ISSN (Print) - 0012-9976 | ISSN (Online) - 2349-8846

கல்வியும் பொது நன்மை என்ற கருத்தும்

.

The translations of EPW Editorials have been made possible by a generous grant from the H T Parekh Foundation, Mumbai. The translations of English-language Editorials into other languages spoken in India is an attempt to engage with a wider, more diverse audience. In case of any discrepancy in the translation, the English-language original will prevail.

 

நன்மை என்ற கருத்தும் கல்வியும் ஒன்றுக்கொன்று உதவியாக இருக்கும் வகையில் நெருங்கிய தொடர்புடையவை. நன்மைக்கும் கல்விக்கும் இடையிலான இந்தத் தொடர்பு உயரளவிலான அறப் புரிதலில் நிறுவப்பட்ட விஷயம். அற நன்மை என்பது அடிப்படையில் இரண்டு கோணங்களைக் கொண்டது: பொது நன்மை மற்றும் தனிநபர் நன்மை. பொது நன்மை என்பது இலட்சியபூர்வமானது, தனிநபர் நன்மையோ இருத்தல் தொடர்பானது. பொது நன்மையானது மனிதகுலத்திற்கான அமைதி, இணக்கம், மரியாதை ஆகியவற்றிற்கான உலகளாவிய உந்துதல்களை தன்னகத்தே கொண்டிருப்பது. பொது நன்மையானது சாதி, பாலினம், இனம், மதம் போன்ற குறிப்பிட்ட பிரிவுகளின் விழுமியங்களுக்கு மேலான மனித விழுமியங்களுடன் தொடர்புடையது. இந்த விழுமியங்கள் அரசமைப்புச்சட்டத்தின் ஒருங்கிணைந்த பகுதி என்பதுடன் 2019ஆம் ஆண்டின் தேசிய கல்விக் கொள்கை வரைவில் குறிப்பிடப்பட்டுள்ள விழுமியங்களிலும் இடம்பெற்றுள்ளன.  இந்த விழுமியங்கள் கல்வியின் மூலம் ஊக்குவிக்கப்பட வேண்டுமென்பது உண்மை. கற்றல் செயல்பாடு என்ற வகையில் கல்வியானது இந்த விழுமியங்கள் நடத்தை விதியாக பரவுவதற்கு இட்டுச்செல்ல வேண்டும். பொது நன்மையை ஊக்குவிப்பதற்கு தடையாக இருக்கும் பிற்போக்கான விழுமியங்களிலிருந்து தங்களை மட்டுமல்லாமல் தங்களது மாணவர்களையும் விடுவித்துக்கொள்ளும் அறிதிறன் ஆற்றலை வைத்தே ஆசிரியர்களின் தரம் அளவிடப்பட வேண்டும்.

 பிற்போக்கான விழுமியங்களை ஆழ்ந்து சிந்தித்து நிராகரிப்பதன் வாயிலாக பொது நன்மை என்னும் உலகளாவிய கருத்தாக்கத்தை ஆழ்ந்த சிந்தனைபூர்வமாக அங்கீகரிப்பதற்கான வாய்ப்பை கல்வி அளிக்கிறது. ஆழ்ந்து சிந்திப்பது என்பது முக்கியம். ஏனெனில் அது ஒருவரை பிறரது (சுயநலமான அரசியல் தலைவர்கள், பழமையான போக்குடைய பெற்றோர் மற்றும் இருளடர்ந்த சித்தாந்தங்கள்) வெற்று ஆலோசனைக்கு அல்லது எந்திர ரீதியிலான சித்தாந்த கவர்ச்சிக்கு ஆட்படுவதை குறைக்கிறது. அறிதிறன் ஆற்றல் பெற்றுள்ள மாணவர்கள் சுயமான முடிவுக்கு வருவர் என்று ஒருவர் எதிர்பார்க்கலாம். ஆனால் கீழ் தளங்களில் பொது நன்மைக்குத் தேவையான அடிப்படையான விழுமியங்களை பரப்புவதற்கு கற்பித்தலுக்கான கருவிகளை அறிமுகப்படுத்துவது அவசியம். சமூக-கலாச்சார ரீதியாக கலவையாக உள்ள வகுப்பறைகள் பொது நன்மைக்கான அடிப்படையான மனித விழுமியங்களை பரப்புவதற்கான ஆகச் சிறந்த வெளியாக இருக்கிறது.

