ISSN (Print) - 0012-9976 | ISSN (Online) - 2349-8846

இது போதாது

மருத்துவத் துறை ஊழியர்களுக்கு எதிரான வன்முறையை தடுக்கப் போராடும் மருத்துவர்கள் பாதுகாப்பை மட்டுமெ கோருவது பிரச்னையை தீர்க்காது.

 

The translations of EPW Editorials have been made possible by a generous grant from the H T Parekh Foundation, Mumbai. The translations of English-language Editorials into other languages spoken in India is an attempt to engage with a wider, more diverse audience. In case of any discrepancy in the translation, the English-language original will prevail.

 

கொல்கத்தா மருத்துவமனை ஒன்றில் இறந்துபோன நோயாளியின் உறவினர்கள் இரு மருத்துவர்களை தாக்கியது மற்றும் அதைத் தொடர்ந்த நிகழ்வுகள் மருத்துவர்களின் நாடு தழுவிய வேலைநிறுத்தமென பூதாகரமாக உருவெடுத்தது. மருத்துவமனைகளில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டுமென்று என்று கோரி நீல் ரத்தன் சர்கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் இளம் மருத்துவர்கள் தொடங்கிய வேலைநிறுத்தம், மமதா பானர்ஜியின் அரசாங்கம் நடவடிக்கை ஏதும் எடுக்காததுடன் மருத்துவர்களுக்கு கெடு நிர்ணயித்ததால் பல நகரத்திலுள்ள மூத்த மருத்துவர்கள் ராஜினாமா செய்வதற்கு இட்டுச்சென்றது, நாடு முழுவதிலுமுள்ள மருத்துவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இது 2019 ஜூன் 17 அன்று இந்திய மருத்துவ கழகத்தை நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கு அழைப்புவிடுப்பதற்கு இட்டுச்சென்றது. இன்றியமையா மருத்துவ சேவைகள் தவிர்த்த பிற அனைத்து சேவைகளும், வெளி நோயாளிகள் சேவை உட்பட, இந்த வேலைநிறுத்தத்தால் பாதிக்கப்பட்டன, நோயாளிகள் தங்களைத் தாங்களே கவனித்துக்கொள்ளும் நிலைக்கு விடப்பட்டனர்.

இதே போன்றதொரு சூழல் மகாராஷ்டிராவில் 2017ல் உருவானது. மருத்துவர்க தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளானதையடுத்து மேற்படிப்பை தொடர்ந்துகொண்டிருந்த இளம் மருத்துவர்கள் சங்கம் மகராஷ்டிராவின் ஐந்து நாட்கள் வேலைநிறுத்தம் நடத்தியது. பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்பதே அப்போதும் கோரிக்கையாக இருந்தது, அது அரசாங்கத்தால் ஏற்கப்பட்டது. இந்த இரண்டு ஆண்டுகளில் நாம் எதையும் கற்றுக்கொண்ட தாகத் தெரியவில்லை, மருத்துவர்களின் கோரிக்கைகளும் சரி அரசாங்கத்தின் தீர்வுகளும் சரி பாதுகாப்பு என்ற விஷயத்தையே சுற்றிவருகின்றன. அதிக பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் வலிமையான சட்டம் குறித்த மருத்துவர்களின் கோரிக்கை நியாயமானது, ஆனால் இவை ஓர் இடைக்கால ஏற்பாடாகவே இருக்கும்.

