ISSN (Print) - 0012-9976 | ISSN (Online) - 2349-8846

பாஜகவின் தேசிய ஒருங்கிணைப்பு குறித்து சில கேள்விகள்

ஆரோக்கியமான தேர்தல் அரசியல் பரஸ்பர பரிமாற்றத்திற்கு முயற்சிக்கிறதேயன்றி, தனிநபரின் நலன்கள் மற்றும் தேசத்தின் நலன்களுக்கிடயில் எது முதன்மையானது என்பதற்காக அல்ல.

 

The translations of EPW Editorials have been made possible by a generous grant from the H T Parekh Foundation, Mumbai. The translations of English-language Editorials into other languages spoken in India is an attempt to engage with a wider, more diverse audience. In case of any discrepancy in the translation, the English-language original will prevail.

 

பாரதீய ஜனதா கட்சியும் (பாஜக) அதன் கூட்டணிக் கட்சிகளும் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஒரு குறிப்பிட்ட வகைப்பட்ட தேசியம் பற்றி தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கப்போகின்றன. இந்த வகையான தேசியம், புல்வாமா தாக்குதல் நடைபெறும் வரை ராணுவ மற்றும் போர்க்குண இயல்புகளை கொண்டதாக இருந்தது. பாஜகவின் “தேசியம்” பற்றிய அரசியலானது கருத்துவேறுபாடு கொண்டவர்களை எதிரிகளாக மாற்றுகிறது, பின்னர் அதை இந்தியா மற்றும் “எதிரி நாடு”, அதாவது பாகிஸ்தான் என்று தொடர்கிறது. நாடு பற்றிய இந்த போர்க்குண பிம்பத்தை ஏற்கனவே இந்தி தொலைக்காட்சி செய்திச் சானல்களும், அச்சு ஊடகங்களும் ஊக்குவித்துக்கொண்டிருக்கின்றன. இவை தாக்குதல், எதிர்த் தாக்குதல் அல்லது பெரிய தாக்குதல் போன்ற ராணுவச் சொற்றொடர்களை பயன்படுத்துகின்றன. செயற்கைக்கோள் ஒன்றை சுட்டு வீழ்த்த ஏவுகணை செலுத்தியது தொடர்பாக பிரதமர் செய்த மிக பரபரப்பான அறிவிப்பு இந்த ராணுவ மொழியின் சமீபத்திய வரவு. பொதுத் தேர்தல் வரவுள்ள இந்த நேரத்தில் இது அற ரீதியாக இன்னும் அதிக பலவந்தப் போக்கை கொண்டுள்ளது. பாஜக உறுப்பினர்கள் வெளியிடும் அறிக்கையில் பல்வேறு வழிகளில் இது வெளிப்படையாகத் தெரிகிறது: “நீங்கள் பாஜகவிற்கு வாக்களிக்கவில்லையெனில் இந்தியா சிதற வேண்டுமென முயற்சிப்பவர்களுக்கு வாக்களிக்கிறீர்கள்” என்று சொல்லப்படுகிறது. காங்கிரசை உள்நாட்டு எதிரியாக உருவாக்கிக்காட்டுவதில் பாஜக வெறியோடு இருக்கிறது. காங்கிரசின் தேர்தல் அறிக்கையின் ஒரு சில பகுதிகளை மட்டும் “விமர்சித்து” அதை தேச விரோதியாக பாஜக பிரதிநிதிப் பேச்சாளர்கள் காட்டுவதிலிருந்து இது தெளிவாகத் தெரிகிறது. சொல்லப்போனால், மத்தியிலுள்ள பாஜக தலைமையிலான அரசாங்கமானது தனது நேசத்திற்குரிய தேசிய வடிவத்தை கம்பாக பயன்படுத்தி உள்நாட்டில் தன்னுடன் கருத்து வேறுபடுகிறவர்களை மெளனமாக்குகிறது.

