அவநம்பிக்கை அரசியலின் எழுச்சி
.
இந்திய அரசியலில் ஒருவிதமான அவநம்பிக்கை அரசியல்போக்கு உருவாகி அதிகரித்துக்கொண்டிருப்பது, குறிப்பாக இந்திய அரசியலின் நிறுவனச் சூழலில், மிகவும் கவலையளிக்கிறது. இந்தப் போக்குகள், கட்சிகளின் நடைமுறையிலும் மற்றும் அதன் உண்மையான நிலைப்பாடுகளிலும் வெளிப்படுகின்றன. நடைமுறையில், விதிமீறல்களை மேற்கொள்வதும், நன்கு நிறுவப்பட்ட நடைமுறைகளுக்குக் கூட வளைந்து கொடுப்பதும் நடந்துள்ளன. உதாரணமாக, முதலமைச்சர் பதவிப் பிரமாண நிகழ்வை நடத்துவதற்கே ஒரு வழக்கமற்ற நேரம் தேர்ந்தெடுக்கப்பட்டது. நிச்சயமாக இது அரசைமைப்புச்சட்ட நெறிமுறைகளை மீறிய செயலாகும். மேலும் அவற்றின் உண்மையான நிலைப்பாடுகளிலும் இப்போக்குகள் குறிப்பாக, ஒருசில சட்டமன்ற உறுப்பினர்கள் ஆட்சி அதிகாரத்தில் உள்ள கட்சிக்கு அல்லது ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றக்கூடும் என கட்சிகளுக்குத் தாவும் மனப்பான்மை, தெளிவாகத் தெரியக்கூடிய விதத்தில் மாறியிருக்கின்றன. மகாராஷ்ட்ராவில் சமீபத்தில் நடைபெற்ற அரசியல் நிகழ்ச்சிப்போக்குகளில் இத்தகைய நடைமுறைகள் அதிகரித்துக்கொண்டிருந்ததைத் தெளிவாகக் காண முடிந்தது. மேலும் இந்த சமயத்தில் அரசியலில் பந்தோந்தித் தன்மை, துரோகம் மற்றும் ரகசியம் போன்றவை வெடித்தெழுந்ததையும் பார்க்க முடிந்தது. இவ்வாறு, இந்தப் போக்குகள் அரசமைப்புச்சட்டத்தின் நெறிமுறைகளையே தாக்குவதற்கு இட்டுச்செல்வதுடன், நாடாளுமன்ற/சட்டமன்ற உறுப்பினர்களை எவ்விதமான அறநெறிக் கட்டுப்பாடுகளையும் உதறித்தள்ளவும் வழிவகுக்கின்றன. வேறுவிதமாகச் சொல்வதென்றால், நாடாளுமன்ற/சட்டமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் அரசமைப்புச்சட்டத்தால் அளிக்கப்பட்டு மற்றும் அவ்வப்போது நீதிமன்றங்களால் சரி என நிலைநிறுத்தப்பட்டுள்ள தரநெறி சார்ந்த ஒழுங்குமுறைகளுக்குக் கட்டுப்பட்டவர்கள் என்கிற உணர்வு குறைந்து கொண்டிருக்கிறது. மகாராஷ்ட்ராவில் அரசாங்கம் அமைத்தது தொடர்பாக உச்சநீதிமன்றம் சமீபத்தில் அளித்த தீர்முடிவு இதற்குச் சரியான எடுத்துக்காட்டாகும்.
இத்தகைய பிளவுபட்ட தேர்தல் முடிவுகள், நிறுவனங்களின், அரசியல் கட்சிகளின் மற்றும் தனிப்பட்ட முறையில் தலைவர்களின் அரசியல் வாழ்க்கையில் இத்தகைய போக்குகள் உருவாவதற்கான ஒரு நிச்சயமற்ற அரசியல் நிலைமையை உருவாக்கும் என்பது உண்மைதான். ஆனாலும், அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்கள் மத்தியில் அதிகாரத்தை நிலைநிறுத்திக் கொள்வதற்கும், அதிகாரத்தில் தொடர்ந்து நீடித்திருப்பதற்கும் இத்தகைய போக்குகள் தேவைப்படுகின்றன என்பதும் உண்மையேயாகும். மகாராஷ்ட்ராவில் நடைபெற்ற சமீபத்திய அரசியல் நிகழ்ச்சிப்போக்குகள் இவற்றை மீண்டும் ஒருமுறை முன்னுக்குக் கொண்டுவந்திருக்கிறது.
