ஆசிரியரின் மேசையிலிருந்து
.
The translations of EPW Editorials have been made possible by a generous grant from the H T Parekh Foundation, Mumbai. The translations of English-language Editorials into other languages spoken in India is an attempt to engage with a wider, more diverse audience. In case of any discrepancy in the translation, the English-language original will prevail.
சுதந்திரம், அதிகாரம், உண்மை
இந்தியா மீண்டும் ஒரு முறை திருப்புமுனை கட்டத்தில் நிற்கிறது. சமீபத்திய மக்களவைத் தேர்தலில் வென்றவர்கள் தேர்தல் ரீதியான மக்களாட்சியின் பெரும் வெற்றியை கொண்டாடிக்கொண்டிருக்கையில், மறு புறத்தில் சிந்திப்பதற்கும், தகவல் பரிமாறிக்கொள்வதற்குமான குடிமைச் சமூகத்தின் உரிமையானது மக்களாட்சி என்ற ஒன்றின் “இருப்பிற்கு” கீழேயே சுதந்திரமின்மையால் கடுமையாக கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. பெரும் மாற்றத்தைக் கொண்டுவரக்கூடிய, அதிகாரத்திற்கும் சுதந்திரத்திற்குமான உறவு, “உண்மையை சொல்லக்கூடிய” வாய்ப்புள்ள இந்த உறவு, பின்னடைவை சந்தித்திருக்கிறது, சொல்லப்போனால் முரண்பாடான ஒரு திருப்பம் இது. வரலாற்றில் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கான போராட்டத்தின் மூலம் வெளிப்படுத்தப்பட்ட அதிகாரத்திற்கும் சுதந்திரத்திற்குமான நன்மை பயக்கும் உறவு பன்மைத்தன்மை கொண்ட அமைப்புகளை ஒருப்படித்தானதாக மாற்றும் முயற்சிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. நல்ல மாற்றத்தை கொண்டுவருவதற்காக இந்த உறவு இப்போது பயன்படுத்தப்படவில்லை. படைப்பூக்கம் மிக்க சிந்தனை ஆற்றல்களை பயன்படுத்தி பன்மைத்துவ இந்தியாவை உருவாக்குவதற்கான சுதந்திரமானது இன்று, அச்சம், வெறுப்பு, ஒடுக்குமுறை போன்ற மூர்க்கமான உணர்வுகளால் பீடிக்கப்பட்டுள்ளது. இந்த மூர்க்கங்கள், பிற்போக்கான வகையில் உண்மையின் சாரமாக இருக்கின்ற காரணத்தால் மிகுந்த ஒடுக்குமுறை கொண்டதாக இருக்கிறது.
அதிகாரமும் சுதந்திரமும் பிற்போக்கான திருப்பத்தை நோக்கி நகர்கிறபோது இது மிகுந்த ஆபத்தான கூட்டாக மாறுகிறது, எளிய மக்கள் குழுக்களின் மீது பெரும் அழிவிற்குரிய பாதிப்பை இது ஏற்படுத்துகிறது. இந்திய சமூகத்தில் அதிக வேதனைகளுக்கு ஆளாகும் சமூகப் பிரிவினர் மீது வன்முறை தொடுப்பவர்கள் சுதந்திரமாக உணர்வது மட்டுமல்ல இந்த எளிய மக்கள் பிரிவினர் மீது ஆழமான காயங்களை ஏற்படுத்துமளவிற்கு சமூகரீதியாக பலமாகவும் உள்ளனர். சுதந்திரமும், அதிகாரமும் ஒன்று சேரும் இத்தகைய ஆபத்தான கலவையானது 2016ல் குஜராத்திலுள்ள உனா நகரில் நான்கு தலித் இளைஞர்கள் பொதுவெளியில் சாட்டையால் அடிக்கப்பட்டபோது வெளிப்பட்டது. சிறுபான்மையினரை கும்பல்கள் கொலை செய்வது என்பது குறையாது தொடர்கிறது. உயர் கல்வி நிறுவனங்களில், குறிப்பாக மருத்துவக் கல்லூரிகளில், தலித், ஆதிவாசி மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வது தொடர்கதையாக இருக்கையில் மும்பையின் பொது மருத்துவமனை ஒன்றில் இரு வழிகளிலும் ஒடுக்கப்பட்டவராக இருந்த மருத்துவர் ஒருவரின் துரதிருஷ்டவசமான தற்கொலை இதில் புதிதாக சேர்ந்திருக்கிறது. அரசியல் அதிகாரமானது அதிகாரப்பூர்வமற்ற வகையில் மூர்க்கத்தன்மை கொண்ட உண்மைக்கு இடமளிக்கிறபோது பிளவுறுகிறது. அது தனது விமர்சகர்களை உடனடியாக மெளனமாக்குவதுடன் எளிய மக்களின் வாழ்க்கையின் மீது தாண்டவமாடுகிறது. உண்மை அதன் மூர்க்கமான வடிவத்தில் வெளிப்படுவது பற்றிய ஒரு சில உதாரணங்கள் இவை. மூர்க்கத்தில் உறையும் உண்மை மக்களாட்சிபூர்வமாக கருத்து வேறுபாடு கொள்வதை சகித்துக்கொள்வதில்லை. சொல்லப்போனால் அது விவாதத்தையே அனுமதிப்பதில்லை என்பதால் கருத்துபூர்வமான உரையாடல்களை வெளிப்படையாகவே வெறுக்கிறது. அது தனது ஆன்மாவின் குரலையும் கேட்பதில்லை.
