ISSN (Print) - 0012-9976 | ISSN (Online) - 2349-8846
Reader Mode

சுவாசத்தின் விலை

காற்று மாசுபாடானது பொதுமக்களின் ஆரோக்கியத்திற்கு ஆபத்து என்பதால் இதற்கு திறனான நீடித்த தீர்வுகள் காணப்பட வேண்டும்.

The translations of EPW Editorials have been made possible by a generous grant from the H T Parekh Foundation, Mumbai. The translations of English-language Editorials into other languages spoken in India is an attempt to engage with a wider, more diverse audience. In case of any discrepancy in the translation, the English-language original will prevail.

 

லேன்செட் பிளானட்டரி ஹெல்த் வெளியிட்டுள்ள ஆராய்ச்சி முடிவுகளின்படி காற்று மாசுபாட்டின் காரணமாக மிக அதிகமான இந்தியர்கள் உயிரிழக்கிறார்கள், நோய்வாய்ப்படுகிறார்கள் என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இந்த முடிவுகள் மிகுந்த கவலையளிப்பவை. காற்று மாசுபாடு அளவானது இந்தியாவில் உலக அளவில் ஒப்பிடுகையில் மிக அதிகம். இதனால் பொதுமக்களின் ஆரோக்கியத்திற்கு பெரும் ஆபத்து என்ற நிலையில் இதை குறைப்பதற்கான நடவடிக்கைகளில் கவனம் குவிப்பது அவசியமாகிறது. ஆரோக்கியத்திற்கும், நீண்ட ஆயுளுக்கும் காற்று மாசுபாட்டினால் ஏற்படும் ஆபத்தின் அளவு பற்றி இது வரை இந்தியாவில் முழுமையாக உணரப்படவில்லை.

     இந்தியாவிலுள்ள பல நிறுவனங்கள் இணைந்து நடத்திய இந்த ஆய்வு காற்று மாசுபாட்டினால் ஏற்படும் பாதிப்பை மதிப்பிட்டுள்ளது. 2017ல் இந்தியாவின் பல மாநிலங்களில் நடந்த இந்த ஆய்வானது காற்று மாசுபாட்டினால் ஏற்படும் மரணங்கள், நோய்கள் மற்றும் சராசரி ஆயுள் என மூன்று தளங்களில் நடந்தது. ஒரு மனிதர் சராசரியாக இந்தியாவில் எதிர்கொள்ளும் சுற்றுச்சூழல் துகள்மப் பொருள், பி.எம்.2.5, அளவானது 2017ல் 89.9 µg/m3 இருப்பதாக கண்டறியப்பட்டது. உலகில் ஒரு சில நாடுகளிலேயே இந்த அளவிற்கு அதிகமாக இருக்கிறது. இந்தியாவிலுள்ள எந்த மாநிலத்தாலும் உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ள சுற்றுச்சூழல் துகள்மப் பொருள் அளவான 10 µg/m3 இருக்க வேண்டுமென்பதை பின்பற்ற முடியவில்லை. சுமார் 77% மக்கள் தேசிய சுற்றுச்சூழல் காற்று தரக் கட்டுப்பாடு பரிந்துரைத்துள்ள 40µg/m3 க்கும் அதிகமான அளவிற்கு சுவாசிக்கிறார்கள்.

      இந்தியாவில் புகையிலை பயன்பாட்டால் ஏற்படும் நோய்கள்,  சுவாச நோய்கள், இதய நோய், சர்க்கரை நோய் ஆகிவற்றால் ஏற்படும் ஆரோக்கிய கேடுகளை விட காற்று மாசுபாட்டால் ஏற்படும் நோய்க்கேடுகள் அதிகம். 2017ல் 12.4 லட்சம் பேர் மரணத்திற்கு காற்று மாசுபாடே காரணம் என இந்த ஆய்வு மதிப்பிட்டுள்ளது. இவர்களில் 51.1% பேர் 70 வயதிற்கு கீழிருப்பவர்கள். காற்று மாசுபாட்டின் அளவு இருக்க வேண்டிய குறைந்தபட்ச அளவிற்கும் கீழாக இது இருக்குமென்றால் சராசரி ஆயுள் 1.7 ஆண்டுகள் அதிகரித்திருக்கும். ஆனால் சுற்றுச்சூழல் துகள்மப் பொருள் மாசுபாட்டில் மாநிலங்களுக்கிடையே பெருத்த வேறுபாடுகள் இருக்கின்றன, இதனால் அவற்றால் ஏற்படும் பாதிப்புகளிலும் வேறுபாடுகள் இருக்கின்றன. ஆரோக்கியகேடுகள், அவற்றால் முன்கூட்டியே நிகழும் மரணங்கள் ஆகியவற்றை பொறுத்தவரை உத்திர பிரதேசம், ஹரியானா, டெல்லி, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் சுற்றுச்சூழல் துகள்மப் பொருள் மாசுபாடு அதிகமாக உள்ளது. சட்டீஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், அசாம் ஆகியவற்றில் வீடுகளில் நடக்கும் சமையல் போன்றவற்றால் ஏற்படும் மாசுபாடு உச்சபட்ச அளவில் உள்ளது. ஆக, காற்று மாசுபாடு என்பது நகர்ப்புறங்கள் மற்றும் மாநகரங்களில் மட்டும் இருக்கிற விஷயமல்ல, அது கிராமப்புறங்களையும் பாதித்திருக்கிறது. திட எரிபொருட்களை பயன்படுத்துவதால் கிராமப்புறங்களில் இருப்பவர்கள் அவர்களது விகிதாச்சாரத்திற்கும் அதிமாகவே பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

