ISSN (Print) - 0012-9976 | ISSN (Online) - 2349-8846

ஒற்றுமை எனும் உள்ளடக்கம் இல்லாத நெறி

பாரதீய ஜனதா கட்சியின் ‘’ஒற்றுமைக்கான சிலை’’ திட்டம் அரசின் கார்ப்போரேட் ஆதரவை மீண்டும் உறுதிபடுத்துகிறது.

The translations of EPW Editorials have been made possible by a generous grant from the H T Parekh Foundation, Mumbai. The translations of English-language Editorials into other languages spoken in India is an attempt to engage with a wider, more diverse audience. In case of any discrepancy in the translation, the English-language original will prevail.

 

பிரதமர் நரேந்திர மோடியின் பேரார்வத்தைக் காட்டும் ‘’ஒற்றுமைக்கான சிலை’’ திட்டம் உலக அரசியல் அரங்கில் இந்தியாவிற்கு கூச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ‘’600 அடி படைப்பு உலகின் தனது இடம் குறித்த இந்தியாவின் விருப்பத்தை காட்டும் அதே அளவிற்கு அதன் தலைவரின் அரசியல் தன்முனைப்பையும் காட்டுகிறது’’ என வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ் கூறியிருக்கிறது. இவ்வளவு பெரும் தொகையை சிலைக்காக செலவிடுவது அந் நாட்டிற்கு வளர்ச்சி உதவி ஏதும் தேவையில்லை என்பதைக் காட்டுகிறது என பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர் பீட்டர் போன் குறிப்பிட்டுள்ளார். இந்த பிரம்மாண்டமான திட்டத்திற்காக 43 கோடி பவுண்டுகள் இந்தியா செலவிட்ட அதே நேரத்தில் தனது சமூகத் துறைகளுக்கான நிதியாக 110 கோடி பவுண்டுகளை பிரிட்டனிடமிருந்து உதவியாக பெற்றிருக்கிறது என்பதை நினைவில் வையுங்கள். இங்கு விழா ‘’அதிகாரப்பூர்வமானதாக’’ இருக்கையில் சாதாரண மக்கள், குறிப்பாக இடம்பெயர்க்கப்பட்டவர்கள் வேதனையடைந்திருக்கிறார்கள். ஆனாலும் மோடியைப் பொறுத்தவரை இந்த சிலையானது ‘’இந்தியாவின் இருப்பை கேள்விக்குட்படுத்துபவர்களுக்கான பதில்’’, ‘’நமது பொறியியல், தொழிநுட்ப சக்தியின்’’ வடிவம், எல்லாவற்றிற்கும் மேலாக ‘’நாட்டிற்கு ஓர் அன்பளிப்பு’’. இந்த நாட்டிற்கு தாங்க முடியாத செலவினம்.

உண்மையான செலவு என்ன என்பது யாருக்குத் தெரியும்? பல ஆவணங்களை ஒப்பிட்டு பார்க்கிறபோது வெளியே சொல்லப்பட்ட செலவுகளை விட ஆவணத்தில் உள்ளது மிக அதிகம். ஊடகங்களில் தொடர்ந்து குறிப்பிடப்படும்  மொத்த செலவான தொகை 2980 கோடி என்பது மாநில அரசாங்கத்தின் வரவு-செலவு ஆவணங்களில் குறிப்பிட்டுள்ளபடி மாநில அரசாங்கத்தால் மட்டும் செலவிடப்பட்ட தொகை. 2014-15க்கும் 201718க்கும் இடையில் மத்திய பட்ஜெட் 309 கோடியை தனியாக ஒதுக்கியிருந்தது. மேலும், மத்திய, மாநில பொதுத் துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், தனிநபர்கள் 550 கோடியை நன்கொடை அளித்திருக்கிறார்கள் என இந்தியா டுடேவிற்கு அளித்த பேட்டியில் (9 நவம்பர் 2018) சர்தார் சரோவர் நர்மதா நிகாம் லிமிடெட்டின் இணை இயக்குனர் சந்தீப் குமார் கூறியுள்ளார். இந்த மூன்றையும் கூட்டினால் தாளில் குறிப்பிடப்பட்டுள்ளபடி மொத்த செலவு 3839 கோடி, அதாவது வெளியில் சொல்லப்பட்ட தொகையை விட 1.3 மடங்கு அதிகம். பொதுத் துறை நிறுவனங்களின் கார்ப்போரேட் சமூக பொறுப்பு என்ற பெயரில் செலவிடப்பட்ட 146.83 கோடி கவலைக்குரிய மற்றொரு அம்சம். தேசிய பாரம்பரிய சொத்துக்கள், கலை, கலாச்சாரம் ஆகியவற்றிற்காக கம்பெனிகள் சட்டம் 2013ல் 7ஆம் அட்டவணையின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ள கார்ப்போரேட் சமூகப் பொறுப்பிற்கான நிதியை வீணடித்திருப்பதாக இந்த செலவினத்தை இந்தியாவின் தலைமைத் தணிக்கையாளர் தகுதியற்றதென நிராகரித்து விட்டார்.

