ISSN (Print) - 0012-9976 | ISSN (Online) - 2349-8846

சிலைக்கு அப்பால் இருப்பது

தூதாண்மை நட்புறவை விட நவீன தாராளவாத அரசியல் முக்கியமானதாகிறதா?

The translations of EPW Editorials have been made possible by a generous grant from the H T Parekh Foundation, Mumbai. The translations of English-language Editorials into other languages spoken in India is an attempt to engage with a wider, more diverse audience. In case of any discrepancy in the translation, the English-language original will prevail.

 

’’ஒருவரது கதாநாயகன் மற்றொருவருக்கு வில்லன்” என்பது சிலைகள் அரசியலுக்கு மிகப் பொருத்தமான வாசகம். சமீப காலங்களில் தேச உறுதிப்பாடு என்ற பெயரில் பல அரசியல் சிலைகள் உடைக்கப்பட்டன அல்லது அகற்றப்பட்டன. சமீபத்தில் கானா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள், பேராசிரியர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க எம்.கே. காந்தியின் சிலை பல்கலைக்கழக வளாகத்திலிருந்து அகற்றப்பட்டது.  சிலை அகற்றல் விவகாரத்தில் இது புதிய வரவாகும். இரண்டு நாடுகளின் அரசாங்கங்களும் கூறுவதன்படி இந்த சிலையானது இந்தியாவின் குடியரசுத்தலைவர் முதல் முறையாக மூன்று ஆப்ரிக்க நாடுகளுக்கு விஜயம் செய்ததன் அடையாளமாக 2016ல் நிறுவப்பட்டது. ஆனால் பெரும்பாலான சாதாரண கானா மக்களைப் பொருத்தவரை காந்தியின் அரசியல் ஆளுமை என்பது எந்தவொரு ‘’நிறவெறி” ஏகாதிபத்தியவாதியின் ஆளுமையிலிருந்தும் வேறுபட்டதல்ல. சொல்லப்போனால், 2015ல் தென்னாப்பிரிக்காவில் காந்தி சிலையின் மீது வெள்ளை சாயத்தை ஊற்றி களங்கப்படுத்தியதிலிருந்து மலாவி நாட்டிற்கு இந்திய குடியரசுத்தலைவர் சமீபத்தில் விஜயம் செய்ததைக் கொண்டாட செதுக்கப்பட்ட காந்தி சிலை பாதியில் நிறுத்தப்பட்டதற்கு முன்னர் வரை பல காலமாகவே காந்தியின் சிலைகள் ஆப்ரிக்காவில் காலனிய எதிர்ப்பு, நிறவெறி எதிர்ப்பு ஆகியவற்றின் அடையாளங்களாக இருந்துவந்தன. இரு நாடுகளுக்கிடையிலான உறவின் அடையாளங்களாக காட்டப்பட்ட இந்த சிலைகள் பொதுமக்களின் கண்டனங்களுக்கு ஆளானபோது இந்த அரசாங்கங்கள் அமைதியாக இருந்துவிட்டது ஆச்சர்யத்திற்குரியது. அரசாங்கங்கள் பேசாதிருந்தது காந்தியை நிறவெறியாளர் என்று குற்றம்சாட்டுவதை ஏற்பதாகும் எனில் யதார்த்தத்தில் இந்த அரசியல் சிலைகள் எதைத்தான் அடையாளப்படுத்துகின்றன?

