இலங்கையில் தீவிரவாதத் தாக்குதல்கள்
நெருக்கடியில் சிக்கியிருக்கும் இலங்கை அரசாங்கத்தின் திறனின்மைக்கு தரப்பட்ட விலையே அப்பாவி மக்களின் உயிர்கள்.
The translations of EPW Editorials have been made possible by a generous grant from the H T Parekh Foundation, Mumbai. The translations of English-language Editorials into other languages spoken in India is an attempt to engage with a wider, more diverse audience. In case of any discrepancy in the translation, the English-language original will prevail.
2019 ஏப்ரல் 21ஆம் தேதி இலங்கையில் நடந்த தீவிரவாதத் தாக்குதல் இலங்கையை மட்டுமல்ல மொத்த உலகையுமே உலுக்கியிருக்கிறது. ஈஸ்டர் தினத்தன்று கத்தோலிக்க தேவாலயங்களிலும் சுற்றுலாப்பயணிகளின் விடுதிகளிலும் ஒருங்கிணைவுடன் நடத்தப்பட்ட குண்டுவெடிப்புகளில் 350க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். (இந்த இதழ் அச்சுக்குப் போகிறபோது இந்த எண்ணிக்கை “253” என திருத்தப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன). கொச்சிகடை புனித அந்தோனியார் தேவாலயம், கட்டுவாபிட்டியா புனித செபாஸ்டியன் தேவாலயம், மட்டக்களப்பிலுள்ள சியான் தேவாலயம், ஷங்கரி-லா, தி கிங்ஸ்பரி, சினமன் கிராண்ட் ஆகிய விடுதிகளிலும் தற்கொலைப்படையினரால் இந்த குண்டுவெடிப்புகள் நடத்தப்பட்டுள்ளன. இவற்றிற்கு ஈராக் மற்றும் சிரியா இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்.ஐ.எஸ்) என்னும் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்தத் தாக்குதலின் அளவு மற்றும் தீவிரம், குறிவைக்கப்பட்ட இடங்கள், வழிபாட்டுத்தலங்களில் பிரார்த்தனை நடக்கும் நேரத்தில் குறிவைத்தது ஆகிய விஷயங்கள் இந்தத் தாக்குதலை பயங்கரமான ஒன்றாக்குகிறது. இந்தத் தாக்குதல்கள் சமீபத்தில் நியூஸிலாந்தில் கிறைஸ்ட்சர்ச் நகரத்திலுள்ள மசூதி ஒன்றில் நடந்த தாக்குதல்களை ஒத்திருக்கின்றன. நெருக்கடியிலிருக்கும் இலங்கையின் பலவீனங்களை இந்தத் தாக்குதல்கள் அனைவரின் பார்வைக்கு கொண்டுவந்திருப்பதுடன் தெற்காசியப் பகுதியில் நிலவும் இன பதற்றங்களின் பின்ணியில் சிறுபான்மை சமூகங்கள் எதிர்கொள்ளும் பாதுகாப்பின்மையையும் துலக்கமாக காட்டுகிறது.
இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே கூறுவதன்படி கத்தோலிக்க தேவாலயங்கள் தீவிரவாத தாக்குதலுக்கு இலக்காகக்கூடும் என்பதைப் பற்றி முன்கூட்டியே வந்த உளவுத் தகவல் அலுவலகரீதியாக பகிர்ந்துகொள்ளப்படவில்லை என்பது மிகுந்த ஆச்சர்யத்திற்குரியது. இலங்கையின் இன்றைய குடியரசுத்தலைவர் முன்னாள் ராணுவப்படைத் தளபதியாகவும், பாதுகாப்பு அமைச்சராகவும், சட்டம்-ஒழுங்கு அமைச்சராகவும் இருந்தவர் என்ற நிலையில் உளவுத் தகவலை பகிர்ந்துகொள்ளத் தவறியது அவர் தனது பணியை செய்யத் தவறியதைக் காட்டுகிறது. 2018 அக்டோபரில் ஜனாதிபதி நடத்திய “அரசமைப்புச்சட்ட அதிரடி ஆட்சிக் கைப்பற்றல்” நிகழ்வின் காரணமாக நிர்வாகம் சீர்குலைந்ததன் விளைவு இது எனத் தோன்றுகிறது. ஆனால், சட்டம்-ஒழுங்கு குடியரசுத்தலைவரின் கீழ்கொண்டுவரப்பட்டதை பிரதமர் ஏற்றுக்கொண்டதன் காரணமாக அவரது பொறுப்பையும் தட்டிக்கழித்துவிட முடியாது. மைத்ரிபால சிறீசேனா தலைமையிலான இலங்கை சுதந்திரா கட்சிக்கும் (எஸ்.எல்.எஃப்.