ISSN (Print) - 0012-9976 | ISSN (Online) - 2349-8846

பலவீனமான தேர்தல் ஆணையம்

வாக்காளர்களை திசைதிருப்பும் தீங்கான வடிவங்களை எதிர்கொண்டு நடவடிக்கை எடுப்பதற்கு தேர்தல் ஆணையம் ஆயத்தத்துடன் இருக்கிறதா?

 

The translations of EPW Editorials have been made possible by a generous grant from the H T Parekh Foundation, Mumbai. The translations of English-language Editorials into other languages spoken in India is an attempt to engage with a wider, more diverse audience. In case of any discrepancy in the translation, the English-language original will prevail.

 

இந்தியாவில் மக்களாட்சி நிறுவனங்கள் ஆரோக்கியமாக இருப்பதும், நீடித்திருப்பதும் 2019 மக்களவை தேர்தல் முடிவுகளைப் பொறுத்திருக்கின்றன. இந்தியத் தேர்தல் ஆணையம் தன்னையும், பிற மக்களாட்சி நிறுவனங்களையும் காப்பாற்றுவதற்காக “சுதந்திரமான மற்றும் நியாயமான” தேர்தலை நடத்த வேண்டிய மாபெரும் பணியை எதிர்கொண்டுள்ளது. இந்த மக்களாட்சி நிறுவனங்களில் சிலவற்றின் செயல்பாடுகளை தந்திரமாகக் கையாள்வது என்பது புதிய வடிவங்களை எடுத்திருப்பதால் அவை இன்னும் முழுமையாக புரிபடவில்லை. தேர்தல் ஆணையமானது கையறுநிலைக்கு ஆளாகிக்கொண்டிருப்பதுடன் இறுதியில் கட்சி சார்ந்து இயங்கும் நிலைக்கு ஆளாகிவிடும் ஆபத்திற்குள்ளாகியிருக்கிறது.

பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றுப் படம் வெளியானதையொட்டி உருவான சமீபத்திய சர்ச்சையில் தேர்தல் ஆணையம் முடிவெடுக்காதிருப்பதில் உறுதியாக இருந்தது. ”மோடி: ஒரு சாதாரண மனிதனின் பயணம்” என்ற 10 பாகங்களைக் கொண்ட தொடர் ஒன்று வலைதளத்தில் வெளியாகவுள்ளது. இதற்கு முன்னர் 2014 மற்றும் 2017ல் மோடியின் புகழ்பாடும் பிரச்சாரப் படங்கள் வெளியாயின. இத்தகைய படங்கள் எந்த விமர்சனமும் இல்லாமல் மோடியை பெரும் மதிப்பிற்குரியவராக காட்டுகின்றன. அத்துடன் இந்த துதிபாடும் படங்கள் பாரதீய ஜனதா கட்சிக்கும் (பாஜக) ஆதரவைத் திரட்டுகின்றன. மோடிக்கும் அவரது கட்சிக்கும் இவை உயர்ந்த இடத்தை அளிக்கின்றன. இத்தகைய குயுக்தியான செயல்பாடுகளை தானாக முன்வந்து நடவடிக்கை எடுப்பதிலிருந்து தேர்தல் ஆணையத்தை தடுப்பது எது? வாக்காளர்களை தந்திரமாக ஈர்க்கும் இத்தகைய நடவடிக்கைகளை தேர்தல் ஆணையத்தால் உருவாக்கப்பட்டுள்ள மாதிரி நடத்தை விதிகள் தீவிரமாக எடுத்துக்கொண்டிருக்கிறதா? அப்படி எடுத்துக்கொண்டிருந்தால் இத்தகைய நடவடிக்கை மதிப்பிடப்படுகிறதா?

  2014ல் பாஜக வெற்றி பெற்றதுடன் மோடியின் பிரச்சாரம் நிற்கவில்லை. முக்கியமான விஷயங்கள் குறித்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுவது என்பது – ஒரு முறை கூட அவரது அலுவலகம் ஊடகவியலாளர் கூட்டத்திற்கோ அல்லது விவாதத்திற்கோ அழைப்பு விடுத்தத்தில்லை -  எப்போதுமே ஒரு நாடகத்தனமான நிகழ்வுதான், உணர்ச்சிகரமான பிரச்சாரத்தின் ஒரு பகுதிதான். தனக்கு முன்னர் இருந்த அரசாங்கங்களைப் போல் அல்லாமல், பாதுகாப்பு அல்லது பொருளாதாரம் குறித்த விஷயங்களில் தன்னை அந்நியப்படுத்திக்கொள்ளும் மொழியையே இல்லாது ஆக்கிவிட்டு மக்களின் மொழியை, தினசரி வாழ்வின் மொழியை பயன்படுத்தி நுண்மையான வழிகளில் தந்திரமாக பயன்படுத்திக்கொள்கிறது இந்த அரசாங்கம். உதாரணமாக, பிரதமர் தனது “மான் கி பாத்”தை பகிர்ந்துகொள்கிறபோது தன்னை ஒரு “சேவகன்” அல்லது “காவலாளி” என்று அழைத்துக்கொள்கிறார், அல்லது பணமதிப்புநீக்கத்திற்கு ஆதரவு கோரி தேசியத் தொலைக்காட்சியில் பேசுகையில் கண்ணீர் விடுகிறார். இது அவர் மீது அனுதாபம் கொள்ளும்படி மக்களை கட்டாயப்படுத்துகிறது. நாடு, அதன் பிரச்னைகள், அதன் வளர்ச்சி அனைத்தையும் தேசிய ஜனநாயக கூட்டணி (தேஜகூ) அரசாங்கத்தின் கண்ணாடி வில்லையின் வழியாக மக்கள் பார்க்கத் துவங்கியிருக்கும் போது இத்தகைய தந்திரமான செயல்பாடுகளை அளவிட முடியுமா? அரசாங்கத்தின் இந்த ”தினசரி” அவதாரமானது மிகவும் கவனத்துடன் உருவாக்கப்பட்ட அரசியல் உத்தி என்பது மக்களுக்கு தெரியாத விஷயமல்ல. ஆனால் அரசாங்கத்துடனான தங்களது சொந்த நலன்களை அடையாளம் காணக்கூடிய ஆற்றலை அவர்கள் பெற்றுள்ள வரை- மதம், தொழில் அல்லது ஒழுக்கத்தைப் பொறுத்து- அரசமைப்புச்சட்ட விழுமியங்கள் பலவீனமடைவதை அவர்கள் கண்டுகொள்ளாதிருக்கத் தயார்.

