ISSN (Print) - 0012-9976 | ISSN (Online) - 2349-8846

மகாராஷ்ட்ராவில் எதிர்க்கட்சிகள் பக்கம் வீசும் புதிய காற்று?

சமீபத்திய நிகழ்ச்சிப்போக்குகள் தேர்தல் பிரச்சாரத்தை மகாராஷ்ட்ராவின் சமூகக் கலாச்சாரத்தின் பக்கம் உறுதியான முறையில் ஈர்த்திருக்கிறது.

 

The translations of EPW Editorials have been made possible by a generous grant from the H T Parekh Foundation, Mumbai. The translations of English-language Editorials into other languages spoken in India is an attempt to engage with a wider, more diverse audience. In case of any discrepancy in the translation, the English-language original will prevail.

 

மகாராஷ்ட்ரா சட்டமன்றப் பேரவைத் தேர்தல்களுக்கான பிரச்சாரம், அக்டோபர் 21 அன்று வாக்கெடுப்பு நடைபெறவுள்ளதால் விறுவிறுப்பு அடைந்துகொண்டிருக்கிறது. கடந்த சில வாரங்களில் நடந்துள்ள நிகழ்ச்சிப் போக்குகள், தேர்தல் போட்டியில் ஒரு நிச்சயமற்ற தன்மையை அறிமுகப்படுத்தி இருக்கிறது.  அமலாக்கத்துறையினர் தேசியவாதக் காங்கிரஸ் கட்சியின் (என்சிபி) தலைவர் சரத் பவாருக்கு,  அனுப்பியுள்ள அறிவிப்புக்கு அவர், அரசியல் பழிவாங்கும் கொள்கைகளுக்கு எதிராக ஆவேசத்துடன் அணிதிரள்வோம் என்று மிகவும் சாதுரியமான உத்தியுடன் பதில் அளித்திருப்பது, ஆளும் கூட்டணியினர் தவறாக அடி எடுத்து வைத்திருக்கிறார்கள் என்பதை நிச்சயமாகக் காட்டுகிறது. ஆனாலும், அதற்கும் முன்னதாகக்கூட, தேசியவாதக் காங்கிரஸ் கட்சியின் தலைவரால் மேற்கொள்ளப்பட்டுள்ள விடாப்படியான பிரச்சாரமும் திறமைமிகு அரசியல் செய்தியும் பாரதிய ஜனதா கட்சி – சிவ சேனைக் கூட்டணியின் கணக்குகளை நிலைகுலைவித்திடக் கூடிய சாத்தியக்கூறுகளைக் கொண்டிருக்கிறது. இந்தப் பிரச்சாரமும் இவர்கள் முன்வைத்திடும் செய்தியும் வாக்காளர்கள் மத்தியில், அதிலும் குறிப்பாக கிராமப்புற இளைஞர்கள் மத்தியில் ஓர் அதிர்வினை ஏற்படுத்தியிருப்பது போன்றே  தோன்றுகிறது, இது ஏன்?    ஒரு பெரிய அளவில்,  தேர்தல் பிரச்சாரத்தின் போது முன்வைக்கப்படும் அம்சங்கள் மாற்றப்பட்டுக்கொண்டிருப்பதன் காரணமாக இவ்வாறு நடந்துகொண்டிருக்கிறது. பாஜக-சிவசேனைக் கூட்டணியின் நிலைப்பாடானது, பெரிய அளவில் பிரதமர் நரேந்திர மோடியின் பிம்பத்தைச் சுற்றியும், அரசமைப்புச் சட்டத்தின் 370ஆவது பிரிவு ரத்து செய்யப்பட்டமை, மற்றும் பாஜகவின் இந்துத்துவா நிகழ்ச்சிநிரலுக்குப் பதிலாகத் தங்களை வலுப்படுத்திக் கொள்வதற்காக சிவ சேனை தொடர்ந்து ராமர் கோவில் பிரச்சனையை எழுப்பிக் கொண்டிருத்தல் ஆகியவற்றைச் சுற்றியுமே அமைந்திருக்கின்றன. மகாராஷ்ட்ராவில் தேர்தல் பிரச்சாரத்திற்காகச் சுற்றிக் கொண்டிருக்கிற  அமித் ஷாவும் பாஜகவின் இதர மூத்த தலைவர்களும்  370ஆவது பிரிவைப் பேசுவதோடு மட்டுமல்லாமல், பிரதமர் நரேந்திர மோடியே, பவாரை, “பாகிஸ்தான் ஆதரவாளர்” என்று அவருடைய அறிக்கைகளைத் திரித்து, வெளிப்படையாகவே தாக்குதல் தொடுப்பதும் குறித்துக்கொள்ளப்பட வேண்டியதாகும்.  இவை அனைத்தும் மூர்க்கத்தனமான பெரும்பான்மை தேசியவாதத்தையும், தேர்தல்களை மகாராஷ்ட்ராவையும் தாண்டி அதற்கும் மேலான நோக்கத்திற்காகப் போராட வேண்டும் என்ற முறையிலும் கவனம் செலுத்தப்பட்டிருப்பதையும் சுட்டிக்காட்டுகின்றன.  இத்தகைய இவர்களின் நிகழ்ச்சிநிரலுக்குப் பதிலடி தந்திட வேண்டும் என்பதற்காக, அதிலும் குறிப்பாக இவ்வாறான தங்கள் நோக்கத்திற்கு மக்களின் ஆதரவு கணிசமான இருக்கின்றபோது, தேர்தல் போட்டியை மீண்டும் மகாராஷ்ட்ரா மாநிலப் பிரச்சனைகள் மீது திருப்பவேண்டிய அவசியத்தை ஏற்படுத்தியது.  பவாருடைய பிரச்சாரத்தையும், அவர் முன்வைக்கும் செய்தியையும் கவனமாகப் பார்த்தோமானால்,  அவர் இவற்றைப் பல்வேறு விதங்களில் மிகவும் நுட்பமான வழிகளில் செய்துகொண்டிருப்பதை வெளிப்படுத்தும்.

