ISSN (Print) - 0012-9976 | ISSN (Online) - 2349-8846

வார்த்தைகளால் மறைப்பது

வாய்ப்புக்களை அதிகப்படுத்துவதற்கான  சரியான நடவடிக்கைகளை எடுக்காமல், நடத்தை மாற்றம் என்பது வெறும் வாய்ஜாலம்.

 

The translations of EPW Editorials have been made possible by a generous grant from the H T Parekh Foundation, Mumbai. The translations of English-language Editorials into other languages spoken in India is an attempt to engage with a wider, more diverse audience. In case of any discrepancy in the translation, the English-language original will prevail.

 

பொருளாதார ஆய்வறிக்கை 2018-2019 அரசின் கொள்கைகளுக்கு வேண்டுமென்றே ஒரு மனிதாபிமான முகத்தை அளிக்க விரும்புகிறதா? சமூக பொருளாதார நிர்வாகத்தில் மோசமாக செயல்பட்டபோதும் இந்த அரசு அபார பெரும்பான்மையுடன் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் சமூக பொருளாதார மாற்றங்களில் நேர்மறையான விருப்பத்தேர்வுகளை ஏற்படுத்த,  பொதுமக்களை பொருளாதார மனிதர்கள் என்று பகுத்தறிவு முறையில் பகுக்காமல்  அவர்களை இரத்தமும் சதையும் நிறைந்த மனிதர்களாக உணர்வு பூர்வமாகக் கருத வேண்டும். அவர்களுக்குத் தேவை ஊக்கமும் குறுக்கீடும்தானே தவிர, இடித்துரைத்தலும் ஆணையிடுதலும் கிடையாது என்று அந்த ஆய்வுரை கூறுகிறது. இந்த கருத்தாக்கம் ஒன்றும் புதிததல்ல. உண்மையில், கடந்த பத்து ஆண்டுகளாகவே, உலகின் பல்வேறு அரசாங்கங்கள்  நடத்தை ஆய்விலிருந்து கொள்கை உருவாக்கத்திற்கான  கருத்தாக்கங்களை ஒருங்கிணைப்பதற்காக இத்தகைய முயற்சிகளை செய்துகொண்டிருக்கின்றன. இதற்கு பின் உள்ள குறிக்கோள் என்னவென்றால்  அரசு நடத்தும் திட்டங்கள், கொள்கைகள் மற்றும் அதன் செயல்பாடுகளில்  பொதுமக்கள் பங்கேற்பை அதிகரிக்கச் செய்து  அவர்கள் மத்தியில் நேர்மறையான நடத்தை மாற்றங்களை  உருவாக்குவதுதான். சுவாச் பாரத் மிஷன்(SBM) மற்றும், பேட்டி பசாவோ பேட்டி படாவோ (BBBP) போன்ற  பிரபல திட்டங்களில் அத்தகைய நேர்மறை மாற்றங்களை தற்போதைய அரசு கொண்டு வந்திருப்பதாக கூறுவதில் சற்று உண்மை இருக்கத்தான் செய்கிறது. இந்த திட்டங்களின் பரவல் குறித்த புள்ளிவிவரங்களைக் காணும்போது சற்று உண்மை இருப்பதுபோல தோன்றலாம். ஆனால் இதனால் பலன் அடைந்தவர்களுக்கான சான்றுகளை காணும்போது அதிகபட்சம் முரண்பாடாகவே உள்ளது.

எடுத்துக்காட்டாக, 2018-2019ஆம் ஆண்டுக்கான,  தேசிய ஆண்டு கிராமப்புற துப்புறவு ஆய்வறிக்கை எடுத்த கணக்கீட்டின்படி 93%  கிராமப்புற வீடுகளில் கழிப்பறை வசதிகள் உள்ளன. இவர்களுள் 96.5% இதனைப் பயன்படுத்துகின்றனர். நாட்டின் 90.7% கிராமங்கள் திறந்தவெளிக் கழிப்பிடம் இல்லாமல் (Open Defecation Free, ODF) உள்ளன. ஆனால் இதற்கு முரணாக, வீடுகளுக்கு உள்ள பயன்பாட்டு அடிப்படையில் SBMன் வெற்றியை மதிப்பிடுவது மற்றும் நிதிஉதவியுடன் கழிப்பறைகள் கட்டுவதை பயன்படுத்துவது ஆகியவற்றினை மதிப்பிடும்  ODF அளவுகோல்களை இந்தியாவின் தலைமை தணிக்கையாளர் (கம்ப்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல்) 2017-2018ஆம் ஆண்டு அளித்த அறிக்கை  கேள்விக்குள்ளாக்கியது. SBM வழிகாட்டுதல்களின்படி, ODF என்பதை கழிவு மற்றும் வாய் சார்ந்த தொற்று பரவுதலை தடுப்பதே என்று வரையறுக்கப்பட்டுள்ளது. அதாவது கழிவுகளை கண்ணால் காணாமல் இருப்பது மற்றும் பொது/சமூகம் சார்ந்த நிறுவனங்களும், வீடுகளும் கழிவுகளை பாதுகாப்பான தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அகற்றுவது என்பதே இதன் பொருள். ODF அந்தஸ்தை அடைவதற்காக கழிவறைகளைப் பயன்படுத்த வேண்டும் என்று வழிகாட்டுதல்களில் வெளிப்படையாக எங்கும் குறிப்பிடப்படவே இல்லை.

