ISSN (Print) - 0012-9976 | ISSN (Online) - 2349-8846

பொறுப்பாகாமையின் அரசியல்

.

அரசியலின் வழக்கமான பல்வேறு கோளங்கள், குறிப்பாக தேர்தல் அரசியலின், பங்கேற்பு நடவடிக்கைகள், இருவிதமான எதிரெதிர் நிலைப்பாடுகளினால், ஆதிக்கம் செலுத்தக்கூடியதாகவும், நீடித்திருக்கக் கூடியதாகவும், தோன்றினாலும், உண்மையில் இவை அடிப்படையில் ஒன்றேதான்.

முதலாவது நிலைப்பாடு, வாக்காளர்களின் “உலகளாவிய” உரிமையை, அவர்கள் வாக்களிக்கும் உரிமை குறித்து, அவர்கள் எதற்காக வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து சம்பந்தப்பட்டது. எடுத்துக்காட்டாக, அவர்கள் வளர்ச்சிக்காக, நல்லாட்சிக்காக மற்றும் துடிப்பான தேசியவாதத்திற்காக தங்கள் வாக்குகளைச் செலுத்துகிறார்களா என்பது குறித்த்தாகும். இவ்வாறு, இந்த அர்த்தத்தில், வாக்காளர்கள் என்பவர்கள், குறிப்பிட்ட சொந்த நலன்களைக் காட்டிலும் பொதுவான மக்கள் நலன்கள் பிரதானமானவை என்று கருதி அதற்காக வாக்களித்திடப் பரிந்துரைப்பதாகும். இவ்வாறு பொறுப்பாகாமை என்பது, முதற்கண், கிட்டத்தட்ட மறைமுகமானதாகும். எனினும், பல்வேறு மட்டங்களில் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சித் தலைவர்களைப் பொறுத்தவரை, நடக்கும் விஷயங்களுக்கு அவர்கள் பொறுப்பேற்க மறுப்பது என்பது, இயல்பாகவே அழுத்தந்திருத்தமாக நேரடியானதாகும். பொதுவாகவே அரசியல் ஆர்வலர்கள், தாங்கள் தேர்தலில் போட்டியிடுவது என்பது, சொந்த நலன்களைப் பேணுவதற்காக அல்ல, மாறாக அனைவருக்குமான பொது நலன்களைப் பாதுகாப்பதற்காகவே என்றுதான் தங்களைக் காட்டிக்கொள்வார்கள். தேர்தல் காலங்களில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அல்லது அவர்களுடைய ஆதரவாளர்கள் மக்கள் மத்தியில் அளவுக்கு அதிகமாகவே வாக்குறுதிகளை அள்ளிவீசுவதிலிருந்தே இவர்களின் பொறுப்பேற்க மறுக்கும் தன்மை பிரதிபலித்திடும்.

நாம் பதில் தெரிந்துகொள்ளவேண்டிய கேள்வி என்பது இதுதான். அரசியல் ஆர்வலர்களுக்குத் தேர்தலில் போட்டியிட ஊக்குவிக்கும் தீர்மானகரமான காரணியாக இருப்பது என்ன? தேர்தல் அரசியலில் பங்கேற்பதற்கான முடிவினை அவர்கள் மேற்கொண்டிட, எது தீர்மானிக்கிறது, கூட்டு நலனா? அல்லது சொந்த நலனா? இதற்கான பதில் என்பது உலகளாவிய நலன் சார்ந்த்தாக அநேகமாக இல்லை. மாறாக, மிகப்பெரிய அளவில் தனிப்பட்ட சொந்த நலன்களேயாகும்.  

தேர்தல் அரசியல் உலகமும், முறையான அரசியல் மற்றும் அரசியல் கட்சிகளின் அதிகாரமட்டங்களும், பல அரசியல் கட்சித் தலைவர்களின் சொந்த நலன்களைப் பாதுகாத்திடும் விதத்திலேயே பெரிய அளவில் சேவகம் செய்து கொண்டிருக்கின்றன. இவை பல சமயங்களில் நேரடியாகவும், பல சமயங்களில் சற்றே மறைமுகமானவிதத்திலும் பிரதிபலிக்கின்றன.

