ISSN (Print) - 0012-9976 | ISSN (Online) - 2349-8846

5ஜி என்னும் மாபெரும் கதை

ஹூவாவே மீதான அமெரிக்காவின் தடை சந்தைப் போட்டிக்கான உத்தியா அல்லது டிஜிடல் வெளிகளின் மீதான அரசின் கட்டுப்பாட்டிற்கானதா?

 

The translations of EPW Editorials have been made possible by a generous grant from the H T Parekh Foundation, Mumbai. The translations of English-language Editorials into other languages spoken in India is an attempt to engage with a wider, more diverse audience. In case of any discrepancy in the translation, the English-language original will prevail.

 

அமெரிக்காவும் சீனாவும் தங்களது 40 ஆண்டு கால பொருளாதார ஒருங்கிணைப்பிற்குப் பிறகு இப்போது இரு நாடுகளிலும் உள்ள அரசியல் தலைமைகளின் கீழ் பொருளாதாரப் பதற்றங்களானது உச்ச கட்ட நெருக்கடி நிலையை அடைந்துள்ளது. இரு நாடுகளுமே நிதானப் போக்கை கைக்கொள்வதாக இல்லை. உண்மையில் இரு நாட்டுத் தலைவர்களுமே சரக்குகள், மூலதனம், மக்கள், தொழில்நுட்பம் ஆகிய நான்கு அம்சங்களின் ஒருங்கிணைவையும் உடைப்பதை ஆதரிக்கிறார்கள். உலகளாவிய விநியோகச் சங்கிலியில் சரக்குகளின் ஒருங்கிணைவை உடைப்பது தேவையற்றது, அதிலும் குறிப்பாக நுட்பமான தன்மை கொண்ட தொழில்நுட்ப வளர்ச்சி விஷயத்தில். அமெரிக்கப் பொருளாதாரத்தின் பெரிய துறைகளை சீன முதலீடுகள் தங்களுக்கு கீழ் கொண்டுவருவதை தடுப்பதற்காக அமெரிக்காவால் போடப்பட்டுள்ள தடைகள் இந்த இரு நாடுகளுக்கிடையிலான போக்குவரத்து ஒருங்கிணைவிற்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் ஒருங்கிணைவு விஷயத்தில்-குறிப்பாக இளம் சீன மாணவர்கள் விஷயத்தில்- அமெரிக்காவின் கொள்கை அவர்களை அறிவியல் மற்றும் பொறியியல் கல்வியின் துறைகளில் பயில முடியாதபடி செய்துவிடும். இத்தகைய ஒரு போக்கு உருவாவது, அதாவது அமெரிக்காவும் சீனாவும் ஒன்றையொன்று விலக்குவதானது புது கண்டுபிடிப்புகளுக்கான உலகளாவிய சூழல் அமைப்பை (குளோபல் இனோவேஷன் எக்கோசிஸ்டம்) ஆபத்திற்குள்ளாக்கிவிடும். சீனாவின் மாபெரும் தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ஹூவாவே மீதான அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் தடை உலகளாவிய தொழிநுட்ப முன்னேற்றம் உருவாவதை தடுக்கும்..