     BBBPயிலும் இத்தகைய குழப்பமான சான்றுகள் நிறைந்துள்ளன. எடுத்துக்காட்டாக, சமீபத்தில் வந்த ஒரு  செய்தி அறிக்கையை குறிப்பிடலாம். BBBP திட்டத்தின் கீழ் பெண் குழந்தைகளின் கல்வியை மேம்படுத்த பாரதிய ஜனதா கட்சி, இராஜஸ்தான் மாநிலத்தில் ஹனுமான்கார்  மாவட்டத்தில் எடுத்த சில முயற்சிகள் முன்னேற்றம் காணவேயில்லை. ஆசிரியர் பயிற்சி, பள்ளிகளில் சுத்தமான கழிப்பறை வசதிகள், பள்ளிக்கு செல்வதற்கான போக்குவரத்து வசதிகள் போன்ற அடிப்படைச் சுற்றுச் சூழலை உருவாக்குதல் இந்த முயற்சிகளில் அடங்கும். மறுபுறம், மாவட்ட கல்வித்துறை  பெண் குழந்தைகள் பள்ளியில் சேர்ந்த கணக்கை பகட்டாக உயர்த்திக் காட்டியுள்ளது. 2016-2017ஆம் ஆண்டு 56,038ஆக இருந்த பெண் குழந்தைகளின் எண்ணிக்கை 2018-2019 ஆம் ஆண்டு 95,469ஆக உயர்ந்துள்ளது. ஆனால் இந்த காலத்தில் பள்ளியிலிருந்து நின்றுகொண்ட பெண் குழந்தைகள் குறித்த எந்த தகவலும் இல்லை. 2014ஆம் ஆண்டிலிருந்து இராஜஸ்தான் மாநிலத்தில் பெண்கள் பள்ளிக்குச் செல்வது கணிசமாக குறைந்துள்ளதற்கு சான்றுகள் உள்ளன. இதற்கு அந்த மாநிலத்தில் உள்ள பாஜக அரசு  தற்போதுள்ள அரசு பள்ளிகளில் ஐந்தில் ஒரு பங்கு பள்ளிகளை மற்ற பள்ளிகளுடன் இணைக்க முடிவெடுத்தது முக்கிய காரணமாகும்.  இந்த நிகழ்வுகளில்,  இணைக்கப்படும் பள்ளிகள் வெகு தூரத்தில் இருக்கும்போது, பள்ளியை இடைநிறுத்தும் குழந்தைகளில் பலர் பெண் குழந்தைகள். ஏனெனில்  அவர்களின் பெற்றோருக்கு  பல்வேறு சமூக கலாச்சார காரணங்களுக்காக அவர்களை வெகுதூரத்திற்கு அனுப்புவதற்கு விருப்பமில்லை.

