ISSN (Print) - 0012-9976 | ISSN (Online) - 2349-8846

தவிர்த்திருக்கக்கூடிய இழப்பு

தீவிர மூளை அழற்சி  நோயை சமாளிக்க உடனடியாக நடவடிக்கைகளில் இறங்க வேண்டும்

The translations of EPW Editorials have been made possible by a generous grant from the H T Parekh Foundation, Mumbai. The translations of English-language Editorials into other languages spoken in India is an attempt to engage with a wider, more diverse audience. In case of any discrepancy in the translation, the English-language original will prevail.

 

ஒரு குழந்தையின் மரணம் போன்ற துயரம் வேறு எதுவும் இல்லை என்று கூறுவார்கள், ஏனெனில் முன்பிருந்த நிலைக்கு திரும்ப முடியாது. கடந்த சில மாதங்களில் பீகாரின் முசாபர்பூர் மாதத்தில் தீவிர மூளை அழற்சி  நோயால் 153 குழந்தைகள் (அரசு தரப்பு கணக்கின்படி) உயிரிழந்துள்ளார்கள். இது குறித்து என்ன செய்ய  முடியும்? அறிக்கைகளின்படி 1995ஆம் ஆண்டிலிருந்து இந்த நோய் அந்த மாவட்டத்தை பாதித்துள்ளது. 2010 மற்றும் 2014ஆம் ஆண்டிற்கு இடையில் ஏறத்தாழ 1000 குழந்தைகள் இறந்துள்ளனர். இது பற்றி தெரிந்த உடனேயே தேசம் உணர்வு கொண்டெழுந்து மாபெரும் நடவடிக்கைகள் எடுத்து இந்த நோயை ஒழித்திருக்க வேண்டும் அல்லது அவசர கால நடவடிக்கையாக கட்டுப்படுத்தியாவது இருக்க வேண்டும். இருப்பினும், ஒவ்வொரு வருடமும் ஊடகமும் பொது உலகமும் ஒரே நிலையைத்தான் காண்கின்றன. ஊனமான உயிரற்ற குழந்தைகளின் சடலங்களை சுமந்து வெதும்பிய விழிகளுடன் உள்ள பெற்றோரைக் காணும்போது உள்ளம் உறைந்து போகிறது. மறுபுறம், இந்த நோயின் காரணிகள் குறித்த அறிக்கைகள் வந்து கொண்டுள்ளன. அரசியல் வர்க்கமும், குறிப்பாக மாநில அளவில் ஆளும் வர்க்கமும், பல்வேறு விளக்கங்களையும் அறிக்கைகளையும் அளிக்கின்றன. இந்த சுகாதாரம் தொடர்பான துக்கத்தை ஒழிப்பதற்காக எந்த விதமான வலுவான, செயல்திட்டங்களும்  இதில் குறிப்பிடப்படவில்லை. இந்த முறையும் எந்தவிதமான குறிப்பிடத்தக்க மாற்றமும் ஏற்படவில்லை.

கடந்த சில ஆண்டுகளாக இந்த மாவட்டத்திற்கு சென்ற மருத்துவர்களும் மருத்துவ ஆராய்ச்சியாளர்களும், இந்த  நோயை தடுப்பது கடினம் அல்ல என்று திரும்ப திரும்ப கூறிவருவது திகைக்க வைக்கிறது.  குழந்தைகள் லிச்சி பழங்களை உண்டதுதான் இந்த மரணங்களுக்கு காரணம் என்று குறை கூறப்பட்டது.  ஆனால் ஊட்டச்சத்து குறைவினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குத்தான் இவ்வாறு ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத குழந்தைகள்  இந்த பழத்தை உண்பதால் எந்தவிதமான சுகாதார சிக்கலும் ஏற்படவில்லை.  மேலும்  இந்த அறிகுறிகள் தெரிந்து நான்கு மணி நேரத்திற்குள் குளுக்கோஸ் செலுத்தப்பட்டால் உயிர்களை காப்பாற்றி இருக்கலாம் என்ற முக்கிய காரணியும்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு காரணிகளையும் வைத்துப் பார்க்கும்போது, அதாவது ஊட்டச்சத்து குறைபாட்டை போக்குதல், போதிய அளவு  குளுக்கோஸ் வினியோகம், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பயிற்சி பெற்ற மருத்துவர்களை பணிக்கமர்த்துதல்  ஆகிய  நடவடிக்கைகளை கடந்த ஆண்டுகளில் மாநில அரசு  எடுக்கவில்லை. அப்படி நடவடிக்கை எடுப்பதற்கான எந்த விதமான அவசர மனப்பான்மையும் மாநில அரசிடம் இல்லை.  அந்த மாவட்டத்தில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவ மனையில் ஒரு வைராலஜி ஆய்வுக்கூடம் கூட இல்லை. குழந்தை நோயாளிகளுக்கான படுக்கைகள் போதிய அளவில் இல்லை. மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலேயே இந்த நிலை என்றால் ஆரம்ப சுகாதார மையங்களின்  நிலை என்ன என்று நாம் யூகிக்க முடியும்.