பி) விக்கிரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சிக்கும் இடையிலான மோதலின் விளைவாக உருவாகியுள்ள நெருக்கடியின் விலை மிக அதிகம், நூற்றுக்கணக்கான உயிர்கள் பலி கொடுக்கப்பட்டுள்ளன. இன மோதலை தீர்ப்பதற்குரிய வாக்குகளுடன் 2015ல் ஆட்சிக்கு வந்த அரசாங்கத்தின் திறனின்மை காரணமாக அமைதியற்று, நிலையற்று இருக்கும் சமூகத்தின் நிலையை இது மேலும் ஆபத்திற்குள்ளாக்கியிருக்கிறது. ஏற்கனவே பத்தாண்டுகளுக்கு முன்பு வரை இந்த நாடு உள்நாட்டுப் போரில் சிக்கியிருந்தது. இன நல்லிணக்கத்தை உருவாக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் பாதுகாப்புப் படைகளையும் தேச பாதுகாப்பையும் பலவீனப்படுத்துவதாக இன மேலாதிக்கம், சர்வாதிகாரம் என்ற வழியில் ஆட்சிபுரிந்த முன்னாள் குடியரசுத்தலைவர் மகிந்த ராஜபக்சே குறைகூறியுள்ளார். இந்த ஆண்டின் இறுதியில் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் இத்தகையை நிலைபாட்டை ஒட்டிய கருத்து வலுப்படும் என்ற அச்சம் நிலவுகிறது. அத்துடன் குடியரசுத்தலைவரிடம் குவிந்துள்ள அதிகாரங்கள் நெருக்கடி நிலையை அறிவிக்கும் ஆபத்தும் இருக்கிறது. இத்தகைய நிலை வலுப்பெறுவது இலங்கையிலுள்ள மத சிறுபான்மையினரிடம் உள்ள பாதுகாப்பின்மை உணர்வை மேலும் அதிகரிக்கச் செய்யும். இஸ்லாமிய அரசு போன்ற தீவிரவாத அமைப்புகளின் செல்வாக்கு பரவுவது நிலைமையை மேலும் இக்கட்டாக்குகிறது.
இப்போது நடந்திருக்கும் தாக்குதலுக்குகான காரணம் உள்ளூர் இன மோதல் அல்ல (இலங்கை முஸ்லிம்களுக்கும், கிறித்துவர்களுக்கும் இடையே மோதல் இருந்ததாக வரலாறே இல்லை. இரு சமூகங்களுமே பெரும்பான்மை சிங்கள பெளத்த அடிப்படைவாதிகளால் குறிவைக்கப்பட்டுள்ளன) என்றபோதிலும் இது சமூக கட்டமைப்பின் மீது கடும் பின்விளைவுகளை ஏற்படுத்தும். சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாகுபாடான நடவடிக்கைகளை கோரியதாகவும், முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக வெறுப்பை உமிழும் பேச்சுகள் பற்றியும் செய்திகள் வெளியாகியுள்ளன. முஸ்லிம் மதத்தின் அகமதியா பிரிவைச் சேர்ந்த 700 அகதிகள் இலங்கையின் துறைமுக நகரமான நீர்கொழும்புவிலிருந்து வெளியேறி தலைமறைவாக உள்ளனர். போது பால சேனா போன்ற சிங்கள பெளத்த அடிப்படைவாத குழுக்களால் இலங்கை முஸ்லிம் சமூகம் குறிவைத்து தாக்கப்பட்ட சம்பவங்கள் கடந்த 10 ஆண்டுகளில் பல உள்ளன. 1980களிலும் 1990களிலும் முஸ்லிம்கள், பெரும்பாலும் தமிழ் பேசுபவர்கள், யாழ்ப்பாணத்தில் தமிழ் ஈழ விடுதலைப் புலிகளால் கொடுமைகளுக்கு ஆளாயினர். இத்துடன், இலங்கை முஸ்லிம்களிடையே உள்ள சில அடிப்படைவாத குழுக்களிடையே சவுதி அரேபியாவின் நிதியுதவி பெறும் வகாபி அமைப்பின் செல்வாக்கு அதிகரித்துவருவதும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய மோதல் நிறைந்த சூழலில் இலங்கை அரசியல் தலைமை, குறிப்பாக அதிகாரத்தில் உள்ளவர்கள், 2015ல் அளித்த வாக்குறுதியை காப்பாற்ற வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பான்மை சர்வாதிகாரம் என்னும் பிசாசு தேசத்தை மீண்டும் ஆட்டுவிப்பதை அனுமதிக்கக்கூடாது. இல்லாவிடில், உலக அளவில் வலதுசாரி தீவிரவாதம் அதிகரித்துள்ள நிலையில் இதன் விளைவுகள் பயங்கரமாக இருக்கும்.
இந்த தாக்குதல் குறித்து தனது தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் சுயநலத்திற்காக நரேந்திர மோடி பேசியது மிகவும் கவலை தருகிற விஷயமாகும். கண்டனத்திற்குரிய இந்த நடத்தை இலங்கை விமர்சகர்களாலும், குடிமக்களாலும் சரியாகவே விமர்சிக்கப்பட்டது. இந்தியப் பிரதமரின் இத்தகைய நிலைபாடு ஏற்கனவே தெற்காசியப் பகுதியில் பலவீனமாகவுள்ள இந்தியாவின் நிலையை மேலும் பலவீனப்படுத்திவிடும்.