குறைந்துவரும் பெண் தொழிலாளர்களின் பங்கேற்பு
கிராமப்புறங்களில் பெண் தொழிலாளர்களின் பங்கேற்பை தேவை மற்றும் விநியோகம் சார்ந்த அம்சங்கள் குறைக்கின்றன.
The translations of EPW Editorials have been made possible by a generous grant from the H T Parekh Foundation, Mumbai. The translations of English-language Editorials into other languages spoken in India is an attempt to engage with a wider, more diverse audience. In case of any discrepancy in the translation, the English-language original will prevail.
வளர்ந்து வரும் நாடுகளில் பெண் தொழிலாளர்கள் பங்கேற்பு வீதம் மிகக் குறைவாக இருக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பதுடன் சமீப காலமாக இது மேலும் மேலும் குறைந்து வருகிறது. மக்கள்தொகையில் மொத்தப் பெண்களில் வேலை செய்வதற்குரிய வயதுகளில் இருக்கும் பெண்களில் வேலை செய்யும் பெண்களின் வீதம் குறைந்துவருகிறது. பெண் தொழிலாளர்களின் பங்கேற்பு வீதம் 2011-12ல் 31.2%ஆக இருந்தது 2017-18ல் 23.3%ஆக வீழ்ச்சியடைந்திருக்கிறது. மேலும் கிராமப்புறங்களில் 2017-18ல் 11 சதவீதத்திற்கும் அதிகமாக இது குறைந்திருக்கிறது. கிராமப்புறங்களில் ஆண் தொழிலாளர் பங்கேற்பு வீதமும் குறைந்திருக்கிறது என்றாலும் பெண்கள் விஷயத்தில் இது மிக அதிகமாக இருக்கிறது. பெண்கள் வேலைக்கு போகாது நின்றுபோவது மட்டுமல்ல கிராமப்புறங்களில் இப்போது உள்ள வேலைகளையும் ஆண்களே பிடித்துக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. பெண் தொழிலாளர் பங்கேற்பை தடுக்கும் பிரச்னைகளை ஆழமாக புரிந்துகொள்ளவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
பெண் தொழிலாளர்களின் பங்கேற்பு குறைவாக இருப்பதற்கான காரணங்களாக வேலைவாய்ப்புகள் இல்லாதது, கல்வித் தகுதி மற்றும் வீட்டின் வருமானம் அதிகரித்திருப்பது மற்றும் பெண்களின் வேலை பற்றிய தகவல்கள் அதிகம் திரட்டப்படாதது ஆகியவை சொல்லப்படுகின்றன. ஆனால், சமீபத்தில் ஏற்பட்ட கிராமப்புற நெருக்கடியில் வருமானம் தரக்கூடிய வாய்ப்புகள் காணாதுபோனதில் பெண்களே அதிகபட்சமாக பாதிக்கப்பட்டனர். விவசாய வேலைகள் கிடைப்பது குறைந்துவிட்ட மற்றும் விவசாய வேலைகள் அல்லாதவற்றில் பொருளாதார வாய்ப்புகள் இல்லை என்ற நிலையில், கிராமப்புற இந்தியாவில் வேலைக்கான தேவையில் உள்ள தடைகள் அல்லது பொருத்தமான வேலை வாய்ப்புகள் இல்லாதது பெண்கள் விஷயத்தில் மிக மோசமாக இருக்கிறது. விவசாய மற்றும் விவசாயமல்லாத வேலைகள் எந்திரமயமாக்கப்பட்டதன் விளைவாகவும் வேலை வாய்ப்புகள் குறைத்துவிட்டன.
கிராமப்புற பெண்கள் நெகிழ்வான வேலை நேரங்களையும், வீட்டிற்கு அருகாமையிலும் வேலை தேடும் நிலையில் மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதி சட்டம், 2005-ன் கீழ் முன்கூட்டி நிர்ணயிக்கப்பட்ட கூலியின் அடிப்படையில் 100 நாட்களுக்கு அரசாங்க திட்டங்களில் வேலை வாய்ப்பு பெற்றனர். ஆனால் 2018ல் நடத்தப்பட்ட ஓர் ஆய்வின்படி, ஊதியம் தரப்படாத பொருளாதார செயல்பாடுகளான வீட்டு வேலைகள், சமூக அளவிலான வேலைகள் போன்றவை பெண் தொழிலாளர்கள் பங்கேற்பு வீதம் குறைவதற்கான முக்கிய காரணிகளாகும். ஊதியமில்லாத வேலை, குறிப்பாக வீட்டு வேலைகள் போன்றவற்றில் செலவிடப்படும் நேரம் தொழிலாளர்களாக பெண்கள் உழைப்பில் பங்கு பெறுவதை தடுக்கின்றன. இந்த நிலை ஆணாதிக்க நெறிகளின் அடிப்படையில் பெண்களின் இடம், பங்கு என்ன என்பது தீர்மானிக்கப்படக்கூடிய கிராமப்புறங்களில் இன்னும் மோசமாக இருக்கிறது. சமீப காலமாக குடும்பத்தின் அளவு குறைந்திருப்பதன் காரணமாகவும், வேலை தேடி ஆண்கள் இடம்பெயர்வதன் காரணமாகவும் ஊதியமற்ற வேலையை பெண்கள் செய்வது என்பது பெரிதும் அதிகரித்திருக்கிறது.