இது தொடர்பாக, அவநம்பிக்கை அரசியலின் வளர்ச்சிக்கு பங்களிப்பினைச் செலுத்திட, தன்னிலையின் மூலக் கூற்றின் காரணிக்கும் சமமான அளவில் முக்கியத்துவம் இருக்கிறது. அவநம்பிக்கை அரசியலின் வெற்றி, தன் சொந்த அல்லது தனிப்பட்ட நலன்களைப் பாதுகாப்பதற்காக அரசியலைப் பயன்படுத்திக் கொள்வதற்கான கடுமையான ஆசையைச் சார்ந்தும் இருக்கிறது. அரசியல் வாழ்க்கையில், இத்தகைய வலுவான ஆசைதான், தனிநபர்களை, தனிநபர்க் குழுக்களை மற்றும் அரசியல் கட்சிகளைக் கூட சுறுசுறுப்பாக இயங்க வைக்கும் விதத்தில் ஊக்குவித்திடும் சக்திகளாக அமைந்திருக்கிறது. இதுபோன்ற சமயங்களில், அறநெறிப்பட்ட ஒழுங்குமுறைகள் இரண்டாம் பட்சமாக மாறக்கூடிய அதே சமயத்தில், தனிநபர் நலனைத் தூக்கிப்பிடிப்பது பிரதானமானதாக மாறுகிறது. இவ்வாறாக நடைமுறை மற்றும் அடிப்படையிலான நெறிமுறைகளை மீறுவதன் மூலமாக, ஒருவர் தான் சார்ந்திருக்கும் “தத்துவார்த்தக்கொள்கை”க்கு நேர்மையாக இருந்து வந்ததும், அல்லது தன்னுடைய தனிப்பட்ட நலன்களுக்கு உண்மையாக இருந்து வந்ததும்கூட, புறக்கணிக்கப்பட்டு விடுகின்றன.
அரசியலின் அவநம்பிக்கை வடிவங்கள், வெளிப்படைத்தன்மையுடன் மேற்கொள்ளப்படும் ஜனநாயக அமைப்புமுறையில் ஆழமான கண்டனத்திற்கு உரியன. இவை ஜனநாயகத்தின் நடைமுறை விதிகளை ஏளனப்படுத்துகின்றன. உண்மையில், அரசியல் தலைவர்கள் வெளிப்படைத்தன்மையுடனான அரசியல் நடைமுறைகளைக் கண்டிப்பது என்பது அனைவராலும் ஏற்கத்தக்கவிதத்தில் விவாதங்கள் மேற்கொண்டு வழிவகைகளைக் காண்பதற்கான நபர்களின் திறமையின்மையின் அடிப்படைக் காரணங்களின் விளைவாக ஏற்படுகிறது. இதனை, நேர்மறையாகக் கூறுவதென்றால், ஒருவர் தான் அறநெறி ஒழுக்கத்திற்கு உட்பட்டு செயல்படும்போது, தீய விளைவுகளை ஏற்படுத்தும் நிர்ப்பந்தங்களுக்கு எதிராக உறுதியாகச் செயல்படக்கூடிய வலிமையை அது, அவருக்கு அளிக்கிறது. சிலரது தீய சூழ்ச்சிகளின் கருவியாக மாறுவதற்குக் கட்டாயப்படுத்தக்கூடிய சறுக்குப் பாதைகளைத் தவிர்த்திட வேண்டியது ஒருவருக்கு அவசியமாகும். இத்தகைய சறுக்குப் பாதைகளில் காலைஎடுத்து வைப்பதைத் தவிர்ப்பதன் மூலம் ஒருவர் நேர்மையாக இருக்க முடியும்.