முதல் பார்வையிலேயே, பவாருடைய பேச்சுக்கள் விவசாய/கிராமப்புற நெருக்கடியால் விளைந்துள்ள ஆழமான பிரச்சனைகள், வேலையின்மை மற்றும் இவற்றின்மீது அரசாங்கம் மிகவும் உணர்ச்சியற்ற விதத்தில்/போதாத அளவில் இருந்துகொண்டிருப்பது ஆகியவற்றை மக்களிடம் வலியுறுத்துனவாக இருக்கின்றன. இப்பிரச்சனைகள் அனைத்தையும் அவர் மகாராஷ்ட்ராவின் நீண்டகால வரலாற்றுடனும், மகாராஷ்ட்ராவில் நீண்டகாலமாகத்  தீர்க்கப்படாது இருந்துவரும் சமூகக்கலாச்சார மோதல்களுடனும், தொடர்புபடுத்தி, மிகவும் வலுவானமுறையில் இணைத்திருப்பதாகத் தோன்றுவதே இதில் மிகவும் குறிப்பிடத்தக்கதாகும்.  உதாரணமாக அவர், பேஷ்வா ஆட்சிக்காலத்தில், அன்றைய மராட்டிய மன்னரான (நானா) பட்னாவிஸ் காலத்தில் இருந்த நலிந்த நிலையை, இன்றைய மகாராஷ்டிர அரசாங்கம் கடந்த சில ஆண்டுகளாக மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில்  நிலவிவரும் விவசாய நெருக்கடி, வறட்சி மற்றும் வெள்ளம் குறித்துக் கிஞ்சிற்றும் கவலைப்படாது இருப்பது, எதிரொலிப்பதாகக் கூறியிருப்பதாகும்.  ஆளும் கூட்டணியின் பிரச்சாரத்தில், மாபெரும் திட்டங்களாக அறிவிக்கப்பட்ட அரசாங்கத்தின் சொந்தத் திட்டங்கள் குறித்தே எதுவும் கூறாது மவுனம் சாதித்து வருவதையும் இவரது உரைகள் அடிக்கோடிட்டுக் காட்டின. குறிப்பாக விவசாயத்துடனோ, கிராமப்புற வாழ்க்கையுடனோ அல்லது பாடுபடும் மக்களின் வாழ்க்கையுடனோ அநேகமாக எவ்விதத்தொடர்பும் அற்றவர்களால் இந்த அரசாங்கம் தலைமை தாங்கப்படுவதால், இத்தகையதோல்விகளை முதன்மைப்படுத்துவது, மக்கள் மத்தியில் நிச்சயமாக ஆதாயத்தை அளித்திடும். அரசாங்கத்தின் மந்தமான அணுகுமுறையும் வெள்ளம் ஏற்பட்ட சமயத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள் பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட சமயத்தில் முதலமைச்சர் தன் பிரச்சாரத்தைத் தொடர்ந்ததும் கூட இத்தகைய கருத்தினை ஊட்டி வளர்த்தன. எதிர்க்கட்சிகளிலிருந்து பாஜக-சிவசேனைக் கூட்டணிக்குத் தொடர்ந்து ஓடிப்போனவர்களும்கூட எதிர்க்கட்சியினரால் ஓர் ஆக்கபூர்வமான வளர்ச்சிப் போக்காகவே பார்க்கப்படுகிறது. ஏனெனில் அவர்களை, அவர்கள் எடுத்துக்கொண்ட உறுதிமொழிக்கு உண்மையாக இல்லாதவர்கள் என எதிர்க்கட்சியினர் அவர்களைக் குற்றஞ்சாட்டி, அவர்கள் சிவாஜி மகாராஜாவின் அறநெறிப் பாரம்பர்யத்திலிருந்து விலகிச் சென்றவர்கள் என்று நிரூபித்திடுவதற்காகப் பயன்படுத்திக் கொண்டார்கள். மேலும்,  இவை அனைத்தும் எதிர்க்கட்சியினருக்கு தங்கள் ஆதரவாளர்கள் மத்தியில் நம்பிக்கையை ஒருங்கிணைப்பதற்கும், எவ்விதமான சந்தர்ப்பவாத நிலையும் எடுத்து, ஆளும் கட்சிகள் பக்கம் தாவாமல், தொடர்ந்து தங்கள் கட்சியிலேயே நீடித்திருக்கும் பொதுவான ஆதரவாளர்களையும், முன்னணி செயல்பாட்டாளர்களையும் ஊக்குவிப்பதற்கும் உதவி இருக்கின்றன. கலகக்காரன் சித்திரம் தீட்டப்பட்ட சத்திரபதியின் மகன், சாம்பாஜி ராஜேயையும் (இவர் இவருடைய சொந்த முகாமிலேயே,சிலரால், குறிப்பாக சலுகைகள்பெற்ற பிரிவினரால் துரோகக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு விசாரணையை எதிர்கொள்ள வேண்டியிருந்தது) யையும் இப்பிரச்சாரத்தில் என்சிபி பயன்படுத்திக் கொண்டது. சாம்பாஜி ராஜேயாக நடித்த புகழ் பெற்ற நடிகர், தற்போது என்சிபி சார்பில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். இவரும் சுறுசுறுப்பாக பிரச்சாரம் மேற்கொண்டார். அடிப்படையில், நிறுவப்பட்ட தலைவர்கள் நீக்கப்பட்டிருப்பது ஆதரவுத் தளத்திடமிருந்து வந்த கைவிலங்குகளைத் தகர்த்துவிட்டதுடன், அவர்களை உயர்மட்டத் தலைவர்களுடன் நேரடியாகத் தொடர்புகொள்ளவும் வைத்துள்ளன. பவாரின் பேரணிகளில் மிகக் கணிசமான அளவில் இளைஞர்கள் பங்கேற்றிருப்பது இதனைப் பிரதிபலிக்கிறது. 

