அறநெறிக் கூருணர்வுடனான ஜனநாயகத்தைத் தேடுவதில் …
.
The translations of EPW Editorials have been made possible by a generous grant from the H T Parekh Foundation, Mumbai. The translations of English-language Editorials into other languages spoken in India is an attempt to engage with a wider, more diverse audience. In case of any discrepancy in the translation, the English-language original will prevail.
ஜனநாயகம் தொடர்பாக, குறிப்பாக தாராளமய ஜனநாயகம் தொடர்பாக, மாணவர்கள் மத்தியில், ஒரு மதிப்பீட்டை மேற்கொள்வதற்கு, நிலையான அம்சங்கள் மற்றும் நடைமுறை அம்சங்கள் என்னும் இரு பிரதான அம்சங்களைக் கருத்தில் கொண்டு, முடிவெடுத்திடக்கூடிய விதத்தில் ஓர் ஆதிக்கம் செலுத்தும் போக்கு காணப்படுகிறது. நடைமுறை அம்சம், அரசமைப்புச்சட்டம் அளித்துள்ள உத்தரவாதங்களை உட்படுத்துகிறது. அதன்மூலம் ஒவ்வொரு பிரஜைக்கும் அரசியல் அரங்கில் பங்கேற்பதற்கு சம உரிமை அளிக்கிறது. இதில் எவ்விதமான வேறுபாடும் கிடையாது. நடைமுறை ஜனநாயகத்தின் அடிப்படை அம்சம், நல்லொழுக்கமிக்க மிகச் சரியான பிரஜை தனக்கு அளிக்கப்பட்டுள்ள இவ்வுரிமையைப் பயன்படுத்திக் கொண்டு அரசியல் அரங்கில் சம அந்தஸ்தை அனுபவித்திட வழிகோலுகிறது. சுருக்கமாகச் சொல்வதென்றால், வாக்களிக்கும் உரிமை சம மதிப்பைப் பெற்றுள்ளது. ஏனெனில், அதுதான் ஒரு வேட்பாளர் தான் போட்டியிடும் தொகுதியில் வெற்றி அல்லது தோல்வி விதியைத் தீர்மானித்திடும் அதிகாரத்தைப் பெற்றிருக்கிறது. குடிமக்களுக்கு இந்த உரிமைகள், அவர்கள் ஒரு குறிப்பிட்ட பிராந்தியம் அல்லது மதம் அல்லது ஒரு குறிப்பிட்ட மொழியைப் பேசுகிறவர் என்பதற்காக அளிக்கப்படவில்லை, மாறாக அவர்களுக்கு அரசமைப்புச் சட்டத்தால் இதற்கான வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. அரசமைப்புச் சட்டத்தின் பல்வேறு ஷரத்துக்கள் ஒரு பிரஜைக்கு வாக்களிப்பதற்கான உரிமையை மட்டும் அளித்திடவில்லை, மாறாக அவர், மேலும் தனிப்பட்ட முறையில் தன்னுடைய நலன்களுக்காக மட்டுமல்லாமல் நாட்டு மக்களின் பொது நலன்களுக்காகவும் உண்மையான முறையில் குரல் கொடுக்கக்கூடிய விதத்தில் அமைந்திருக்கிறது.
நம் அரசமைப்புச்சட்டம் அளித்துள்ள வார்த்தைகளின்படி, இவ்வாறு, ஜனநாயகம் என்பது நாட்டில் ஒவ்வொரு பிரஜையும், எவருடைய அனுமதியோ, ஆதரவோ அல்லது இரக்கமோ இன்றி வாழ்வதற்கு வழியேற்படுத்தித் தந்திருக்கிறது. இவ்வாறு, நம் நாட்டின் உயர்ந்த லட்சியங்களுடனான அரசமைப்புச்சட்டத்தின் கீழ், எவரொருவரின் மரியாதை அல்லது சலுகையுடனும் பிரஜைகள் வாழ்ந்திட வேண்டிய அவசியம் இல்லை. வேறுவிதமாகச் சொல்வதென்றால், குடியுரிமை நம் நாட்டில் எவ்விதமான அதிகாரப் படிநிலைக் கட்டமைப்பினை அடிப்படையாகக் கொண்டும் இல்லை.
