ISSN (Print) - 0012-9976 | ISSN (Online) - 2349-8846

மக்களாட்சியின் மாண்பைக் குறைக்கும் வாரிசு அரசியல்

வாரிசு அரசியலின் உருவாக்கம் இந்திய மக்களாட்சியின் முரண்நகையாக இருக்கிறது

 

The translations of EPW Editorials have been made possible by a generous grant from the H T Parekh Foundation, Mumbai. The translations of English-language Editorials into other languages spoken in India is an attempt to engage with a wider, more diverse audience. In case of any discrepancy in the translation, the English-language original will prevail.

 

குடும்ப உறுப்பினர் ஒருவர் (குறிப்பாக நேரு-காந்தி குடும்பத்தைச் சேர்ந்தவர்) இந்தியாவில் தேர்தல் அரசியலில் நுழைகிறபோது வாரிசு அரசியல் நீட்டிக்கப்படுவது பற்றிய கடுமையான தாக்குதல்களுக்கு, விவாதங்களுக்கு புத்துயிர் கிடைக்கிறது. ஆகவே, பிரியங்கா காந்தி வதேரா காங்கிரசின் பொதுச் செயலாளராகவும், கிழக்கு உத்தர பிரதேசத்திற்கு பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டதையடுத்து, பிரதமர் உட்பட பாரதீய ஜனதா கட்சி (பாஜக) உறுப்பினர்கள் பூச்சாண்டி எழுப்பியிருப்பது வழக்கமான ஒன்றுதான். அதிகாரம் படைத்த குடும்பப் பின்னணியிலிருந்து ஒருவர் அரசியலுக்குள் நுழைவது வாரிசு அரசியல் பற்றிய விவாதங்களை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. ஆனால், சமத்துவமான மக்களாட்சிக்கான குரலாக அது தோன்றினாலும் அதில் உண்மையிருப்பதை விட நேர்மையின்மை அதிகம் இருப்பதால் விவாதங்களின் விளைவு ஒன்றுமில்லாதுபோய்விடுகிறது. வழக்கம்போலவே, மக்களாட்சியின் சாரமான சமத்துவத்தை பலவீனப்படுத்தும் வாரிசு அரசியலிலிருந்து தங்களது கட்சியை பாஜகவின் பிரதிநிதிப் பேச்சாளர்கள் வேறுபடுத்திக் காட்டுகிறார்கள். ஆனால், அக் கட்சியினுடைய வாரிசு நடைமுறைகள் மக்களாட்சிக்கு எதிரானவற்றிற்கு பங்களிப்பு செய்கிறது. வாரிசு அரசியலுக்காக காங்கிரஸ் கட்சியை விமர்சிக்கும் வேளையில் பாஜகவினுடைய வாரிசு அரசியல் எந்த வகையில் காங்கிரசுனுடையதை விட மேலானது என்பதை அது சொல்வதில்லை.

பாஜகவின் இந்த எதிர்வினை பாசாங்கானது மட்டுமல்ல அனிச்சையானதும்கூட. மக்களாட்சியில் சமத்துவ உள்ளடக்கத்தை ஆழப்படுத்துவதில் முக்கிய பங்காற்றும் இரட்டைக் கொள்கைகளான சமத்துவம் மற்றும் நீதி விஷயங்களில் வாரிசு அரசியலை அரசியல்மயமாக்குவதன் விளைவான எதிர்மறையான விளைவுகளுக்கான காரணம் கூறுவதில் தோல்வியடைகிறது.

அறிவொளிபெற்ற குடிமக்களானவர்கள் பழமைவாதத்திலிருந்து, அதாவது தளையாக இருக்கும் குடும்ப உறவுகளிலிருந்து தீவிரமாக தங்களை பிரித்துக்கொள்வதன் வாயிலாக மக்களாட்சியானது சமத்துவப் போக்கைப் பெறுகிறது. பொதுநலனை சிறப்புறச்செய்ய மக்களாட்சி பொதுவெளியை அணுகும் பொதுநலத்திற்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்ட ஒரு குடிமகன்/குடிமகள் அல்லது அறிவொளிபெற்ற தனிநபர் சாதி, மதம், பாலினம் அல்லது செல்வம், அரசியல் தொடர்புகள், ஆள்பலம் (கட்சி உறுப்பினர்கள் உட்பட) ஆகிய மூலாதாரங்களின் திரட்டாகத் திகழும் குடும்ப ஆதரவை சாந்திருக்கமாட்டார். இத்தகைய சுயேச்சையான தனிநபர்களுக்கு குடும்ப ஆதரவு என்பது ஒரு சுமையாகிறது. ஏனெனில் அது உண்மையான மக்களாட்சி நடைமுறையான சுய அடையாளப்படுத்தலை அவர்களுக்கு மறுக்கிறது. எதிராளியை விமர்சிப்பதற்கு வாரிசு அரசியல் என்ற விஷயத்தை பயன்படுத்திக்கொள்ளும் தொலைநோக்கற்ற அரசியலானது, தனது குடும்பத்தை விட்டு விலகி அரசியலை உண்மையிலேயே போட்டிக் களமாக பார்க்கும் ஆற்றல் கொண்ட ஒரு நபரை அனுமதிப்பதில்லை.

