ISSN (Print) - 0012-9976 | ISSN (Online) - 2349-8846

மரணப் பொறிக்குள் சுரங்கம் தோண்டுதல்

சுரங்கத் துளைகளிலும் சாக்கடைப்புழைகளிலும் மீண்டும் மீண்டும் நிகழும் மரணங்கள் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பதையே கேள்விக்குள்ளாக்குகின்றன.

 

The translations of EPW Editorials have been made possible by a generous grant from the H T Parekh Foundation, Mumbai. The translations of English-language Editorials into other languages spoken in India is an attempt to engage with a wider, more diverse audience. In case of any discrepancy in the translation, the English-language original will prevail.

 

மேகாலயாவில் சுரங்கத் துளைகளில் சுரங்கத் தொழிலாளர்கள் இறந்தது “சப்கா சாத், சப்கா விகாஸ்” முழக்கத்தை முன்வைப்பவர்களை அவமானத்திற்கு உள்ளாக்க வேண்டும். ஒரு சாராருக்கு சாதாகமான வளர்ச்சியில் ஒரு சில பிரிவினர் அவர்களது உயிருக்கே உலை வைக்கும் வேலையில் சிக்கிக்கொள்கிறார்கள். இவர்கள் தங்கள் பிழைப்பிற்காக “செல்வத்தை” தோண்டியெடுக்கவோ அல்லது அருவருக்கத்தக்க “கழிவுகளை” அகற்றவோ வேண்டியிருக்கிறது.

 நிலத்தை எலி வளை போல் குடைந்து நிலக்கரி எடுப்பது மேகாலயாவில், பெரும்பாலும் ஜெயிந்தியா மலைகளில் நடைபெறுகிறது. இது சட்டப்படி தடைசெய்யப்பட்ட முறையாகும். சுமார் 100 அடி ஆழமிருக்கும் குழிகளில் பலவீனமான மூங்கில் ஏணிகளின் உதவியுடன் இறங்கி பக்கவாட்டில் குடைந்து சென்று நிலக்கரிப் படுகைகளை அடைகிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் நேபாளம், வங்கதேசம், ஆசாம் ஆகிய பகுதிகளிலிருந்து வந்து குடியேறியவர்கள். இவர்கள் மிக ஆபத்தான, சொதசொதப்பான குழிகளில் தவழ்ந்தபடி வேலை செய்கிறார்கள். ஒன்பது வயதிற்கு குறைவான குழந்தைகள் மற்றும் உயரம் குறைவான ஆண்கள் பூமிக்கடியிலான இந்த வேலைக்கு பொருத்தமானவர்களாக பார்க்கப்படுகிறார்கள். இவர்கள் தலையில் டார்ச் விளக்கு கட்டப்பட்டு, கையில் சிறு கோடாரியுடன் சுரங்க வளைக்குள் சென்று நிலக்கரியை வெட்டியெடுத்து கூடையிலோ அல்லது சிறு சக்கர வண்டியிலோ போட்டு அனுப்புகிறார்கள். இவர்கள் நீண்ட நேரம் தொடர்ந்து வேலை செய்கிறார்கள்.

2014ல் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் இந்தத் தொழிலை தடைசெய்யும் வரை இந்த ஒழுங்குமுறையற்ற, ஆபத்தான தொழில் “குடிசைத் தொழில்” என்பதாக மேகாலயாவில் சொல்லப்பட்டுவந்தது. இந்தத் தடையை அமல்படுத்த சீரிய முயற்சிகள் எதுவும் எடுக்கப்படவில்லை. சொல்லப்போனால், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தடையை நீக்குவோம் என்றுதான் அரசியல் கட்சிகள் வாக்குறுதி தருகின்றன. இந்த சுரங்கத் தொழில் அம் மாநிலத்தின் மாபெரும் தேர்தல் நிதியாதாரமாகும். பல அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் சுரங்க உரிமையாளர்களாக, அவற்றை நடத்துபவர்களாக இருக்கிறார்கள்.  2018 தேர்தலில் நின்ற பல வேட்பாளர்கள் சுரங்கம் மற்றும் அதன் போக்குவரத்து செயல்பாடுகளில் முதலீடு செய்திருப்பவர்கள். சுரங்கத் தொழிலை கட்டுப்படுத்தும் மத்திய அரசு சட்டங்களிலிருந்து எப்போதுமே மேகாலயாவிற்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டதில்லை என்றாலும் இப்போது “சட்டத்திற்கு புறம்பானதை” தந்திரமாக மீற அரசாங்கம் முயற்சிகள் எடுத்துவருகிறது.

சுரங்கத்தால் உள்ளூரின் ஒரு சிலரே பலனடைகிறார்கள். இதனால் அனைவருக்குமான இயற்கை வளங்கள் தனியார்மயமாகின்றன, நிலமானது ஒரு சிலரால் கையகப்படுத்தப்படுகிறது. சுரங்கத்தொழில் பரவலாக உள்ள மாவட்டங்களில் நிலமற்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதுடன் இது நேரடியாக தொடர்புகொண்டுள்ளது. ஜெயிந்தியா மலைகளில் ஒரு சதுர கிமீ 50க்கும் அதிகமான சுரங்கங்கள் இருக்கின்றன. நிலக்கரி சுரங்கங்களின் காரணமாக பிற வாழ்வாதாரங்கள் வற்றிப்போன நிலையில் மாநிலத்தின் பொருளாதாரமே நிலக்கரியை சார்ந்ததாகிவிட்டது. மூலதனமும் மூலாதாரங்களும் கொண்டவர்கள் அதிக லாபமடைகின்ற நிலையில் உள்ளூர் மக்களோ நிலக்கரி முதலாளிகளின் தயவில் வாழ வேண்டியிருக்கிறது.

