ISSN (Print) - 0012-9976 | ISSN (Online) - 2349-8846

தொழிலாளர்களை தொழிற்சங்கமயமாக்குவது அரசியல் செயல்திட்டமில்லையா?

மிகக் கடினமான சூழலில் இருக்கும் தொழிலாளர் வர்க்கத்திற்கு ”அரசியலற்ற” தொழிற்சங்கத்தால் எதையும் செய்ய முடியாது.

 

The translations of EPW Editorials have been made possible by a generous grant from the H T Parekh Foundation, Mumbai. The translations of English-language Editorials into other languages spoken in India is an attempt to engage with a wider, more diverse audience. In case of any discrepancy in the translation, the English-language original will prevail.

 

இந்தியாவில் தொழிற்சங்கங்கள் இன்று இரண்டு சவால்களை எதிர்கொண்டிருக்கின்றன. அநேகமாக இரண்டுமே சமகாலத்தின் அதிகபட்ச மோசமான பிரச்னைகளாகும். வேலைவாய்ப்புகளும், வேலைச்சூழல்களும் மேலும் மேலும் மோசமடைந்துகொண்டிருப்பதை எதிர்கொள்வது மட்டுமல்லாமல் அவை அரசாங்கத்தின் “தொழிலாளர் சீர்திருத்தங்களை”யும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இந்த சீர்திருத்தங்கள் எந்த வகையிலும் தொழிலாளர்களுக்கு சாதகமானவையல்ல. ராஷ்டீரிய சுயம்சேவக் சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்.) தொழிலாளர் அமைப்பான பாரதீய மஸ்தூர் சங்கமானது (பி.எம்.எஸ்.), இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரசிலிருந்து (ஐ.என்.டி.யு.,சி) பிரிந்துசென்ற அமைப்பான இந்திய தொழிற்சங்கங்களின் தேசிய முன்னணியுடன் சேர்ந்து மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பை (ம.தொ.கூ) உருவாக்கியுள்ளது. ம.தொ.கூ. “அரசியலற்ற” தொழிற்சங்க முன்னணி என ஊடகங்களிடம் பி.எம்..எஸ். கூறியிருப்பது கவனத்திற்குரியது. இந்த புதிய அமைப்பு முக்கியமான கேள்விகளை எழுப்புகின்றன. ஒன்று, இன்றைய நிலையில் இத்தகைய கூட்டணி தேவையானதா? இரண்டு, தொழிலாளர்களும் அவர்களது அமைப்புகளும் இன்று எதிர்கொண்டுள்ள பிரச்னைகளுக்கும் குழப்பங்களுக்குமான தீர்வுகளைப் பற்றி நாடு இன்றுள்ள ஆபத்தான அரசியல் சூழலிலிருந்து விலகி சிந்திக்கமுடியுமா? 1926ஆம் ஆண்டின் தொழிற்சங்கள் சட்டத்தை திருத்த மத்திய அரசு வைத்த முன்மொழிவை ம.தொ.கூ.வில் இல்லாத பிற 10 மத்திய தொழிற்சங்கங்கள் கடுமையாக எதிர்த்தன. இந்தத் திருத்தம் அரசியல் உள்நோக்கம் கொண்டது, ஒரு தொழிற்சங்கத்தின் அங்கீகாரத்தில் அரசாங்கத்தின் தலையீட்ட்டை அனுமதிப்பது என்று அவை கூறின. ஆனால். இந்த திருத்தத்தை எதிர்ப்பதில் பிற தொழிற்சங்கங்களுடன் பி.எம்.எஸ். சேரவில்லை. ம.தொ.கூ.வையும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தத்தையும் தாண்டி இருப்பது மிகுந்த கவலைதரும் யதார்த்தங்கள்தான்.

     நாட்டின் மொத்தத் தொழிலாளர்களில் வெறும் 8% மட்டுமே அமைப்புரீதியான துறையைச் சேர்ந்தவர்கள். அமைப்புசாரா துறையில் இருக்கும் 92% தொழிலாளர்களின் வேலை மற்றும் வாழ்க்கைச் சூழலானது தொழிற்சங்கங்கள் மற்றும் அரசாங்கத்தின் கவனத்தை வேண்டி கதறுகின்றன. அமைப்புசார துறையிலிருப்பவர்களை ஒன்றுதிரட்டுவதில் பெரும் தடைகள் இருக்கின்றன. இந் நிலையில் ம.தொ.கூ. உருவாகியிருப்பது எப்படி உதவியாக இருக்கும்? தொழிலாளர்களின் கலவையே மிக வேகமான, பெரும் மாறுதல்களுக்கு ஆளாகியிருக்கிறது. விரிவடைந்துகொண்டிருக்கும் அமைப்புசார துறையில் இளைஞர்களும், பெண்களும் அதிகம் உள்ளனர். தகவல் தொழில்நுட்பத் துறையோ தனித்துவமான வேலைப் பிரச்னைகளை உருவாக்கியிருக்கிறது. போக்குவரத்து துறையிலோ மாற்றம் ஏறக்குறைய ஓரிரவில் நடந்து, அது தனியார் வாடகைக்கார் (குறிப்பாக ஓலா, உபர் போன்றவை) ஓட்டுனர்களால் நிரம்பி இந்தியா இது வரை கண்டிராத பிரச்னைகளை எதிர்கொண்டுள்ளது. பெரும்பாலான பொதுத் துறை நிறுவனங்களில் அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் செய்யும் அரசியல் தலையீடுகளை அந்நிறுவனங்கள் பொறுத்துக்கொள்ள வேண்டியிருந்தது. ஆனால் ரிவைவல் பேக்கேஜ் போன்ற தொழிலாளர் தொடர்பான விஷயங்களில்கூட தொழிலாளர்களையோ, தொழிற்சங்கங்களையோ அரசாங்கம் கலந்தாலோசிப்பதில்லை. “குறிப்பிட்ட காலத்திற்கான வேலை” ஒப்பந்தமானது 2016ல் ஆடை தயாரிப்பு துறையில் முதலில் அனுமதிக்கப்பட்டு இப்போது எல்லா துறைகளிலும் அனுமதிக்கப்படுகிறது. வர்த்தகம் நடப்பதை எளிதாக்கும் பொருட்டும், நிறுவன உரிமையாளர்களுக்கு “நெகிழ்வான” சூழலை அளிக்கவும் இவ்வாறு செய்யப்படுகிறது. குறிப்பிட்ட காலத்திற்கான வேலை ஒப்பந்த விதிகளின்படி அவர் எவ்வளவு காலத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தாலும் (ஒரு வாரத்திலிருந்து திட்டம் முடிவது வரையில்) அவரை இடையில் நீக்க எந்த அறிவிப்பும் தரப்படத் தேவையில்லை. 1970களின் இறுதியிலிருந்தே நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்கள் உட்பட, ஒட்டுமொத்த பிரிவுகளுக்கும் ஒப்பந்தத் தொழிலாளர்களை அமர்த்தத் தொடங்கியதிலிருந்து தொழிற்சங்கங்கள் ஒப்பந்த வேலை பிரச்னைகளுடன் போராடிக்கொண்டிருக்கின்றன.

