ISSN (Print) - 0012-9976 | ISSN (Online) - 2349-8846

தனது முக்கியத்துவம் பற்றிய தவறான நினைப்பு

யார் முக்கியம் என்பதில் அரசாங்கத்திற்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையிலான மோதலில் பொருளாதாரம் பற்றிய எச்சரிக்கையுணர்வு காற்றில் பறக்கவிடப்பட்டுவிட்டது.

The translations of EPW Editorials have been made possible by a generous grant from the H T Parekh Foundation, Mumbai. The translations of English-language Editorials into other languages spoken in India is an attempt to engage with a wider, more diverse audience. In case of any discrepancy in the translation, the English-language original will prevail.

 

ரிசர்வ் வங்கிக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான சமீபத்திய மோதலானது பிற்போக்கான பெரும் கொள்கைகளுக்கான பண்டோரா பெட்டியை திறந்துவிட்டிருப்பது நிதி அமைப்பு வேலை செய்யும் விதத்திற்கு மட்டுமல்ல பொதுவாக நாட்டின் பொருளாதாரத்திற்கே பின்னடைவாகும். ரிசர்வ் வங்கியின் துணை ஆளுனர் விரால் ஆச்சார்யா ஆற்றிய சர்ச்சைக்கிடமான உரையை ஆராய்கையில், நாட்டின் பொருளாதாரத்தை பற்றி ரிசர்வ் வங்கி வல்லுனர்கள் எடுக்கும் நீண்ட காலப் பார்வை, அரசின் அதிகாரத்திலிருந்து சுதந்திரம் என்ற வகையில் வங்கியின் ரிசர்வ் தன்னாட்சி பற்றிய பார்வை ஆகிய இரண்டுமே பலவீனமான அடிப்படைகளில் அமைந்தவை. ஒன்று, குறுகிய கால பணவீக்கப் பிரச்னைகள் குறித்து ரிசர்வ் வங்கி அதிகப்படியான கவலை கொண்டுள்ளது, நீண்ட கால வளர்ச்சி விவகாரங்களை புறக்கணிக்கிறது என்பது பரவலாகவே அனைவருக்கும் தெரிந்தது. இரண்டு, ரிசர்வ் வங்கி அறிவித்திருக்கும் ‘’சுதந்திரம்/தன்னாட்சி’’ என்ற கருத்து தணிக்கை செய்யப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது. அரசிடமிருந்து சுதந்திரம் என்பதற்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது. ஆனால் பொருளாதாரம் குறித்து முடிவெடுக்கும் விவகாரங்களில் நிர்ணயகரமாக அம்சங்களாக தொடர்ந்து இருக்கப்போகின்ற சந்தைகள் மற்றும் கார்ப்போரேட்டுகளிடமிருந்து (அல்லது ‘’சந்தைகளின் கோபம்’’ என்று துணை ஆளுனர் குறிப்பிட்டிருப்பதைப் போல்) சுதந்திரம் அல்ல. குறிப்பாக சமூக விஷயங்களையும் கணக்கிலெடுத்துக் கொள்கிறபோது, சுதந்திரம் என்றால் முழுமுதலான சுதந்திரம் அல்ல.

அதிகாரவர்க்கத்தின் செல்வாக்கு அதிகமாக, அதிகமாக அனைவருக்குமான நிதிச் சேவையை உறுதி செய்வதில் ரிசர்வ் வங்கி தொடர்ந்து தோல்வியுற்றுள்ளது என்பதை மறுக்க முடியாது. சமூகத்தின் முன்னுரிமை துறைகளுக்கும், பலவீனமான பிரிவினர்களுக்கும் கடன் தருவது போன்ற சமூகத்திற்கு பலன் தரும் வங்கித் திட்டங்களை பெயரளவிற்கே ரிசர்வ் வங்கி அமலாக்கம் செய்துள்ளது. முறையான சமூக தணிக்கையும் கிடையாது. 1990களிலிருந்து ரிசர்வ் வங்கி பின்பற்றிவரும் நவீனசெவ்வியல் பேரியல் கொள்கை சட்டகத்தின் காரணமாக பொதுச் செலவினம் குறைக்கப்பட்டு நேரடி வரிகளும் குறைந்து, சமூக/வளர்ச்சி செலவினங்களும் சுருங்கி சமூக ஏற்றத்தாழ்வு, குறிப்பாக நகர்ப்புறங்களில் அதிகரித்துவருகிறது. அரசின் நிதிப் பற்றாக்குறையை குறைப்பதற்கான இத்தகைய தீவிரமான நடவடிக்கை ரிசர்வ் வங்கியின் வேண்டுகோளின்றி அரசாங்கத்தின் சட்டங்களில் இருக்கும் என்று நம்புவது கடினம்: நிதிப் பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மை சட்டம்-2003 மற்றும் நிதிக் கொள்கை சட்டக ஒப்பந்தம் ஆகிய இரண்டும் இந்திய அரசாங்கத்திற்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையில் கையெழுத்தானது மட்டுமல்லாமல் ரிசர்வ் வங்கி சட்ட திருத்தத்தில் பதியப்பெற்றுள்ளது. இதன் விளைவாக இந்தியா உலக அரங்கில் குறைவான வரியும் குறைவான செலவும் கொண்ட நாடு என்ற பிம்பம் உருவானது. இந்தியா போன்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் ஒப்பிடுகையில் வங்கிக் கடன் கிடைக்கும் விகிதம் இந்தியாவில் மிகக் குறைவு. என்.கே. சிங் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் மத்திய அரசாங்கத்தின் கடனுக்கும் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும் இடையிலான விகிதம் 2024-25ல் 40% குறைக்கப்படும் எனில் இந்த பிம்பம் மேலும் வலுப்படும். இத்தகைய தீவிர நிதி ஒருங்கிணைப்புக் கொள்கை இப்போது ஆட்சியிலிருப்பவர்களின் சித்தாந்த நிலைபாடான ‘’குறைந்த அரசாங்கம் அதிக ஆட்சிநிர்வாகம்’’ என்ற முழக்கத்திற்கு நெருக்கமானது.