காந்தியை புகழ்ந்துரைப்பது (அவரது சிலை அதற்கான அடையாளம்) என்பது இந்தியாவிற்கும் ஆப்பிரிக்காவிற்கும் தங்களது மென்-அதிகார அரசியலுக்கு வசதியானது என்பதுடன் தங்களது வசதிக்கேற்ப ‘’தேச அரசு” என்ற துருப்புச்சீட்டை பயன்படுத்த அரசாங்கங்களுக்கு வாய்ப்பளிக்கிறது. கானா அரசைப் பொருத்தவரை “நிறவெறி” என்பதை தங்களுக்கு வசதியாக ‘’நிறபேதமாக’’ பின்னுக்குத்தள்ளவும், தனக்கு சங்கடமளிக்கும் ”இன-மையவாத” உள்ளூர் வரலாற்றை (அகன் அரசுகள் பிற இன மக்களை அடிமைப்படுத்தியது) ஒருபக்கமாக ஒதுக்கிவைக்க வசதியாக இருக்கிறது. அகன் மற்றும் அகன் அல்லாத பழங்குடியினர் என்று தேர்தலில் கானா இன்று பிளவுபட்டு நிற்கிற அளவிற்கு பிரச்னை முற்றியிருக்கிறது. ஆனால், நாட்டின் உட்பகுதிகளிலிருந்து பெருமளவில் மக்கள் மாநகரம் மற்றும் பொருளாதாரரீதியாக வாய்ப்புகள் கொண்ட பகுதிகளுக்கு (பெரும்பாலும் தெற்குப் பகுதி) குடியேறுவதன் காரணமாக இன கூட்டணிகளின் மூலம் பலன் பெறுவதற்கான வழக்கமான அரசியல் உத்திகள் சிக்கலாகிவருகின்றன. மேலும், கானா நாட்டைச் சேர்ந்த 25லிருந்து 30 வயதிற்குட்பட்ட ஒருவர் இந்த உள்ளூர் பாரம்பரியங்களால் தாக்கம் பெற்றவராக அல்லது அவற்றை அறிந்தவராகவாவது இருப்பார் என்று சொல்ல முடியும். இந்த நாட்டின் தேர்தல் ஜனநாயகத்தில் இன/கலாச்சார அம்சத்தின் உறுதிப்பாட்டை இந்த அம்சங்கள் முற்றாக அழிக்காவிட்டாலும் பலவீனப்படுத்திவிட்டன.

தேசிய ஜனநாயக காங்கிரஸ் மற்றும் புதிய தேசப்பற்றுக் கட்சி என இரண்டு முக்கியமான கட்சிகளுக்கிடையிலான (கொள்கை அடிப்படையில்) கோடு மிகவும் மங்கலானதாக இருக்கும்நிலையில் நிலைமை மேலும் மோசமாகிறது. அரசியல் பாரம்பரியம் மற்றும் சித்தாந்தரீதியாக தங்களுக்குள் வேறுபாடு இருப்பதாக அவை சொல்லிக்கொண்டாலும் இரண்டுமே சர்வதேச நிதி அமைப்புகள் பரிந்துரைக்கும் நவீன தாராளவாதக் கொள்கைகளைத்தான் பெரும்பாலும் பின்பற்றுகின்றன. இதன் மூலம் மொத்த உள்நாட்டு உற்பத்தி/வளர்ச்சி சார்ந்த சொல்லாடல்களுக்கு நம்பகத்தன்மையைத் தருகின்றன, தனியார் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளுக்கு நற்சான்று வழங்குகின்றன. வேறுபாடுகள் இருப்பதென்பதே தெளிவற்றதாக உள்ள நிலையில், கானாவின் அரசியலானது பிரச்னைகளின் அடிப்படையில் அல்லாமல் ஆளுமைகளின் அடிப்படையிலானதாக இருக்கிறது. தனிநபர்களுக்கும், குழுக்களுக்குமான சில உடனடித் தேவைகளை நிறைவேற்றுவதைப் பற்றிய முழக்கங்களும் வாக்குறுதிகளுமே அரசியலாக இருக்கின்றன. இந்தப் பின்னணியில் ‘’இளம்’’ வாக்காளர்களின் தெரிவானது தங்களது (சமூக-பொருளாதார) நலன்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியவாதியை அல்லது அரசாங்கத்தைப் பற்றிய பார்வையைப் பொருத்து அமைகிறது. இது தேர்தலில் குடியரசுத்தலைவருக்கு ஒரு கட்சிக்கும் நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிர்க்கட்சிக்கும் வாக்களிக்கும் போக்கை கானாவில் அதிகரிக்கச்செய்திருக்கிறது.

