ISSN (Print) - 0012-9976 | ISSN (Online) - 2349-8846

சிக்கலான நிலப் பிரச்னை

கட்டமைப்புரீதியான தடைகள் வேளாண் நெருக்கடியை தீவிரப்படுத்துகிறது என்பதை 2015-16 வேளாண் கணக்கெடுப்பு உறுதிபடுத்துகிறது.

The translations of EPW Editorials have been made possible by a generous grant from the H T Parekh Foundation, Mumbai. The translations of English-language Editorials into other languages spoken in India is an attempt to engage with a wider, more diverse audience. In case of any discrepancy in the translation, the English-language original will prevail.

 

2015-16க்கான வேளாண்மை கணக்கெடுப்பின் தற்காலிக முடிவுகள் நில இருப்பானது சிறு சிறு துண்டுகளாக பிளவுபடும் போக்கானது தொடர்வதையும் அவை விவசாய பிரிவினர்களுக்கிடையில் சமனற்று விநியோகமாகியிருப்பதையும் உறுதிபடுத்துகிறது. வேளாண்மை வருமானமானது நீடித்திருக்கக்கூடியதாக இருப்பது என்பதில் ஒரு விவசாயிடம் எவ்வளவு நிலம் இருக்கிறது என்பது முக்கியமான அம்சமாக இருக்கிறது. இந்நிலையில் இந்த தற்காலிக முடிவுகள் வேளாண் துறையில் காணப்படும் நெருக்கடி, இந்தியாவின் கிராமப்புறங்களில் கொதித்துக்கொண்டிருக்கும் அதிருப்தி ஆகியவற்றிற்கு சாட்சியம் கூறுவதாக இருக்கின்றன.

எந்த அளவிற்கு நிலங்கள் துண்டுதுண்டாக பிளவுபடுகின்றன, நிலமானது விவசாயிகளின் பல்வேறு பிரிவினரிடையே எவ்வாறு சமனற்று விநியோகமாகியிருக்கிறது என்பதை புள்ளிவிவரங்கள் நன்கு விவரிக்கின்றன. 2011 வேளான் கணக்கெடுப்பு நடந்ததிலிருந்து சிறு மற்றும் விளிம்பு விவசாயிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருப்பது தெரிகிறது. 2015-16ல் நாட்டில் 86.21% நில இருப்பானது சிறு மற்றும் விளிம்பு விவசாயிகளைக் (0 முதல் 2 ஹெக்டேர்கள் வரை நிலம் வைத்திருப்பவர்கள்) கொண்டதாக இருப்பதை கணக்கெடுப்படுப்பு காட்டுகிறது. ஆனால் பயிரிடப்படும் மொத்த நிலத்தில் இவர்களது பங்கு 47.34% மட்டுமே. சிறு மற்றும் விளிம்பு விவசாயிகளின் சராசரி நில இருப்பு 0.6 ஹெக்டேர் மட்டுமே. இவர்களில் பெரும்பான்மையினர் ஏழை மாநிலங்களான உத்திர பிரதேசத்திலும் பீகாரிலும் உள்ளனர். மொத்த விசாயிகளில் அரை-இடைநிலை விவசாயிகள் (2 முதல் 4 ஹெக்டேர்கள் வரை) 9,45%, இவர்களது நில இருப்பு பயிரிடப்படும் மொத்த நிலத்தில் 23.65%. இடைநிலை விவசாயிகள் (4 முதல் 10 ஹெக்டேர்கள் வரை) 3.76%, இவர்களது நில இருப்பு பயிரிடப்படும் மொத்த நிலத்தில் 19.96%. பெரு விவசாயிகள் (10 ஹெக்டேர்கள் மற்றும் அதற்கு அதிகம் வைத்திருப்பவர்கள்) வெறும் 0.57%, பயிரிடப்படும் மொத்த நிலத்தில் இவர்களுடையது 9.04%. அட்டவணைப்படுத்தப்பட்ட சாதியினர் (எஸ்.சி) மொத்த நிலத்தில் 9% மட்டுமே வைத்துள்ளனர். இவர்களது சராசரி நில இருப்பு 0.78 ஹெக்டேர். எஸ்.சி. பிரிவினரில் 92% பேர் சிறு மற்றும் விளிம்பு பிரிவுகளைச் சேர்ந்தவர்கள். பயிரிடப்படும் நில இருப்பைப் பொறுத்தவரை இந்தப் பிரிவினர் எந்த அளவிற்கு இழந்தவர்களாக உள்ளனர் என்பதை புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. நில இருப்பானது சாதி குழுக்களிடையே வேறுபட்ட அளவில் விநியோகமாகியிருப்பது கட்டமைப்புரீதியான தடைகளை உருவாக்குவதை பல மாநிலங்கள் கண்டுகொள்ளவில்லை என்பதையும் இதுவரை எந்த பெரிய மாற்றமும் ஏற்படவில்லை என்பதையும் இது காட்டுகிறது.

