ISSN (Print) - 0012-9976 | ISSN (Online) - 2349-8846

மேலும் சிக்கலாகும் ஜிஎஸ்டி புதிர்

இந்தியாவின் சரக்கு மற்று சேவை வரியின் முன்னேற்றமானது தேர்தல் மேடையைத் தாண்டிச்செல்லுமா?

 

The translations of EPW Editorials have been made possible by a generous grant from the H T Parekh Foundation, Mumbai. The translations of English-language Editorials into other languages spoken in India is an attempt to engage with a wider, more diverse audience. In case of any discrepancy in the translation, the English-language original will prevail.

 

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) இந்தியாவில் 2017ல் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து அதை அமல் செய்வதில் ஏற்பட்ட சிக்கல்களின் காரணமாக இது வரை சுமார் 400 உத்திரவுகளும் அறிவிக்கைகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளன. 2019 பொதுத் தேர்தல் வரவிருக்கும் நிலையில் பாரதீய ஜனதா கட்சி (பாஜக), எதிர்க்கட்சியான காங்கிரஸ் ஆகிய இரண்டுமே ஜிஎஸ்டியில் மேலும் மாற்றங்களை கொண்டுவருவதாக உறுதியளித்துள்ளன. பட்டியலிடப்பட்டுள்ள 40 பரந்துபட்ட பிரிவுகளில் 23  பொருட்களுக்கு ஜிஎஸ்டி விகிதத்தை பாஜக அரசாங்கம் ஏற்கனவே 18% அல்லது அதற்கும் கீழ் என மரசீரமைப்பு செய்துள்ளது. காங்கிரஸ் இன்னமும் எளிமையான வரி அமைப்பை (பொருள் வாரியாக), ஒற்றை விகிதத்தில் ஜி.எஸ்.டி. 2.0வை 2019 தேர்தல் அறிக்கையில் வெளியிடவிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் புரியாத விஷயம் என்னவெனில் ஜிஎஸ்டியின் அடிப்படையில் இருப்பதாக சொல்லப்படும் சிக்கல்களை இந்த மாறுதல்கள் எப்படி தீர்த்துவைக்கும் என்பதுதான். இந்தியாவின் நிதிக் கூட்டாட்சி, விதிகளை முறையாக பின்பற்றுதல் மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக அமைப்புசாரா துறை வர்த்தகத்தின் அல்லது சிறு மூலதனத்தின் எதிர்காலம் போன்ற முக்கியமான பிரச்னைகள் தொடர்பான கேள்விகள் இன்னமும் தீர்க்கப்படாதிருக்கின்றன.

வரி சீர்திருத்தமானது தேர்தலில் போட்டியிடுவதற்கு பயன்படுத்தப்படுவதில் புதுமை எதுவுமில்லை. சமீப காலங்களில் மலேசியாவில் அரசாங்கங்கள் இதை செய்திருப்பதை பார்க்கலாம். நாட்டின் மொத்த வருவாயில் இத்தகைய வரிகளின் (அதாவது ஜிஎஸ்டி) பங்கு ஐந்தில் ஒரு பங்காக இருந்தபோதிலும் மக்களின் அதிருப்தியை போக்க வரிகளை நீக்குவது நடக்கிறது. ஆனால் இந்தியாவில் ஜிஎஸ்டி விஷயத்தில் இவ்வாறு செய்யப்படுவது என்பது அதைப் பற்றி நினைக்கும் மாத்திரத்திலேயே அச்சத்தை ஏற்படுத்தும் விஷயமாகும். சுயமோகம் கொண்ட அரசியல் கட்சிகளால் (ஜிஎஸ்டி விஷயத்தில் “துணிச்சலான” செயல்வீரனாக அல்லது “புதுமை”க் கருத்தாளர்களாக இருக்கும் கட்சிகள்) வரிகளை திரும்பப்பெறுவது முடியாத செயல் என்பதுதான் இதிலிருக்கும் ஒரே நல்ல விஷயம். ஆனால் ஜிஎஸ்டியானது அரசின் கூட்டாட்சி அமைப்பிற்கே ஆபத்தையும் கொண்டிருக்கிறது.