     பொருளாதாரம் வளர வளர தொழிற்சாலைகள், வாகனங்கள், அறுவடைக்குப் பின்னர் வயலில் எஞ்சியிருக்கும் பயிர்களின் வேர்களை எரிப்பது, கட்டுமானப் பணிகள் ஆகியவற்றால் ஏற்படும் மாசு தொடர்ந்து அதிகரிக்கும். டெல்லியில் ஒவ்வொரு ஆண்டும், குறிப்பாக குளிர் காலங்களில் தொடர்ந்து அதிகரிக்கும் நச்சு புகைமூட்டத்தின் காரணமாக டெல்லி அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியிருக்கிறது. மாசுபடுதலை புறக்கணிக்க முடியாத அளவிற்கு அதனால் ஏற்படும் பொருளாதார செலவினம் அதிகமாக இருக்கிறது. காற்று மாசுபடுதலின் காரணமாக ஏற்படும் ஆரோக்கியக்கேடுகள் பெரும் பொருளாதார செலவினத்தை ஏற்படுத்துகின்றன. உலக வங்கியும் வாஷிங்டன் பல்கலைக்கழகமும் நடத்தி 2016ல் வெளியிட்ட ஆய்வு, இந்தியாவில் காற்று மாசுபாட்டால் 2013ல் ஏற்பட்ட இழப்பின் அளவு 505.1 பில்லியன் டாலர் (2011ஆம் ஆண்டின் வாங்கும் திறன் சமநிலையின் அடிப்படையில்) என மதிப்பிட்டுள்ளது. உலக அளவில் காற்று மாசுபாட்டால் உழைப்புச் சக்தி வீணாகும் அளவு பற்றி 2013ல் ஆய்வு நத்தப்பட்டது. இது மிக அதிகமாக இருந்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்தியாவில் இது 55.39 பில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது. நல்வாழ்வு இழப்புகள், உழைப்புச் சக்தி வீணானது என ஒட்டுமொத்தமாக 2013ல் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி இழப்பின் அளவு 8.5%க்கும் அதிகம். ஆக, காற்று மாசுபாடானது பொருளாதார வளர்ச்சியை பெரிதும் பலவீனப்படுத்துகிறது.

     ஆனால் மத்திய அரசாங்கம் தொடர்ந்து நிலைமை மோசமடைந்த பிறகே சமீபத்தில்தான் காற்று மாசுபாட்டின் ஆபத்துகளை உணர்ந்தது. தேசிய தூய காற்று திட்டம் குறித்த வரைவு ஒன்றை உருவாக்கியதன் மூலம் காற்று மாசுபாடு ஒரு தேசியப் பிரச்னை என்பதை அங்கீகரித்தது. இதன் மூலம் இந்தியா முழுவதிலும் காற்று மாசுபாட்டின் அளவை கண்காணிப்பதற்கான நிறுவனரீதியான ஆற்றலை உருவாக்கவும், பலப்படுத்தவும், காற்று மாசுபாட்டால் ஏற்படும் சுகாதார பாதிப்புகள் குறித்து இந்தியாவிலேயே ஆய்வுகள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் இந்தத் திட்டத்தில் மாசுபடுதலை குறைப்பதற்கான இலக்குகள் இல்லை என்பதாலும், குறிப்பிட்ட காலக்கெடுவில் இவை கடைபிடிக்கப்பட வேண்டும் என்பது உறுதி செய்யப்படாததாலும் சுற்றுச்சூழியலாளர்களால் இது விமர்சிக்கப்பட்டிருக்கிறது. 2017 டிசம்பருக்குள் மாசு உமிழ்வு செந்தரத்தை கடைபிடிக்க வேண்டிய நிலக்கரி அனல் மின் உற்பத்தி நிலையங்களுக்கு அரசாங்கம் கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ள நிலையில் இந்த விமர்சனம் முக்கியமானது. சட்டப்படி கடைபிடிக்க வேண்டிய மாசுக் கட்டுப்பாடுகளிலிருந்து புதிய மின் உற்பத்தி நிலையங்களுக்கு விதிவிலக்கு வழங்கப்பட்டுள்ளதுடன் பெரிய கட்டுமான திட்டங்களுக்கு செய்யப்பட வேண்டிய சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடுகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு விதிவிலக்குகள் அளிக்கப்பட்டிருப்பது மோசமடைந்துவரும் காற்று மாசுபாடு பிரச்னையில் அரசாங்கத்திற்கு இருக்கும் அக்கறை மீது சந்தேகங்களை எழுப்புகிறது. காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்துவதற்கு மாநிலங்களுக்கிடையே ஒருங்கிணைப்பும், அரசியல் மற்றும் பொதுமக்களின் உறுதியும், அத்துடன் கள அளவில் நடவடிக்கையும் தேவை.

Comments

(-) Hide

EPW looks forward to your comments. Please note that comments are moderated as per our comments policy. They may take some time to appear. A comment, if suitable, may be selected for publication in the Letters pages of EPW.

Back to Top