1987ல் தொலைபேசி ஸ்விட்சிங் கியர்களை ஹாங்காங்கில் இருந்து இறக்குமதி செய்து விற்பனை செய்யும் ஒரு சாதாரண நிறுவனமாக இருந்த ஹூவாவே 1990களின் இறுதியிலிருந்து நோக்கியா, எரிக்ஸன் நிறுவனங்களைப் போன்று செல்பேசிகளுக்கான உயர் தொழில்நுட்பங்களை தயாரித்து வழங்கும் நிறுவனமாக உயர்ந்தது. அதை விட முக்கியமாக, “ஐந்தாம் தலைமுறை” (5ஜி) வலையமைப்பு தொழில்நுட்ப தர நிலைகளை நிர்ணயிப்பதில் இது காட்டிய செயலூக்கத்தின் காரணமாக 2025ல் உலகெங்கும் உள்ள 5ஜி செல்பேசி தொடர்புகளில் 33% சீனா வசமிருக்கும் என்ற நிலை உருவாகியிருக்கிறது. இதற்கு மாறாக அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பா கூட்டாக 25%ஐ தங்கள் வசம் வைத்திருக்கும். இதன் பொருள் என்ன? தொழில்நுட்பம் தொடர்பாக 2018ல் சீனா பதிவு செய்திருக்கும் 53,345 காப்புரிமைகளில் ஹூவாவே நிறுவனத்தினுடையது மட்டும் 10% ஆகும். இந்த தொழில்நுட்பங்கள் நாட்டின் அடிப்படை கட்டுமானத்தின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியம் என்பது உலகம் முழுவதிலும் உள்ள அரசாங்கங்களால் உணரப்பட்டுள்ளது. டெலாய்ட்டி கூறுவதன்படி 2015-2018 காலகட்டத்தில் அமெரிக்காவில் உள்ள செல் கோபுரங்களின் எண்ணிக்கையை விட 12 மடங்குக்கும் அதிக எண்ணிக்கையிலான செல் கோபுரங்களை சீனா பெற்றிருந்தது மட்டுமல்லாமல் 5ஜி கட்டுமானத்திற்காக அது 24 பில்லியன் டாலர் அதிகம் செலவிட்டிருந்தது.

5ஜியானது இதற்கு முன்பிருந்த தொழில்நுட்பங்களை விட அலைக்கற்றைரீதியாக அதிகத் திறன் கொண்டது, அதிக அளவிலான தகவல்களை அதிக எண்ணிக்கையிலான கருவிகளுக்கு, குறைந்த அளவிலான நேரத்தில் கொண்டுசெல்லக்கூடியது. உதாரணமாக, லண்டன் - நியூ யார்க் இடையே அட்லாண்டிக் கடல் வழியே 3000 மைல் நீளத்திற்கு இழையாடி தொடர்பான ஹைபெர்னியா எக்ஸ்பிரஸ் தொடர்பை எடுத்துக்கொள்வோம். 2011ல் ஹைபெர்னியா அட்லாண்டிக்குடன் ஹூவாவே கூட்டு சேர்ந்தது. 5 மில்லி வினாடிகள் தாமதத்தை குறைப்பது என்பது, மொத்த மதிப்பீடு 400 மில்லியன் டாலரை சேமிப்பதாகும், அல்லது ஒரு மில்லி வினாடிக்கு 80 மில்லையன் டாலரை சேமிப்பதாகும். இதற்கு முந்தைய தலைமுறை தகவல் தொழில்நுட்பங்களில் இருந்ததைப் போலவே 5ஜி விஷயத்திலும் இதை நடைமுறைக்கு கொண்டுவரும்போது மிகுந்த செலவு பிடிக்கக்கூடியதாக இருக்கிறது. ஆனால் அதே நேரத்தில், 5ஜி அதிக வருவாயை கொண்டுவரும் என்பது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தாலும் இதில் எவ்வளவு சதவீதம் இதற்கான வசதிகளை செய்துதரும் நிறுவனத்திற்கு கிடைக்கும் என்பது தெரியவில்லை.

உண்மையில் அகண்ட அலைவரிசை 4ஜியில் கடந்த பத்தாண்டில் பெறப்பட்ட பாடங்கள் காட்டுவதைப் போல் வலையமைப்பிற்கான முதலீடுகள் விஷயத்தில் நிறுவனங்களுக்கு ஆகும் செலவு குறைவே, குறிப்பாக 4ஜியை கட்டுமானத்தை முதலில் நடைமுறைக்கு கொண்டுவந்த அமெரிக்காவில். எதிர்பார்த்தபடி புதிய வருவாயை நிறுவனங்களுக்கு கொண்டுவருவதற்கு பதிலாக அகண்ட அலைவரிசையின் பயன்பாடுகளானது தொலைக்காட்சி போன்ற ஊடகங்களில் அல்லாமல் இணையம் மூலம் விரும்புகிறவர்கள் பணம் செலுத்தி பார்க்கின்ற காணொளிகள் பெருமளவு அதிகரித்திருப்பதை சமாளிக்க உதவுகிறது. கடுமையான போட்டியின் காரணமாக சராசரி வருவாயில் சரிவு ஏற்படுகிறது.