எனினும், இந்தியாவின் இன்றைய பின்னணியில் ஜனநாயக நடைமுறை என்பது தாராளமய ஜனநாயகத்தின் உணர்வுக்கு நேரெதிரான முறையில் பரிணாமம் பெற்றிருக்கிறது. குறிப்பாக சில அரசியல் கட்சிகள் மக்களை அரசியல்ரீதியாக அணிதிரட்டுவதற்குப் பதிலாக, அவர்களை அறிவொளிமிக்க குடிமக்களாக மேம்படுத்துவதற்கான தேவையிலிருந்து கீழிறங்கி, அவர்களை சாதியின் அடிப்படையிலும் மதத்தின் அடிப்படையிலும் குழுக்களாக அணிதிரட்டும் விதத்தில் மாறி இருக்கின்றன. வகுப்புவாத, பிளவுவாத சிந்தனைகளுடன் இருக்கின்ற இத்தகைய கட்சிகள், தனிப்பட்ட குடிமக்களைக் கலைத்துவிட்டு அவர்களை ஒரு குறிப்பிட்ட இனத்திற்குள் “அடைத்திட” கோரி வருகின்றன. இதனை இவர்கள் மேற்கொள்வதற்கான ஒரே நோக்கம், மதத்தின் அடிப்படையில் அரசியல் பெரும்பான்மையை உருவாக்க வேண்டும் என்பதேயாகும். வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், வாக்காளர்களை இவ்வாறு ஒரே இனத்தின்கீழ் கட்டிப்போடுவது என்பது தங்களை பெரும்பான்மை இனத்தவரின் கட்சியாக, கட்சியின் அரசியல் அடையாளத்தை உருவாக்கிடவும் ஒருங்கிணைத்திடவும் அவசியமான நிபந்தனையாகும். இவர்களைப் பொறுத்தவரைக்கும் பெரும்பான்மை என்பது ஜனநாயகத்தின் அடிப்படையிலானதல்ல, மாறாக இனக்குழுக்களின் அடிப்படையிலானதாகும்.
இவர்களின் அரசியல் திட்டம், தனிநபர் அல்லது தனிப்பட்ட பிரஜைகளின் நலன்களில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக அவர்களை ஒரு குறிப்பிட்ட சாதி அல்லது மதத்தின் வளையத்திற்குள் இருத்தி, அவர்களுக்கிடையே இருந்திடும் வேற்றுமைகளைப் பெரிதுபடுத்தாமல், அவர்களை ஒன்றுபடுத்தி, அவர்களிடம் சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புணர்வை அதிக அளவில் உட்புகுத்துவது என்பதாகும். இவ்வாறு ஒருவரை சிறுபான்மையினருக்கு எதிரானவர்களாகத் தரம்தாழ்த்த முனைவது அறநெறிபிறழ்ந்த செயலாகும். குடிமக்களுக்கு அவர்களை அறிவொளி மிக்கவர்களாக, சுயஉணர்வுடன் இருப்பவர்களாக உயர்த்துவதற்கான வாய்ப்புகளை அளிக்க மறுப்பது குற்றமாகவே கருதப்பட வேண்டும்.
எனவே, வெளிப்படையான அரசியல் செயல்பாடுகள் உள்ள ஒரு நாட்டில் ஜனநாயகம் என்பது அவசியமான ஒன்று அல்லது ஆரம்ப நிபந்தனை மட்டுமேயாகும். ஏனெனில் அது அவ்வாறு அரசியலில் செயல்படுவதற்கு ஒருவருக்கு அவருடைய உரிமையைப் பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கிறது. ஆனாலும், அவ்வாறு வெளிப்படையான அரசியல் செயல்பாடு தொடர்பாக இருக்கின்ற அரசமைப்புச்சட்ட ஷரத்து, அவசியம் என்ற போதிலும், ஒரு நபர் சம மதிப்பையும் குடியுரிமையையும் அனுபவிக்கக்கூடிய அளவிற்குப் போதுமானவையாக இல்லை. அது ஒரு பிரஜைக்கு சம மதிப்பையும் சம குடியுரிமையையும் உத்தரவாதப்படுத்திடவில்லை. ஜனநாயகம் என்று அழைக்கப்படும் வெளிப்படையான அரசமைப்புச் சட்ட அங்கமாக இருக்கின்ற ஒவ்வொரு பிரஜையும், அதே அரசமைப்புச்சட்டத்தின் கீழ் இருக்கின்ற இதர பிரஜைகளுக்கும், சம மதிப்பிற்கான அறநெறித் தேவைகளை அங்கீகரித்திடும் கொள்கையைக் கொண்டிருத்தல் வேண்டும்.
