ISSN (Print) - 0012-9976 | ISSN (Online) - 2349-8846

ஜார்கண்டிலிருந்து கிடைத்த தகவல்

பழங்குடியின மக்களுக்கான ஜார்கண்ட் இயக்கத்தின் உத்தரவாதத்தை புதிய அரசு உணர வேண்டும்.

The translations of EPW Editorials have been made possible by a generous grant from the H T Parekh Foundation, Mumbai. The translations of English-language Editorials into other languages spoken in India is an attempt to engage with a wider, more diverse audience. In case of any discrepancy in the translation, the English-language original will prevail.

 

2019ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி வெற்றி பெற்ற பிறகு, பல மாநிலத் தேர்தல்களிலும் தோல்வியையே தழுவுகிறது. இந்த வரிசையில் தற்போது வெளியான ஜார்கண்ட் சட்டமன்ற முடிவுகளும் சேர்ந்துகொண்டுள்ளன. மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா தேர்தல்களைப் போல் அல்லாமல், ஜார்கண்ட் தேர்தல்கள் எதிர்க்கட்சி கூட்டணியான ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் மற்றும் இராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணிக்கு தீர்க்கமான முடிவை வழங்கியுள்ளன. புதிய கூட்டணி அமைத்தோ அல்லது தேவையான எண்களை கூட்டு சேர்த்து அரசமைக்கவோ பாரதீய ஜனதா கட்சியால் முடியாது. ஜார்கண்ட் தேர்தல்களில் பாஜக தனித்து களம் கண்டது. தேர்தலுக்கு முன்பாக எந்தக் கூட்டணியையும் ஏற்படுத்த முடியவில்லை. பாஜக தோற்றதற்கு இதுவும் ஒரு காரணமாக சுட்டிக்காட்டப்படுகிறது. பாஜகவின் வாக்கு வங்கியும், அதன் முன்னாள் கூட்டணியான அகில ஜார்கண்ட் மாணவர்கள் ஒன்றியத்தின் வாக்குவங்கியும் 2014 தேர்தல்களின் வாங்கியதை விட அதிகமாகவே வாக்குகளைப் பெற்றுள்ளது என்பது உண்மைதான். ஆனால் அவர்கள் போட்டியிட்ட தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதையும் கணக்கில் கொள்ள வேண்டியது அவசியம். மேலும் தொகுதிகளுக்கு இடையில் வாக்கு பகிர்மானம் ஒரே அளவில் பகிரப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. கூட்டணி அமைக்க இயலாததுதான் பாஜகவின் தோல்விக்கு காரணம் என்று கூறுவது, அந்த மாநிலத்தில் இருந்த முந்தைய ஆட்சியின் போது நடைபெற்ற சமூக யதார்த்தங்களைப் புறக்கணிப்பது போலாகும். ஜார்கண்ட் மாநிலம் உருவானதிலிருந்தே அம்மாநிலத்தில் நிலையற்ற அரசுகளே ஆட்சியில் இருந்தன. ஏனெனில் பெரும்பான்மையான தேர்தல் முடிவுகள் எந்தக் கட்சிக்கும் சரியாகக் கிடைக்கவில்லை. எனவே அவ்வப்போது குடியரசுத்தலைவர் ஆட்சியும் அங்கு நடைபெற்றது. கடந்த அரசு மட்டும்தான் நிலையாக ஐந்த ஆண்டுகள் ஆட்சி செய்தன. ஆனால் அந்த அரசின் நடவடிக்கைகள் மக்களிடம், குறிப்பாக விளிம்புநிலை ஒடுக்கப்பட்ட மக்களிடம் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தியது.