இத்தகைய உறுதியின்மைகள் தேர்தல் வெற்றிகளில் ஆட்சியிலிருப்பவர்களின் பங்கை பலவீனப்படுத்தும் ஆற்றலைக் கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் அது புரவலர்--உதவி பெறுபவர் உறவுகளுக்கான ஜன்னலை திறக்கிறது. நகர்ப்புறங்களைப் பொருத்தவரை அரசின் நம்பகத்தன்மையானது, அதிலும் குறிப்பாக மொத்த உள்நாட்டு உற்பத்தி தடுமாறிக்கொண்டிருக்கையில், பணவீக்கம் அதிகரித்துக்கொண்டிருக்கையில், எண்ணைத் துறை வருவாய் குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துக்கொண்டிருக்கும் வேளையில், நகர்ப்புற மேட்டுக்குடியினரிடம் ‘’வளர்ச்சி’’யை தக்கவைக்கும் வகையில் பொருளாதாரத்தை ‘’மேலாண்மை’’ செய்யும் ஆற்றல் தனக்கிருப்பதாக (அப்படியொரு பிம்பத்தை) உருவாக்குவதில் இருக்கிறது. கிராமப்புறங்களைப் பொருத்தவரை, வளர்ச்சி விஷயத்தில் பிராந்திய சார்பானது மாற்றத்திற்கான அரசியல் கோரிக்கை உள்ளீடற்றதாக்கப்பட்டுவிட்டது. நீண்ட காலமாக புறக்கணிக்கப்பட்டுவந்த வடக்கு பிராந்தியத்தில் எழுந்துவரும் பரப்பிய கோரிக்கைகள், அரசு சாரா அமைப்புகளின் வழியிலான குறுக்கீடுகளை மேலும் அதிகமாக, கொண்டுவருவதற்கானவை, ஆட்சியிலுள்ள அரசாங்கங்களுக்கான லிட்மஸ் சோதனையாகும். இரண்டு கட்சிகளுமே சாதாரணத் தொண்டர்களையே பெரிதும் நம்பியிருக்கின்றன. இவர்கள் பெரும்பாலும் குறைந்த கூலி பெறும் தொழிலாளர்கள். இவர்களே கட்சித் தலைவர்களுக்கான கீழ்மட்ட வேலைகள், பிரச்சாரம், முழக்கங்கள் எழுப்புவது ஆகியவற்றை செய்கின்றனர். தங்களது வாக்குகள் மற்றும் தாங்கள் பெற்றுத்தரும் வாக்குகளுக்கு கைமாறாக இவர்கள் எதிர்பார்ப்பது வேலைகளை.

ஆனால் ஓர் எல்லைக்குட்பட்ட பொருளாதார வளங்களைக் கொண்ட அரசியல் அமைப்பில் புரவலர்–-உதவி பெறுவர் வகைப்பட்ட அரசியல் வேகமாக மாறிக்கொண்டேயிருக்கக்கூடியது. அரசாங்க பட்ஜெட்டில் பாதிக்கும் மேல் பிற நாடுகளிலிருந்தும், பல்வேறு சர்வதேச அமைப்புகளிடமிருந்தும் கிடைக்கும் உதவிகளை சார்ந்திருக்கும் நிலையில், அரசு செலவினத்தில் ஐந்தில் நான்கு பகுதி அரசாங்க ஊழியர்களின் ஊதியத்திற்கு போகிறது என்ற நிலையில்  எந்தவொரு அரசாங்கமும் புதிய வேலைவாய்ப்புகளை எப்படி உருவாக்க முடியும்? இத்தகைய பிரச்னைகளை எதிர்கொண்டுள்ள ஆப்பிரிக்க நாடு கானா மட்டுமேயல்ல. பல ஆப்பிரிக்க நாடுகளில் நவீன தாராளவாதமும், உலகமயமாக்கலும் ஆழமாகிவருவதானது ஜனநாயகத்தை பலவீனப்படுத்துகிறது. தேசத்தின் உறுதிப்பாடு என்ற பெயரில் தனது சமூகப் பொறுப்பை அரசு தட்டிக்கழிப்பதை மறைக்கிறது. இன்றளவிலும் ஆப்பிரிக்காவின் வலுவான மக்களாட்சிகளுள் ஒன்று என்ற பெருமை கானாவிற்கு இருக்கிறது. ஆனால், ‘’படிநிலை’’ நிறபேத உணர்வுகளை தவறாக பயன்படுத்தி ஆசியர்கள்/இந்தியர்களின் புலம்பெயர் அரசியல் விஷயத்தில் தோல்விக்கான அரசின் பொறுப்பை கடப்பது மக்களாட்சியின் நீடிப்புத்திறனுக்கு அழகல்ல. பொருளாதார ஒருங்கிணைப்பு ரீதியில் கட்டுப்படுத்துவதற்கான கருவி அரசிடம் இல்லையெனில் நிறுவனங்களின் பலவீனங்கள்/திறனின்மைகள் மக்களாட்சியை நிர்ணயிப்பதாக இருக்கும்.

Comments

(-) Hide

EPW looks forward to your comments. Please note that comments are moderated as per our comments policy. They may take some time to appear. A comment, if suitable, may be selected for publication in the Letters pages of EPW.

Back to Top