பொருளாதாரக் கூட்டுறவு மற்றும் வளர்ச்சி நிறுவனம் நடத்திய ஆய்வின்படி இன்றைய காலகட்டத்தில் இந்தியப் பெண்கள் வீட்டு வேலையில் நாளொன்றுக்கு 352 நிமிடங்கள் செலவிடுகின்றனர். இது ஊதியமற்ற வேலையில் ஆண்கள் செலவிடுவதைவிட 577% அதிகம். விநியோகத்தின் பக்கமுள்ள இந்தத் தடையை சரிசெய்யவேண்டும். ஏழைகள் அல்லாதாருடன் ஒப்பிடுகையில் இந்த “நேர வறுமை”யால் அதிகம் பாதிக்கப்படுவது ஏழைகளே என்பதால் இது மிகவும் முக்கியமானதாகிறது. ஊதியமற்ற வேலைகளான வீட்டு வேலைகள் மற்றும் பிறரை கவனித்துக்கொள்ளும் வேலைகள் நல்ல வேலைகளுக்கான திறன்களைப் பெறுவதில் பெண்களுக்கு தடையாக இருக்கின்றன. இந்த விஷச் சக்கரமானது பெண்களை தொழிலாளர்களாக ஆவதிலிருந்து விலக்கியே வைத்திருக்கிறது. ஆகவே அடிப்படையான கட்டமைப்பு வசதிகள், குழந்தைக் காப்பகங்கள், முதியவர்களுக்கான காப்பகங்கள் இருப்பது என்பது பெண் தொழிலாளர்களின் பங்கேற்பு அதிகரிப்பதற்கு உதவியாக இருக்கும்.
ஆனால், சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இத்தகைய அரசுக் கொள்கைகள் அமைப்புரீதியான துறைகளிலுள்ள பெண் தொழிலாளர்களை இலக்காகக் கொண்டுள்ளன. அமைப்புரீதியான துறையில் பணிபுரியும் ஒரு பெண்ணிற்கு மகப்பேறு காலத்தில் 26 வாரம் ஊதியத்துடனான விடுப்பை மகப்பேறு பயன் (திருத்தம்) மசோதா, 2016 அளிக்கிறது. குழந்தை நலன் பேணும் விஷயத்தில், 50 பேருக்கு மேல் பணிபுரியும் நிறுவனங்கள் குழந்தைகள் காப்பகம் வைத்திருக்கவேண்டுமென மகப்பேறு பயன் (திருத்தம்) மசோதா, 2017 கூறுகிறது. ஆனால், அமைப்புசாரா துறையைப் பொறுத்தவரை அத்தகைய வசதிகள் மிகக் குறைவு. மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதி திட்டத்தின் கீழ் வேலை செய்பவர்களுக்கு குழந்தை காப்பக வசதி உறுதி செய்யப்பட்டிருந்தது என்றாலும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. மத்திய அரசின் நல்கையால் கொண்டுவரப்பட்ட தேசிய குழந்தைகள் காப்பகத் திட்டத்திற்கான செலவினங்கள் குறைக்கப்பட்டதால் நாடு முழுவதிலும் இருந்த குழந்தை காப்பகங்கள் மூடப்பட்டன.
மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதி திட்டம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குழந்தை வளர்ச்சி சேவைகள் போன்ற இப்போது நடப்பிலுள்ள கொள்கைகளுக்கும், வேகமாக மாறிக்கொண்டிருக்கும் உற்பத்தி முறைக்கு ஏற்றவாறு தொழிற்ப் பயிற்சி அளிப்பதற்கும் அதிகம் செலவிடுவதன் மூலம் பெண் தொழிலாளர் பங்கேற்பு வீதத்தை அதிகரிக்க முடியும். பெண்களுக்கு வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீடு, கடனுதவி அளித்தல் போன்ற குறிப்பிட்ட இலக்கைக் கொண்ட அரசின் கொள்கைத் திட்டங்கள் உழைப்புச் சந்தையில் பெண்களின் பங்கேற்பை அதிகரித்திருக்கின்றன.
கிராமப்புறங்களில் பெண் தொழிலாளர்களின் பங்கேற்பை தடுக்கும் அம்சங்களைக் களைய ஊதியமற்ற வேலைகளிலிருந்து பெண்களை விடுவிப்பதற்கு ஏற்றவாறான கொள்கைத் திட்டங்கள் வகுக்கப்படவேண்டும். விநியோகம் சார்ந்த பிரச்னைகள் மற்றும் அவற்றை சரிசெய்வதற்கான அரசின் தலையீடுகள் போதுமான அளவிற்கு இல்லாதது தவிர்த்து, குறைந்த ஊதியம் மற்றும் ஊதியமற்ற வேலைகள் என்ற சுமை பெண்கள் மீது அதிகமாக இருப்பது என்பது சமூக-கலாச்சார நடைமுறைகளில் வேர்கொண்டுள்ள கட்டமைப்புரீதியாக இறுக்கங்களின் விளைவும் ஆகும்.