   ”தேவைப்படும் திருத்தங்களைச் செய்ய ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு போதுமான அதிகாரம் இருப்பதால்” ஜிஎஸ்டி (2.0)க்கு அரசமைப்புச்சட்டத் திருத்தங்கள் எதுவும் தேவையில்லை என காங்கிரஸ் கட்சியின் பொருளாதார விவகார பேச்சாளர் கவுரவ் வல்லப் சமீபத்தில் கூறியுள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணிக்கே உரித்தான குணமான மாநிலங்களின் நிதி சுயாட்சியைப் பற்றிய சட்ட விதிகளை கருத்தில்கொள்ளாத அதே தன்மையை இவரது பேச்சு பிரதிபலிக்கிறது. இந்தப் பின்னணியில், மாநிலங்களின் பொருளாதார யதார்த்தங்கள் மற்றும் பிரச்னைகள் பல்வேறுபட்டவை, ஒரேமாதிரியானவையல்ல என்பதை மறக்கக்கூடாது. மின்சாரம், ரியல் எஸ்டேட், பெட்ரோல் ஆகியவற்றை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டுவருவது பஞ்சாபிற்கு நலன் பயக்கும் விஷயமாக இருக்கும், ஆனால் பிற மாநிலங்களுக்கு அப்படியல்ல.

 வட இந்தியாவில் 2018ல் மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் வென்றதானது ஜிஎஸ்டி கவுன்சிலில் நிலவும் பலாபலத்தை பாஜக/தேஜகூவிற்கு பாதகமாக மாற்றியமைத்திருக்கிறது. ஆனால், இதன் அடிப்படையில் ஜிஎஸ்டி கட்டமைப்பை முற்றிலுமாக திருத்தியமைப்பது என்பது மிகைப்படுத்தப்பட்ட உறுதிமொழியாகத்தான் இருக்கும். 2019ல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தாலும் ஜிஎஸ்டி கவுன்சிலில் எந்தவொரு மாற்றத்தைக் கொண்டுவரவும் நான்கில் மூன்று பகுதி பெரும்பான்மை தேவைப்படும் என்பதுடன் இதில் மாநிலங்களின் பங்கு முக்கியமானதாக இருப்பதும் தொடரும். ஆனால், தங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டால் அதை மத்திய அரசங்கம் ஈடு செய்யும் என்ற உத்திரவாதத்துடன் மாநில அரசாங்கங்கள் ஜிஎஸ்டியை ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் நிர்ணயகரமான அம்சமான “கூட்டாட்சி” என்பது ஏற்கனவே பலவீனமடையத் தொடங்கிவிட்டது.

இன்னும் முக்கியமாக, இந்த சமரசமானது மாற்று யதார்த்தம் ஒன்றை காட்டுகிறது: ஜிஎஸ்டி-யின் பலன்கள் என்ன என்பது பற்றி அரசியல்வாதிகள் மற்றும் கொள்கைவகுப்பாளர்கள் (முக்கிய்மாக தேஜகூ) மத்தியில் நிச்சயமின்மை நிலவுகிறது. இந்த நிச்சயமின்மைய ஏற்றுக்கொள்ள வாக்கு வங்கிகளை தாஜா செய்வதற்காக பலமான ஆதாரங்களை அரசியல் ஆதாயத்திற்காக குறைத்துக்காட்டப்படுகிறது: ஒன்று, தேர்தலுக்கு இடைப்பட்ட காலத்தில் வசூலை அதிகரிப்பது என்ற பெயரில் மக்கள் ஏராளமான பணத்தை செலவிட வேண்டியுள்ளது (உதாரணமாக, வீடுகளில் எல்.பி.எஜி. சிலிண்டருக்கு ஜூலை 17லிருந்து ஜிஎஸ்டி மற்றும் மானியக் குறைப்பின் காரணமாக ரூ. 32 அதிகம் தரவேண்டியிருக்கிறது), இரண்டு, தேர்தல் வரும்போது  வரியை ”குறைப்பது” என்ற பெயரில் விலையைக் குறைப்பது (மானியவிலையில் பெறாத நுகர்வோருக்கு எல்.பி.ஜி.யை ரூ. 120.50 குறைவாகவும், மானிய விலையில் பெறுகிறவர்களுக்கு ரூ. 5.90 குறைவாகவும் தரப்படுகிறது), இறுதியாக, ஒன்றரை ஆண்டு காலமாக விதி மீறல்களுக்கு பொருளாதாரத்தை பலியாக்கிய பின்னர் மேலும் “குறைப்பதாக” வாக்குறுதி அளிக்கப்படுகிறது. பல விதமான பொருளாதார, அரசியல் சூழல்களைக் கொண்ட இந்தியா போன்றாதொரு நாட்டில் ஜிஎஸ்டியை நடைமுறைப்படுத்துவது என்பது மிகக் கடினமான பணி. இதனால் தவறுகள் ஏற்படுவதும் அவற்றிலிருந்து பாடங்கள் கற்றுக்கொள்வதும் இயல்பானது. இந் நிலையில், தேஜகூவின் துணிச்சலையும் முயற்சியையும் ஒருவர் பாராட்டியாகவேண்டும். ஆனால், இத்தகைய சோதனைகளுக்கு உந்துதலாக இருக்கும் அரசியல் நோக்கங்கள் பற்றி என்ன சொல்வது?

