வன உரிமைகளை ஆக்ரமிக்கும் தீமைகள்
அரசமைப்புச்சட்டத்தின் அடிப்படை உரிமைகளை, கொள்கைகளை அபத்தமாக்குகிறது இந்திய வன உரிமை வரைவுச் சட்டம், 2019.
The translations of EPW Editorials have been made possible by a generous grant from the H T Parekh Foundation, Mumbai. The translations of English-language Editorials into other languages spoken in India is an attempt to engage with a wider, more diverse audience. In case of any discrepancy in the translation, the English-language original will prevail.
நவீன தாராளமயமாக்கல் கொள்கைக்கு ஏற்றவாறு வன வளங்களை வர்த்தகமயமாக்குவதற்கான சட்ட விதிகளை உருவாக்கியிருக்கும் அதே நேரத்தில் இந்தியாவின் 7,08,273 சதுர கிமீ வனப் பகுதிகள் மீதான வன இலாகாவின் அதிகாரங்களை மேலும் அதிகரித்து போலீஸ் அடக்குமுறை ராஜ்ஜியத்தை அறிமுகப்படுத்துகிறது இந்திய வனச் சட்ட வரைவு 2019.
இது அறிமுகப்படுத்தியுள்ள பலவந்தமான திட்டங்கள் 2006ஆம் ஆண்டின் வன உரிமைகள் சட்டத்தின் சில விதிகளை பலவீனப்படுத்தும் என்பதுடன் மாநில அரசாங்கங்களின் சட்டமன்ற மற்றும் செயல் அதிகாரங்களை மீறுவதற்கான திருத்தங்களும் முன்மொழியப்பட்டுள்ளன. 2019 வரைவுச் சட்டம் இப்போது கருத்துகள் மற்றும் பின்னூட்டங்களை கேட்டு மாநிலங்களுக்கு சுற்றுக்கு அனுப்பப்பட்டுள்ளது. வன உரிமைகள் சட்டத்தை மத்திய அரசாங்கம் உச்ச நீதிமன்றத்தில் பாதுகாக்கத் தவறிய நிலையில் பிப்ரவரி 13ஆம் தேதி உச்ச நீதிமன்றம் அளித்த சர்ச்சைக்கிடமான தீர்ப்பிற்கு பிறகு இந்த வரைவுச் சட்டம் சுற்றுக்குவிடப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது. பொதுத் தேர்தல் நடக்கும் இந்த நேரத்தில் சமூகத்தில் விளிம்பு நிலையிலிருக்கும் மக்களின் உரிமைகளை பெரிதும் நசுக்கும் இந்த சட்ட முன்மொழிவை தேசிய ஜனநாயக கூட்டணி சுற்றுக்குவிட்டிருக்கும் அகங்காரம் ஆச்சர்யத்திற்குரியது.
இந்த பிற்போக்கான, சர்ச்சைக்குரிய சட்ட வரைவு இந்திய வனச் சட்டம், 1927க்கு பெரும் திருத்தங்களை செய்துள்ளது. வன உரிமைகள் சட்டத்தின் சில விதிகளை மீறுகின்ற வகையில் வன அதிகாரிகளுக்கு சில வீட்டோ அதிகாங்களை இந்த சட்ட வரைவு அளித்துள்ளது. வனத் துறை அதிகாரிகளுக்கு பகுதியளவு-நீதிமன்ற அதிகாரங்களை அளித்திருப்பதுடன் வனம் தொடர்பான விஷயங்களில் மீறல்கள் நடப்பதை தடுப்பதற்காக துப்பாக்கி போன்ற ஆயுதங்களை பயன்படுத்த்துவதற்கு சட்ட பாதுகாப்பு அளித்திருப்பதே இந்த திருத்தங்களிலேயே பெரும் சர்ச்சைக்குரிய திருத்தமாகும். இப்போது முன்மொழியப்பட்டுள்ள சட்ட வரையறையின்படி காடு தொடர்பான குற்றம் நடப்பதாக சந்தேகம் எழுந்தால் காட்டிலாகா அதிகாரிகள் இப்போது செய்யப்பட்டுள்ள திருத்தத்தின்படி சுடலாம், தேடுதல் நடத்தலாம், சொத்தை பறிமுதல் செய்யலாம், கைது செய்யலாம். தனது குற்றமின்மையை நிரூபிப்பது குற்றம்சாட்டப்பட்டவரின் பொறுப்பு. மோதல் பகுதிகளில் பணியிலுள்ள பாதுகாப்புப் படையினருக்கு ஆயுதப் படைகள் (சிறப்பு அதிகார) சட்டம், 1958-ன்கீழ் வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பைப் போன்ற சட்ட பாதுகாப்பு வனத் துறை அதிகாரிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
வன உரிமைகள் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள உரிமைகள் வன பாதுகாப்பிற்கு குந்தகம் ஏற்படுத்தும் என்று கருதினால் மத்திய அரசாங்கத்துடன் கலந்தாலோசித்து அவற்றை நீக்கும் அதிகாரம் மாநிலங்களுக்கு தரப்பட்டுள்ளது. இது வன உரிமைகள் சட்டத்தை மேலும் பலவீனப்படுத்தக்கூடிய மற்றொரு அம்சம். இதை வனவாசிகளுக்கு பணமோ அல்லது நிலமோ அளிப்பதன் மூலம் செய்யலாம். இது இறுதியில் வனவாசிகளை வனத்தை விட்டே வெளியேற்றும். இது காடுகளை சார்ந்து வாழும் சமூகங்களின் உரிமைகளை அப்பட்டமாக மீறுவதாகும். காலனிய அரசாங்கத்தாலும், பின்னர் வந்த அரசுகளாலும் வனவாசிகளுக்கு பல்வேறு வடிவங்களில் அநீதிகள் இழைக்கப்பட்டுள்ளன.