இத்தகைய நெளிவுசுளிவற்ற பேரியல் பொருளாதாரக் கொள்கைச் சூழலில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கத்தின் பணமதிப்புநீக்கம், சரக்கு மற்றும் சேவை வரியை வலிந்து திணித்தது போன்ற ‘’சாகச’’ நடவடிக்கைகள் நிச்சயமற்ற பொருளாதார சூழலை உருவாக்கியுள்ளன, குறிப்பாக நாட்டில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் முதுகெலும்பு போன்று விளங்கும் சிறு தொழில் மற்றும் அமைப்புசாரா துறைகளில் நிச்சயமற்ற சூழலை உருவாக்கியுள்ளன. பல பிற்போக்கான பேரியல் பொருளாதாரக் கொள்கைகளின் விளைவானது உள்நாட்டு சேமிப்பு மற்றும் முதலீட்டிலும், நிதிச் சிக்கலிலும், நடப்பு கணக்கு பற்றாக்குறையிலும், எல்லாவற்றிற்கும் மேலாக மிகக் குறைவான வேலைவாய்ப்பு வளர்ச்சியிலும் பிரதிபலிக்கிறது. இத்தகைய ஆபத்தான சூழல்களை எதிர்கொண்டுள்ள நிலையில் இன்றைய அரசாங்கத்தின் தன்னம்பிக்கை, பொதுத் தேர்தலை எதிர்கொண்டுள்ள நிலையில், ஆடிப்போயிருக்கிறது. தனது நம்பிக்கையற்ற சூழலிலிருந்து மீண்டுவர அரசாங்கம் ரிசர்வ் வங்கியை தாஜா செய்ய முயற்சிக்கிறதா?

ஆற்றல் துறைக்கு அளிக்கப்படும் கடன்களுக்கான விதிகள், வங்கியல்லாத நிதி நிறுவனங்களுக்கும், நுண்ணிய, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கும் அளிக்கப்படும் விதிகள் அடிப்படையிலான நிதி ஆதரவு, நடைமுறை சாத்தியமற்ற அளவிற்கு வாராக் கடன்கள் வைத்திருக்கும் பொதுத் துறை வங்கிகளுக்கென உடனடி நடவடிக்கை திட்டம் போன்ற நிதி அமைப்பை நடைமுறை சாத்தியமானதாக்குவதற்கான கொள்கைகளை/விதிகளைக் கொண்டுவருவதே சர்ச்சைக்குரிய விஷயங்களாக இருக்கின்றன.

இப்போது நடந்துகொண்டிருக்கும் சர்ச்சை, ரிசர்வ் வங்கி எடுக்க வேண்டிய முடிவுகள் ஒவ்வொன்றையும் அவற்றின் சாதகபாதகங்களின் அடிப்படையில் மதிப்பிடாமல் ரிசர்வ் வங்கியின் மீது திணிப்பது அரசாங்கத்தின் தவறைக் காட்டுவதுடன் ரிசர்வ் வங்கியின் தன்னாட்சிக்கு எந்த மரியாதையும் காட்டப்படாத அகங்காரத்தையும் காட்டுகிறது. நுண்ணிய, சிறு, மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் தருவதை விரிவுபடுத்த முடியாது என்பதல்ல விஷயம், ஆனால் ‘’59 நிமிடங்களுக்குள் 1 கோடி கடன் தரப்படும்’’ என்று அறிவிப்பது வெட்கமற்ற ஒன்று என்பது நிச்சயம். கடந்த காலங்களில் அரசாங்கம் செய்த குறுக்கீடுகள்தான் வங்கித் துறையை இந்த பரிதாப நிலைக்கு கொண்டுவந்திருக்கிறது என்பதை காணத்தவற முடியாது, காணத்தவறக் கூடாது. ரிசர்வ் வங்கியின் நிர்வாகக் குழுவின் பங்கு போன்ற துணைப் பிரச்னைகளைப் பொறுத்தவரை வங்கி நிர்வாகக் குழு என்பது ஆலோசனை அளிப்பது மட்டுமே, கம்பெனி சட்டத்தின் கீழ் வரும் நிர்வாகக் குழு போன்றதல்ல அது என்பதை அரசாங்கம் மறந்திவிடக் கூடாது. அது பணக் கொள்கையையோ, வங்கிக் கொள்கை நிலைபாடுகளையோ உத்தரவிட முடியாது, துறைரீதியான நுணுக்கங்களை கணக்கிலெடுத்துக்கொண்டு எடுக்கப்படும் முடிவுகளில் தலையிட முடியாது. ரிசர்வ் வங்கியின் இருப்பின் அளவைப் பொறுத்தவரை மூன்று குழுக்கள் அளித்த பரிந்துரைகள் கணக்கிலெடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. 12% என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட நெறியாக இருக்கிறது. அவசரத் தேவைக்கான இருப்பின் புனிதமும் மதிக்கப்பட வேண்டும். போதுமான மூலதனப் பிரச்னையில் ரிசர்வ் வங்கி விட்டுக்கொடுக்க வாய்ப்பிருக்கிறாது. சொல்லப்போனால், ரிசர்வ் வங்கியானது மக்கள் நலன் விஷயத்தில் அரசாங்கத்தின் சிந்தனையில் பதிந்திருக்கும் பரந்துபட்ட விழுமியங்களை உள்வாங்கிக்கொள்ள வேண்டும்.

Back to Top