இந்திய மக்களாட்சியின் போக்கிற்கு மாறானது என்பதால் ஜிஎஸ்டி போன்ற சீர்திருத்தங்களை சுமார் நாற்பது ஆண்டுகளாக பல அரசாங்கங்கள் தள்ளிப்போட்டபடி இருந்தன. ஆனால் இதை தேஜகூ (அவசர அவசரமாக) ஏற்றுக்கொண்டு (மறைமுக) வரி சீர்திருத்தங்களுக்கு ஜிஎஸ்டி எனும் “மந்திரக்கோல்”தான் தீர்வு என்று பிரச்சாரம் செய்தது பொருளாதாரம் குறித்த பொதுப்புத்தியை குழப்புகிறது. சொல்லப்போனால்,  ஜிஎஸ்டி மூலமான பலன்கள் என்று சொல்லப்பட்ட அதிக வருவாய், பணவீக்க வீழ்ச்சி, பொருளாதார வளர்ச்சி அதிகரித்தது போன்ற விஷயங்கள் பொருளாதா தர்க்கத்தின்படி ஒன்றையொன்று விலக்குகிறவை. ஆனால் இதற்குப் பின்னாலிருக்கும் “அனைவருக்கும் ஒரே அளவு” என்ற தேஜகூவின் அரசியல் மற்றும் பொருளாதார மேலாதிக்க நோக்கமே இன்னும் அதிக ஆபத்தானது. உதாரணமாக, சிறு நிறுவனங்களானது  அவற்றின் செயல் கட்டமைப்பு விஷயத்தில் பெருநிறுவனங்களின் சிறு வடிவம் என்ற இதன் மெத்தனமாக யூகமானது அமைப்புசார துறையின் நிர்வாக செலவினத்தை அதால் தாங்க முடியாத அளவிற்கு அதிகரித்துவிட்ட அதே நேரத்தில் அமைப்புரீதியான துறையில் வருவாயை அதிகத்து, வேலை விஷயத்தின் பாதுகாப்பின்மையையும் உருவாக்கி அது விரிவடைய உதவியது.

 ஓர் அரசியல் கட்சியின் அரசியல் உறுதி என்பது நிச்சயமின்மையை முடிவுக்கு கொண்டுவருவதில்தான் இருக்கிறதே தவிர வீறாப்புப் பேச்சு மூலம் புதிய புதிர்களை உருவாக்குவதில் அல்ல. ஜிஎஸ்டி திரும்பப்பெற முடியாதது என்ற நிலையில் அரசியல் கட்சிகள் (அதாவது தேஜகூ தலைமையிலான கூட்டணி கட்சிகள்) தங்களுக்கான அரசியல் ஆதரவாளர் குழுமம் ஒன்றை உருவாக்க இதை பயன்படுத்தலாம். இதில் கிடைக்கும் வெற்றி மிகக் குறைந்த காலம் மட்டுமே நீடிப்பதாக இருக்கும்.  ஆனால் தொலைநோக்கு அடிப்படையில் பார்க்கிறபோது, கட்டமைப்பிலுள்ள பிறழ்வுகள், வரி போடுவது அல்லது விலக்களிப்பது, வரியை எளிமைபடுத்துவது மற்றும் பிறவற்றில் பொருத்தமான புள்ளிகளை கண்டறிவதை நாட்டின் மக்களாட்சி கட்டமைப்பிற்கு இணக்கமாக இருக்கும்படிக்கு நிர்ணயகரமான அல்லது முழுமையான அணுகுமுறைகள் கொள்கைவகுப்பாளர்களுக்குத் தேவை.

Back to Top