ISSN (Print) - 0012-9976 | ISSN (Online) - 2349-8846

வறண்ட நிகழ்காலம், வறண்ட எதிர்காலம்?

தண்ணீர் நெருக்கடியை சந்திக்கும் சூழலில், அரசு நீர் மேலாண்மையில் சிக்கனத்தை கடைபிடிக்க வேண்டும்

 

The translations of EPW Editorials have been made possible by a generous grant from the H T Parekh Foundation, Mumbai. The translations of English-language Editorials into other languages spoken in India is an attempt to engage with a wider, more diverse audience. In case of any discrepancy in the translation, the English-language original will prevail.

 

அனல் காற்று நூற்றுக்கணக்கானோரை நாட்டில் கொன்றுகுவித்துள்ளது. அதனுடன் தொடர்ந்து  நெருக்கடியையும் பாதிப்பையும் அதிகமாக்கியது தண்ணீர் பற்றாக்குறை. இந்த சூழலில் இந்தியாவின் பல பகுதிகளில் பெய்த மழை சற்று ஆறுதலை அளித்துள்ளது. தாமதமானலும் சென்னை மற்றும் ராஞ்சி போன்ற நகரங்களில் தண்ணீர் பற்றாக்குறை வன்முறைத் தாக்குதல்கள், அவநம்பிக்கை, துயரம் ஆகியவற்றிற்கு வழிவகுத்துள்ளது. அங்குள்ள ஏரிகளும்  நீர்தேக்கங்களும் காய்ந்து வறண்டுவிட்டன. தங்களது அன்றாட தேவைகளுக்காக மக்கள் போராட வேண்டியுள்ளது. இருப்பினும் தண்ணீர் பற்றாக்குறை என்பது இந்த நகரங்களில் மட்டுமல்ல நாட்டின் பல பகுதிகளிலும் ஏற்பட்டுள்ளது என்பதே கசப்பான உண்மை.  இது வறட்சி போன்ற நிலைக்கு கொண்டுசென்றுள்ளது.

பருவமழை தாமதமோ அல்லது குறைவான மழைப்பொழிவோ இதற்கான ஒரே காரணம் அல்ல. மிகவும் ஆழமாக தோண்டிய பிறகும் கூட  குறைந்த அளவு தண்ணீர் கிடைக்காமல் இருப்பதால் வறட்சியின் விளைவுகளை சற்று ஆழமாகவே உணர வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் நாசிக் மாவட்டத்தில் உள்ள பார்-சி-வாடியில் தங்கள் குடும்பங்களுக்கு குடி நீர் கொண்டுவருவதற்காக 60 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் இறங்கி பெண்கள் தங்கள் உயிரையே பணயம் வைக்கின்றனர். இந்தியாவில் மற்ற எந்த நாடுகளிலும் இல்லாத அளவிற்கு நிலத்தடி நீர் மிக அதிகமாக உறிஞ்சப்பட்டிருக்கிறது.  இங்கு நிலத்தடி நீர் பொது நன்மைக்கான ஆதாரமாக கருத்தப்படவேயில்லை. தண்ணீர் சுரண்டலைப் பொறுத்தவரை நாட்டின் பல பகுதிகள் தங்களிடம் இருப்பதற்கும் மேலாகவே பயன்படுத்துகின்றன. ஐஐடி காரக்பூர் நடத்திய ஆய்வின்படி,  வளமான நீர் ஆதாரம்  இருப்பதாகக் கருதப்படும் கிழக்கு இந்தியாவில் கூட நிலத்தடி நீர்  வறட்சி வருங்காலத்தில் ஏற்படலாம்.  தண்ணீர் பற்றாக்குறையை தனிப்பட்ட சிக்கலாகக் கருத முடியாது. இதனைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படாததால் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.