ஜார்கண்ட் மாநிலத்தின் பல்வேறு தரப்பு மக்கள் தற்போது வெளியேறும் அரசில் பல தீவிர அதிருப்திக்கு ஆளாகினர். பழங்குடியினருக்கு எதிரான சட்டமியற்றல்கள், குண்டர் கும்பல் கொலைகள், வாழ்வாதாரத்தை இழத்தல், மதச் சுதந்திரச் சட்டம், இனரீதியான மத ரீதியான வழியில் மக்களை ஒருங்கிணைத்தல், வெறுப்பு, அச்சம், அரச வன்முறை சூழ்ந்த சூழல், குறிப்பாக பழங்குடியினருக்கும் மதச் சிறுபான்மையினருக்கும் எதிரான வன்முறை ஆகியவை கடந்த ஆட்சியின் ஆதிக்க அம்சங்களாக இருந்தன. அம்மாநில மக்களின் பொருளாதார, கல்வி சார்ந்த, சுகாதார அந்தஸ்தை உயர்த்துவதற்கு எந்த முயற்சிகளும் எடுக்கப்படவில்லை. இந்தக் காரணிகளுக்கு மத்தியில், பழங்குடியினருக்கு எதிரான அணுகுமுறை மிகவும் ஆதிக்கம் செலுத்துவதாக இருந்தது. இதற்கு முன்னரும் ஜார்கண்ட் மாநிலத்தில் பாஜக அரசாங்கங்கள் இருந்துள்ளன. ஆனால், தற்போதைய அரசைப்போல் பழங்குடியினருக்கு எதிராக இவ்வளவு தீவிரமாக அவை செயல்படவில்லை. சோட்டாநாக்பூர் மற்றும் சந்தால் பரக்னா குத்தகைச் சட்டங்களை திருத்துவதற்கு, சுதந்திர இந்தியாவில் முதன் முதலாக முயற்சி செய்யப்பட்டது. இதற்கு பழங்குடியினர் மாபெரும் போராட்டங்கள் மற்றும் பேரணிகள் மூலம் எதிர்வினையாற்றினர். இதனால் ஆளுனர் இந்தச் சட்டமுன்வடிவிற்கு ஒப்புதல் தர மறுத்தார். இந்த இரண்டு சட்டங்களும் பழங்குடியின மக்களின் போராட்டத்தினால் தோன்றியவை. இந்தச் சட்டங்களை அறிமுகப்படுத்தப் போராடிய சக்திகள் இன்னும் ஜார்கண்ட்டில் துடிப்புடன்தான் உள்ளன. உண்மையில், இந்த இரண்டு சட்டங்களும் பழங்குடியின மக்களின் போராட்டத்தின் சாராம்சத்தை பிரதிபலிப்பவை. பின்னர் அம்மாநில அரசு மதச் சுதந்திரம் குறித்த சட்டமுன்வடிவைக் கொண்டுவந்தது. பழங்குடியினருக்குள்ளேயே பிளவினை ஏற்படுத்த இந்தச் சட்டமுன்வடிவு கொண்டுவரப்பட்டது. கூடுதலாக, அரசாங்கம் பழங்குடியினப் பகுதிகளில் பயங்கரவாதத்தின் ஆட்சியை கட்டவிழ்த்துவிட்டது. உரிமைகளுக்காக குரல்கொடுக்கும் எந்தவொரு இயக்கமும் தேசத்திற்கு எதிரானது என்று சித்தரிக்கப்பட்டு அந்த இயக்கங்களில் பங்குபெற்றோர் இராஜத்துரோக வழக்கில் கைதுசெய்யப்பட்டனர். இத்தகைய குற்றச்சாட்டுக்களால் ஆயிரக்கணக்கான மக்கள் சிறைகளில் வாடுகிறார்கள். பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் பாஜக கடும் தோல்வியை சந்தித்ததில் எந்த ஆச்சர்யமும் இல்லை. மதச் சிறுபான்மையினர் மீதான இவர்களின் சாயம் இன்னும் மோசமாக உள்ளது. பலாத்காரங்கள் மற்றும் குண்டர் கும்பல் கொலைகள் ஆகிய சம்பவங்களின் மூலம் இது நிரூபணமாகிறது. இவையும் பாஜகவின் தோல்விக்குக் காரணம். ஜார்கண்ட் மாநிலத்தில் பல்வேறு தொழில் நகரங்கள் உள்ளன. இவை பல்வேறு துணை நடவடிக்கைகளுக்கு வித்திடும். இந்த செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ள மக்களின் வாழ்வாதாரத்தை பொருளாதார மந்தநிலை பாதித்துள்ளது. எனவே அரை நகர்ப்புற பகுதிகளிலும் ஜார்கண்ட் முக்தி மோச்சா வெற்றிபெற்றது ஆச்சர்யப்படத்தக்க விஷயம் அல்ல.

2000ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15ஆம் தேதி ஜார்கண்ட் என்ற புதிய மாநிலம் உருவானதற்குப் பின்னே ஓர் இயக்கம் அறுபது ஆண்டுகளாக நடத்திய போராட்டம் உள்ளது. அந்த இயக்கமானது பீகார், மேற்கு வங்கம், ஒடிசா மற்றும் அப்போதைய மத்திய பிரதேசத்தினை ஒட்டியுள்ள பழங்குடியின பகுதிகளில் வாழும் பழங்குடியின மக்களின் உரிமைக்காக ஒரு குறிப்பிட்ட கலாச்சார மண்டலத்தை மையமாக வைத்து செயல்பட்டது. பின்னர் பீகார் மாநிலத்தின் சந்தால் மாவட்டத்தையும் சோடாநாக்பூர் பகுதியையும் உள்ளடக்கியது. ஜார்கண்ட் மாநிலம் தோன்றியபோது, 1951ஆம்ஆண்டு 36%ஆக இருந்த பழங்குடியினர் மக்கள்தொகை 2011ஆம் ஆண்டு 26%ஆகக் குறைந்தது. காலனியாதிக்கத்தின்போது துவங்கிய ஒட்டுமொத்த புலம்பெயர்தல் சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்தியாவில் தொடர்ந்தது. இதனால் அங்கு பழங்குடியினர் சிறுபான்மையினராக மாறிவிட்டார்கள். ஜார்கண்ட்டை தற்போது பழங்குடியினர் மாநிலமாக கருதுவது ஒரு தவறான அபிப்பிராயம். இது ஒரு குறியீடுதானே தவிர, இதனால் எந்த கூடுதல் மதிப்பும் கிடையாது.

ஜார்கண்ட் மாநிலம் வளங்கள் நிறைந்தது. அங்கு பல்வேறு தனியார் மற்றும் பொது நிறுவனங்கள் உள்ளன. எனினும் இந்த வளர்ச்சிகளின் பலன்கள் அங்குள்ள பழங்குடியினருக்கும் ஜார்கண்டில் உள்ள பூர்வீக மக்களுக்கும் சென்று சேரவில்லை. ஆனால், இத்தகைகய தொழில்துறையினரால், அவர்கள் மேலும் வறுமைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். சமூக, பொருளாதார வளர்ச்சி படிக்கட்டுகளில் அவர்கள் இன்னும் கீழேயே உள்ளார்கள். இந்த புதிர் குறித்து புதிய அரசு குறித்துவைத்ததுக்கொள்ள வேண்டும். விளிம்பு நிலை மக்களை உள்ளடக்கிய திட்டங்களையும் கொள்கைகளையும் வகுப்பது அவசியம்.

Comments

(-) Hide

EPW looks forward to your comments. Please note that comments are moderated as per our comments policy. They may take some time to appear. A comment, if suitable, may be selected for publication in the Letters pages of EPW.

Back to Top