அரசியலில் நுழைகிற சில தலைவர்களின் சொத்து மதிப்புகள் மிக வேகமான முறையில் வானளாவக் குவிவதைப் பல சமயங்களில் கண்கூடாகவே காண முடியும். பெரிய அளவில் நேர்மையான அளவில் தார்மீக வளங்களின் அடிப்படையில் முதலீடுகள் எதுவும் இல்லாமலேயே, இவர்கள் தேர்தல் அரசியலின்கீழ் வெற்றி பெற்றிருக்கிறார் என்ற ஒரு தகுதியைத் தவிர வேறு எதுவும் இல்லாத நிலையிலேயே, இவர்களின் சொத்து மதிப்புகள் பல மடங்குகள் பல்கிப் பெருகியிருப்பதைக் காணும்போது ஆச்சர்யமாக இருக்கிறது. இவ்வாறு இவர்கள் எவ்வித்த் தகுதியுமின்றி பணம் படைத்தவர்களாக மாறியிருப்பது கீழ்க்கண்டவாறு சிலவற்றைப் பரிந்துரைக்கின்றன. ஒரு நபர், அடிப்படையில் தன்னுடைய தனிநபர் ஒழுக்கத்துடன் சமரசம் செய்துகொள்ளாமல் இத்தகைய ஆதாயத்தை அடைய முடியாது.

“சுயநல அரசியல்” என்பது தேர்தல் அல்லது முறையான அரசியல் வாழ்க்கையில் “தன்னைத்தானே” மேம்படுத்திக்கொள்வதற்கான ஒரு பிரகாசமான வாய்ப்பாகும். இதற்காக இவர்கள் தனியே செலவு எதுவும் செய்ய வேண்டியது இல்லை. இந்தக் காலத்தில் இவ்வாறு தங்களைத் தாங்களே வளர்த்துக் கொள்வது என்பது, குறைந்தபட்சம் சில பிரபல அரசியல் தலைவர்களுக்கு, ஒரு வெறியாகவே மாறியிருப்பதைப் போலவே, தோன்றுகிறது. இவற்றை இவர்கள், “செல்ஃபீ” மூலமாக, தங்களைத் தாங்களே புகைப்படம் எடுத்து வலைத்தளங்களில் வெளியிடுவதன் மூலமாகவும், தங்களைத் தாங்களே பந்தாவாகப் பாராட்டிக்கொண்டு ட்விட்டர் தளங்களில் படங்களையும், செய்திகளையும் வெளியிடுவதன் மூலமாகவும் செய்துகொண்டுவிடுகிறார்கள். துயரார்ந்த சமயங்களுக்கு இடையேகூட இவ்வாறு இவர்கள் செய்துகொண்டிருக்கிறார்கள். தங்களைத் தாங்களே நேசிப்பது என்பது தங்களைத் தாங்களே பந்தாவாக பாராட்டிக்கொள்வதாக மாறி இருக்கிறது. உண்மையில், இவ்வாறு தங்களைத் தாங்களே பந்தாவாக பாராட்டிக்கொள்வதன் மூலம், தாங்கள் சார்ந்திருக்கும் கட்சியில் அதிகாரத்திலிருப்பவர்களிடமிருந்து அங்கீகாரத்தைப் பெறுகிறார்கள் அல்லது தாங்கள் தேர்தலில் நிற்பதற்கு டிக்கெட்டுகளைப் பெற்றுவிடுகிறார்கள் அல்லது கட்சி அமைப்பில் சிறிய அளவிலான பொறுப்புகளைப் பெற்றுவிடுகிறார்கள். 

இவ்வாறு ஒருவரின் தனிப்பட்ட முறையிலான தகுதி என்பது அதற்கு அவர் உரிமையுள்ளவரா என்பதைப் பொறுத்தது அல்ல, மாறாக அவர் கட்சியில் அவருக்கு மேலேயுள்ளவர்களுக்கு எந்த அளவிற்கு அவர் தலையாட்டுகிறார் என்பதைப் பொறுத்தே அமைகிறது.