கொல்கத்தாவில் வேலைநிறுத்தம் செய்யும் மருத்துவர்கள் குறைதீர்ப்பு பிரிவு அமைக்கப்பட வேண்டும் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு எதிரான வன்முறையை தடுக்க மத்திய சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று கோரியுள்ளனர். இந்திய மருத்துவக் கழகமும் தன்னை மத்திய சட்டம் மற்றும் பாதுகாப்பு என்ற சொல்லாடலுக்குள் நிறுத்திக்கொண்டது. மருத்துவப் பணியாளர்கள் மீதான வன்முறையை தண்டிப்பதற்கான சட்டம் ஏற்கனவே மேற்கு வங்கத்திலும், பிற மாநிலங்களிலும் இருந்தபோதிலும் அது அந்த அரசாங்கங்களால் அமல்படுத்தப்படவில்லை. இந்தியாவில் மட்டுமல்ல உலக அளவிலும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் மீது தாக்குதல் தொடுப்பது அதிகரித்து வருகிறது என்பதை சமீபத்திய ஆய்வுகள் காட்டுகின்றன. சொல்லப்போனால், செவிலியர்களும், நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்களுடன் நேரடித் தொடர்பில் வரும் அவசரப்பிரிவு மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவு பணியாளர்களுமே அதிகம் தாக்குதலுக்குள்ளாகிறார்கள் என்று ஓர் ஆய்வு கூறுகிறது. நோயாளிகள் விரக்தியடைவதற்கும் வன்முறையில் ஈடுபடுவதற்கும் பல சமயங்களில் காரணமாக இருப்பது மருத்துவமனைகளில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருப்பதே என்று மருத்துவர்கள் கூறுவதாக மற்றொரு ஆய்வு கூறுகிறது. 2018ல் நடந்த ஓர் ஆய்வில் இந்தியாவில் மூன்றாம் நிலை (த்ரீ டயர்) மருத்துவமனைகளில் வன்முறை பரவலாக இருந்தாலும் மருத்துவமனையில் அது குறித்து யாரிடம், எப்படி புகார் செய்வது என்பது பற்றி தெரியாதிருப்பதன் காரணமாக இது குறித்த புகார்கள் இங்கு மிகக் குறைவாகவே இருக்கின்றன என்பது தெரியவந்திருக்கிறது. இது இந்திய மருத்துவத் துறையை பீடித்திருக்கும் ஆழமான பிரச்னையை காட்டுகிறது.

மருத்துவர்கள் மீதான இறந்துபோன நோயாளியின் உறவினர்களின் வன்முறையாகட்டும் அல்லது மருத்துவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் நோயாளிகளுக்கு நிகழ்ந்துள்ள வன்முறையாகட்டும் அவை என்ன சூழலில் நடக்கின்றன என்று ஆராய்ந்தால்தான் அவற்றை புரிந்துகொள்ள முடியும், ஆனால் நியாயப்படுத்த முடியாது. இந்தியாவின் மருத்துவ சேவைத் துறையை பீடித்திருக்கும் பிரச்னைகள் ஒன்றும் ரகசியமல்ல. வேலைநிறுத்தம் நடந்துகொண்டிருந்தபோது பீகாரின் முசாபர்பூர் மாவட்டத்தில் கடுமையான மூளையற்சி (என்செபாலிடிஸ் சின்ட்ரோம்) பரவி நூற்றுக்கும் அதிகமான குழந்தைகள் இறந்துபோயினர், இறப்பு எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருந்தது. இந்த நோய் அதிகம் பரவும் மாநிலம் இது. அரசு மருத்துவச் சேவை செயலிழந்திருக்கிறது என்பதை இது காட்டுகிறது. முசாபர்பூர் மாவட்டத்திலுள்ள ஒரேயொரு அரசாங்க மருத்துவ மையம் கூட நிலைமையை சமாளிப்பதற்குண்டான குறைந்தபட்ச தரத்தில் இருக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. இது ஏற்கனவே அதிக பணிச்சுமையால் நெருக்கடியிலிருக்கும் மருத்துவ சேவைத் துறை கட்டமைப்பை மற்றும் அதன் மூலாதாரங்களை மேலும் நெருக்கடிக்குள்ளாக்குவதுடன் நோயாளிகள் மேலும் விரக்தியடைவதற்கான சூழலை உருவாக்குவதாகும். சூழலை கையாள்வதற்குத் தேவையான மனித வளம் இல்லை என்பதுடன் குறைதீர்ப்பதற்கான வழிமுறைகளும் இல்லாததால் மருத்துவ பணியாளர்களுக்கும் ஆதரவற்ற நிலையிலிருக்கும் நோயாளிகளுக்கும் இடையிலான மோதல் வன்முறைக்கு வழிவகுக்கிறது.