மேலும், மத்திய அரசு உருவாக்கியுள்ள விதிகளுடன் மாநிலங்களின் விதிகள் முரண்படுமெனில் மத்திய அரசின் விதிகளே செல்லுபடியாகும் என்று இந்த சட்ட வரைவு கூறுகிறது. அரசமைப்புச்சட்டத்தின்படியான மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான உறவுகள் குறித்த கொள்கைகளுக்கு எதிரானது இது. அத்துடன், கிராம சபைகளின் பங்கை தவிர்க்கும் வகையில் “கிராம வனங்கள்” என்ற அமைப்பை முன்மொழிந்திருப்பது அதிகாரப் பரவலாக்க கொள்கைகளை மீறுவதாகும். ஆகவே, இந்த திருத்தங்களை அமல் செய்வது என்பது மாநிலங்களுக்கும், குடிமக்களுக்கும் அரசமைப்புச்சட்டம் அளித்துள்ள அடிப்படை உரிமைகள் மற்றும் கொள்கைகளை பலவீனப்படுத்துவதாகும்.
வன வளங்களை வர்த்தகமயப்படுத்தும் விஷயத்தில் வனங்களை தனியார்மயமாக்குவதற்கான மற்றும் “உற்பத்தி வனங்களை” அறிமுகப்படுத்துவதற்கான விதிகளும் சேர்க்கப்பட்டுள்ளன. இவை வன உரிமைகள் சட்டத்தை ஆக்ரமித்து ஊறுபடுத்துவதுடன் இப்போதுள்ள கூட்டுறவு ஏற்பாடுகளை சிதைத்து, விளிம்புநிலை சமூகங்களின் அழிவில் தனியார் திரட்டலுக்கான வாய்ப்புகளை அளிக்கும்.
சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள விளிம்புநிலை மக்களான வன வாழ் மக்களின், குறிப்பாக வன வளங்களை சார்ந்து வாழும் ஆதிவாசி மக்களின் குடிமை உரிகைகளை பாதிக்கும், அழிக்கும் சர்வாதிகாரமான வன ஆட்சியை மத்திய அரசாங்கம் ஏன் திணிக்கிறது? இந்தியாவின் வனப் பகுதிகளை மோதல் பகுதிகளாக ஆக்க ஏன் முயல்கிறது? வன உரிமைகள் சட்டத்தை புறக்கணித்து, பாரம்பரிய வன வாழ் மக்களின் நலன்களுக்கு எதிராக ஏன் இந்த அரசாங்கம் சட்டம் கொண்டுவருகிறது? அத்துடன், தீவிரமான அரசியல் விவாதங்களோ அல்லது பொது விவாதங்களோ இல்லாமல் சட்ட திருத்தங்கள் செய்வது அதிர்ச்சிகரமானது.
ஆதிவாசி மக்கள் வாமும் பகுதிகளில் வறுமை மிகுந்துள்ளது, நாளுக்குநாள் சமத்துவமின்மை அதிகரித்துவருகிறது, வன நிர்வாகம் மற்றும் வன உரிமைகள் ஒரு பொருட்டாகவே கருதப்படுவதில்லை என்ற நிலையில் காடுகளை சார்ந்து வாழும் மக்களின் பிரச்னைகள் குறித்து முக்கியமான அரசியல் கட்சிகள் அக்கறை கொள்வதில்லை என்பது மிகவும் துரதிருஷ்டவசமானது. காடுகளை மேலாண்மை செய்வதில் உள்ளூர் சமூகங்களை பங்குபெறச்செய்வதற்கான முழுமையான சட்டகம் ஒன்றை காங்கிரஸ் அறிக்கை முன்மொழிந்திருக்கையில் பாரதீய ஜனதா கட்சியின் அறிக்கையோ வன உரிமை சட்டத்தை அமல் செய்வது பற்றி எதுவும் பேசவேயில்லை.
வனம் சார்ந்து வாழும் சமூகங்களின் நலன் கருதி வனச் சட்டத்தில் செய்யப்பட்டுள்ள அநியாயமான, ஒடுக்குமுறையான திருத்தங்களை நீக்குவதுடன் காடுகளை நிர்வகிக்கும் விஷயத்தில் ஏழைகளுக்கு சாதகமான மற்றும் மக்களாட்சி அணுகுமுறையை கடைபிடிக்கவேண்டும். இந்த திருத்தங்கள் நடைமுறைக்கு வந்தால் புதிய வடிவங்களிலான சமத்துவமின்மை உருவாவதுடன் வனப் பகுதிகளிலுள்ள உள்ளூர் மக்கள் அவர்களது சமூக, கலாச்சார கூறுகளிலிருந்து பிய்த்தெறியப்படுவார்கள்.