மேலும் ஆழமாகப் பார்க்கும்போது, இத்தகைய ஆதரவு கிராமப்புற இளைஞர்கள் மற்றும் மராத்தா இனத்தில் சமூக ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் தனிமைப்படுத்தப்பட்டு அமைதியற்ற நிலையில் வாழ்பவர்களிடமிருந்தும் கிளர்ந்தெழுந்திருக்கிறது. இவர்களின் மத்தியில் சிறிய விவசாயிகளும், கரத்தால் உழைக்கும் தொழிலாளர்களும் மிகவும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். நவீன மகாராஷ்ட்ராவின் வரலாற்றில், இந்த சமூகத்தினரின் சமூகக் கலாச்சார மற்றும் அரசியல் பாதைகள் மாநிலத்தின் பொது வாழ்வில் செல்வாக்கு செலுத்துகின்றன. இவர்கள் எண்ணிக்கையில் செல்வாக்குடைய குழுவினராக இருக்கின்றனர்.  இவர்கள் குழு என்பது மாநிலத்தில் தாராளவாத ஜனநாயக நிறுவனக் கட்டமைப்புகளைக் கட்டுவதற்கும் மேலும் முன்னெடுத்துச் செல்வதற்குமான அளவில் ஒரு  பெரிய தளமாகும். இவ்வாறு இவர்கள் தனிமைப்பட்டிருப்பதென்பது கடந்த ஐந்தாண்டுகளில் தொடங்கியது அல்ல என்ற போதிலும், இத்தகைய நிலைமை ஏற்பட்டிருப்பதற்கு,   இவர்களில் விவசாயத்துடன் சம்பந்தப்பட்ட சாதியினரில் சில பிரிவினரை குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகாரமிழக்கச் செய்வதற்காக, ஆளும் கட்சியினரால் படிப்படியாக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளின் விளைவேயாகும்.  இவ்வாறான இவர்களின் முயற்சிகள், விவசாயிகளுக்குக் குறைந்தபட்ச ஆதார விலையை உத்தரவாதப்படுத்த மறுத்தல், கூட்டுறவு நிறுவனங்களைக் குறிவைத்து தகர்த்தல், விவசாயம் சாராத உயர்சாதியினர் மத்தியிலிருந்து தலைவர்களை முன்னிறுத்துதல் (மகாராஷ்ட்ரா, ஹரியானா, குஜராத் முதலமைச்சர்களால் சுட்டிக்காட்டப்பட்டது) போன்றவற்றின் மூலமாக வெளிப் படுத்தப்பட்டுள்ளன. எனவே, இந்தத் தேர்தல்கள் மகாராஷ்ட்ராவின் அரசியலில் மராத்தா இனத்தவரின் பொருத்தப்பாட்டை அல்லது கேந்திரமான பங்களிப்பை உத்தரவாதப்படுத்திடும் ஒரு சோதனை முயற்சியாகவும் மாறியிருக்கின்றன. தற்போது இளைஞர்கள் மத்தியில் நிலவும் அமைதியின்மை, ஆளும் கட்சிகளில் உள்ள உள்ளூர் தலைவர்களுக்கு எதிரானதுமாகும். எதிர்க்கட்சிகள் தங்கள் மத்தியில் முற்போக்கு சிந்தனைகொண்டவர்களை உட்செலுத்தி, புதிய தலைமையை மேம்படுத்தினால் இளைஞர்கள் மத்தியில் காணப்படும் இத்தகைய அமைதியின்மையைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, தங்களை வலுப்படுத்திக்கொள்ள முடியும். 

