ISSN (Print) - 0012-9976 | ISSN (Online) - 2349-8846

’’கண்ணியத்திற்குரிய’’ தூரத்தை கடைபிடித்தல்

ஜம்மு-காஷ்மீரின் உள்ளூர் அரசியலில் குறுக்கீடுகள் செய்வது மையநீரோட்ட அரசியலுக்கான வெளியை அரித்துவிடுவதுடன் பிரிவினைவாதத்திற்கு உந்துதலைத் தரும்.

The translations of EPW Editorials have been made possible by a generous grant from the H T Parekh Foundation, Mumbai. The translations of English-language Editorials into other languages spoken in India is an attempt to engage with a wider, more diverse audience. In case of any discrepancy in the translation, the English-language original will prevail.

 

ரேகா சவுத்ரி எழுதுகிறார்:

மக்கள் ஜனநாயக கட்சி (பிடிபி) மற்றும் பாரதீய ஜனதா கட்சியின் (பாஜக) கூட்டணி ஆட்சி கவிழ்ந்து ஐந்து மாதங்களான பிறகு சட்டமன்றத்தை கலைப்பது என்ற ஜம்மு-காஷ்மீர் ஆளுனரின் முடிவு காஷ்மீரின் அரசியல் வரலாற்றில் மற்றுமொரு முக்கியமான ‘’அரசியல் தருணம்’’. மாநிலத்தின் பல்வேறு அரசியல் சக்திகள் மீது இது ஏற்படுத்தும் உடனடி விளைவால் மட்டுமல்ல ஏற்கனவே நிலையற்றதாக இருக்கும் ஜனநாயக வெளி மற்றும் மத்திய அரசாங்கம் பற்றி மக்களின் பார்வைகள் மீதான விளைவாலும் இது மிகவும் முக்கியமானதாகிறது.

ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாடு கட்சி மற்றும் காங்கிரசின் ஆதரவுடன் ஆட்சியமைக்க பிடிபியின் தலைவர் மெகபூபா முப்தி உரிமை கோரியவுடன் சட்டமன்றத்தை கலைக்கும் முடிவு எடுக்கப்பட்டதால் அது சர்ச்சைக்குரியதானது. இதற்கிடையில் ஜம்மு-காஷ்மீர் மக்கள் மாநாடு கட்சியின் தலைவர் சஜத் கனி லோனும் பாஜகவின் ஆதரவுடன் ஆட்சியமைக்க உரிமை கோரினார்.

பிடிபி-பாஜக கூட்டணி ஆட்சி கவிழ்ந்த பிறகு சட்டமன்றமானது ‘’தற்காலிகமாக முடக்கப்பட்டிருந்த’’ நிலையில் தேசிய மாநாடு கட்சியும் பிடிபியும் சட்டமன்றத்தை கலைக்க வேண்டுமென தீவிரமான கோரின. மக்கள் மாநாடு கட்சியின் ஆதரவுடனும் காங்கிரஸ், தேசிய மாநாடு, பிடிபி ஆகிய கட்சிகளிலிருந்து வெளியேறிவரக்கூடியவர்களின் ஆதரவுடனும் பாஜக ஆட்சியமைக்க திட்டமிடுகிறது என்ற சந்தேகத்தின் அடிப்படையிலேயே சட்டமன்ற கலைப்பு கோரிக்கை வைக்கப்பட்டது. மூன்றாவது அணி அமைக்கும் யோசனையை லோன் முன்வைத்தபோது பிடிபியின் சில முன்னணி உறுப்பினர்கள் அதில் சேர தங்கள் விருப்பத்தை வெளிப்படையாக தெரிவித்தனர்.

தேசிய மாநாடு, பிடிபி, காங்கிரஸ் ஆகியவற்றின் மாபெரும் கூட்டணி என்பதே மூன்றாவது அணி-பாஜக தலைமையிலான அரசாங்கம் அமையும் வாய்ப்பை தடுப்பதற்கானதுதான். அதனால்தான் கட்சி சார்புடன் நடந்துகொண்டார் ஆளுனர் என்று விமர்சித்தாலும் சட்டமன்ற கலைப்பு என்பதில் பிடிபிக்கும் தேசிய மாநாடு கட்சிக்கும் திருப்தியே. தங்களை அச்சுறுத்துக்கொண்டிருந்த நிலையின்மையை இவ்வாறு இந்தக் கட்சிகள் வெற்றிகரமாக தடுத்துவிட்டன.  கட்சி தொடங்கப்பட்டு இருபது ஆண்டுகள் கூட நிறைவடையாத பிடிபி விஷயத்தில் இந்த ஆபத்து மிகவும் உண்மை. ஏனெனில் இந்தக் கட்சி பிளவுற்று காணாமல்போகவிருந்தது. இந்த அளவிற்கு நிலைமை மோசமில்லை என்றாலும் தேசிய மாநாடு கட்சிக்கும் இந்த ஆபத்து இருந்தது. பிடிபியின் எழுச்சிக்குப் பிறகு தனது ஆதிக்க நிலையை தேசிய மாநாடு இழந்துவிட்டதுடன், 2014 சட்டமன்ற தேர்தலுக்குப் பின்னர் காஷ்மீரின் ஆகப் பெரிய கட்சி என்ற தகுதியைக்கூட இழந்து மக்கள் மாநாடு கட்சியின் தலைமையிலான மூன்றாவது அணியால் மேலும் ஓரம்கட்டப்படும் ஆபத்தை எதிர்நோக்கியிருந்தது.