சமகால தேர்தல் அரசியலில், வெற்றிகரமான அரசியல்வாதியாக உருவாக விழைபவர்களுக்கு  அடிப்படையாதாரமாக இருப்பது அதிகாரம் மிக்க குடும்பங்களே. மக்களாட்சி அமைப்பில் முடிவெடுக்கும் அதிகாரங்களைக் கொண்ட அமைப்புகளை கட்டுப்படுத்துவது, வழிநடத்துவது ஆகியவற்றில் முக்கிய இடம் வகிப்பது இத்தகைய குடும்பங்கள் அல்லது அவர்களது உறவினர்கள். தேர்தலுக்கு முன்னரும், தேர்தலின்போதும் இத்தகைய குடும்பங்கள்தான் அதிகாரப் பொறுப்புகளை விநியோகிக்கின்றன. இத்தகைய குடும்பங்கள் கட்சியின் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களை முழுவதுமாக தங்களது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கின்றன. தங்களது உத்தரவுகளை பின்பற்றாதவர்களை கண்டித்துவைப்பது அல்லது தங்களுக்கு வேண்டிய சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களை கட்சியிலும், அரசாங்கத்திலும் உயர் பொறுப்புகளில் அமர்த்துவதன் மூலம் அவர்களை தங்களது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கின்றன.

 ஒப்புமை ரீதியாக சொன்னால், பில்லியர்ட்ஸ் விளையாட்டு வீரர்கள் பந்தை பலகையின் பொந்தில் போடுவதற்கு பயன்படுத்தும் குச்சி போன்றது இத்தகைய அதிகாரம். அதிகாரம் கட்டற்று ஓடுவதில்லை. இந்தக் குடும்பங்கள் அதை பிறருக்குரிய உரிமையாகக் கருதி அதை அவர்களுக்குத் தருவதில்லை, மாறாக தங்கள் குடும்பத்திற்கு விசுவாசமாக இருப்பதற்கான பரிசாகத் தருகின்றன. இதுவொரு புது வகையான நிலபிரபுத்துவம். இந்த வகையான அரசியலால் பாதிக்கப்பட்டவர்களே இதைப் பின்பற்றுவது ஒரு முரண்நகை. சில குறிப்பிட்ட தலித் மற்றும் ஆதிவாசி குடும்பங்களே வாரிசு அரசியலை பின்பற்றி தங்களுக்கு அடுத்து தங்களது குடும்பத்தைச் சேர்ந்தவர்களே அதிகாரத்திற்கு வரும்படியாக பார்த்துக்கொள்கின்றன.

சில தலித் மற்றும் ஆதிவாசி குடும்பங்களும் குடும்பத்தையே அடிப்படையாதாரமாகக் கருதுவது என்பது அரசியல் அதிகாரத்தில் வாரிசு அரசியல் என்பது தொடர்ந்து நிகழ்கிற விஷயமாக, அதிகாரத்தில் இருப்பவர்களின் விதியாக ஆகிவிட்டது என்பதைக் காட்டுகிறது. இந்த விதியின் வேர்கள் மக்களாட்சிக்கு முந்தைய சமூகங்களில் இருந்தன. இந்த சமூகங்களில் பரம்பரையாக அதிகாரம் கைமாறுவது விதி, முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட ஒன்று. இவர்களை பின்பற்றுபவர்கள் காட்டும் விசுவாசமானது இதை ஏற்கப்படத்தக்கதாக ஆக்குகிறது. தேர்தல் ஜனநாயகத்தில் ஒரு குடும்பத்தால் கட்டுப்படுத்தப்படும் அதிகாரம் என்பது இதைப் போன்றதே.

அப்படியெனில் தேர்தல் வெளியை மக்கள்மயப்படுத்த இப்போது வேரூன்றியிருக்கும் குடும்ப அதிகாரத்தை எப்படி பலவீனப்படுத்துவது? இந்த இலக்கை சாதிக்க சில முயற்சிகள் எடுக்கப்பட்டன. உள்ளாட்சி அளவில் பெண்களை அதிகாரம் கொண்டவர்களாக்க கொண்டுவரப்பட்ட 73 மற்றும் 74ஆம் அரசமைப்புச்சட்ட திருத்தங்கள் குடும்ப ஆதிக்கத்தை மட்டுப்படுத்துவதை நோக்கி எடுத்துவைக்கப்பட்ட ஓரடியாகும். ஆனால் ஆணாதிக்க குடும்பங்கள் தங்களது அதிகாரத்தை நிலைநிறுத்திக்கொள்ள வேறு வழிகளை கண்டுபிடிக்கின்றன. ”நான் அதிகாரம் செய்வேன்; அதிகாரம் செய்யப்பட உட்படுவேன்” என்ற மக்களாட்சியின் அரிஸ்டாட்டிலிய அறக் கொள்கையைக் கூட இந்தக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் ஏற்பதில்லை. அதிகாரமற்ற நிலையிலுள்ள பெண்கள் அதிகாரத்திற்கு வருவதற்கு இந்தக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் ஒப்புவதில்லை. ”நமது குடும்பமே அதிகாரம் செய்யும், தொடர்ந்து அதிகாரத்தில் இருக்கும். வேறு யாரும் அதிகாரம் செய்ய ஒப்புக்கொள்ள முடியாது” என்ற வாரிசு அரசியல் கொள்கையை இந்தக் குடும்பங்கள் தொடர்கின்றன. இந்த வேதனையான சூழ்நிலையில்தான் சாதாரண வாக்காளர்கள் தங்களது சிந்திக்கும் ஆற்றலை பயன்படுத்தி சமத்துவம் மற்றும் நீதி என்ற மக்களாட்சியின் இரண்டு கொள்கைகளை நிலைநிறுத்த வேண்டும், வாரிசு அரசியலை பலவீனப்படுத்த வேண்டும்.

Comments

(-) Hide

EPW looks forward to your comments. Please note that comments are moderated as per our comments policy. They may take some time to appear. A comment, if suitable, may be selected for publication in the Letters pages of EPW.

Back to Top