ஒருவருடைய புத்திசாலித்தனம் என்பது அவர் சார்ந்திருக்கிற கட்சியின் தலைவர்கள் கூறுவதற்கெல்லாம் தலையாட்டும்போது, முறையான அரசியலில் பங்கேற்பதற்கு அவரிடமிருந்த உரிமைகளைப் பலவீனம் அடையச் செய்துவிடுகிறது.

நிறுவனங்களின் ஒவ்வொரு மட்டத்திலும், “அரசியல் சுயநலம்” அவருக்கு மேலுள்ள தலைவர்களால் மதிப்பிடப்படுவது நடக்கிறது. எனவே, ஒரு கட்சியின் தலைவரின் மதிப்பு என்பது, அவருக்கிருக்கின்ற உண்மையானத் தகுதியைக் காட்டிலும் மேலான முறையில், அவருக்கு எந்த அளவிற்குத் தலையாட்டிகள் இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்ததேயாகும்.

சுயாட்சித்தன்மையை உறுதிப்படுத்திக்கொள்வதற்கான திறமை, ஒரு சாமானியனின் தார்மீக மதிப்பை நிறுவுவதில் ஒரு முக்கியமான பங்கு வகிக்கிறது என்று அழுத்தமாகச் சொல்லத் தேவையில்லை. இதனைத் தொடர்ந்து, அறநெறி வகையில் மதிப்பினைப் பெறுவது என்பது அரசுத் துறைகளில் வேலைகள் பெறுவதற்கும், அரசாங்கத்தால் முறைப்படுத்தப்பட்டு சந்தையில் குறைந்தபட்ச ஆதார விலைகளைப் பெறுவதற்கும் வகை செய்கிறது. ஆனாலும், இப்போதெல்லாம் அரசாங்கத் துறைகளில் வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைத்திடவும், விவசாய நெருக்கடியில் பாதிப்புக்கு உள்ளான விவசாயிகளுக்கு, தங்கள் சமூக மதிப்பினை மெய்ப்பிக்கக்கூடிய அளவிற்கு, குறைந்தபட்ச ஆதார விலை கிடைத்திடவும், ஏதேனும் வாய்ப்புகள் காணமுடிகிறதா என்பதெல்லாம் விவாதிக்கப்பட வேண்டியவைகளாகும். எனினும், வேலையில்லா இளைஞர்களும், நெருக்கடியில் சிக்கிக்கொண்டுள்ள விவசாயிகளும் மிகவும் உயர்ந்த அளவில் மதிப்புக்கு உரியவர்கள்தான். வேலையில்லா இளைஞர்களும், நெருக்கடிக்கு உள்ளான விவசாயிகளும் தேசியவாதத்தின் சாராம்சத்தில் உளவியல் ரீதியாக திருப்தி அடைந்திருப்பதிலிருந்து இது தெளிவாகிறது. இவ்வாறு இவர்கள் தங்களைத் தாங்களே மிகவும் உயர்வாக நினைத்துக் கொண்டிருப்பது ஒருவிதமான பாதுகாப்பு மற்றும் சமூகப் பாதுகாப்பிற்குத் தேவைப்படுகிறது. மறுபுறத்தில், அரசியல்வாதிகளில் ஒரு குறிப்பிட்ட வகையினர், தங்கள் சுயநல நடவடிக்கைகளை என்றென்றும் தொடர்வதற்காகவும், வரவிருக்கும் காலங்களிலும் தொடர்ந்து பாதுகாப்பதற்காகவும், தேசியவாதம் போன்ற மதிப்புமிக்க சொற்களைக் கூறி சுரண்டுவது என்பது தொடர்கிறது. எனினும், பொறுப்பாகாமை என்பது குறிப்பாக அரசியல் ஆர்வலர்கள் பொறுப்பேற்றுக்கொள்ள மறுப்பது என்பது, உலகளாவிய நலன்கள் என்ற போர்வையின்கீழ் தங்கள் சுயநலன்களை மறைப்பதற்கான அரசியலேயாகும் என்பது தெளிவாகத் தெரிகிறது.

     

 

Back to Top