தண்ணீர் தட்டுப்பாடு பால், சாதி மற்றும் பிராந்திய ஏற்றத்தாழ்வுகளையும்  வெளிப்படுத்துகிறது. நெருக்கடி சூழலில் தண்ணீருக்கு ஏற்பாடு செய்யும் பொறுப்பு பெண்களுக்கே உள்ளது. மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் டெங்கன்மால் கிராமத்தில் கிடைத்த தகவலின்படி பல்வேறு நடவடிக்கைகளுக்கு இது இட்டுச் செல்லும். இந்த மாவட்டங்களில் தண்ணீர் கொண்டுவருவதற்காகவே ஆண்கள் இரண்டு அல்லது மூன்று முறை திருமணம் செய்துகொள்கிறார்கள். அன்றாடம் தண்ணீர் கொண்டுவர வேண்டிய தேவை இருப்பதால் இவர்களுக்கு “தண்ணீர் மனைவிகள்” அல்லது “பானிவாலி பாய்ஸ்” என்று பெயர்.  அத்தகைய கிராமங்கள் ஆறுகள் மற்றும் அணைகளுக்கு அருகில் உள்ளன. இருப்பினும் தண்ணீர் வினியோகம் மும்பைக்கு செல்கிறது.  பெண்கள்  தண்ணீர் இறைப்பதற்காக நீண்ட தூரம் நடக்க வேண்டியுள்ளது. ஆனால் அந்த குடும்பங்களில் அவர்கள் கொண்டுவரும் தண்ணீரைப் பயன்படுத்தும் கடைசி நபர்கள் இவர்களாகத்தான் இருப்பார்கள்.

தண்ணீருக்கான இருப்பு மேலும் மேலும் குறைந்து வருகிறது. அதன் விலையையும் பயன்தாரர்களையும் வரையறுப்பதில் சந்தை முக்கிய பங்கு வகிக்கிறது. மேட்டுக்குடியினர் தண்ணீரைப் பெறுவதற்கான கட்டுப்பாடுகளுக்கு வழிவகுக்கின்றனர். வினியோகத்தில் சமமற்ற தன்மை உள்ளது. தண்ணீர் நியாயமான முறையில்  சமமாகப் பகிர்ந்துகொள்ளப்படவில்லை. தில்லி மற்றும் மும்பை போன்ற பெருநகரங்களில் இது தெள்ளத் தெளிவாகத் தெரியும். இங்கு தண்ணீருக்கான  அருகாமை வருமானம் மற்றும் சமூக அந்தஸ்து ஆகியவற்றின் அடிப்படையில் அளிக்கப்படுகிறது. சென்னை போன்ற  நெருக்கடியான சூழ்நிலைகளில் அடுக்குமாடி வீடுகள் ஒரு நாளைக்கு மூன்று அல்லது நான்கு தண்ணீர் லாரிகளுக்கு பணம் செலுத்த முடியும். ஆனால் குறைந்த வருமானம் கொண்டவர்களால் அது  முடியாது.  கிராமப்புற வீடுகளில் 18%  சதவீதத்தினருக்கு மட்டும்தான் குழாய் தண்ணீர் கிடைக்கிறது. சிறு விவசாயிகளின் நிலைமை இன்னும் மோசம். அவர்கள் தற்கொலை செய்ய நிர்பந்திக்கப்படுகிறார்கள். அல்லது வறட்சியான சூழலில் வேறு இடங்களுக்கு புலம் பெயர்கிறார்கள். மகாராஷ்டிரா மாநிலத்தின் மராத்வாடா, உத்தர பிரதேசத்தின் புந்தேல்கண்ட், மத்திய பிரதேசம், உத்தரகண்ட் மாநிலத்தின் மலை பிரதேசங்களில் கூட பல்வேறு வறண்ட கிராமங்கள் தற்போது ஆளில்லாமல் தனித்துப்போயுள்ளன.

வெகு தொலைவில் உள்ள இடங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட தண்ணீரை நம்பி இந்திய நகரங்கள் உள்ளன. இதற்கு ஆகும் செலவும் அதிகம், இதனைக் கொண்டு வருவதிலும் நிறைய இழப்பு ஏற்படுகிறது.  தண்ணீர் தொட்டிகள் (டாங்குகள்) போன்ற வடிவங்களை  பராமரிக்காமல் அவர்கள் புறக்கணித்துள்ளார்கள். சென்னையில் மட்டும் 350 ஏரிகளை அவர்கள் இழந்துள்ளார்கள். நகரங்கள் விரிவாகும்போது தண்ணீர் கிடைப்பது குறித்து கருத்தில் எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. மழை நீரைச் சேமித்தல்,   மறு சுழற்சி மற்றும் கழிவு நீரை சுத்திகரித்தல் ஆகியவற்றிற்கான செயல்பாடுகளை கட்டாயமாக்குவதில்லை. ரியல் எஸ்டேட் தொழிலின் வளர்ச்சி டாங்கர் தரகர்களை வளர்த்து நீர் உறிஞ்சப்படுதலை அதிகரித்துள்ளது. இதனால் பசுமை தளங்களும் வெள்ள வடிகால்களும்  இல்லாமல் போயுள்ளன. நீர்நிலைகளை மட்டுப்படுத்தி நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ததால்  தண்ணீரை சேமித்து வைப்பதற்கு இடமில்லாமல் போயுள்ளது.  இதனால் வெள்ள சூழ்நிலை அதிகரித்துள்ளது.