இந்தப் பின்னணியில், வலையமைப்பை பகிர்ந்துகொள்வது என்பது 5ஜியை நடைமுறைக்கு கொண்டுவருவதற்கான செலவினத்தை குறைக்கும். ஆனால் அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் இத்தகைய ஏற்பாட்டிற்கு ஒப்புக்கொள்வதாக இல்லை. (விலைப்) போட்டியின் அடிப்படையாக வேகம் மற்றும் வலையமைப்பு கொள்ளளவை ஆகியிருப்பதன் மூலம் வருவாய் குறைவதிலிருந்து மீண்டெழும் விஷயத்தில் ஆசிய நாடுகள் பெற்றுள்ள திறன்தான் இதற்குக் காரணமா? சீனாவின் 5ஜி செல் கோபுரங்கள் 10 சதுர மைல்களுக்கு 5.3 என்ற எண்ணிக்கையிலும் 10,000 பேருக்கு 14.1 என்ற எண்ணிக்கையிலும் இருக்க அமெரிக்காவிலோ அது முறையே 0.4 மற்றும் 4.7 என்ற எண்ணிக்கைகளில் இருக்கின்றது. இந் நிலையில், பொருளாதாரத் தலைமையின் அடித்தளம் என்பது மதிப்பு மற்றும் தகவல்களின் புதிய பயன்பாடுகள் உருவாக்கப்படுவதில் இருக்கின்றது என்ற பரவலாக ஒப்புக்கொள்ளப்பட்ட பார்வையின்படி சீனாவுக்கும் அமெரிக்காவிற்குமான போட்டி முக்கியத்துவம் பெறுகிறது.

 வலையமைப்பை நடைமுறைக்கு கொண்டுவருவதில் உள்ள பிரச்னையை உயிர்ப்புடன் வைத்திருப்பதன் மூலம் அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் டிஜிடல் வெளியில் அரசின் தலையீட்டிற்கான வாய்ப்பை உருவாக்கிவருகின்றன. அரசு தரும் பொருளாதார பாதுகாப்பு உலக சந்தையில் விலை விஷயத்தில் அமெரிக்காவிற்கும் அதன் நட்பு நாடுகளுக்கும் சாதகமாக அமையும். டிஜிடல் கட்டுமானத்தின் மீதான அரசின் கட்டுப்பாட்டை நிறுவனரீதியாக அங்கீகரிக்கும்பட்சத்தில் அரசு தனது கண்காணிப்பை அதிகாரத்தை வெளிப்படையாகவே பயன்படுத்தும் என்பது இன்னும் மிகுந்த நெருடலை உண்டாக்கும் விஷயமாகும். இத்தகைய கட்டுப்பாடானது இன்றைய அரசியல் அமைப்புகளின் சித்தாந்த நெருக்கடிகளை தெளிவற்றதாக்கிவிடுகிறது. இணையவெளி இறையாண்மை மற்றும் நாடுகளுக்கிடையிலான தகவல் பரிமாற்றத்தில் அரசின் கட்டுப்பாடு ஆகியவற்றை சீனா வெளிப்படையாக கோருகிறது, அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் இதையே மறைமுகமாக செய்கின்றன. நடைமுறை அரசியலில் சீனா-அமெரிக்கா இடையிலான உறவு எத்தகையது: நீண்ட கால எதிரிகளா அல்லது போட்டியாளர்களா?  

Back to Top