வல்லபாய் படேலை தங்களுடையவராக ஆக்கிக்கொள்ள பாரதீய ஜனதா கட்சி (பாஜக) மற்றும் மோடி செய்யும் துணிவான முயற்சிகளுக்கு அடியில் இருக்கும் பல நோக்கங்களுள், தங்களது பகட்டிற்கு அங்கீகாரம் பெற ‘’பாரம்பரிய சின்னம்’’ என்ற முத்திரையை பெறும் ரகசிய நோக்கமும் இருக்கிறதா? ஆனால் இத்தகைய திசைதிருப்பல்கள் கார்ப்போரேட் சமூகப் பொறுப்பு நிதியை பயனற்ற நடவடிக்கைகளுக்கு செலவிட்டது போன்ற ஆட்சியின் முக்கியமான தோல்விகளை பொதுமக்களின் மனங்களிலிருந்து அகற்றிவிட முடியாது. கார்ப்போரேட் சமூகப் பொறுப்பு செலவு என்பது இந்தியாவில் வளரவேயில்லை என்றாலும் இதில் 60% மருத்துவம், வறுமை, தன்ணீர், தூய்மை, கல்வி, வாழ்வாதாரங்கள் போன்ற சமூக சார்ந்த விஷயங்களுக்காகவே செலவிடப்படுகின்றன. சமூகத் துறை வளர்ச்சி விஷயங்களில் அரசின் பங்கு சுருங்கிவரும் பின்னணியில் இந்தப் பணத்தை வேறு செயல்களுக்கு பயன்படுத்துவதால் பல வாய்ப்புகள் இழக்கப்படுகின்றன. குஜராத்தில் மட்டும் 2014-15லிருந்து நான்கே ஆண்டுகளில் மொத்த வரவு-செலவில் வளர்ச்சிக்காக செலவிடுவது என்பது 70%த்திலிருந்து 60%ஆக குறைந்துவிட்டது. அதே நேரத்தில் வளர்ச்சி அல்லாத செலவினங்கள் 30%லிருந்து 40%ஆக அதிகரித்துவிட்டது. இந்தப் பின்னணியில், பாஜக, மோடி, அல்லது பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் கார்ப்போரேட் கம்பெனிகள் இந்தத் திட்டத்தில் தங்களது பங்கை விளம்பரப்படுத்திக்கொண்டே வேலைவாய்ப்பை பற்றி எவ்வாறு பேச முடிகிறது? வேலைவாய்ப்பின்மையை தீர்ப்பதற்கான அரசியல் உறுதியின்மை பொருளாதாரத்தை பொதுவாக பீடித்திருக்கும் நிலையில், பல ஆண்டுகளாக நிரப்பப்படாது அரசாங்கத்தின் புழக்கடையில் தேங்கியிருக்கும் காலியிடங்களை இத்தகைய அற்பமான பொருளாதார தர்க்கத்தினால் நிரப்ப முடியாது.

