்திற்கு மிக உயரமான ஆனால் எளிதில் குலையக்கூடிய மட்ட அளவை நிர்ணயிக்கிறது.

ஏற்கனவே எளிதில் குலையும் நிலையிலுள்ள நம்பிக்கை அரசியலானது இத்தகைய சாத்தியமற்ற வாக்குறுதிகள் அளிப்பதன் மூலம் மேலும் ஆபத்திற்குள்ளாக்கப்படுகிறது. பிரதான் மந்திரி கிஸான் போன்ற ஆண்டு வருமான உதவித் தொகை தரும் திட்டங்களாகட்டும் அல்லது 5 லட்சம் அல்லது அதற்குக் கீழ் வருமானம் உள்ளவர்களுக்கு வரி விலக்கு தருவதாகட்டும் இவற்றிற்கு பதிலடி கொடுத்து எதிர்க்கட்சிகள் ஆட்சிக்கு வருமென்றால் இவையனைத்துமே எதிர்க்கட்சிகளுக்கு இரு பக்கமும் கூரான கத்தி போன்றவை. ஒருபுறம் இத்தகைய நலத் திட்டங்களை திரும்பப்பெறுவது கடினம். இவற்றை நிர்வகிப்பது அதை விட கடினம். உதாரணமாக, வருமான வரி விலக்கு தொடர்பாக அளிக்கப்பட்டிருக்கும் வாக்குறுதியை நிறைவேற்ற நிதி மசோதாவில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும். இது அதிக காலம் பிடிக்கும் விவகாரம். ஆட்சிக்கு வருகின்றவர்கள் இந்த வாக்குறுதிகளை (சிலவற்றையாவது) நிறைவேற்றுவதில் வெற்றிபெறுவார்கள் என்றால் அதிக பலன்களை  எதிர்பார்த்து சமூகத்தின் பிற தரப்பினரிடமிருந்து கோரிக்கைகள் எழும். குறிப்பாக சமீபத்தில் பாஜக அறிவித்துள்ள 10% இடஒதுக்கீடு இத்தகைய கோரிக்கைகள் எழுவதற்கான பின்னணியை உருவாக்கியுள்ளது. மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால், அதிக வருமானம் கொண்ட பிரிவினருக்கும் வரிக் குறைப்பு என நிதியமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்திருப்பது ஏற்கனவே உன்மத்தமாக இருக்கும் சூழலை மேலும் மோசமாக்குவதாகும்.

இந்த நம்பிக்கை அரசியல் பொருளாதார ரீதியாக சாத்தியமானதா என்கிற பிரச்னை எழுகிறது. அரசாங்கமே செய்துள்ள மதிப்பீடுகளின்படி வாக்குறுதியளிக்கப்பட்டுள்ள இந்தப் பயன்கள் கிடைப்பது என்பது 3.4% நிதிப் பற்றாக்குறையின் மூலம் மட்டுமே சாதிக்க முடியும். இது திருத்தியமைக்கப்பட்ட 3.3%ஐ விட 0.1%தான் அதிகம். ஆனால் இந்த நிதிக் கணக்கீடு நம்பகமற்ற யூகங்களின் அடிப்படையிலானவை என்று பொதுவாக கருதப்படுகிறது. அதாவது இந்த கணக்கீடுகள் மொத்த உள்நாட்டு உற்பத்தி 11.5%, மற்றும் ரிசர்வ் வங்கி, பொதுத் துறை வங்கிகளிடமிருந்து அதிக லாபம் கிடைக்கும் என்பன போன்ற சாத்தியமற்ற யூகங்களின் அடிப்படையிலானவை. பொருளாதார வளர்ச்சிக்கு புத்தெழுச்சி அளிப்பதற்கு, கட்டமைப்பு மாற்றங்களை கொண்டுவரக்கூடிய உண்மையான, சீரிய கொள்கை நடவடிக்கைகள் தேவை. நிதி சமனின்மைகள் பெரிதாகிக்கொண்டிருக்கையில், உடனடி ஊக்கத்தொகைகளுக்காக தரப்படும் அரசியல் நெருக்கடி சூழலில் ஒரு மாற்று அரசாங்கத்தால் நீண்ட கால நடவடிக்கைகளில் கவனம் செலுத்த முடியுமா? இத்தகைய சூழலில் இந்த இடைக்கால பட்ஜெட் என்பது வாக்கு வங்கிக்கான சிறு இலவசங்கள் பற்றிய அறிவிப்பு மட்டுமல்ல, அடுத்து வருகின்ற அரசாங்கம் தனித்துவமான அரசியல் திட்டம் மற்றும் உறுதியைக் காட்டத் தவறுமெனில் அதற்கான தூக்குக்கயிறும் கூட.  

Comments

(-) Hide

EPW looks forward to your comments. Please note that comments are moderated as per our comments policy. They may take some time to appear. A comment, if suitable, may be selected for publication in the Letters pages of EPW.

Back to Top