 பிற சமயங்களில், இந்திய தேசியத்தை பாகிஸ்தானுடனான மோதல் சட்டகத்தின் வழியே வரையறை செய்கிறது பாஜக. தேர்தல் நேரத்தில் பாகிஸ்தான் பற்றிய விமர்சனத்துடன் இது சேர்க்கப்பட்டுவிடுகிறது. பாஜகவின் தேர்தல் பிரச்சாரப் பின்னணியில் மூன்று முக்கியமான கேள்விகள் எழுகின்றன.

ஒன்று, பாஜக ஏன் தேசிய ஒருங்கிணைப்பை ஒரேயொரு விதமாக மட்டும் பார்ப்பதுடன் வாக்காளர்களின் ஆதரவை அறிவுபூர்வமான அடிப்படையில் பெற முயற்சிக்காமல் அவர்களது உணவுகளை பயன்படுத்திப் பெறப்பார்க்கிறது? இரண்டு, வாக்காளர்கள் எதற்கு முதன்மையளிக்க வேண்டுமென பாஜக எதிர்பார்க்கிறது: யதார்த்தமாக இல்லாமல் கற்பனையானதாக இருக்கும் தேசிய ஒருங்கிணைப்பிற்கா அல்லது நாட்டில் ஏராளமான பிரச்னைகள் மற்றும் வேதனைகளுடன் இருக்கும் சமூகங்களைச் சேர்ந்த வாக்காளர்கள் எந்தவொரு அரசியல் கட்சியின் தயவோ அல்லது தேசிய அங்கீகாரமோ இல்லாமல் இருக்க முடிவதற்கா? மூன்று, தனிநபர்களின் நலன்கள் தியாகம் செய்யப்படவேண்டும் என்ற பாஜகவின் கோரிக்கையை வாக்காளர்கள் ஏற்பார்களா? பாஜகவின் ஆட்சியின் காரணமாக இது வரை உருவாகியுள்ள வாழ்க்கைப் பிரச்னைகளை மறந்துவிட்டு அல்லது புறந்தள்ளிவிட்டு தேசம் குறித்த அருவமான கருத்தாக்கத்துடன் ஓர் அறிவுபூர்வமான வாக்காளர் தன்னை தொடர்புபடுத்திக்கொள்வாரா?

மோதல் போக்குடைய தேசியத்தின் உணர்வு ரீதியான மூலாதாரங்களை மிக அதிகமாக பயன்படுத்தும் நிலைக்கு அல்லது தனது தலைவர்களுக்கு அனுதாபத்தை உருவாக்கும் வகையில் அல்லது “இந்துக்கள் புண்படுவது” என்ற விஷயத்திற்கு அழுத்தம் தருவதற்கு தேசிய ஜனநாயக கூட்டணி (தேஜகூ) தனது 2019 தேர்தல் பிரச்சாரத்தில் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. 2014ல் அளிக்கப்பட்ட பிராதன் மந்திரி ஜன் தன் யோஜனா வங்கிக் கணக்கு வைத்துள்ள அனைவருக்கும் 15 லட்சம்,  கோடிக்கணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்பு போன்ற வாக்குறுதிகளை பாஜகவால் மீண்டும் தர முடியாது, அதிலும் குறிப்பாக இந்தச் சூழ்நிலையில். இன்னமும் வெளியிடப்படாத பாஜகவின் 2019 தேர்தல் அறிக்கையில் இந்த வெற்று வாக்குறுதிகளை இன்னும் அதிகப்படுத்தி பாஜகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் தருமெனில் வாக்காளர்கள் மீது அது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்பதை சொல்லத் தேவையில்லை. இரண்டு, இத்தகைய வாக்குறுதிகளை மீண்டும் தர கட்சி முயற்சிகள் செய்தால் அது வாக்குறுதி என்ற கருத்தாக்கத்தையே எதற்கும் உதவாத வெறும் செய்தி என்ற நிலைக்கு கொண்டுவந்துவிடும். இது எந்தக் கட்சிக்கும் பொருந்துவது. அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாதது அதன் அற மதிப்பை இல்லாது செய்துவிடுகிறது. வேலைவாய்ப்பு போன்ற ஆதாரமான விஷயங்களில் தேஜகூ அரசாங்கத்தின் ஏமாற்றத்திற்குரிய செயல்பாடுகள் பாஜகவின் தேர்தல் பிரச்சாரத்தை மிக வெளிப்படையாகவே வெட்கமற்ற வகையில் கட்சி சார்ந்த விஷயமாகிவிட்டது. இப்போது பாஜகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் “தேச ஒருங்கிணைப்பிற்காக” வாக்காளர்கள் தங்களுக்கு வாக்களிக்க வேண்டுமென விரும்புவது வெளிப்படையாகத் தெரிகிறது.