இத்தகைய பேச்சுகளின் உள்ளீடற்ற தன்மையை புறக்கணிப்பது கடினம். விளிம்புநிலை மக்களுக்காக அரசின் புரிந்துணர்வு பற்றிய கற்பனையை ஒதுக்கித்தள்ளுவது அதை விட கடினம். பழங்குடி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் அமைக்க வேகமாக நிதி செலவிடப்பட்டது, ஆனால் திட்டத்தால் இடப்பெயர்வுக்கு ஆளான பழங்குடி கிராமங்களுக்கான சமூக ஆதரவு என்று வருகையில் எல்லா முயற்சிகளும் காணாது போகின்றன. பொருத்தமான சமூக ஆதரவு இல்லாவிடில் மிகவும் போதுமான அளவிற்கு இழப்பீடு வழங்கினாலும் அது காலப்போக்கில் பலனற்றதாகிவிடுகிறது என்பது சர்தார் சரோவர் திட்டத்தில் இடப்பெயர்வுக்கு ஆளான பழங்குடியினரின் அனுபவங்கள் நன்கு காட்டுகின்றன. சமூக, அரசியல், மற்றும் பொருளாதார மூலதனம் இல்லாமல், பல அரசாங்க திட்டங்களை பெறும் வாய்ப்புகள் இல்லாமல் இந்தப் பழங்குடி சமூகங்கள் சமூக-பொருளாதார நெருக்கடிக்கு பலியாகிறார்கள். இத்தகைய மறைமுக செலவினங்களின் இழப்புகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுமெனில் இத் திட்டத்திற்கு தரப்பட்ட விலை சிலைக்கான விலையை விட மிக அதிகம்.

ஒற்றுமை என்பது அதன் நெறிசார்ந்த பொருளில் மக்கள் தங்களது சமூக மதிப்பை உணர மிகவும் அவசியமானது. ஆனால் ‘’ஒற்றுமை’’ என்ற வார்த்தையில் பொருண்மையான நெறியை உள்ளடக்கமாக வைக்க பாஜக விரும்புகிறதா? சிலைக்கு ‘’ஒற்றுமைக்கான சிலை’’ என்று பெயரிடுவது இன்றைய அரசாங்கத்தின் பிளவுவாத அரசியலை மறைப்பதற்கான அரசியல் வார்த்தை ஜாலம். கருப்புப் பணத்தின் மீதான தாக்குதல், கார்ப்போரேட் இன்சால்வென்சி போன்ற ஆக்ரோஷத்துடன் நடைமுறைப்படுத்தப்பட்ட பொருளாதாரக் கொள்கைகளின் சமீப கால அனுபவங்கள் காட்டுவது என்னவெனில் அரசின் உத்திகள் சாதாரண மக்களின் மீது சுமைகளை ஏற்றிவிட்டு கார்ப்போரேட்டுகளுக்கு ஆதரவாக இருக்கிறது என்பதையே.

சிலைக்கான திட்டத்தில் கூட அதை வெண்கலத்தில் வேய்வதற்கு சீனாவிற்கு வெளிக்கொள்முதல் தரப்பட்டதில் அரசாங்கத்தின் தலையாய திட்டமான ‘’இந்தியாவில் செய்வோம்’’ என்பதை பின்பற்ற வேண்டுமென்று சிலை திட்டத்தில் ஈடுபட்டிருந்த பொறியியல் நிறுவனத்திற்கு எந்த வழிகாட்டுதல்களும் தரப்படவில்லை. ஆனால் சர்தார் சரோவர் நீர்ப்பிடிப்பு பகுதியில் உள்ள விவசாயிகள் இந்த பகட்டான அரசியலுக்கு அடிபணிந்து 90,389 கிமீ நீள கால்வாய் திட்டத்தில் 20%யும் 17.92 லட்சம் ஹெக்டேருக்கான பாசன வசதியில் 75%த்தையும் இழக்க வேண்டியதாயிற்று. படேலின் இலட்சியங்களுக்கு எதிரான இத்தகைய மதிப்பின்மையை காட்டிய பிறகு அவரது மரபை தவறாக அபகரிக்க செய்யும் ஆரவாரமான முயற்சி கட்சியின் நலன்களுக்கானது மட்டுமே, நாட்டின் நலனுக்கு ஆபத்தான பின்விளைவுகளைக் கொண்டது.

Comments

(-) Hide

EPW looks forward to your comments. Please note that comments are moderated as per our comments policy. They may take some time to appear. A comment, if suitable, may be selected for publication in the Letters pages of EPW.

Back to Top