அக்கிரமங்கள் மற்றும் வன்முறை மீது இயல்பான விருப்பு கொண்ட உண்மையின் சாரம் ஆன்மாவின் மொழிக்கு எந்த மதிப்பையும் அளிப்பதில்லை. ஆகவே அது காந்தியை தன்னிடம் அணுகவே விடுவதில்லை. காந்தியைப் பொறுத்தவரை உண்மையானது சுயத்துடன் உரையாடுகிற போதே அறத் தூய்மையை பெறுகிறது. அது ஆன்மாவை கடினமான கேள்விகள் கேட்கிறது. மூர்க்கமான உண்மை தனது சுய வரையறைக்காக நடப்பு வெறுப்பரசியலை மிகவும் சாதகமாக பார்க்கிறது. இதனிடம் சிந்தையின் வாழ்க்கைக்கும் இடமில்லை. ஆகவே அதனிடம் அம்பேத்கருக்கும் இடமில்லை. உண்மையை பற்றிய அம்பேத்கரின் கருத்து ஆரோக்கியமான, வெளிப்படையான விவாதத்தின் அடிப்படையிலானது. மனம்போனபோக்கில் சொல்லப்படும் கூற்றுகளுக்கு எதிராகப் போராடும் ஆதாரப்பூர்வமான வாதங்களைக் கொண்டது அது. காந்தியைப் பொறுத்தவரை உண்மையானது ஆன்மாவின் ஆற்றலுடன் இணைகிறது, அம்பேத்கருக்கோ அது சிந்தையுடன் இணைகிறது. காந்தியும் அம்பேத்கரும் கையிலெடுத்த சத்யாகிரகத்தின் கோட்பாடு மற்றும் நடைமுறையில் தனது நன்மை பயக்கும் வெளிப்படுதலை இந்த இணைவு கண்டடைகிறது. சிந்தனையாளர்களுக்கு உரையாடல் மற்றும் விவாதத்தின் தேவையானது உண்மையை பொதுவெளியில் கண்டடைய அவசியமானது.
காலங்காலமாக இருந்துவரும் இத்தகைய கேள்விகள் முழுமையாக, வெளிப்படையாக விவாதிக்கப்பட்டாக வேண்டும், ஒருதலைப்பட்சமாக மறுக்கப்படக்கூடாது, நேரிடையாக எதிர்கொள்ளப்பட வேண்டும், விவாதிக்கப்பட வேண்டும். பல்கலைக்கழகம் சார்ந்த அறிஞர்களால் மட்டுமல்ல சாதாரண மக்களாலும் அனுபவ அடிப்படையில் விவாதிக்கப்பட்டாக வேண்டும். இங்குதான், அதாவது மக்களுடைய சாதி/பாலின நடைமுறைகளில்தான் பல முக்கியமான கேள்விகளின் உண்மை உறைந்திருக்கிறது என்பதால் இது முக்கியமானது. அறிவுஜீவிகள் இந்த உண்மையை அதிகாரத்திடம் சொல்ல முயற்சிக்கிறார்கள், இந்தக் கேள்விகளில் சிக்கியிருப்பவர்களுக்கு அது பற்றி நினைவுறுத்த முயல்கிறார்கள். உண்மையைச் சொல்வதென்பதை வெறும் வாய்ப் பேச்சாக கருதாத, சமத்துவம் போன்ற விழுமியங்களுக்கு சாதகமாக பேசும் அறிவுஜீவிகளின் பால் நாம் அறிவுபூர்வமான போக்கை கைக்கொள்வோம். சொல்லப்போனால் அவர்களது மனசாட்சி அவர்களை பேசும்படி கட்டாயப்படுத்துகிறது. சுதந்திரம், அதிகாரம் போன்ற அற மூலாதாரங்களை தங்களது கைகளில் எடுக்கும்படி இந்தத் தேவைதான் அவர்களை கட்டாயப்படுத்துகிறது. சிந்திக்கும் மனிதர்களுடன் சேர்ந்து அறிவுஜீவியும் சிந்திக்கின்ற காரணத்தால் அவரது பங்கு மிகவும் அடிப்படையான ஒன்றாகிறது. மக்களுக்கு மத்தியில் சிதறுண்டிருக்கும் உணர்வின் பல்வேறு அடுக்குகளை இணைக்கும் பாலத்தை கட்டியமைப்பதற்கான சூழலை அமைக்கிறார்கள். இந்த கருத்துபூர்வமான காரணங்களுக்காக, மக்களிடையே உடைந்துபோயிருக்கும் உரையாடல் பற்றிய உண்மையை பகிர்ந்துகொள்ள அறிவுஜீவிகளுக்கு சுதந்திரம் தேவை. தலைவர்கள் பேசிய பேச்சுக்களை சரிபார்ப்பதற்கான வாய்ப்பில்லை. மக்கள் ஒருவருக்கொருவர் தொடர்ந்து தகவல் பரிமாறியபடி இருக்க வேண்டும், மனித இருப்பை மேம்படுத்துவதற்கான அரசியல் மதிப்பீட்டை உருவாக்குவதற்கான, உறுதிபடுத்துவதற்கான செயல்பாட்டில் அவர்கள் ஈடுபட வேண்டும்.