ISSN (Print) - 0012-9976 | ISSN (Online) - 2349-8846

விளக்கின் கீழ் இருள்

திறந்தவெளியில் மலம் கழித்தார்கள் என்பதற்காக இரு தலித் சிறுவர்கள் கொல்லப்பட்டிருப்பது ஒருவிதமான “சாதி மனோபாவத்தை”யே காட்டுகிறது.

 

The translations of EPW Editorials have been made possible by a generous grant from the H T Parekh Foundation, Mumbai. The translations of English-language Editorials into other languages spoken in India is an attempt to engage with a wider, more diverse audience. In case of any discrepancy in the translation, the English-language original will prevail.

 

‘தூய்மை இந்தியா திட்டம்’ 2014 அக்டோபர் 2 அன்று துவங்கப்பட்டது. இதன் பிரதான குறிக்கோள் 2019 அக்டோபர் 2க்குள் நாடு முழுவதும் திறந்தவெளி கழிப்பிடம் அற்ற நிலையை உருவாக்க வேண்டும் என்பதேயாகும். அஹிம்சையின் வலுவான ஆதரவாளரின் பிறந்த நாள் கொண்டாடப்பட்ட சமயத்தில் துவக்கப்பட்ட இந்தப் பிரச்சாரம், பல்வேறு காரணங்களுக்காகவும் குறிக்கோள்களுக்காகவும் அந்த நடைமுறையை எதிர்த்தவர்கள், வன்முறையில் ஈடுபட்டிருப்பது, அதுவும் கொல்லும் செயலில் ஈடுபட்டிருப்பது, முரணாகும். மத்தியப்பிரதேச மாநிலத்தில் சிவபுரி மாவட்டத்தில் பாவ்கேதி கிராமத்தில், திறந்தவெளியில் மலஜலம் கழித்தார்கள் என்பதற்காக வால்மீகி என்னும் தலித் சாதியைச் சேர்ந்த இரு குழந்தைகள் (முறையே 10 வயது, 12 வயது உடையவர்கள்) இத்தகைய எதிர்ப்பாளர்களால் மிகவும் சமீபத்தில் பலியாகியிருக்கிறார்கள்.  தற்செயலாக, அந்தக் குழந்தைகள் இறந்த செப்டம்பர் 25 அன்று, பிரதமர் நரேந்திர மோடி, இந்த தூய்மை இந்தியா திட்டத்திற்காக, நியூயார்க்கில் பில் அண்ட் மெலிண்டா ஃபவுண்டேஷன் நிறுவனத்திடமிருந்து ஒரு விருதினைப் பெற்றார். 2018 ஆகஸ்ட்டில், நியூஸ் மீடியா ஊடகத்தில் ஒரு செய்தி வந்திருந்தது. அதன்படி, ராஜஸ்தான் மாநிலத்தில் பிரதாப்கார் மாவட்டத்தில் திறந்தவெளியில் மலஜலம் கழித்த பெண்களை, ஜாபர் உசேன் என்பவர் புகைப்படம் எடுத்தார் என்பதற்காக தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் இயங்கும் சில நகர்மன்ற அலுவலர்கள், அவரை அடித்தே கொன்றிருக்கிறார்கள். முன்னதாக, 2018 ஜனவரியில், உத்தரப்பிரதேசத்தில் திறந்தவெளியில் காலைக் கடன்களைக் கழித்தவர்களை, சிலர் அடிப்பது படமாக்கப்பட்ட காணொளி ஒன்றை சில தொலைக்காட்சி அலைவரிசைகள் காட்டின.  