நகரங்கள் மற்றும் தொழிற்சாலைகள் வெளியிடும் தண்ணீரின் தரம் குறித்து யாரும் கவலைப்படுவதில்லை. இத்தகைய அணுகுமுறையால் நாட்டின் 70 சதவீத நீர் வினியோகம் அசுத்தம் அடைந்துள்ளது.  நீத்தி ஆயோக் வெளியிட்ட ஓர் அறிக்கையின்படி, ஆண்டுக்கு இரண்டு இலட்சம் பேர் இறக்கின்றனர். சுத்திகரிக்கப்படாத கழிவு நீரைப் பயன்படுத்தித்தான் நகரங்களுக்கு அருகில் விவசாயம் செய்யப்படுகிறது. இதில் கணமான உலோகங்களும் நச்சு வேதிப்பொருட்களும் உள்ளன. இதனால் பொது சுகாதாரம் மேலும் சமரசத்திற்கு உள்ளாகிறது.

நீத்தி ஆயோக் உட்பட பல்வேறு தரப்பினரால் தற்போதைய தண்ணீர் நெருக்கடி கேப் டவுனின்  “பூஜ்ய நாளுடன்” ஒப்பிட்டுப் பேசப்படுகிறது. இறுதித் தீர்ப்பு நாள் வெகுவிரைவில் வரலாம் என்று கணிக்கப்படுகிறது. எனினும் இத்தகைய கணிப்புகளால் பதற்றப்படும் சூழல் உருவாகிறது. உடனடியாக தீர்வு காண வேண்டும் என்ற உந்துதல் நிலைமையை மேலும் மோசமாக்கும். தற்போதுள்ள நீர் சார்ந்த திட்டங்கள் மோசமாக செயல்பட்டபோதும்  நதிகளை இணைப்பதற்கான அழுத்தம் அதிகரிக்கப்படுகிறது. தற்போதுள்ள தண்ணீர் நெருக்கடியையும் அது தொடர்பான உணவு மற்றும் சுகாதார பாதுகாப்பின்மையையும் கருத்தில்கொண்டு தண்ணீரை திறமாக சேமிப்பது அவசியமாகிறது.

இந்த சூழ்நிலையில் எதிர்காலத்தில் நடக்கப்போவதை மாற்ற முடியும். தண்ணீரை சேமிக்கும் பயிர்கள், வாழ்க்கைமுறை ஆகியவற்றை நோக்கி நகர வேண்டும். சேமிக்கும் முறைகளை அதிகப்படுத்துவது, தண்ணீரை பயன்படுத்தும் முறையை ஒழுங்குபடுத்துவது மற்றும் ஏற்றத்தாழ்வுகளை கணக்கில் எடுத்துக்கொள்ளும் கொள்கைகள், அவற்றின் உபயோகம் குறித்த சரியான தரவுகளைப் பெறுவது ஆகிய முயற்சிகளை எடுக்க வேண்டும்.  பொறியியல் மற்றும் தொழில்நுட்ப திட்டங்களை மட்டும்  நம்பாமல், நீர்நிலைகள் ஆரோக்கியமான இயற்கை சூழலில் இருந்தால்  நெருக்கடி காலங்களில் தங்களைத் தாங்களே புதுப்பித்துக் கொள்ளும் ஆற்றல்  கொண்டது என்ற உண்மையை ஏற்றுக்கொள்ளவேண்டியதும் அவசியமாகிறது.

Comments

(-) Hide

EPW looks forward to your comments. Please note that comments are moderated as per our comments policy. They may take some time to appear. A comment, if suitable, may be selected for publication in the Letters pages of EPW.

Back to Top