பொது மருத்துவமனைகளில் போதுமான மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலாதாரங்கள் இல்லாததிலிருந்து அதீதமான பணிச்சுமை வரை மருத்துவர்களின் பணிச் சூழல் பெரும் அழுத்தம் தருவதாகிவிட்டது. மேலும் கார்ப்போரேட் மருத்துவத் துறை மருத்துவத் துறையின் அற மதிப்பீடுகளையே மாற்றிவிட்டது. கட்டுப்பாடு, கண்காணிப்பு இல்லாது தனது பணியைத் தொடரும் தனியார் மருத்துவத் துறை மருத்துவச் சேவையின் விலையை அதிகரித்துவிட்டது, போதிய மருத்துவ கவனம் அளிக்கப்படாதது மற்றும் நிகழும் வன்முறை குறித்து நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. இவையனைத்தும் மருத்துவர்-நோயாளிக்கிடையிலான உறவில் நம்பிக்கை இழப்பிற்கு இட்டுச்சென்றுள்ளன. நோயாளிகளின் பார்வையில் மருத்துவர்கள் உயிர் காக்கும் தெய்வங்களாக இருந்த காலம் மலையேறிவிட்டது. உயிருக்கு ஆபத்தான நிலையிலிருக்கும் நோயாளிகள் மற்றும் வேதனையிலிருக்கும் அவர்களது உறவினர்களை கையாள்வதற்குரிய பொருத்தமான உரையாடல் திறன் மருத்துவர்களுக்கு இல்லாத நிலையில் மருத்துவச்சேவையில் “சேவை” என்பது பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டது.

இந்தப் பின்னணியில் மருத்துவர்களின் இத்தகைய போராட்டங்களின், வேலைநிறுத்தங்களின் கோரிக்கைகள் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் நின்றுவிடுவது என்பது தொலைநோக்குப்பார்வையற்ற செயலாகும். உண்மையான பிரச்னை அமைப்பு முழுவதிலும் இருக்கிறது என்பதால் அதற்கான தீர்வையும் அவ்வாறே அணுக வேண்டும். இதை செய்வதற்கு முதலில் அரசாங்கம் மருத்துவப் பணியாளர்களின் பாதுகாப்பிற்கான சட்டத்தை அமல்படுத்த வேண்டும். மருத்துவமனை அமைப்புச் சட்டத்தை அமல்படுத்துவது, போதுமான மருத்துவப் பணியாளர்கள் மற்றும் மூலாதாரங்களுக்கான நிதி ஒதுக்கீடு செய்தல், சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து அடிப்படை விதிகளையும் மருத்துவமனைகள் கடைபிடிக்கின்றனவா என்பதை உறுதி செய்தல் ஆகியவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும். எல்லாவற்றையும் விட முக்கியமாக, இத்தகைய அமைப்புரீதியான பிரச்னைகளை எழுப்பும் நிலையிலும், மருத்துவச் சேவை முறையாக, திறம்பட, பாதுகாப்பாக நடக்க இப் பிரச்னைகளை தீர்ப்பதற்கான கோரிக்கைகளை வைக்கும் நிலையிலும் இருப்பவர்கள் மருத்துவர்கள்தான் என்பதால் அவர்கள் மத்தியில் மாற்றம் தேவை. 

Comments

(-) Hide

EPW looks forward to your comments. Please note that comments are moderated as per our comments policy. They may take some time to appear. A comment, if suitable, may be selected for publication in the Letters pages of EPW.

Back to Top