ISSN (Print) - 0012-9976 | ISSN (Online) - 2349-8846

உரிய நடைமுறைகள் உலர்ந்து உதிர்கின்றன

.

பாலியல் வன்புணர்வுக் குற்றத்தின்கீழ் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த நான்கு பேர் போலீஸ் “என்கவுண்டரில்” கொல்லப்பட்டிருப்பது காவல்துறையினருக்கும், தெலங்கானா அரசாங்கத்திற்கும் உதவியிருக்கலாம். தெலங்கானா அரசாங்கத்திற்கு சற்றே “நம்பகத்தன்மையைக்கூட” ஈட்டிக் கொடுத்திருக்கலாம். அதே சமயத்தில், இதன் மூலமாகப் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளான பெண்ணின் பெற்றோர் உட்பட பலர் மத்தியில் காணப்பட்ட வஞ்சத்தீர்வு உணர்வு மட்டுப்பட்டது போன்று தோன்றுகிறது. எனினும், ஒரு பக்கத்தில், குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் இவ்வாறு கொல்லப்படுதல், சட்டத்தை அமல்படுத்தும் அமைப்பான காவல்துறையினருக்கும், சட்டத்தின்படி தீர்ப்பு வழங்கும் அமைப்பான நீதித்துறைக்கும் இடையே,  ஒரு கூர்மையான முரண்பாட்டை உருவாக்கி இருக்கிறது என்பதும் உண்மையாகும். மற்றொரு பக்கத்தில், நாடாளுமன்ற/சட்டமன்ற உறுப்பினருக்கும் ஓர் அரசியல் தலைவருக்கும் இடையேயான வேறுபாட்டையும் தெளிவற்றதாக்கி இருக்கிறது. நாடாளுமன்ற/சட்டமன்ற உறுப்பினர்கள் என்பவர்கள் அரசமைப்புச்சட்டம் வகுத்துத்தந்துள்ள நன்கு நிறுவனமயப்படுத்தப்பட்ட நடைமுறை விதிகளை மனதில் கொண்டு, சட்டங்களின் சாராம்சங்களை உருவாக்கி சட்டமியற்றுபவர்கள் என்று கருதப்படுகிறது. அவர்கள் அரசமைப்புச்சட்டம் வகுத்துத்தந்துள்ள விதிமுறைகளின்படி  தங்களின் வினைகளையும் எதிர்வினைகளையும் அடிப்படைக் கோட்பாட்டுடன் பகுத்தறிந்து ஆற்றுகிறவர்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சட்டத்தின் விதிமுறைக் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டே (ஏனெனில் இவ்வாறு சட்டத்தை உருவாக்கியதில் பங்கு பெற்றவர்கள் இவர்கள்) தங்கள் கருத்துக்களையும் அவர்கள் கூறுகிறார்கள் என்றே கருதப்படுகிறது. ஆனால், இந்த வழக்கில், நாடாளுமன்ற/சட்டமன்ற உறுப்பினர்களில் சிலர், இத்தகைய சட்டத்தின் கீழான உரிய நடைமுறை விதிகளை அரித்துவீழ்த்தியிருப்பதுபோலவே தோன்றுகிறது.

இது, நாடாளுமன்ற/சட்டமன்ற உறுப்பினர்களில் சிலர், காவல்துறையினரால் பாலியல் வன்புணர்வுக் குற்றத்தைச் செய்தவர்கள் என்று சந்தேகிக்கப்படும் நால்வர் உடனடியாகக் கொல்லப்பட்டதை மிகவும் பாராட்டி வரவேற்றிருப்பதிலிருந்து தெளிவாகத் தெரிகிறது. 