பல்வேறு மாநிலங்களில் இத்தகைய துயரங்கள் நடப்பதற்கு பல்வேறு அம்சங்ள் உள்ளன. 2017ஆம் ஆண்டு உத்தர பிரதேச மாநிலத்தின் கோரக்பூர் மாவட்டத்தில் 70 குழந்தைகள் இறந்தது உடனடியாக நினைவிற்கு வருகிறது. அந்த வழக்கில், தொற்றுநோயால் குழந்தைகள் இறந்தன என்று மாநில அரசு கூறியது. ஆனால் ஆக்சிஜன் சிலிண்டர்கள் வினியோகித்தவர்களுக்கு நிலுவைத்தொகையை அளிக்கவில்லை. அதனால் அங்குள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் இல்லாததால் அந்தக் குழந்தைகள் மூச்சு திணறி இறந்ததாக அறிக்கைகள் தெரிவித்தன.  அந்த மாநிலத்தில் கோரக்பூர் மாவட்டத்தில்தான் அதிகபட்ச மூளை அழற்சி நோயாளிகள் இருந்துள்ளனர்.

பல்வேறு மாநிலங்களில் மருத்துவமனைக்கு சென்ற பின்னும் பெருமளவில் குழந்தைகள் இறப்பதற்கான பொதுவான காரணிகள் – நோயாளிகளின் ஊட்டச்சத்து நிலைமை, குடும்பங்களின் வறுமை மற்றும் இந்த மருத்துவமனைகளில் உள்ள பரிதாபமான நிலைமை ஆகியவையாகும். ஆரம்ப சுகாதார நிலையங்களில் உயிர்காக்கும் மருந்துகள், மருத்துவ உபகரணங்கள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை பணிக்கமர்த்துதல் போன்ற செயல்களுக்கான உடனடி தேவை குறித்து சுகாதாரத்துறை செயற்பாட்டாளர்கள் உரக்கக் குரல் எழுப்பியுள்ளனர். இந்த நிலைமையை சமாளிக்க இது தொடர்பான கட்டமைப்புகளையும் வலுப்படுத்த வேண்டும், எடுத்துக்காட்டாக மருத்துவ பணியாளர்கள் வாழ்வதற்கு நாகரிகமான சூழ்நிலையை அமைத்துக் கொடுக்க வேண்டும். இந்த நிலைகளை உறுதிப்படுத்த, சம்பந்தப்பட்ட  அரசுகள் உடனடியாக  நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் மருத்துவமனைகள் அதிகரித்து வருவதாலும் நிதி நெருக்கடியாலும் பொது சுகாதார அமைப்பு  தேய்ந்து வருவது குறித்து கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ச்சியான எச்சரிக்கைகள் ஏற்படுகின்றன. இது தவிர, வறுமையில் உழலும் குடும்பங்களின் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்க குறிப்பிடத்தக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பது மிக முக்கியமான விஷயம். ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளில் வளர்ச்சி பாதிக்கப்பட்டவர்கள், எடை குறைவானவர்கள், மரணம் அடைந்தவர்கள்  அதிக அளவில் உள்ள மாநிலம் பீகார். இந்த மாநிலத்தில் குறிப்பாக அந்த மாவட்டத்தில் இப்படி பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சரியான சிகிச்சை  அளிக்க பீகார் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மத்திய, மாநில அமைச்சர்களும் அரசியல்வாதிகளும் முசாபர்பூர் மருத்துவமனைக்கு சென்றபோது அவர்கள் திரும்பிப் போக வேண்டும் என்று  நோயாளிகளின் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் ஆத்திரத்தில் குமுறியதாக செய்தி அறிக்கைகள் வெளியாகின. அங்குள்ள மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கான படுக்கைகள் அதிகரிக்கப்படும், மற்றும் அங்கு ஒரு வைராலஜி ஆய்வுக்கூடம் அமைக்கப்படும் என்று அவர்களுக்கு உறுதி அளிக்கப்பட்டது. இப்போது உள்ள முக்கியமான கேள்வி என்னவென்றால் இவ்வளவு ஆண்டுகளாக அவை ஏன் செய்யப்படவில்லை.  புறக்கணிப்பு மனோபாவம் உள்ள அதிகாரிகளை பார்க்கும்போது நோயாளிகள் கோபப்படுவது முசாபர்பூரில் மட்டுமோ அல்லது இந்த சூழலில் மட்டுமோ நடப்பது அல்ல.

சுகாதார சேவைகள் வழங்குவதைப் பொறுத்தவரை, ஏழைகள்  தாங்கள் மிகவும் புறக்கணிக்கப்படுவது குறித்து கோபமடைகிறார்கள்.  இந்த கோபம் அடிக்கடி மருத்துவர்கள் மீதும் பாய்கிறது, இந்த நியாயமற்ற அமைப்பில் அவர்களும் ஓர் அங்கம் என்று கருதப்படுகிறது. பொது மேடை மற்றும் அதன் முக்கிய அங்கமான ஊடகங்கள் இந்த அநீதிக்கு எதிரான கோபத்தை பிரதிபலிக்க வேண்டும். அரசியல் தலைவர்கள் வருகையின் போது நடக்கும் போராட்டங்கள் குறித்தும் டாக்டர்கள் மீது ஏவப்படும் வன்முறைகள் குறித்தும் மட்டும் அறிக்கை அளிக்கக்கூடாது. தவிர்க்கக்கூடிய மரணம் என்னும் நிலையில், ஒரு குழந்தை இறந்தாலும் அது வெட்கம்தான்.  இதனை நாம் வலுவாக உணர்ந்து செயல்படத் தொடங்க வேண்டும்.

Comments

(-) Hide

EPW looks forward to your comments. Please note that comments are moderated as per our comments policy. They may take some time to appear. A comment, if suitable, may be selected for publication in the Letters pages of EPW.

Back to Top