     தொழிற்சங்கங்களின் இருப்பே ஆபத்திற்குள்ளாகியிருக்கும் நிலையில், புதிய நெருக்கடிகளை கையாளும் அவற்றின் ஆற்றல் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டின் ஒட்டுமொத்த அரசியல் சூழலை தவிர்த்துவிட்டு தொழிலாளர் பிரச்னைகளை எப்படி கையாள முடியும்? குறிப்பிட்ட காலத்திற்கான வேலை ஒப்பந்தத்தையும், பல தொழிலாளர் சட்டங்களை ஒன்றாக தொகுத்து ஊதியங்கள் மசோதா 2017ஆக ஆக்கும் அரசாங்க நடவடிக்கையையும் பி.எம்.எஸ். கண்டித்தத்துடன் அந்நிய நேரடி முதலீட்டை அரசாங்கம் சார்ந்திருப்பதால் எவ்வளவு வேலைகள் உருவாக்கப்பட்டன என்பது குறித்து தெரிந்துகொள்ள வெள்ளை அறிக்கை சமர்பிக்கப்படவேண்டும் என்றும் கோரியது.

     நரேந்திர மோடி அரசாங்கத்தின் தொழிலாளர் விரோதக் கொள்கைகளை பி.எம்.எஸ். முன்னர் வெளிப்படையாகவே எதிர்த்தது. ஆனால், 2015 செப்டம்பரில் தொடங்கிய பிற தொழிற்சங்கங்களின் நாடு தழுவிய முக்கியமான போராட்டங்களில் சேர்ந்துகொள்ள மறுத்துவிட்டது. தனக்கு “அரசியலில் நம்ப்பிக்கையில்லை” என்றும் தொழிலாளர்களின் நலன்களுக்காக மட்டுமே தான் போராடுவதாகவும் கூறி பொது வேலைநிறுத்தங்களில் பங்கேற்க மறுத்துவிட்டது.

     தொழிற்சங்கங்களை கணக்கில் எடுத்துக்கொண்டு அவையும் (முத்தரப்பு) பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளும் வகையில் அரசாங்கத்திற்கு அழுத்தம் தருவது என்பது இன்று தொழிலாளர் வர்க்கம் எதிர்கொண்டுள்ள முக்கியமான சவால்களுள் ஒன்று. தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கம் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த மறுக்கிறது என்பதை பல தொழிற்சங்கத் தலைவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

     தொழிலாளர் சீர்திருத்தங்களானது தொழிற்சாலைகள் மூடப்படுவதற்கும், வேலைவாய்ப்பு இழப்பிற்கும் வழிவகுப்பதுடன் மக்களாட்சி உரிமைகள் மீதான தாக்குதல்களாக இருக்கின்றன என்பதை உணர்த்துவதன் மூலம் தொழிலாளர்களின் கவலைகள் என்பது பொதுமக்களின் கவலைகள் என்ற நிலையை உருவாக்கும் பிரம்மாண்டமான மற்றும் சிக்கலான பணியை தொழிற்சங்கங்கள் எதிர்கொண்டுள்ளன. முற்போக்கான அரசியல் மற்றும் சமூக இயக்கங்களுடன் சேர்ந்து செயல்படுவது இதற்கான வழிகளுள் ஒன்று. வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படாத பொருளாதார வளர்ச்சியால் தொழிற்சங்கங்களின் உறுப்பினர் எண்ணிக்கையும் நெருக்கடியில் உள்ளது. தனது தொழிலாளர் கொள்கைகள் குறித்து நாடாளுமன்றத்திலோ அல்லது அதற்கு வெளியிலோ விவாதிக்க, உரையாட அரசாங்கம் தயாராக இல்லாத நிலையில் தங்களது பிரச்னையை மக்களிடம் எடுத்துச்செல்வதை மற்றும் கூட்டுபேர ஆற்றலின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதைத் தவிர்த்து தொழிற்சங்கங்களுக்கு வேறு வழியில்லை. இதற்காக அவர்கள் ஆட்சி மற்றும் அரசியல் பிரச்னைகளை கையில் எடுக்கவேண்டியுள்ளது. இதில் ம.தொ.க்கூ. எங்கு பொருந்துகிறது?  

Back to Top