ஆனால் இதை பரப்புவதற்கான பாதை பாதுகாப்பானதாக தோன்றவில்லை. அரசாங்கப் பள்ளிகளும், உயர் கல்வி நிறுவனங்களும் பல்வேறு விதமான பிரச்னைகளை எதிர்கொண்டிருப்பதே இதற்குக் காரணம். இந்த நிறுவனங்கள் அர்த்தமுடைய வகையில் தொடர்ந்து நீடிப்பது யார்யாருக்கு அவசியமோ அவர்களே இந்த நிறுவனங்களை மீட்பதில் அக்கறையற்றவர்களாக இருப்பது ஒரு முக்கியமான பிரச்னை. குறைவான அல்லது வசதியே இல்லாத பெற்றோர்கள் கூட அரசாங்கப் நிறுவனங்களிடமிருந்து விலகிச்சென்று தனியார் பள்ளிகளையும், பயிற்சி நிலையங்களையும் நாடுவதில் இது தெளிவாகத் தெரிகிறது. பெற்றோர்களில் ஒரு பிரிவினர், குறிப்பாக பின் தங்கிய பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் அரசாங்க அதிகாரிகளிடம் தங்கள் குழந்தைகளுக்கு வெறும் “தரமான மதிய உணவு” மட்டும் போதாது அவர்களுக்கு தரமான, முறைப்படி பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்களும் அளிக்கப்பட வேண்டுமென கோருகின்றனர். இது பின்வரும் கேள்வியை கேட்க நம்மை கட்டாயப்படுத்துகிறது: பொது நன்மையை ஊக்குவிப்பதை தனியார் நிறுவனங்கள் எப்படி எதிர்கொள்கின்றன? திறன், மற்றும் அறிவு பரவலாவது, மற்றும் தனியார் நிறுவனங்களில் வசதியற்ற வீட்டுக் குழந்தைகளுக்கு இடமளிக்கப்படுவது போன்றவற்றுடன் இது தொடர்பான பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் திருப்தியடைந்துவிடக்கூடாது. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே விழுமியங்கள் பரவுவது குறித்த் பேசும் புதிய கல்விக் கொள்கை 2019ல் சமத்துவம் என்னும் கருத்தாக்கத்தின் எதிர்காலம் பற்றி எவ்வாறு யூகிக்கப்பட்டுள்ளது?

சமூக உறவுகளில் தொடர்ந்து நீடிக்கும் சமூக தூரங்களை, பெரிதும் பிளவுண்டிருக்கும் இந்த செங்குத்தான மற்றும் கிடைமட்டமான தூரங்களை, நாம் ஒழித்தாக வேண்டும். குழந்தைகளை பணக்கார பள்ளிகளில் அல்லது தனியார் பல்கலைக்கழகங்களில், கல்லூரிகளில் சேர்ப்பது என்பது உயர்ந்த நோக்கம் மற்றும் உள்ளுணர்வு கொண்டதாக இருந்தாலும் இப்போது நிலைவும் கட்டமைப்பு ரீதியான பிரச்களுக்கான சரியான தீர்வாக இருக்காது. இத்தகைய சிந்தனையற்ற தீர்வுகள் வருவதற்குக் காரணம் சாதி மற்றும் பாலினத்தால் ஏற்படும் சமூக தூரங்கள் ஏற்கனவே இல்லாது ஆக்கப்பட்டுவிட்டன என்று கொள்கைவகுப்பாளர்கள் கருதிக்கொள்வதேயாகும். இந்த சமூகப் பிரச்னை ஒழிக்கப்படாவிட்டால்  புதிய கல்விக் கொள்கைய 2019ல் முன்மொழியப்பட்டிருக்கும் கட்டமைப்பு ரீதியான ஒருங்கிணைப்பு கூட மேம்போக்கானதாகவே இருக்கும். பொது நன்மை என்பது வசதியற்ற சமூகப் பின்னணிகளைக் கொண்ட குழந்தைகளை கல்வி அமைப்பில் உள்ளிழுப்பதல்ல, மாறாக கட்டமைப்பில் உள்ள சமத்துவமின்மையை நீக்குவது.

கட்டமைப்பில் உள்ள சமத்துவமின்மையால் வசதியற்ற பிரிவினரில் பலர் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பாதியில் படிப்பை நிறுத்துவது என்பது பெருமளவில் நடக்கிறது, மேலும் அதிகமானவர்களுக்கு கல்வி கிடைக்கும் வகையில் உள்கட்டமைப்பை விரிவுபடுத்துவது பற்றி புதிய கல்விக் கொள்கை வரைவில் கூறியிருப்பது முக்கியமானது, ஆனால் வரைவில் தொலைநோக்குடன் குறிப்பிட்டிருப்பதைப் போல் சமூகப் பார்வையை விரிவாக்குவது என்பது இன்னும் மேம்பட்ட ஒரு சமூகத்தை சாத்தியமாக்குவதற்கு முக்கியம். இந்த வரைவில் அறிவிக்கப்பட்டுள்ள உயர்ந்த விழுமியங்களை யதார்த்தமாக்க கல்வித் துறையில் உள்ளவர்களை நெறிப்படுத்துவது பற்றி வரைவில் குறிப்பிடப்பட்டுள்ள அறம் மிக முக்கியமானது. ஆனால், கல்வி என்பது தனியார் நலன்களுக்கானதாக இருப்பது மற்றும் விழுமியங்களை யதார்த்தத்தின் ஒரு பகுதியாக ஆக்குவதற்கான அற கடப்பாட்டிற்கும் இடையிலான நீடித்த பதற்றம் இதை சாத்தியமாக்குவதை கடினமானதாக்குகிறது. ஒருவருக்கு அவருடனேயே உள்ள நடைமுறை உறவுகளுக்கும் பிறருடனான அவரது அற உறவுகளுக்கும் இடையிலான இடைவெளியை நீக்கும் பிரச்னையை இந்த வரைவுக் கொள்கையில் முதன்மையானதாக்க வேண்டும்.

கோபால்குரு

Comments

(-) Hide

EPW looks forward to your comments. Please note that comments are moderated as per our comments policy. They may take some time to appear. A comment, if suitable, may be selected for publication in the Letters pages of EPW.

Back to Top