நாடாளுமன்ற/சட்டமன்ற உறுப்பினர்களில் சிலர், அரசமைப்புச்சட்டத்தின் அறநெறிப் பண்புகளையெல்லாம் காற்றில் பறக்கவிட்டுவிட்டு, தான் சட்டமியற்றும் நாடாளுமன்ற/சட்டமன்ற உறுப்பினர்கள் என்பதையே மறந்து,  பாகுபாட்டுடன் கூடிய ஓர் அரசியல்வாதியைப் போல, பழிதீர்க்க வேண்டும் என்று கூப்பாடு போடுகின்ற, “குடிமை சமூகத்தின்” பல உறுப்பினர்களுடன் தங்களையும் இணைத்துக்கொண்டு, உணர்ச்சி அலைகளில் சவாரி செய்வதைத் தேர்ந்தெடுத்தார்கள். காவல்துறையினரின் “அவசர” நடவடிக்கையின் பின்னணியில், ஒரு நாடாளுமன்ற/சட்டமன்ற உறுப்பினரிடமிருந்து ஒருவர் குறைந்தபட்சம் எதிர்பார்ப்பது என்னவெனில், சட்டத்தின் விதிமுறைகள் மதிக்கப்பட்டிருக்கிறதா என்பதேயாகும். கேள்விக்கு ஆளாகியுள்ள காவல்துறையினரும் நாடாளுமன்ற/சட்டமன்ற உறுப்பினர்களும் சட்டத்தின் நடைமுறை விதிகளைப் போதுமான அளவிற்குப் பின்பற்றி இருக்கிறார்களா என்றே ஒருவர் எதிர்பார்ப்பார். அரசமைப்புச்சட்டத்திற்குக் கட்டுப்பட்டு நடப்பேன் என்று உறுதிவாக்குமூலம் எடுத்துக்கொண்டுள்ள நாடாளுமன்ற/சட்டமன்ற உறுப்பினர்கள் அதன் அறநெறி உணர்வையே அரித்துவீழ்த்துவதைப் பார்க்கையில் முற்றிலும் நகைமுரணாக இருக்கிறது. காவல்துறையினரின் நடவடிக்கையை ஏற்பதற்கான தகுதி நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வருகிறது, சந்தேகத்திற்குரியதாக மாறியிருக்கிறது, காவல்துறை நடவடிக்கை மீதான வலுக்கட்டாய நிலைகள் முற்போக்கான சிந்தனையுடன் பார்க்கும்போது பலவீனமாக மாறியிருக்கிறது. காவல்துறையினரின் நடவடிக்கை சட்டப்படி மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகளை மீறி எடுக்கப்பட்ட விதிக்கட்டுப்பாடற்ற நடவடிக்கையாக இருக்கிறது என்றே சட்ட மேதைகள் பலரால் பார்க்கப்பட்டிருக்கிறது. சந்தேகத்திற்குரியமுறையில் பாலியல் வன்புணர்வுக் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் காவல்துறையினரால் கொல்லப்பட்டிருப்பது இரு அரசு நிறுவனங்களுக்கிடையே, அதாவது காவல்துறையின் நடவடிக்கைகளுக்கும், இந்திய நீதித்துறையின் விவேகமான செயல்பாட்டிற்கும் இடையே, கூர்மையான விதத்தில் மோதலைக் கொண்டு வந்திருக்கிறது. “காவல்துறை நடவடிக்கை” இத்தகைய செயல்முனைவுக்கான அடிப்படைகளை ஒழித்துக்கட்ட வேண்டும் என்று மட்டும் கோரவில்லை, மாறாக நீதித்துறையின் சட்டபூர்வமான நடைமுறைகளை ரத்து செய்வதற்கும் இட்டுச் சென்றிருக்கிறது. உரிய சட்ட நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காக,  கிரிமினல் வழக்குகளின் நடைமுறைகளில் மிகவும் முக்கியமாகப் பின்பற்ற வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையெல்லாம்,  புலனாய்வு மேற்கொள்ளும் காவல்துறையினர் மேற்கொள்ளவேண்டியதில்லை என்கிற ஓர் பரிந்துரையையும் இந்நடவடிக்கை தெரிவித்திருப்பதுபோல் தோன்றுகிறது. வல்லுநர்கள் வாதிடுவதுபோல,  இத்தகு உடனடி நடவடிக்கையானது, சட்டபூர்வமாக/அரசமைப்புச்சட்ட நடைமுறைவிதிகளின்படி மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளுக்கு ஒரு சுருக்குவழியை ஏற்படுத்தியிருக்கிறது.  சட்டத்திற்கு உட்பட்டு வாழும் படித்த மக்கள் இதில் மிகவும் உறுதியானமுறையில் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று விரும்பியதை ஆழமான முறையில் கடுமையாகப் பாதிக்கும் விதத்தில் இது தாக்கங்களை ஏற்படுத்தி இருக்கிறது. இதுபோன்ற வழக்குகளில் உறுதியானமுறையில் நடவடிக்கைகள் எடுக்கும்போது, காவல்துறையினரால் அல்லது நாடாளுமன்ற/சட்டமன்ற உறுப்பினர்களின் எதிர்வினைகளால் எடுக்கப்படும் நடவடிக்கைக்கு போதுமான காரணங்கள் உற்பத்தி செய்ய வேண்டியது அவசியமாகும். இவ்வாறு, சட்டபூர்வமாக உறுதியான முறையில் நடைமுறைகளைப் பின்பற்றும்போது, நீதிமன்றத்தில் நீதிபதிகளோ அல்லது குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்காக ஆஜராகும் வழக்குரைஞர்களோ புலனாய்வு அதிகாரிகளைக் குறுக்கு விசாரணை செய்கையில், அவற்றை எதிர்கொள்ளும் விதத்தில், புலன்விசாரணையில் போதுமான காரணங்களை உற்பத்தி செய்ய வேண்டி இருக்கும். நீதிமன்றத்தில் இரு தரப்பினரும் முன்வைத்திடும் அனைத்து விதமான வாதங்களையும்  அலசி ஆராய்ந்து தன் முன் வைக்கப்பட்ட சாட்சியத்தின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கி, குற்றஞ்சாட்டப்பட்டவர் கடும் தண்டனைக்கு உரியவர் எனக்கண்டு, தீர்ப்பளிக்கப்படும். எனினும், இத்தகைய காவல்துறையினரின் நடவடிக்கை இத்தகைய வாதங்கள் மேற்கொண்டு முடிவெடுக்கும் நடைமுறையையே கழுத்தை நெறித்துக் கொன்று, அதன்மூலம் நீதித்துறை குற்றவாளிகளுக்குத் தண்டனை விதித்திடும் வாய்ப்பை மறுத்திருக்கிறது. இதன் காரணமாகத்தான் முன்னணி வழக்கறிஞர்கள் பலர் காவல்துறையினரின் நடவடிக்கைக்கு தங்களின் ஆழமான ஆட்சேபணைகளை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். மேலும் காவல்துறையினரின் நடவடிக்கையானது, நாட்டில் சட்ட நடைமுறை மற்றும் அரசமைப்புச்சட்டத்திற்கு உண்மையாக இருந்துவரும் பொது மக்கள், பாடம் கற்றுக்கொள்வதற்கான வாய்ப்பையும் ஒழித்துக்கட்டிவிட்டது. இந்நடவடிக்கை ஒரு கேள்வியை எழுப்பியிருக்கிறது:

அரசமைப்புச் சட்டத்தின்கீழ் அளிக்கப்பட்டுள்ள சட்டங்களுக்கு காவல்துறையினரும் உட்பட்டு நடந்திட வேண்டும் என்று கோருகிற, சட்டபூர்வமான நடைமுறையை அல்லது சட்டத்தின் ஆட்சியை மதிக்கிற சிவில் கலாச்சாரத்தை மக்கள் மத்தியில் விதைத்திட சட்டத்தை அமல்படுத்தும் அமைப்பு ஆர்வமாக இருக்கிறதா என்பதேயாகும்.  கிரிமினல் வழக்குகளில் நடவடிக்கைக்கான அடிப்படைக் கோட்பாடு, அரசமைப்புச்சட்டத்தின்கீழ் மிகவும் செம்மையாக வகுக்கப்பட்டுள்ள நடைமுறைகளிலிருந்து வர வேண்டும். ஆனால், இவ்வாறு அடிப்படைக்கோட்பாட்டைக் காவல்துறை பின்பற்றியதாகத் தெரியவில்லை.   கொன்றதை நியாயப்படுத்துவதற்காக, “தற்காப்புக்காக” இது அவசியமாகிவிட்டது என்று கூறுவதும் நம்பக்கூடியதாக இல்லை. ஏனெனில், இச்செயலை நடத்தியவர்களைத் தவிர வேறு சாட்சிகள் எவரும் இதில் இல்லை.

Back to Top