ISSN (Print) - 0012-9976 | ISSN (Online) - 2349-8846

தேர்தல் அறிக்கைகளின் அரசியல்

செயல்படுத்தப்படக்கூடிய வாக்குறுதிகள் மட்டுமல்ல தேர்தல் அறிக்கைகளின் சித்தாந்த உள்ளடக்கமும் ஆராயப்படவேண்டியவையே.

 

The translations of EPW Editorials have been made possible by a generous grant from the H T Parekh Foundation, Mumbai. The translations of English-language Editorials into other languages spoken in India is an attempt to engage with a wider, more diverse audience. In case of any discrepancy in the translation, the English-language original will prevail.

 

நடந்துகொண்டிக்கும் பொதுத் தேர்தலுக்காக பெரும்பாலான தேசிய கட்சிகளும் மற்றும் மாநில அளவில் முக்கியத்துவம் கொண்ட கட்சிகளும் தங்களது அறிக்கைகளை வெளியிட்டுட்டுள்ளன. இந்த அறிக்கைகளில் மீண்டும் மீண்டும் ஒரே மாதிரியான விஷயங்கள் சொல்லப்படுவதால் இத்தகைய அறிக்கைகளை மக்கள் ஒரு சடங்காகவே பார்க்கின்றனர். ஆனாலும் போட்டியிடும் அரசியல் கட்சிகள் எந்தெந்த விஷயங்களுக்கு முதன்மையளிக்கின்றன, அவற்றின் சித்தாந்தச் சாய்வுகள் என்னென்ன என்பதை இந்த அறிக்கைகள் மூலம் மதிப்பிட இயலும். முந்தையத் தேர்தல்களில் அக் கட்சிகள் அளித்த வாக்குறுதிகளுக்கும் இப்போது தேர்தல் நடக்கிறபோது அந்த வாக்குறுதிகளில் நிறைவேற்றப்பட்டவற்றிற்கும் இடையிலான இடைவெளிகளை, வேறுபாடுகளை கண்டறிய இந்த ஆவணங்கள் உதவுகின்றன. அறிக்கைகளையும், கட்சிகளையும் மதிப்பிடுவதற்கு அவை தாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை செயல்படுத்தினவா என்பது சந்தேகத்திற்கிடமில்லாமல் முக்கியமான அளவுகோலாக இருக்கிறது. (எதிர்க்கட்சிகளின் வாக்குறுதிகளை அலசி ஆராய்வதில் மையநீரோட்ட ஊடகங்கள் காட்டும் உற்சாகத்தை ஆளும் கட்சியின் அறிக்கையை ஆய்வுக்கு உட்படுத்தி அது கடந்த ஐந்து ஆண்டுகளில் உண்மையில் என்ன சாதித்தது என்பதை ஆராய்வதில் காட்டுவதில்லை என்பது வேறு விஷயம்.) ஆனால், இந்த அளவிற்கு தேர்தல் அறிக்கைகளை கீழிறக்குவது என்பது மேலாளர் அணுகுமுறையைப் போன்றது. இது அரசியல் கட்சிகள் என்பன வெறும் சேவைகளை அளிக்கும் கருவிகள் என்ற அரசியல்நீக்கம் செய்யப்பட்ட கருத்தாக்கத்தையே அளிக்கும். தேர்தல் அறிக்கைகளின் அரசியலானது செயல்படுத்தப்படக்கூடிய வாக்குறுதிகள் என்பதைத் தாண்டி பிரச்சாரம் மற்றும் சித்தாந்தக் கூறுகளை தன்னகத்தே கொண்டுள்ளன. ஓர் அரசியல் கட்சியை அதன் செயல்படுத்தப்படக்கூடிய முழக்கங்களைத் தாண்டி அதன் பிரச்சாரம் மற்றும் சித்தாந்த முழக்கங்களின் அடிப்படையிலும் மதிப்பிட வேண்டும். இந்த விஷயத்தில் இப்போது போட்டியிலுள்ள முக்கியமான அரசியல் கட்சிகளின் அறிக்கைகள் என்ன சொல்லுகின்றன?