தொடர்ந்து நில இருப்பு சிறு சிறு துண்டுகளாக பிளவுறுவது விவசாய உற்பத்திக்கு நன்மை பயக்கக்கூடியதா? பயிரிடப்படும் நிலத்தின் அளவிற்கும் விவசாய உற்பத்திக்கும் இடையிலான தலைகீழ் விகிதத் தொடர்பு அவதானிக்கப்பட்டதானது 1960கள், 70களில் தீவிரமான விவாதங்களை உருவாக்கியது. சிறு அளவிலான நிலங்களை வைத்திருப்பவர்களின் விவசாய உற்பத்தி அதிக அளவிலான நிலங்களை வைத்திருப்பவர்களின் உற்பத்தியுடன் ஒப்பிடுகையில் அதிகமாக இருப்பதை 2011ல் வெளியிடப்பட்ட தேசிய மாதிரி கணிப்பு புள்ளிவிவரங்களின் அடிப்படையில் நடந்த சமீபத்திய ஆய்வு உறுதிபடுத்துகிறது. ஆனால் சிறு அளவில் நிலங்களை வைத்திருப்பவர்களின் உற்பத்தி நபர் ஒன்றுக்கு குறைவாக இருப்பதையும், பரவலான வறுமையையும் இது சுட்டிக்காட்டுகிறது. சிறு மற்றும் விளிம்பு விவசாயிகளில் ஒரு சிறு பகுதியினருக்கு மட்டுமே நிறுவனரீதியாக கடனுதவி கிடைக்கிறது, பெரும்பாலும் இவர்கள் இடைத்தரகர்களை நம்பியிருக்கிறார்கள்.

மேலும் சூழ்நிலை மதிப்பீடு கணக்கெடுப்பு (2013) உறுதிபடுத்தியதைப்போல் ஒரு ஹெக்டேருக்கும் அதிகமாக நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் மட்டுமே எல்லா செலவுகளும் போக ஓரளவு லாபம் பெறுகிறவர்களாக இருக்கிறார்கள். ஆகவே, ஒரு ஹெக்டேருக்கும் குறைவாக நிலம் வைத்திருக்கும் விளிம்பு விவசாயிகள் விஷயத்தில் நிலத்தின் அளவு அவர்களது குடும்பத்திற்கு தேவையான வருமானத்தை தர முடியாததாக இருக்கிறது. விவசாயத்தில் வருமானம் மிகக் குறைவாக இருப்பதே விவசாய நெருக்கடி தொடர்வதற்கான காரணம், இந்த நிலைக்கு நிலம் சிறு சிறு துண்டுகளாக பிளவுபட்டுவருவது முக்கிய காரணமாக இருக்கிறது. 2015-16 வேளாண் கணக்கெடுப்பின்படி விவசாயிகளில் 68.52% பேர் விளிம்பு விவசாயிகளாக உள்ளனர். இதுவே எஸ்.சி. வகுப்பினர் மத்தியில் 78.06%ஆக இருக்கிறது. இந்தப் பிரிவு விவசாயிகளே இந்தியாவில் இன்று மிக மோசமான ஏழ்மைக்கு ஆட்பட்டிருக்கும் விவசாயிகள். அத்துடன், சமூகரீதியாக விளிம்பு நிலையிலுள்ள எஸ்.சி. பிரிவினர் சாதிய பாகுபாடுகளின் காரணமாக விவசாயத்திலும் அவர்களுக்கு மூலாதாரங்களைப் பெறுவதில் வாய்ப்புகள் குறைவு. இதன் காரணமாக விவசாய உற்பத்தியால் அவர்களுக்கு கிடைக்கும் வருமானமும் குறைவு.

விவசாயத்திற்கு வெளியில், விவசாயத்திற்கு தொடர்பற்ற வேலைவாய்ப்புகள் இல்லாத நிலையில் நில இருப்பு மேலும் மேலும் பிளவுறுவது வேளாண் நெருக்கடி தீவிரமடைவதை, வாழ்வாதாரத்திற்கு விவசாயத்தை நம்பியிருப்பவர்கள் அதிலிருந்து வெளியேற வழியின்றி வறிய நிலைக்கு ஆளாவதை காட்டுகிறது. இவர்களது வாழ்க்கையை மேம்படுத்த மொத்தத்தில் வேளாண் உற்பத்தியை அதிகப்படுத்துவதன் மூலம் உற்பத்தி செலவை குறைக்க சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். குத்தகையை சட்டபூர்வமாக்குவது, குத்தகை சந்தைகளை தாராளமயமாக்குவது, நில வங்கிகளை அமைப்பது போன்றவை ஏற்கனவே பேசப்பட்டிருந்தாலும் நில இருப்புகளை தொகுப்பது என்பது, அதிலும் குறிப்பாக சிறு மற்றும் விளிம்பு விவசாயிகள் விஷயத்தில் எளிதான செயலாக இருக்காது. துல்லியமான நில ஆவணங்கள் இல்லாததே இதற்குக் காரணம். நில இருப்புகளை தொகுப்பதற்கு முன்னர் நில ஆவணங்களை நிகழ்காலத்திற்கு ஏற்ப புதுப்பிப்பது மற்றும் நிலம் வைத்திருப்பவர்களுக்கு நில உரிமைகளை அளிப்பது செய்யப்பட வேண்டியிருக்கும். கூட்டு விவசாயம் அல்லது சிறு மற்றும் விளிம்பு விவசாயிகளை உற்பத்தி கம்பெனிகளாக ஆக்குவது போன்றவை மூலமும் நில இருப்பு துண்டுதுண்டாக பிளவுபடும் பிரச்னையை எதிர்கொள்ள முடியும். ஆனால் இந்த ஒன்றுதிரட்டல் முயற்சியில் அரசானது செயலூக்கத்துடன் ஈடுபட வேண்டும். குறிப்பாக, பல மாநிலங்கள் நில மற்றும் வேளாண் சீர்திருத்தத்தை செய்யத்தவறிய நிலையில் சமூகரீதியாக விளிம்பு நிலையிலுள்ள பிரிவினருக்கு நிலம் கிடைப்பது மேம்பட அரசு செயலூக்கத்துடன் இவற்றை செய்யவேண்டும்.

Comments

(-) Hide

EPW looks forward to your comments. Please note that comments are moderated as per our comments policy. They may take some time to appear. A comment, if suitable, may be selected for publication in the Letters pages of EPW.

Back to Top