     குறுகிய காலத்திற்குரிய பார்வையில் சட்டமன்றம் கலைக்கப்பட்ட தானது பிடிபி எதிர்நோக்கியிருந்த நெருக்கடியை தவிர்த்துவிட்டதுடன், தனது முதன்மையான எதிரியான பிடிபிக்கு ஆதரவளிக்க முன்வந்ததன் மூலம் மட்டுமல்லாமல் பாஜகவை ஆட்சிக்கு வரவிடாது தடுத்து ‘’காஷ்மீர் நலனுக்கு’’ உதவியதன் மூலமும் தேசிய மாநாடு கட்சி சில நன்மைகளை பெற்றிருக்கிறது. ஆனால் இறுதியாக பார்க்கையில் காஷ்மீரின் ஜனநாயக அரசியலில் இந்த அத்தியாயம் ஒரு பெரிய எதிர்மறையான பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த பதினைந்து ஆண்டுகளில் அரசியலானது போதுமான அளவிற்கு நம்பகத்தன்மையையும் ஆழத்தையும் பெற்றிருந்தது என்பதை அழுத்தமாக குறிப்பிட்டாக வேண்டும். பிரிவினைவாதம் தொடர்ந்து நீடித்திருக்கும்போதிலும் ஜனநாயக அரசியலில் மக்களின் நம்பிக்கையும் அதிகரித்தது. 1989ல் பிரிவினைவாதமும் ஆயுதப் போராட்டமும் எழுந்த நிலையில் மையநீரோட்ட அரசியல் முற்றிலும் நிலைகுலைந்துபோனதை கருத்தில் கொண்டால் இது சாதாரண விஷயமில்லை. மத்தியல் ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் அதீதமான அளவிற்கு மாநிலத்தின் அதிகார அரசியலில் மூக்கை நுழைத்ததன் காரணமாகவே ஜம்மு-காஷ்மீர் இந்த நிலைக்கு தள்ளப்பட்டது. மாநிலத்தின் அதிகார அரசியலை கட்டுப்படுத்தும் தனது நோக்கங்களுக்காக 1984ல் தேசிய மாநாடு கட்சியில் பிளவை ஏற்படுத்தி பரூக் அப்துல்லாவை ஆட்சியிலிருந்து அகற்றி  ஜி.எம். ஷா தலைமையினால ஆட்சியை காங்கிரஸ் அமைத்தது. மக்களிடம் எந்த வரவேற்பையும் பெறாத 1986ஆம் ஆண்டு தேசிய மாநாடு-காங்கிரசின் கூட்டணி மற்றும் பல தில்லுமுல்லுகளுடன் நடந்ததாக பார்க்கப்படும் 1987 சட்டமன்ற தேர்தலில் ஏற்பட்ட படுதோல்வி ஆகியவை காஷ்மீர் மக்களுக்கு ஜனநாயக அரசியலில் இருந்த நம்பிக்கையை முற்றிலுமாக சிதைத்துவிட்டது. அதிகார அரசியலில் காஷ்மீரிகளுக்கு இருந்த நம்பிக்கையை மீட்க அடல் பிஹாரி வாஜ்பாய் ஏராளமான முயற்சிகளையும் அரசியல் முதலீட்டையும் செய்ய வேண்டியிருந்தது. 2002ல் ‘’சுதந்திரமான, நியாயமான தேர்தல்’’ நடத்த உறுதியளித்ததுடன் மாநிலத்தின் அதிகார அரசியலிலிருந்து மரியாதைக்குரிய தூரத்தையும் வாஜ்பாய் கடைபிடித்தார். இது நீண்ட கால விளைவுகளை ஏற்படுத்தியது, ஜனநாயக வெளியை விரிவுபடுத்தியதுடன், அதை துடிப்பு மிக்கதாகவும் ஆக்கியது.

அந்தப் பார்வையிலிருந்து பார்க்கையில் இப்போது நடப்பது காஷ்மீரின் எதிர்கால ஜனநாயகத்திற்கு நல்லதல்ல. உள்ளூர் கட்சிகளை உடைத்து  ஆட்சியமைக்க பாஜக செய்யும் முயற்சிகளானது ‘’சூழ்ச்சிகள்’’ பற்றிய பேச்சுகளை மீண்டும் உருவாக்கியிருப்பதுடன் அரசியல் விமர்சகர்களை 1984-87ல் காங்கிரஸ் செய்த சூழ்ச்சிகளுக்கு இணையானதாக இதை பார்க்க வைத்திருக்கிறது. காஷ்மீரில் வன்முறை போராட்டமும் பிரிவினைவாதமும் அதிகரித்துவரும் நிலையில் இது நல்ல செய்தியல்ல. அரசியல் சூழல் நிலையற்றதாக இருக்கும் நிலையில் உள்ளூர் அரசியலில் செய்யப்படும் எந்த குறுக்கீடும் மையநீரோட்ட அரசியலுக்கான வெளியை அரிப்பதுடன் பிரிவினைவாத அரசியலுக்கு உந்துதலையும் தரும். இப்போதிருக்கும் நிலையில் ஜனநாயக அரசியல் வலுப்படுத்தப்பட வேண்டும், ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியின் நலன்களுக்கு உதவும் வகையில் அரசியல் சூழ்ச்சிகள் செய்வது கூடாது.

ரேகா சவுத்ரி (rekchowdhary@gmail.com), ஆராய்ச்சியாளர், இண்டியன் இன்ஸ்டியூட் ஆஃப் அட்வான்ஸ்டு ஸ்டடி, ராஷ்டிரபதி நிவாஸ், சிம்லா. ஜம்மு அண்ட் காஷ்மீர்: பாலிடிக்ஸ் ஆஃப் ஐடென்டிட்டி அண்ட் செபரேட்டிஸம் (2016) என்ற நூலின் ஆசிரியர்.   

Back to Top