பாவ்கேதி கிராமத்தில் சிறுவர்கள் இறந்த ஒரு சில நாட்களுக்குப் பின்னர், மத்திய அரசாங்கம், திறந்தவெளி மலம் கழிக்கும் பகுதிகள் இல்லை என்று உத்தரவாதப்படுத்துவதற்காக, நிர்ப்பந்தங்களைச் செய்திடக்கூடாது என்று ஓர்  அறிவுரையை வெளியிட்டது. ஆனால்,  இந்த அறிவுரை வெறும் ஏட்டளவில்தான் இருக்கிறதேயொழிய, நாட்டில் அநேகமாக எங்கேயுமே தூய்மை இந்தியா திட்டத்தில் எந்த மட்டத்தில் பணியாற்றும் அதிகாரிகளாலும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இந்த அதிகாரிகள், கணக்கெடுப்புகளும், ஊடகங்களும் காட்டியிருப்பதைப் போல, போதுமான அளவிற்கு அல்லது ஒன்றுமே இல்லாத இடங்களில், பரபரப்புடன் கழிப்பிடங்கள் கட்ட முயற்சித்திருக்கிறார்கள். பின்னர்,  இந்த இந்த நகரில் அல்லது பகுதியில் அல்லது மாநிலத்தில் திறந்தவெளிக் கழிப்பிடப் பகுதிகள் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிட்டன என்று அறிவித்திட விரைந்தார்கள். ஆனால், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே திறந்தவெளிக் கழிப்பிடப் பகுதிகள் ஒழிக்கப்பட்டுவிட்டன என்று அறிவிக்கப்பட்ட  மும்பை போன்ற நகரங்களில் இப்போதும்கூட, மிகவும் வறிய ஏழைகள் வாழும் “சேரிப்” பகுதிகளிலும், இந்த நிதித் தலைநகரத்தின் கடற்கரைப் பகுதிகளிலும் திறந்தவெளியில் மலம் கழிக்கும் நடைமுறை தொடர்கிறது என்று சமீபத்திய ஊடகச் செய்திகள் காட்டுகின்றன.  இதற்கான காரணங்களைக் கற்பனை செய்வது கடினமல்ல. போதிய எண்ணிக்கையில் கழிப்பிடங்கள் இல்லாமை, நடைமுறையில் உள்ள கழிப்பிடங்களிலும் சுத்தம் செய்யக்கூடிய விதத்தில் போதுமான அளவிற்கு தண்ணீர் இல்லாமை மற்றும் மின்சாரம் இல்லாமை, இவற்றைப் பயன்படுத்திட இப்பகுதிகளில் வாழும் குழந்தைகளுக்கு வசதி செய்து தராமை - போன்றவையே முக்கிய காரணங்களாகும்.

இலக்குகளை எய்திட வேண்டும் என்பது பல சமூக நலத் திட்டங்களின் ஓர் அம்சமாக இருக்கக்கூடிய அதே சமயத்தில், இத்திட்டங்களின் கீழான பிரதான குறிக்கோள் ஓரங்கட்டப்பட்டுவிடுகிறது என்பதும் இதற்கிணையான விதத்தில் உண்மையாகும். இது தொடர்பாக பிரச்சாரம் இயல்பாகவே நிர்ப்பந்தம் அளித்திடும் விதத்தில் அமைந்திடக் கூடாது. மாறாக, விழிப்புணர்வை அதிகப்படுத்துதல், இனிமையாகப் பேசி இணங்கச் செய்தல், புகழ்ந்துபேசி வசப்படுத்துதல், லட்சியத்தை எய்தும் வரை திரும்பத்திரும்ப வலியுறுத்துதல் போன்ற நடவடிக்கைகள் மூலமாகவும், பிரஜைகளின் கருத்துக்களையும் கேட்டு அவற்றின்கீழ் செயல்படும் முறையிலும் செய்திட வேண்டும். இவை அனைத்தும், மக்களின் சுகாதாரம் மற்றும் துப்புரவு பிரச்சனைகள் என்கிற பிரதான குறிக்கோள்களாகும். எனினும், அடிப்படைக் குடிமை வசதிகள் பறிக்கப்பட்ட இடங்களும் அங்கே வாழ்பவர்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்துவிடும் கயவர்கள் மீதான வழக்குகளும் (பல வழக்குகள் காவல்துறையினருக்கோ, ஊடகங்களுக்கோ தெரிவிக்கப்படுவதில்லை)  காட்டுவது என்னவெனில், இவர்களின் இத்தகு செயலுக்கான நோக்கம் என்பது அங்கே சுத்தத்தையும் சுகாதாரத்தையும் உத்தரவாதப்படுத்த வேண்டும் என்கிற ஆசையின் மீதானது இல்லை என்பதேயாகும்.

சிறுவர்களை மிகவும் கொடூரமான முறையில் ரத்த வெறியுடன் அடித்துக் கொல்வதில் அவர்களின் சாதீயம் என்னும் கோர முகம் வெளிப்படுகிறது. தொழிலாளர் பொருளாதார இன்ஸ்டிட்யூட் (The IZA Institute of Labor Economics), “கிராமப்புற வட இந்தியாவில் திறந்தவெளியில் மலம் கழிப்பதில் மாற்றங்கள்: 2014-18” என்னும் அறிக்கையில் கீழ்க்கண்டவாறு கூறுகிறது: “தலித்துகள் மற்றும் பழங்குடியினக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்தான் இதர சமூகக் குழுக்களைச் சேர்ந்தவர்களைவிட அதிகமான அளவில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழான அதிகாரிகளிடமிருந்து அனைத்து மட்டங்களிலும் கட்டாயப் படுத்தப்படுதலுக்கு உள்ளாகிறார்கள். இதில் அபராதம் விதித்தல், பொதுப் பயன்பாடுகளை அளிக்க மறுத்தல், காவல்துறையினரால் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்படுத் உட்பட அடங்கும். சிவபுரியில் நடைபெற்ற சம்பவம் குறித்து ஊடகத்தின் புலனாய்வு, வால்மீகி கிராமத்தவர்கள் தாங்கள் வாழுமிடங்களில் உள்ள “உயர்சாதி”யைச் சேர்ந்தவர்கள், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் கழிப்பிடங்களைச் சுத்தம் செய்திடவேண்டும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், இதில் இரு  சிறுவர்களைக் கொன்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருப்பவர்களும் அடங்குவர் என்று  மிகவும் தெளிவாகக் காட்டுகிறது. இதில் மிகவும் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விஷயம், அரசாங்கத்தின் திட்டத்தின்கீழ் கழிப்பிடங்கள் கட்டுவதற்காக இவர்கள் (தலித்துகள்) விண்ணப்பித்திருந்த போதிலும்கூட அதற்கான தொகை அவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படவில்லை என்பதாகும்.

