ISSN (Print) - 0012-9976 | ISSN (Online) - 2349-8846

பாலின நீதியும் அதற்கேற்படும் தடைகளும்

கேரளாவில் கன்னியாஸ்திரிகளின் போராட்டத்திற்கு கிடைத்திருக்கும் பொதுமக்கள் ஆதரவு பாலின நீதிக்கான போராட்டத்திற்கு நம்பிக்கையளிப்பதாக இருக்கிறது.

The translations of EPW Editorials have been made possible by a generous grant from the H T Parekh Foundation, Mumbai. The translations of English-language Editorials into other languages spoken in India is an attempt to engage with a wider, more diverse audience. In case of any discrepancy in the translation, the English-language original will prevail.

 

ஜலந்தர் மறை மாவட்டப் பேராயர் இரண்டு ஆண்டுகளாக தங்களது சக கன்னியாஸ்திரி ஒருவரை பல முறை பாலியல் வன்முறைக்கு ஆளாக்கியதாக குற்றம்சாட்டி இயேசு பிரார்த்தனைக்கூட்ட சமயப்பரப்பு அமைப்பைச் சேர்ந்த ஐந்து கன்னியாஸ்திரிகள் சமீபத்தில் நடத்திய போராட்டம் கேரள கத்தோலிக்க திருச்சபையை தீவிர அறவியல் ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளது. பாலின நீதி தொடர்பான திருச்சபையின் ஆட்சேபனைக்குரிய போக்கை மட்டுமல்லாமல் அரசு இது தொடர்பாக மேற்கொண்டுள்ள சந்தேகத்திற்குரிய அணுகுமுறையையும் அம்பலப்படுத்தியிருக்கிறது. ஆகவே, இந்தப் போராட்டத்தின் இரண்டு மிக முக்கியமான அம்சங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். ஒன்று, கன்னியாஸ்திரிகளின் போராட்டம். நம்பிக்கை மற்றும் செயற்பாட்டின் அடிப்படையில் தாங்கள் சேர்ந்துள்ள மத நிறுவனத்திற்கு எதிராக கன்னியாஸ்திரிகள் காட்டியுள்ள எடுத்துக்காட்டாக கூறத்தக்க துணிவின் காரணமாக இந்தப் போராட்டம் அசாதாரணமானது. இரண்டு, கன்னியாஸ்திரியின் நீதிக்கான கதறல், மக்கள் சமூகத்தை அவருக்கு ஆதரவாக நிற்கவைத்திருப்பது. #மீடூ இயக்கத்தைத் தொடர்ந்து நிகழ்கிறது இது. பாதிரியாரிகளால் பாலியல் வன்முறைக்கு குழந்தைகள் ஆளாகியிருப்பது குறித்த உலகளாவிய குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் கேரளாவின் ‘’திருச்சபையும் கூட’’ இயக்கமானது கத்தோலிக்க திருச்சபையை பெரும் நெருக்கடிக்கு ஆளாக்கியிருக்கிறது. ஆனால் போராட்டங்களின் மையமாக இருப்பது நீதிக்கான கோரிக்கையும், பாலின நீதியை மறுப்பதற்கு வழிவகுக்கும் தடைகளுமே.

புனிதமான இடம் என்பது ஒருவருக்குள் இருக்கும் புலன் மற்றும் காமம் தொடர்பான அழிவுக் கூறுகளை இல்லாமலாக்குவது என்று வரையறுக்கலாம். நெறி என்ற வகையில் திருச்சபையானது ஒரு நபரின், இந்த விவகாரத்தில் ஒரு கன்னியாஸ்திரியின், கண்ணியத்தை தார்மீகரீதியாகவும் உடல்ரீதியாகவும் பாதுகாக்க வேண்டுமென எதிர்பார்க்கப்படுகிறது. திருச்சபை கட்டமைப்பில் இருக்கும் இந்த எதிர்பார்ப்பில்தான் சிரோ-மலபார் திருச்சபைக்கு, இந்தியாவிலுள்ள போப் ஆண்டவரின் தூதுவருக்கு, வாடிகன் செயலாளர், போப் ஆண்டவர் உட்பட ரோம் நகர் திருச்சபையின் அதிகாரிகளுக்கு அந்த கன்னியாஸ்திரி மனு அனுப்பினார். திருச்சபை அதிகாரிகளிடமிருந்து வந்த எதிர்வினை குற்றம்சாட்டப்பட்ட பேராயருக்கு சாதகமாகவும் பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரிக்கு எதிராகவும் இருந்ததாகத் தெரிகிறது. திருச்சபையின் காலங்கடந்த தலையீடு அநீதியானது மேலும் மோசமான வடிவெடுக்க வழிவகுத்தது. அந்த கன்னியாஸ்திரியின் பண்பு குறித்து மிகக் கேவலமாகப் பேசி சிதைக்க முயன்றதில் இது தெளிவாகத் தெரிந்தது. நீதி கிடைப்பதை குலைக்கும் முயற்சி நடப்பதை இது காட்டியது. பேராயருக்கு எதிரான குற்றச்சாட்டிற்கு அடிப்படை இருப்பதை காட்டி அவருக்கு கேரள உயர்நீதிமன்ற ஜாமீன் மறுத்திருப்பதுடன் இந்த விஷயத்தில் திருச்சபை நடத்திய உள் விசாரணையின் தகுதி பற்றியும் கேள்வி எழுப்பியிருப்பது கவனிக்கத்தக்கது.