எந்தவொரு ஜனநாயகமும் தரம் தாழ்ந்த வடிவங்களான சறுக்குப் பாதைகளில் தொடர்ந்து தன்னைப் புதுப்பித்துக்கொண்டு செயல்பட முடியாது. ஓர் அரசாங்கத்திற்கு ஜனநாயக வடிவம்தான் சிறந்த கொள்கையாகும். ஏனெனில், அதனை உணர்வுபூர்வமாக செயல்படுத்துவது சாத்தியமில்லை என்பதனால் அல்ல, மாறாக இதன்மூலம்தான் சிறந்த அரசியல் நடவடிக்கைகளை மிகக் குறுகிய காலத்தில் செயல்படுத்திட முடியும் என்பதனாலாகும். இதில் நடவடிக்கைகள் மக்களின் பிரதிநிதிகளால் அரசமைப்புச் சட்டத்தின் நெறிமுறைகளுக்கேற்ப மேற்கொள்ளப்படுகின்றன. நாடாளுமன்ற/சட்டமன்ற உறுப்பினர்களும், மாநிலங்களின் ஆளுநர்களும் இந்த நெறிமுறைகளின்படி நடந்துகொள்ள வேண்டும், அல்லது, சிறந்த அரசியல் நடைமுறைகளுக்கான இடத்தை உருவாக்கக்கூடிய விதத்தில் இயல்பாகவே இருந்துவரும் தரநிர்ணயங்களின்படி நடந்துகொள்ள வேண்டும் என்றுதான் எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றையதினம், இந்திய அரசியல் நிலைமைகள் நேர்மறை வடிவங்களுக்குப் பதிலாக அவநம்பிக்கை அளித்திடும் எதிர்மறை வடிவங்களைத்தான் தொடர்ந்து வெளிப்படுத்திக்கொண்டிருப்பது போல் தோன்றுகின்றன. அவநம்பிக்கைப் போக்குகள் ஜனநாயகம் நீடித்திருப்பதற்கான உகந்த நிலைகளுக்கு உதவுவதற்குப் பதிலாக அதன் வீர்யமான இடங்களை அரித்துத் தின்றுகொண்டிருக்கின்றன. ஜனநாயகத்தின் உன்னத நிலை என்பது, வெளிப்படைத்தன்மையும், மற்றும் நேர்மையான விவாதங்களின் மூலமாகவும், அனைவராலும் ஏற்றுக்கொள்ளத்தக்க தீர்ப்புரைகளின் மூலமாகவும் ஜனநாயகத்தைத் தூக்கிப்பிடிப்பதற்கான வல்லமையையும் மேம்படுத்திடக்கூடிய விதத்தில் உசுப்பிவிடப்படக்கூடியதாகும். இது தொடர்பாக, அரசியல் கட்சிகள், தங்கள் அரசியல் நடவடிக்கைகளுக்கு வழிகாட்டிடவும், முறைப்படுத்திடவும் இயல்பான தர நிர்ணயங்களைப் பின்பற்றிட வேண்டியது முக்கியமாகும். அரசியல் விமர்சகர்கள் ஒரு கட்சியை, இதர கட்சிகளைப்போலவே அதுவும் தரமற்றவிதத்தில் சறுக்குப்பாதையில் சென்றுகொண்டிருப்பதாக புலம்பும் பின்னணியில், இந்த எதிர்பார்ப்பு மிகவும் முக்கியத்துவமுடையதாகிறது. ஓர் அரசியல் கட்சி நம்பத்தகாத முறையில் துரோகம் இழைக்கக்கூடியதாகவும், விஷத்தன்மையுடையதாகவும் மாறக்கூடிய நிலையை வளர்த்தெடுக்கும் விதத்தில் பாதிப்புக்குள்ளாகும் ஆபத்து இருப்பதாக இத்தகைய கூர்நோக்குச் சிந்தனைகள் காண்கின்றன. மக்கள், தங்களுடைய தலைவர்களும் அரசியல் கட்சிகளும் தங்கள் அரசியல் நடவடிக்கைகளை, வெளிப்படைத் தன்மையுடனும், நாகரிகமானமுறையிலும் மேற்கொள்ள வேண்டும் என்றே எதிர்பார்க்கிறார்கள். இது அவர்களை மட்டுமல்ல, ஜனநாயகத்தையும் காப்பாற்றிட அவசியமாகும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.