 2014 மக்களவைத் தேர்தலில் முதல் கட்ட தேர்தல் முடிந்த பிறகே பாரதீய ஜனதா கட்சி தேர்தல் அறிக்கையை வெளியிட்டதிலிருந்தே அது தேர்தல் அறிக்கைகளை முக்கியமான விஷயமாக எடுத்துக்கொள்வதில்லை என்பது தெரிகிறது. இந்த முறையும் பாஜகவின் அறிக்கை மிகுந்த யோசனைக்குப் பிறகு, வாக்காளர் மத்தியில் நல்ல ஆதரவு பெறத் தொடங்கியுள்ள காங்கிரசின் தேர்தல் அறிக்கைக்கான எதிர்வினையாக அவசர அவசரமாக வெளியிடப்பட்டுள்ளது. எனினும், கட்சியினுடைய சங் பரிவார திட்டங்களை இந்த அறிக்கை வெளிப்படுத்துவதுடன், வளர்ச்சியைப் பற்றி பேசுகிற அதே நேரத்தில் அதன் பிரிவினை மற்றும் பிளவுவாத தேர்தல் பிரச்சாரத்தையும் நன்கு வெளிப்படுத்துகிறது. குடிமக்கள் தேசியப் பதிவேடு, குடியுரிமை (திருத்த) மசோதாவை தேசிய அளவில் அமல்படுத்துவது மற்றும் அரசமைப்புச்சட்டப் பிரிவு 370ஐ நீக்குவது என்பன தேசம் மற்றும் தேசியம் பற்றிய பாஜகவின் உள்ளார்ந்த பாகுபாடான பார்வையைக் காட்டுகின்றன. வளர்ச்சி தொடர்பான விஷயத்திலும் வேலைகளை உருவாக்குவது பற்றிய பிரச்னையை தவிர்த்துவிட்டு சொந்தமாக தொழில் தொடங்குவது தொடர்பான வீறாப்புப் பேச்சில் தஞ்சம் புகுந்திருக்கிறது. இது இன்றைய தேதியில் செய்யப்பட வேண்டிய முக்கியமான பணியை நேரடியாக மறுப்பதாகும். பெண்களை வலிமைகொண்டவர்களாக்குவது பற்றி சொல்லப்படும் வழக்கமான சொற்களைத் தவிர்த்து சமமான வேலைகளுக்கு சமமான ஊதியம் பற்றி எந்தப் பேச்சுமில்லை. பாலின சமத்துவம் குறித்த வாக்குறுதி முஸ்லிம் பெண்களை பாதிக்கு நடைமுறைகளுடன் நின்றுவிட்டது.  சிறுபான்மையினருக்காக “முதலைக் கண்ணீர்” வடிக்கப்பட்டபோதிலும் “கண்ணியத்துடனான வளர்ச்சி” என்ற ஒரு வரிக்கு அப்பால் இது குறித்து எதுவும் சொல்லப்படவில்லை. இது, தேசம் குறித்த பாஜகவின் கருத்தாக்கத்திற்கு சிறுபான்மையினர் எப்படி இரண்டாம்பட்சமானவர்களாக இருக்கிறார்கள் என்பதையே காட்டுகிறது. எதிர்பார்க்கப்பட்டதைப் போலவே பாஜவின் கவனமானது ராமர் கோயில் மற்றும் சபரிமலை விவகாரங்களில் குவிந்திருக்கிறது. இங்குதான் பாஜகவின் ஆட்சியானது அரசமைப்புச்சட்ட மக்களாட்சிக்கு பெரும் ஆபத்தாக இருக்கிறது. “மத நம்பிக்கைகளுக்கு அரசமைப்புச்சட்ட ரீதியான பாதுகாப்பை அளிக்க கட்சி முயற்சிக்கும்” என்று தேர்தல் அறிக்கை கூறுவது அரசமைப்புச்சட்ட விழுமியங்களை தூக்கியெறிவதற்கு விடுக்கப்பட்ட அழைப்பாகும்.