ஆனால் இத்தகைய வேண்டுகோளில் தேசியம் பற்றிய பரந்துபட்ட அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய பார்வை இல்லை. தேசியம் பற்றிய பாஜகவின் கூற்றுகளில் தேசத்திற்கும் அதன் குடிமக்களுக்கும் இடையில் பரஸ்பர உறவு இல்லை. ஆனால், கும்பல் கொலை, சுதந்திரமின்மை, அச்சம், கவலை ஆகிய ஆழமாக அச்சுறுத்துகிற, சமூகத்தை பிளவுபடுத்தும் தீமைகளைப் பற்றி எதுவும் பேசாது நாம் அதன் தேசிய ஒருங்கிணைப்பை மட்டும் நம்ப வேண்டுமென பாஜக விரும்புகிறது.

பணமதிப்புநீக்கம், சரக்கு மற்றும் சேவை வரி, வேலைவாய்ப்பின்மை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள், தலித்துகளுக்கு எதிரான சாதிக் கொடுமைகள், சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்களை கும்பல்கள் கொலை செய்வது போன்ற கொடுமைகளையும் இந்தத் தேர்தலில் மறக்கமாட்டார்கள். இவர்கள் வாக்களிக்கிறபோது தங்களது தனிப்பட்ட மற்றும் சமூக நலன்களுக்கு முதன்மையளிப்பார்கள். தாங்கள் எப்படி யதார்த்தத்தில் நடத்தப்படுகிறோம் என்பதன் அடிப்படையிலேயே வாக்காளர்கள் தேசம் என்ற கருத்தாக்கத்தை மதிப்பிடுவார்கள்.

தேஜகூ உருவாக்கியுள்ள உணர்ச்சிகரமான சட்டகத்திற்குள் பாதிக்கப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்த வாக்காளர்கள் இருக்கமாட்டார்கள். இவர்கள் வேறு வகைப்பட்ட உணர்ச்சிகரமான பிணைப்புகளில் தங்களை நிரந்தமாக சிக்கவைத்துக்கொள்ளக்கூடும். சந்தையின் நிச்சயமற்ற தன்மையிலிருந்து தங்களுக்கு பாதுகாப்பு, வேலைக்கான உறுதி, இடப்பெயர்விலிருந்து பாதுகாப்பு, தான் கும்பலால் கொலை செய்யப்படக்கூடும் என்ற அச்சத்திலிருந்து விடுதலை, சாதிக் கொடுமைகளிலிருந்து விடுதலை ஆகியவற்றை உறுதி செய்யக்கூடிய தேசம் என்ற சட்டகத்தில் அவர்களுக்கும் பங்கிருக்கிறது. சமூக ரீதியாக அனுதாபத்துடன் எதிர்வினையாற்றும், மனிதாபிமானத்துடன் நடந்துகொள்ளும் ஓர் அரசு தேசம் என்பதை பன்மைத்துவத்தின் அடிப்படையில் புரிந்துகொள்ளும். மக்கள் மத்தியில் பிளவுவாத சிந்தனைகளை வளர்க்கும் சக்திகளின் செல்வாக்கை அழிக்கும் பொறுப்பு ஆட்சிக்கு வர முயலும் எல்லா கட்சிகளுக்கும் இருக்கிறது. அநேகமாக இதுவே தேச ஒருங்கிணைப்பு பற்றி உச்சபட்ச படைப்பூக்கம் கொண்ட கருத்தாக்கமாக இருக்கும்.

Comments

(-) Hide

EPW looks forward to your comments. Please note that comments are moderated as per our comments policy. They may take some time to appear. A comment, if suitable, may be selected for publication in the Letters pages of EPW.

Back to Top