பெண்களை எப்படி நம்புவது
இது வரை ஆணாதிக்க மொழியில் மட்டுமே புரிந்துகொள்ளப்பட்டிருந்த தங்களது அனுபவங்களை மாற்றியமைக்க பெண்கள் பேசத் தொடங்கியுள்ளனர்.
The translations of EPW Editorials have been made possible by a generous grant from the H T Parekh Foundation, Mumbai. The translations of English-language Editorials into other languages spoken in India is an attempt to engage with a wider, more diverse audience. In case of any discrepancy in the translation, the English-language original will prevail.
கடந்த வாரம் இரண்டு பெண்கள் தங்களுக்கேற்பட்ட பாலியல் பலாத்கார அனுபவங்களை மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டியதாயிற்று. அமெரிக்காவில் உளவியல் பேராசிரியாக இருக்கும் கிறிஸ்டைன் பிளாசி ஃபோர்ட், தானும் உச்ச நீதிமன்ற நீதிபதியாக இப்போது பரிந்துரைக்கப்பட்டுள்ள பிரெட் எம் கவனாக்கும் 1982ல் பதின்வயதுகளில் இருந்தபோது கவனாக் தன்னைத் தாக்கியதாக சாட்சியம் அளித்தார். 2008ல் சினிமாசெட்டில் தன்னை நடிகர் நானா படேகர் தொந்திரவு செய்ததாகவும் அதைத் தொடர்ந்து தன்னை திரைப்பட உலகை விட்டே வெளியேற்றியதாகவும் தனுஸ்ரீ த த்தா மும்பையில் ஒரு தொலைக்காட்சி சானலில் கூறியுள்ளார்.
இந்தப் பாலியல் தொந்திரவுகளுக்கு காரணமாக இருந்தவர்களின் வன்முறைக்கு அப்பால் செல்கிறது இந்த சாட்சியங்களின் முக்கியத்துவம். #MeToo (#நானும்கூட) இயக்கத்தைத் தொடர்ந்து பல பெண்கள் கூறும் அனுபவங்களின் பொது வடிவத்துடன் இது ஒத்துப்போகிறது. பாலியல் தொந்திரவுகள் கொடுப்பவர்களை காப்பாற்றுவதாக, அவர்களுக்கு மேலும் துணிச்சலை கொடுப்பதாக தினசரி வாழ்க்கையின் கட்டமைப்புகளும், பரஸ்பர ஒத்துழைப்பும் இருப்பதே இந்தப் பொது வடிவம். பாலியல் தொந்திரவு என்பது மிகப் பெரும் குற்றம் என்றபோதிலும் அது ஒரு வழக்கமான செயலாக இருக்கிறது. இது ஆண்களுக்கு இருக்கும் அதிகாரம், தண்டனையிலிருந்து அவர்களுக்கு கிடைக்கும் விலக்கு ஆகியவற்றின் வெளிப்பாடே இது. குடித்திருக்கும் ஓர் உயர்நிலைப் பள்ளி பதின்வயது மாணவனுக்கும் அரசியல் ஆதரவு இருக்கும் ஒரு நடிகருக்கும் தண்டனை கிடைப்பதிலிருந்து பாதுகாப்பிருப்பது அதிர்ச்சி தரத்தக்க அளவில் அதிகமாக இருக்கிறது.
தாங்கள் சொல்வது காதுகொடுத்து கேட்கப்படும் என்ற நம்பிக்கையில் பாதிக்கப்பட்டவர்கள் 36 மற்றும் 10 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த இந்த இரண்டு நிகழ்வுகளை பகிர்ந்துகொண்டனர். 2017 அக்டோபரில் 80 பெண்கள் அமெரிக்கத் திரைப்பட தயாரிப்பாளர் ஹார்வே வெயின்ஸ்டைனுக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டுகளை கூறிய பிறகு என்ன மாறியிருக்கிறது? உலகெங்கிலும் ஆயிரக்கணக்கான பெண்கள் தங்களுக்கேற்பட்ட பாலியல் தாக்குதல் அனுபவங்களை சமூக ஊடகங்களில் #மீடூ என்ற தலைப்பில் வெளியிடத் தொடங்கிய பிற என்ன மாறியிருக்கிறது?
கட்டமைப்புரீதியாக எதுவுமில்லை. அமெரிக்காவிலும் இல்லை, அதைவிட நிச்சயமாக இந்தியாவிலும் இல்லை. ஆனால் சில பெண்கள் தங்களுக்கேற்பட்ட பொதுவான அனுபவங்களை வெளிப்படையாக கொட்டித்தீர்த்ததானது பல ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த தங்களது வாழ்க்கையை, வாழ்க்கையின் முடிவுகளை வடிவமைத்த தாக்குதல்களை பின்னோக்கி பார்க்கும் துணிவைத் தந்தது. தாங்களே முழுமையாக உணராத வகையில் தங்களது வாழ்க்கையில் பாலியல் தாக்குதல் ஊடுருவியிருப்பதை சில பெண்கள் உணர அது உதவியது. இந்த அனுபவங்கள் பெருமளவிற்கு ஒரே மாதிரியானதாக இருப்பது பல ஆண்டுகளாக பெண்கள் பெற்றுவந்த, ஆனால் இதுவரை சொல்லப்படாதிருந்த வேதனைகளுக்கு அங்கீகாரத்தை பெற்றுத்தந்தது.