அரசாங்க எந்திரத்தின் தந்திரமான செயல்பாடுகள் சிந்திக்கப்பட்டு, செயல்படுத்தப்படும் வேகத்திற்கும் அளவிற்கும் ஈடு கொடுத்து செயல்படும் திறனற்றது தேர்தல் ஆணையம் என்பது இப்போது மிகவும் வெளிப்படையாகத் தெரிகிறது. இத்தகைய செயல்பாடுகளை வெறுமனே “உற்று நோக்கிக்கொண்டிருக்கிறது” அது. நமோ டிவி குறித்து விவரங்களைக் கேட்டிருக்கிறது, ஏர் இந்தியாவிற்கு காரணம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது, ரயில்வே அமைச்சகத்திடம் பதில் கேட்டிருக்கிறது, மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்திற்கு பொறுப்பை மாற்றியிருக்கிறது. மாதிரி நடத்தை விதிகளை மீறும் இந்த நிறுவனங்கள் மற்றும் வேறு பல அமைப்புகளைப் பார்க்கிறபோது ”பிராண்ட் மோடி” எந்த அளவிற்கு ஊடுருவியிருக்கிறது என்பது தெரிகிறது.

 தேர்தல் ஆணையம் கட்சி சார்பாக நடந்துகொள்வதாகத் தோன்றுகிறது. தேர்தல் போட்டியில் உள்ள சமனற்ற நிலை தேர்தல் ஆணையத்தின் நியாயத்தன்மை குறித்து சந்தேகத்தை எழுப்புகிறது. ஆளும் கட்சியின் வசம் ஏராளமான மூலாதாரங்கள் குவிந்திருப்பதன் காரணமாக இந்த சமனின்மையும், கட்சியும் முழுக்க முழுக்க சமூகத்தை பிளவுபடுத்தும், தீய நோக்குடைய பிரச்சாரத்தில் குவிந்திருக்கிறது. ராணுவத்தை “மோடி ஜி கி சேனா” (மோடியின் படை) என்று யோகி ஆதித்யாநாத் கூறியதற்கு விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது, மோடி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டியவர் என்று கேட்டுக்கொண்ட ராஜஸ்தான் ஆளுனர் குறித்து குடியரசுத்தலைவருக்கு கடிதம் எழுதியிருக்கிறது. தேர்தல் மாதிரி நடத்தை விதிகளை அமல்படுத்த தேர்தல் ஆணையம் எடுக்கும் முயற்சிகளால் வெகுமக்களியம், மதம், மூலதனம் ஆகிய மூன்றும் கூட்டு சேர்ந்து மோடியின் பிரச்சாரத்திற்கு எரிபொருளாக இருப்பதை அச்சுறுத்தி தடுக்க முடியாது.

உண்மையான ஆட்சிபுரிதலுக்கும் கவர்ச்சிப் பேச்சாலான பிரச்சாரத்திற்கும் இடையில் உள்ள கோடு தொடர்ந்து மங்கிவருகிறது. கவர்ச்சியான பேச்சை தந்திரமான செயல்பாடாக கருத முடியுமா? திரைப்பட, தொலைக்காட்சி மற்றும் அச்சு ஊடகங்களின் செயல்பாடுகளை தேர்தல் ஆணையம் கூர்ந்து கவனிக்க வேண்டுமா? பிரச்சார ஊடகங்கள் பல்வேறாக இருப்பதை அடையாளம் கண்டுகொள்வதே, மாதிரி நடத்தை விதிகள் தடையின்றி மீறப்படுவது வேகமாக பரவிவருவதை ஒழிக்க அல்லது கட்டுப்படுத்த எடுக்கப்படும் முதல் படி. பல வடிவங்களில் வாக்காளர்களை திசைதிருப்புவதை புரிந்துகொள்வதற்கும், தீர்ப்பதற்குமான சட்டகத்தை தேர்தல் ஆணையமானது மிக புதுமையான மறுவிளக்கத்திற்கு உட்படுத்தியாக வேண்டும்.

Comments

(-) Hide

EPW looks forward to your comments. Please note that comments are moderated as per our comments policy. They may take some time to appear. A comment, if suitable, may be selected for publication in the Letters pages of EPW.

Back to Top