     இத்தகைய சான்றுகள் கையிலிருக்கும்போது, “நடத்தை மாற்றம்” என்று பொருளாதார ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டது மற்றும் அப்போதைக்கப்போது அரசு கூறுவது  ஆகியவற்றின் நம்பகத்தன்மை குறித்து ஒருவர் ஆச்சர்யப்பட வேண்டியுள்ளது.  மாற்றங்கள் என்பது கருத்தியலில் மேல்மட்டத்தில் மட்டும் ஏற்படும் அளவிற்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.  துவக்க விழாக்கள், கேக் வெட்டும் பண்டிகைகள் (திட்டங்களின் இலச்சினைகளை சுமந்த கேக்குகள்), சான்றிதழ் வழங்கும் நடவடிக்கைகள், போட்டிகள், பைக் ஊர்வலங்கள் என்று மேல்மட்ட அளவில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டாலும், அடித்தட்டு அளவில் உண்மையிலேயே மாற்றங்களை கொண்டுவர எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நிலைமை இப்படி இருந்தால் சமூக மாற்றத்தை நோக்கிய பொது நடவடிக்கையை ஊக்குவிக்கும் விமர்சனத்திற்கும் அரசியல் அவசரத்திற்காக பொது நடத்தையையும் பயன்படுத்திக்கொள்ளும் போக்கிற்கும் இடையே என்ன வேறுபாடு உள்ளது? எடுத்துக்காட்டாக BBBP திட்டத்தின் கீழ்  பெண் குழந்தைகளுக்கு சைக்கிள் (மிதிவண்டி) கொடுக்கப்படுகிறது. ஆனால் பெண்களின் இயக்கத்தின் மேல் உள்ள பல்வேறு சமூக கலாச்சார தடைகளினால் இதனை அவர்கள் அனுபவிக்க முடியாமல் போகிறது.  அதே சமயம் இந்த சைக்கிள்கள் அவர்கள் குடும்பத்தில் உள்ள ஆண் உறுப்பினர்களுக்கு பயன்பட்டு அவர்களது அரசியல் தேர்வின்மீது தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

இந்தியாவைப் போன்ற ஒரு நாட்டில் ஒரு தனிநபரின் நடத்தை மாற்றம் அதன் சமூக கலாச்சார விதிகளில் ஆழமாக ஊறியுள்ளது. நிதி உதவிகள், கையில் பணத்தை ஒப்படைத்தல், பணப்பரிமாற்றங்கள் (மேற்குவங்கத்தின் கன்யாஸ்ரீ ப்ரகல்பா திட்டம்) ஆகியவை நடத்தையில் அடிப்படை மாற்றத்தை கொண்டுவருவதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவு. இதற்கு மாற்றாக,  இந்த சலுகைகள் பொது நடத்தையில் அதிக ஊழலை அளிக்கும். பலன்பெறுபவர்களின் நடத்தையில் முதலில் மாற்றம் இருப்பதுபோலத் தோன்றலாம். ஆனால் அவர்களின் உண்மையான நடத்தை அப்படியேதான் இருக்கும்.

அளவான ஆதாரங்கள், அளவான நம்பிக்கை மற்றும் திறன் இவற்றின் பின்னணியில் ஒரு மனிதனை பொருளாதார மனிதன் என்பதிலிருந்து வேறுபடுத்திக் காண்பது மிகவும் சிரமம்.  ஏனெனில் அத்தகைய சூழ்நிலையில், பொது நன்மையை பலிகொடுத்து சுயநன்மையை அதிகரிப்பது  போன்ற மடமைகள் சுயநலத்தை  அதிகரிக்கும் சூழ்ச்சித்திறனையே வளர்க்கும்.  அத்தகைய யதார்த்த நிலைமைகள் குறித்த எந்தவிதமான அமைப்பு ரீதியான  மதிப்பீடும் இல்லாமல், தற்போதைய ஆளும் அரசு  பொருளாதார சந்தர்ப்பங்கள், திறன்கள், உரிமைகள் ஆகியவற்றை அதிகரிப்பதற்காக  முன்முயற்சிகளையும்   திட்டங்களையும் எடுக்கிறது. இவை    முன்னுதாரணமிக்க மாற்றங்களைக் கொடுக்கும் என்ற விளம்பரங்களும், மனிதர்களை (ஹோமோ சேப்பியன்ஸ) பொருளாதார மனிதன் (ஹோமோ எகனாமிக்கஸ்) என்ற நிலையிலிருந்து மாற்றும் என்பதும்  வெறும் வாய்ஜாலம்தான். அதிக அறிவுநுட்பம் தேவைப்படாத அரசியல் சொல்லாட்சிகள் மற்றும் பெயர் மாற்றங்களுக்குப் பின்னால் எவ்வளவு நாட்களுக்கு தனது செயலின்மையை இந்த அரசாங்கத்தால் மறைக்க முடியும்?

Comments

(-) Hide

EPW looks forward to your comments. Please note that comments are moderated as per our comments policy. They may take some time to appear. A comment, if suitable, may be selected for publication in the Letters pages of EPW.

Back to Top