எதிர்க்கட்சிகள் பக்கம் வீசுகின்ற இந்தப் புதிய காற்று வாக்குகளாக மாற்றப்படுமா என்பது ஓர் அபாயகரமான ஊகம்தான். ஆனாலும் இந்த வளர்ச்சிப் போக்குகள் இரு முக்கிய செய்திகளை தூக்கிப் பிடிக்கின்றன. ஒன்று, இது மக்களிடம் செல்ல வேண்டும் என்பதையும், அவர்கள் பாதிப்புக்கு உள்ளாகும் சமயங்களில் நேரடியாக தொடர்பினை ஏற்படுத்திக் கொண்டு செயல்பட வேண்டும் என்பதையும் மையமான ஒன்றாக அடிக்கோடிட்டிருக்கிறது.  அடுத்து, இரண்டாவதாக, இதனைத் துணிவுடன் செய்வதற்கேற்ற விதத்தில், புதிய தலைவர்கள் சாதாரணமான முன்னணி ஊழியர்கள் மற்றும் ஆதரவாளர்களின் மத்தியிலிருந்து எடுக்கப்பட்டு, பராமரித்து வளர்த்தெடுக்கப்பட வேண்டும் என்பதாகும்.

எந்த அளவிற்கு எதிர்க்கட்சிகள் இராண்டாவதாகக் கூறப்பட்டிருக்கிற செய்திக்குச் செவி சாய்த்து இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளப் போகிறது என்பதை, உடனடித் தேர்தல் வெளிப்பாடு சாதகமாக இல்லாவிட்டாலும்,  அதன் பொருத்தப்பாடே தீர்மானித்திடும்.

Back to Top