 முதலில் தேசத்தின் பாதுகாப்பு என்ற பாஜகவின் அணுகுமுறைக்கு மாறாக காங்கிரசானது வேலைவாய்ப்புகள் மற்றும் மக்களின் வாழ்வாதாரங்கள் குறித்த பிரச்னைகளை தேசியப் பிரச்னைகளாகக் கருதி அவற்றிற்கு முதன்மையளித்திருக்கிறது. நவீன தாராளமயம் என்ற வட்டத்திற்குள் இருந்தபோதிலும் குறைந்தபட்ச வருமான உறுதித் திட்டம்,  விவசாயத்திற்கென தனி பட்ஜெட் ஆகியவை காங்கிரசின் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டிருப்பது மக்களாட்சி அம்சங்களுக்கு கொஞ்சமேனும் மதிப்பளிக்கப்பட்டிருப்பதைக் காட்டுகிறது. கும்பல் கொலைகள் மற்றும் ஒழுக்கக் காவலர் கும்பல்கள் உள்நாட்டு பாதுகாப்பிற்கான ஆபத்துகள் என்ற கருத்து வெளிப்படுத்தப்பட்டிருப்பது புத்துணர்வை அளிக்கிறது. இதை ஏதோ சட்ட-ஒழுங்கு பிரச்சனையாக பார்ப்பதாக கருதிவிடக்கூடாது. இத்தகைய கும்பல்களால் தேச ஒற்றுமைக்கு ஏற்படும் ஆபத்தை உணர்ந்திருப்பது பன்மைத்துவத்தில் நம்பிக்கை கொண்டிருப்பதைக் காட்டுகிறது. குடிமை சுதந்திரங்களுக்கு கடப்பாடு கொண்டிருப்பது (அல்லது குறைந்தபட்சம் அப்படி கூறியிருப்பது) காங்கிரசை பாஜகவிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. தேசத் துரோகச் சட்டம் மற்றும் அவதூறு வழக்கு சட்டத்தை ஒழிப்பதாக வாக்குறுதியளித்திருப்பது மற்றும் ஆயுதப் படைகளின் (சிறப்பு அதிகார) சட்டத்தை, 1958, மீள்பார்வைக்கு உட்படுத்துவதாக வாக்குறுதியளித்திருப்பது இந்தியாவை ஆயுதப் படைகளின் அரசாக மாறுவதிலிருந்து தடுக்கும் அதன் எண்ணத்தைக் காட்டுகிறது. தேர்தல் பிரச்சாரத்தின்போது பொதுமக்களின் சொல்லாடலை தேசத்தை அருவமான கருத்தாக்கமாக பார்ப்பதற்கும் யதார்த்தத்தில் உண்மையாக வாழ்ந்துகொண்டிருக்கும் மக்களுக்கும் இடையிலான போட்டியாக மாற்றினால் காங்கிரசின் தேர்தல் அறிக்கை பயனுள்ள ஓர் அரசியல் கருவியாக இருக்கும்.

  மாற்று சமூகப்-பொருளாதாரப் பாதைக்கான தங்களது கொள்கைரீதியான கடப்பாடு மற்றும் சங் பரிவாரத்தை நேருக்கு நேராக எதிர்கொள்ளும் தீரத்தால் கம்யூனிஸ்டு கட்சிகளின் அறிக்கைகள் முக்கியத்துவம் பெறுகின்றன. தேர்தல் ரீதியாக கம்யூனிஸ்டுகளின் பலம் குறைந்திருப்பதை கருத்தில்கொள்கையில் இந்த அறிக்கைகளின் முக்கியத்துவம் இவை நடக்குமா என்பதில் இல்லை, மாறாக இவை மக்கள் இயக்கங்களுக்கான அடிப்படைகளாக அமைவதற்கான இவற்றின் ஆற்றலில் இருக்கிறது. கம்யூனிஸ்டு கட்சிகளின் கோரிக்கைகளை காங்கிரஸ் போன்ற கட்சிகள் ஓரளவேனும் ஏற்கவேண்டிய கட்டாயத்தை இத்தகைய மக்கள் இயக்கங்களே உருவாக்கின. இந்திய கம்யூனிஸ்டு கட்சி (மார்க்சிஸ்ட்) கூறியிருக்கும் தேசிய நகர்ப்புற வேலை உறுதித் திட்டம் மற்றும் சமாஜ்வாதி கட்சியின் பெரும் பணக்காரர்கள் மீதான கூடுதல் வரிகளுக்கான முன்மொழிவு மக்கள் இயங்கங்களுக்கான உள்ளுறை ஆற்றலைக் கொண்டுள்ளன.

  அரசியல் கட்சிகளைத் தாண்டி துப்புரவுப் பணியாளர்கள் இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கை உயிர் வாழ்வதற்கான உரிமையை முன்னிலைப்படுத்தியிருப்பது அரசியல் அமைப்பிற்கும், ஒட்டுமொத்த சமூகத்திற்குமான அற முறையீடாகும். வெற்று தேசியத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் இதை மக்களிடம் எடுத்துச்செல்வது அவற்றின் கடமையாகும்.

Comments

(-) Hide

EPW looks forward to your comments. Please note that comments are moderated as per our comments policy. They may take some time to appear. A comment, if suitable, may be selected for publication in the Letters pages of EPW.

Back to Top