லிட்டைன் ஆற்று நீர் சுரங்கத் துளை ஒன்றின் வழியாக உள்ளே புகுந்ததால் 2018 டிசம்பர் 13ஆம் தேதி கருந்துளை ஒன்றில் 15 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். உடனடியாக மீட்புப் பணிகள் தொடங்கப்பவில்லை என்றபோதிலும்  பின்னர் மீட்புப் பணிகள் நடந்தன, இரண்டு வாரங்களுக்குப் பிறகே நீர் வெளியேற்றப்பட்டது. மீட்புப் பணிக்கு உதவும் வகையில் சுரங்கத்தின் வரைபடம் ஏதுமில்லை. கடற்படை பணியில் ஈடுபடுத்தப்பட்டபோதிலும் சுரங்கத் தொழிலாளர்களின் சிதைந்துபோன உடல்களை மீட்பது கடினமாக இருந்தது. அதே மாவட்டத்தில் 2019 ஜனவரி 6ஆம் தேதி மீண்டும் இரண்டு சுரங்கத் தொழிலாளர்கள் மாண்டனர். கரோ மலைகளில் நடந்த இதே போன்றதொரு நிகழ்வுதான் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தடைக்கு வழிவகுத்தது. 2002ல் நாற்பது சுரங்கத் தொழிலாளர்கள் இறந்தனர், 2013ல் ஐந்து சுரங்கத் தொழிலாளர்கள் நசுங்கிப்போயினர். கீழே விழுந்து, துளைகளில் சிக்கி, சுரங்க வளைகளில் வெள்ளம் புகுந்து ஒவ்வொரு நாளும் மரணங்களும், காயங்களும் நிகழ்கின்றன. எதற்கும் யாரும் பொறுப்பேற்பதில்லை.

சுற்றுச்சூழல் நோக்கிலும் எலி வளை சுரங்கமானது மிகவும் ஆபத்தானது. அதிக அளவிலான கந்தகம், உலோகக் கழிவுகள் ஆகியவற்றால் ஆறுகள் அமிலமாகி, மாசடைந்து ஜெயிந்தியா மலைகள் இப்போது “மரணித்த நதிகளின் நிலம்” என்றே அறியப்படுகிறது. இதனால் மீன்கள் கொல்லப்பட்டுவிட்டன, மண்ணின் தரம் கெட்டுவிட்டது. நிலக்கரியை தோண்டியெடுக்கவும், சேமித்து கிடங்குகளில் வைக்கவும் ஆயிரக்கணக்கான ஏக்கர் காடுகளும் விவசாய நிலங்களும்  அழிக்கப்பட்டுவிட்டன. மூடப்படாது கைவிடப்பட்ட குழிகள் மரணப் பொறிகளாகி நிலப்பரப்பானது உருக்குலைக்கப்பட்டு பேரழிவிற்கு ஆளாக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் இவ்வளவு சீரழிந்த நிலையில், மாபியா நடவடிக்கைகள், குழந்தைத் தொழிலாளர்கள் (2010ல் இது 70,000ஐ தொட்டுவிட்டது), ஆள்கடத்தல் மற்றும் தொழிலாளர்களின் உயிரைப் பற்றியும் பாதுகாப்பைப் பற்றியும் அக்கறையின்மை நிலவும் சூழ்நிலையில் சுரங்கத் தொழிலை ஒழுங்குபடுத்துவது பற்றிய அரசாங்கத்தின் வாக்குறுதி யாருடைய நம்பிக்கையையும் பெறவில்லை. நிலக்கரிப் படுகைகள் நிலத்தின் மிக ஆழத்தில் மெல்லியதாக பரவியிருப்பதால் மிகப் பெரும் நிலப்பரப்பில் சுரங்கங்களை தோண்ட வேண்டியிருக்கும் என்பதால் அறிவியல்பூர்வமான சுரங்க முறையும் தீர்வாக இருக்குமென்று தோன்றவில்லை. மேலும் நிலக்கரியும் தரமானதாக இல்லை என்பதால் பொருளாதார ரீதியாகவும் சாத்தியமில்லை.

 சுரங்கத் துளைகளிலும் சாக்கடைப்புழைகளிலும் மீண்டும் மீண்டும் நிகழும் துயரமான மரணங்களுக்கு யார் பொறுப்பேற்கவேண்டும்? தாராளமய காலகட்டத்தில் இத்தகைய கேள்விகளுக்கு பதிலளிப்பது மிகக் கடினம். மேகாலயா விஷயத்தில் தடையிருந்தபோதிலும் தெரிந்தே மீறல்கள் நடக்கின்றன, மனிதர்கள் முட்டிபோட்டு தவழிந்து எலிகளைப் போல் சுரங்க வளைக்குள் செல்ல முடியும், ஆனால் பேரழிவு ஏற்படுகிறபோது எலிகளைப்போல் அவர்களால் வெளியே வர முடியாது என்கிற உண்மையை புறக்கணித்துவிட்டு சுரங்கத் தொழில் தொய்வடையாது தொடர்கிறது.   

Back to Top