பாலியல் தாக்குதல் குற்றமானது அதை செய்தவர்களுக்கு அல்லாமல் அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவமானத்தை உண்டாக்கவே பயன்படுத்தப்பட்டது. அதிகாரம், அதிலும் ஆணாதிக்க அதிகாரமே எது அறிவு என்பதை நிர்ணயிக்கும்போது பாலியல் தாக்குதலில் ‘’ஆதாரம்’’ என்பதை எப்படி நாம் புரிந்துகொள்வது? தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை பாதிக்கப்பட்ட பெண்களே மறக்க முயன்றுகொண்டிருக்கையில் பாலியல் தாக்குதல் வழக்குகளில் ஆதாரம் என்பது என்ன? தாக்குதல் நடந்ததற்கான ஆதாரமே பாதிக்கப்பட்டவரை மிரட்டி மெளனமாக்க தாக்குதல் நடத்தியவர் பயன்படுத்தும்போது ஆதாரம் என்பது என்ன?
பலரின் மனங்களை ஆக்ரமித்திருக்கும் கேள்வி நம்பிக்கை பற்றியது: இந்தப் பெண்களை எப்படி நம்புவது? அவர்கள் உண்மையைத்தான் பேசுகிறார்கள் என்பது நமக்கு எப்படித் தெரியும்? 36 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த பாலியல் வன்புணர்ச்சி முயற்சிக்கு ஆதாரம் எங்கே?
’’நம்பிக்கை’’ என்பது நீதிமுறை தர்க்கத்திற்கு அந்நியமானதல்ல. ஆனால் வேறுபாடு என்னவெனில் பெண்களின் வார்த்தையில் வைக்கப்படும் நம்பிக்கை எப்போதுமே ஆணாதிக்க அறிவின் சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகிறது. பாலியல் தாக்குதல் என்பது அதைச் செய்பவர்களின் அதிகாரம், தண்டனையிலிருந்து அவர்கள் பெற்றுள்ள விலக்கு ஆகியவற்றின் வெளிப்பாடக இருப்பதால் இந்த தண்டனை விலக்கானது சட்ட அமைப்புமுறை உயர்சாதி ஆண்களால் நிரப்பப்பட்டிருப்பதால் அதற்கும் நீள்கிறது. சட்டத் தீர்ப்புகள் பெண்ணின் சம்மதம் என்பதன் மதிப்பை தொடர்ந்து பலவீனபடுத்திவருகின்றன, அவளது பேச்சை அவளது உடலில் இருக்கும் காயக்குறிகளுக்கு எதிராக நிறுத்துகின்றன. காயக்குறிகள் உடலில் இல்லாதபட்சத்தில் அந்தப் பெண்ணின் குணம் மற்றும் பாலியல் உறவுகளின் வரலாறு ஆகியற்றின் அடிப்படையிலேயே நீதிபதிகள் முடிவுசெய்கின்றனர், அவர் பாலியல் தாக்குதலுக்கு ஆளானவர் என்பது ‘’நம்பத்தகுதந்ததா’’ என்பது தீர்மானிக்கப்படுகிறது.
அறிவு என்பது ஆண்மையால் வரையறுக்கப்படுகிறது, ஆணாதிக்கத்தால் திணிக்கப்படுகிறது என்ற நிலை இருப்பதை எல்லோரும் அறியச்செய்ததே இந்தப் பெண்ணிய ‘’அலை’’யின் நீண்டகால பங்களிப்பாகும். தங்களது அறிவு புறக்கணிக்கப்படுவது பற்றிய தங்களது அனுபவத்தை வெளிப்படுத்த பெண்களுக்கு ஒரு மொழி கிடைத்திருக்கிறது.
#மீடூ இயக்கத்தின் விளைவாக இந்தியப் பல்கலைக்கழக வட்டாரங்களில் இருக்கும் ‘’பாலியல் தொந்திரவு தருபவர்களின் பட்டியல்’’ மற்றும் முடிவில்லாது வெளிப்படும் கதறல்கள், பாதிக்கப்பட்டவர்கள் எந்த அளவிற்கு ‘’சட்ட முறைமை’’க்கு உட்படுத்தப்படவேண்டியவர்கள் என்பது குறித்து ஒரு நிலைபாடு எடுக்கும்படி பெண்ணியவாதிகள் நிர்பந்தத்திற்குள்ளானார்கள். நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையளிக்கும் இந்த சட்ட முறைமை ஆணாதிக்க அதிகாரம் இல்லாதது அல்ல. தனுஸ்ரீ மீது நாடா படேகர் அவதூறு வழக்கு தொடுத்திருக்கையில் கிறிஸ்டைன் ஃபோர்ட் அளித்த சாட்சியத்திற்குப் பிறகும் கவனாக் நீதிபதியாகவிருக்கிறார். குற்றச்சாட்டிற்கு ஆளாகியுள்ள பிற ஆண்கள் தங்களது வாழ்க்கைக்கும் வேலைக்கும் வழக்கம்போல் திரும்பிவிட்டனர். துணிந்து பேசுவதன் பாதிப்பின் அளவை எப்படி அளவிடுவது என்று நமக்குத் தெரியவில்லை.
இப்போதைக்கு பெண்கள் தங்களது பலத்தை மட்டுமல்ல தங்களது அறிவையும் மீட்கையில் அவர்கள் தொடர்ந்து பேசட்டும்.