தனது சொந்த ஆணாதிக்க ஒழுக்கத்தை நிறுவும் முயற்சியில் இந்த வழக்கில் திருச்சபையானது பாலின நீதியை ‘’சொந்த வீட்டு’’ விவகாரமாக நடத்தி தங்களது சமூகத்திற்குள்ளேயே பிரச்னையை தீர்க்கப்பார்த்தது. நீதி வேண்டி அனைவருக்கும் தெரியும்படியாக கன்னியாஸ்திரி செய்த முயற்சி நமது சமூகத்தைப் பற்றிய பிம்பத்தை களங்கப்படுத்திவிடும் என்று திருச்சபை தார்மீக எச்சரிக்கை விடுத்தது. இந்த சமூக தர்க்கமானது நீதி கிடைப்பதை தடுத்துவிட்டது.

பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளானவர்களை மெளனமாக்க ஆணாதிக்க ஒழுக்கவியலை பயன்படுத்துவது உலகலாவிய விஷயம். பல்வேறு விதமான நெருக்கடிகள் தருவதன் மூலம் மெளனமாக்குவது என்பதொன்றும் புதிதல்ல. இந்த விவகாரத்தில் திருச்சபையில் நிலவும் ஆழமான பாலின சமத்துவமின்மை கேள்விக்குளாகிறது. மதத்திற்காக தங்களை அர்ப்பணித்துக்கொண்ட கன்னியாஸ்திரியின் தகுதிநிலை திருச்சபையின் கட்டளை படிநிலையில் மிகக் கீழானது. ஆனால் ஒரு பேராயர் தனது அதிகாரத்தை கத்தோலிக்க சட்டத்திலிருந்து பெறுகிறார், திருச்சபை படிநிலையில் அதிகாரமிக்க நிலையில், மறை மாவட்டத்தின் பிரார்த்தனைக் கூட்டங்களை மேற்பார்வை செய்யும் அதிகாரத்தில் இருக்கிறார். பாலின தகுதிநிலை உறவுகள் திருச்சபையில் இவ்வாறு கோணலாக இருக்கின்ற நிலையில் பேராயருக்கு எதிரான நிலைபாடு என்பது திருச்சபைக்கே எதிரானதாக பார்க்கப்படுகிறது. இது எதிர்ப்பை திறம்பட முறித்துவிடுகிறது, கன்னியாஸ்திரிகளை எளிதாக ஒடுக்குதலுக்கான இலக்காக்கிவிடுகிறது, மெளனமாக்கிவிடுகிறது, நீதிக்கான அனைத்துப் பாதைகளையும் துண்டித்துவிடுகிறது.

திருச்சபை நிறுவனம் நீதி கிடைப்பதை தடுக்கிறபோது அது நீதி பரிபாலனம் செய்யும் அரசின் தலையீட்டிற்கு வழிவகுக்கிறது. ஆனால், கத்தோலிக்க திருச்சபைக்கு கிறித்துவ வாக்கு வங்கி மீது கணிசமான செல்வாக்கு இருக்கிறது, குறிப்பாக மத்திய கேரளாவில்.  கிறித்துவ சமூகத்தின், கேரளாவின் மொத்த மக்கள்தொகையில் 18.4%, இவர்களின் 60% பேர் கத்தோலிக்கர்கள், பொருளாதார செல்வமும், செல்வாக்கும் அரசியல் களத்தில் திருச்சபையை செல்வாக்கு கொண்டதாக ஆக்கியிருக்கிறது. கேரள அரசியலில் பாரதீய ஜனதா கட்சி முக்கியமான சக்தியாக எழுந்துள்ள நிலையில் கிறித்துவ வாக்குகள் ஒன்றுதிரண்டுள்ளன. இந்நிலையில் ஆளும் இடது முன்னணியோ அல்லது கிறித்துவ வாக்கு வங்கியால் பலனடையும் எதிர்க்கட்சியோ கன்னியாஸ்திரிகளின் போராட்டத்தை ஆதரிக்கத் தயாரில்லை. நீதி கிடைப்பதை வாக்கு வங்கி அரசியல் தடுக்கிறது என்பதை அரசியல் கட்சிகளின் மெளனம் காட்டுகிறது.

ஆனால் பாலின நீதி விஷயத்தில் திருச்சபையும் அரசியல் கட்சிகளும் காட்டும் தயக்கம் மக்களின் உணர்வை மழுங்கடிக்கவில்லை. கன்னியாஸ்திரிகளின் காலவரையறையற்ற போராட்டத்திற்கு கிறித்துவ சமூகத்தின் பிற பிரிவினரிடமிருந்தும், குடிமைச் சமூக அமைப்புகளிடமிருந்தும், பெண்கள் அமைப்புகள், கலைஞர்கள், ஊடகங்கள் என பல்வேறு தரப்பினரிடமிருந்தும் ஆதரவு கிடைத்தது. அரசியல் விழிப்புணர்வு கொண்ட பொதுமக்கள் கன்னியாஸ்திரிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக அணிதிரண்டபோதுதான் போராட்டக்காரர்களுக்கு ஆதரவான சூழல் உருவானது. போராடிவரும் கன்னியாஸ்திரிகளுக்கு பொதுமக்கள் ஆதரவளித்தது பாலின நீதிக்கான போராட்டத்திற்கு புதிய ஆற்றலையும் நம்பிக்கையையும் தந்திருக்கிறது என்பது உற்சாகம் தருவதாக இருக்கிறது. நீதி வழங்குவதில் ஆழமாக வேரூன்றியுள்ள தடைகளை நீக்க முடியும் என்பதற்கான உறுதியை இந்தப் புதிய உத்வேகம் தருகிறது.

Comments

(-) Hide

EPW looks forward to your comments. Please note that comments are moderated as per our comments policy. They may take some time to appear. A comment, if suitable, may be selected for publication in the Letters pages of EPW.

Back to Top