ஒரு கூருணர்வுமிக்க ஜனநாயகத்தில் மற்றவர்களின் மதிப்பு மிக்க செயல்பாடுகளைக் கவுரவிக்கும் விதத்தில் ஒரு நெறிமுறைத் தயார் நிலையுடன் இருப்பது அடிப்படையில் அவசியமாகும். ஜனநாயகத்திற்கான இடம் என்பது விரோதம் பாராட்டும் விதத்தில் இருந்திடாமல் விருந்தோம்பும் பண்புடன் இருந்திட வேண்டும். இத்தகைய ஜனநாயகத்தில் ஒரு குறிப்பிட்ட உறுப்பினர் எவ்விதத்திலும் வெறுக்கப்படுவதையோ, விலக்கப்படுவதையோ அல்லது கண்டனத்திற்கு உள்ளாக்கப்படுவதையோ எதிர்கொள்ளக்கூடாது.
இந்த இனங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் தங்கள் வாக்குகளை அளிக்கும் உரிமையைப் பெற்றிருக்கிறார்கள் என்பது உண்மைதான் என்கிற அதே சமயத்தில், இந்தச் சமூகக் குழுக்களைச் சேர்ந்தவர்கள், சமூகத்தின் பல நிறுவனங்களிலும் பொது இடங்களிலும் தங்கள் வீர்யமான இருப்பைக் காட்டுவதற்கு அவசியமான முறையில் தங்கள் குரலை வெளிப்படுத்துவதற்கான வல்லமையைப் பெற்றிருக்கிறார்கள் என்று அதே அளவுக்கு நம்பிக்கையுடன் கூறிட முடியாது. எனினும், உன்னிப்பாகப் பார்த்தோமானால், அவர்கள் “முற்றுகை”க்குக் கீழ் அடைத்து வைக்கப்பட்டிருப்பதுபோல் தோன்றுகிறது என்று கூறுவது மிகையான ஒன்றாக இருக்காது.
எனினும் கடந்த இருபதாண்டு கால ஜனநாயக நடைமுறை நாட்டில் உள்ள அனைத்து இந்தியர்களும் அவர்களின் அறஞ்சார் தேவைகளுக்கு கூருணர்வுடன் சமமான மதிப்புடன் நடத்தப்படுகிறார்களா என்கிற சந்தேகத்தை இந்தியனிடம் ஏற்படுத்தி இருக்கிறது. எனவே, ஒருவர் பின்வரும் விஷயத்தை மீண்டும் உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டியது அவசியமாகும். ஜனநாயகத்திற்கும் அதன்கீழ் உள்ள உறுப்பினர்களுக்கும் அவசியத் தேவை என்ன என்பது தாங்கள் அரசியல்ரீதியாக வாழ்வதற்கான திறந்த வெளி மட்டுமல்ல, மாறாக அரசமைப்புச்சட்டத்தின் கீழ் வாழ்கின்ற ஒவ்வொரு உறுப்பினர்களும் பரஸ்பரம் சக உறுப்பினர்களிடையே சமமான அளவில் கண்ணியத்தையும் மதிப்பையும் பகிர்ந்துகொள்வதற்கான பொதுவான தன்மையும் இருந்திட வேண்டும். கண்ணியம் மற்றும் பரஸ்பரம் மரியாதை செலுத்துதல் போன்ற உலகளாவிய விழுமியங்கள், அரசியலில் செயல்படுகின்ற ஒவ்வொரு நபருக்கும், அவசியமான ஜனநாயக லட்சியங்களாகவும், உறுதிப்பாடாகவும் அமைந்திட வேண்டும். அரசியல் சமூகத்தினரிடையே ஓர் ஒருங்கிணைப்பு இருக்க வேண்டியது, ஒரு நெறிமுறைச் சமூகத்தை உருவாக்குவதற்கான அடிப்படையான தேவையாகும். இது, கண்ணியம் மற்றும் பரஸ்பரம் மதித்து மரியாதை செலுத்துதல் போன்ற அறநெறி விழுமியங்களின் அடிப்படைக் கட்டமைப்பைப் பகிர்ந்துகொள்வதன் மூலமாகவே நடந்திட முடியும். இத்தகைய விழுமியங்கள், இன அடிப்படையில் அரசியல் பெரும்பான்மையை ஏற்படுத்தி தங்கள் ஆதிக்க ஆசையை நிறைவேற்றிக்கொள்ள முயலுவதற்குப் பதிலாக, அனைத்துத் தரப்பினரிடையேயும் ஒரு தார்மீக ஒற்றுமையை உருவாக்குவதன் மூலம் பாதுகாத்திட வேண்டும்.