இவர்கள் கொலை மற்றும் கொலை செய்யப்பட்டவிதமும் கீழ்சாதியினர் குறித்து உயர்சாதியினர் மத்தியில் எந்த அளவிற்கு மனிதத் தன்மையற்ற மனப்பான்மை இருக்கிறது என்பதைச் சுட்டிக் காட்டுவதோடு மட்டுமல்லாமல், இந்தியக் கிராமங்களில் இப்போதும் சாதியின் அடிப்படையில் சமூக எதிர்பார்ப்புகள் எந்த அளவுக்கு முரட்டுத்தனமான முறையில்  இருந்துவருகின்றன என்பதை எடுத்துக்காட்டும் விதத்திலும் அமைந்திருக்கின்றன. இதில் மிகவும் மன உளைச்சலை ஏற்படுத்தும் விஷயம் என்னவெனில் இப்போதும் தலித்துகள் வாழும் பகுதிகள் உயர்சாதியினரால் திறந்தவெளிக் கழிப்பிடப் பகுதிகளாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்பதாகும். ஆனால், இரு தலித் சிறுவர்கள் தலித் அல்லாதார் வசிக்கும் பகுதியில் மலஜலம் கழிப்பதற்காகக் குந்தி இருந்தபோதுதான், ஆத்திரமடைந்த உயர்சாதியினர் அந்த இடத்திலேயே அவர்களை அடித்துக் கொல்லும் அளவிற்குச் சென்றிருக்கின்றனர். அவர்களை எச்சரித்து விடவேண்டும் என்றுகூட அவர்களுக்குத் தோன்றவில்லை. மாறாக அடித்தே கொன்றிருக்கின்றனர்.

கடந்த ஐந்தாண்டு காலமாகவே, சமூகநல ஆர்வலர்களும் நோக்கர்களும் திரும்பத்திரும்பச் சுட்டிக்காட்டிவருவது என்னவெனில், சாதி மற்றும் சுகாதாரம் தொடர்பாக சமூகத்தில் நிலவிவரும் தவறான எண்ணங்களையும் கருத்துக்களையும் ஒழித்துக்கட்டாமல் ‘தூய்மை இந்தியா திட்டம்’ வெற்றி பெற முடியாது என்பதேயாகும்.

அண்டை நாடுகள் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் திறந்தவெளியில் மலஜலம் கழிப்பதை எவ்விதமான பிரச்சாரங்களின் மூலம்  அகற்றியிருக்கிறார்கள் என்பதற்கான எடுத்துக்காட்டுகள் மற்றும் படிப்பினைகள் பொது வெளியில் ஏராளமாக இருக்கின்றன. நாடுமுழுதும் தொடர்ந்து விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட வேண்டும். அரசாங்கத்தின் கீழான உள்ளூர் அமைப்புகளுக்கும் உயர் நிலை அமைப்புகளுக்கும் இடையே ஒருங்கிணைப்பு இருந்திட வேண்டும். கழிப்பிடங்கள் கட்டப்படுவதில் சம்பந்தப்பட்ட இடங்களில் வாழ்பவர்களையும் ஈடுபடுத்துவதற்கு அழுத்தம் அளிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல், எவ்வித ஓட்டையும் ஏற்படாத அளவிற்கு கழிவுநீர் செல்லக்கூடிய சாக்கடைகளும் கட்டப்பட வேண்டும். இந்தியாவில், உண்மையான இலக்கு என்பது சாதி “தூய்மை” மற்றும் “தூய்மைக்கேடு” குறித்து இருந்துவருகிற கருத்தியல்களைச் சரிசெய்திடவும் மற்றும் துப்புரவு மற்றும் துப்புரவுப் பணிகள் ஆகியவற்றுக்கு இடையே இருந்துவரும் வலுவான பிணைப்புகளைச் சரிசெய்திடவும் வேண்டும். திறந்தவெளிக் கழிப்பிடம் இல்லா நிலை இவ்வாறுதான் ஏற்படுத்தப்பட வேண்டும்.   

 

Back to Top