வெட்டவெளிச்சமாகும் பணமதிப்புநீக்கத்தின் தோல்வி
பணமதிப்புநீக்கம் செய்யப்பட்டவற்றில் திரும்பிவந்துவிட்ட பணத்தின் மதிப்பு பற்றிய ரிசர்வ் வங்கியின் மதிப்பீடு பணமதிப்புநீக்கம் சாதித்தது என்ன என்பதைக் காட்டுகிறது.
The translations of EPW Editorials have been made possible by a generous grant from the H T Parekh Foundation, Mumbai. The translations of English-language Editorials into other languages spoken in India is an attempt to engage with a wider, more diverse audience. In case of any discrepancy in the translation, the English-language original will prevail.
பணமதிப்புநீக்கம் செய்யப்பட்ட பணத் தாள்களில் 99.3% திரும்பிவிட்டது என்று இந்திய ரிசர்வ் வங்கியின் 2017-18ஆம் ஆண்டுக்கான ஆண்டு அறிக்கை தெரிவித்திருப்பது கறுப்புப் பண ஒழிப்பில் பணமதிப்புநீக்கம் வெற்றி கண்டுள்ளது என்ற அரசாங்கத்தின் கற்பனைப் பிரச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது. எவ்வளவு பணம் திரும்பி வந்தது என்பது பற்றி ரிசர்வ் வங்கி புள்ளிவிவரம் வெளியிட்டது இது முதல் முறையல்ல. ஏற்கனவே 2016 டிசம்பரில் பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட 15.42 லட்சம் கோடியில் 12.44 லட்சம் கோடி வங்கிகளுக்கு திரும்பிவிட்டது என்று சொன்னபோது இந்தப் புள்ளிவிவரம் மிகைப்படுத்தப்பட்டது என்று அரசாங்கம் கூறியது. பொருளாதாரத்தில் உள்ள 3 முதல் 5 லட்சம் கோடி வரையிலான கறுப்புப் பணம் திரும்ப வராது என்று அரசாங்கம் கூறியிருந்ததற்கு மாறாக இது இருந்ததே இது மிகைப்படுத்தப்பட்ட புள்ளிவிவரம் என்று அரசாங்கம் கூறியதற்குக் காரணம்.
அதே நேரத்தில், அமைப்பின் திறன் தொடர்பான விஷயத்தில் ரிசர்வ் வங்கியின் நிலை சங்கடத்திற்குள்ளானது. ஓராண்டிற்கு முன்புதான், 2017 ஜூன் 30 தேதி வரை வங்கி அமைப்பிற்கு திரும்பி வந்த பணமதிப்புநீக்கம் செய்யப்பட்ட பணத்தின் அளவு ‘’15.28 லட்சம் கோடி’’ என்று கூறியிருந்தது. ‘’திரும்பிவந்த பணத் தாள்களை எண்ணி, சரிபார்க்கும் பிரம்மாண்டமான பணி வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டதாக’’ இப்போது அரசாங்கத்தையும் பொதுமக்களையும் மகிழ்விக்க ரிசர்வ் வங்கி கூறுகிறது. அதுவும் ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் கழித்து. திரும்பிவந்த பணத்தின் மதிப்பு குறித்து இப்போதைய மதிப்பீடு எவ்வளவு மேம்பட்டிருக்கிறது? ஓராண்டிற்கு முன்னர் மதிப்பிட்டதை விட வெறும் 0.2%, அதாவது 15.28 லட்சம் கோடி என்று இருந்த து 15.31 லட்சம் கோடியாக உயர்ந்திருக்கிறது. திரும்பிவராத பணம் எவ்வளவு? வெறும் வெறும் 11 ஆயிரம் கோடி (அதாவது திரும்பிவந்தப் பணத்தில் 0.7%). அரசாங்கம் தான் அடைந்துள்ள மோசமான சங்கட நிலை குறித்து கவலையை வெளியே காட்டிக்கொள்ளாது இருந்தாலும் அதன் விரல் கணுக்களில் பிரம்படி விழுந்திருக்கிறது. இதற்கிடையில், ரிசர்வ் வங்கி வேறு வகையான, பெரும் சங்கடத்திற்கு ஆளானது. பணமதிப்புநீக்க நடவடிக்கையானது ஜனநாயகமற்ற முறையில், நிறுவனங்களின் அனுபவ முதிர்ச்சி கொண்ட கருத்துக்களைப் பற்றி கவலைப்படாது எடுக்கப்பட்டது. நடவடிக்கை எடுக்கப்படுவதற்கு ஓராண்டிற்கு முன்னரே இது குறித்த தனது எதிர்ப்பை தெரிவித்துவிட்டதாக ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுனர் ரகுராம் ராஜன் வெளிப்படையாகவே கூறியிருக்கிறார். ரிசர்வ் வங்கியின் அனைத்து முன்னாள் ஆளுனர்களும் இதே போன்ற எதிர்ப்பைத்தான் தெரிவித்திருக்கிறார்கள். பணக்காரர்கள் தங்கள் சொத்துக்களில் 90% ஸ்தூலமான வடிவில்தான் வைத்திருக்கிறார்கள் என்று ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதே காரணத்திற்காகத்தான் ரிசர்வ் வங்கியானது பணம்திப்புநீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால் இப்போது அதன் பார்வைகள் இன்றைய அரசாங்கத்தின் போக்குகளின் செல்வாக்கிற்கு ஆட்பட்டிருக்கிறது. ஆழ்ந்த அறிவுபூர்மான அணுகுமுறை தேவைப்படும் எந்தப் பகுப்பாய்வும் இன்றைய அரசாங்கத்திற்கு பிடிப்பதில்லை.
இதற்கு முந்தைய பணமதிப்புநீக்க நடவடிக்கைகளில் அப்போது சுற்றிலிருந்த மொத்தப் பணத்தில் வெறும் 0.6% மட்டுமே பணமதிப்புநீக்கத்திற்கு ஆளானது. ஆனால் இப்போதோ அது 86%. இந்த நிலையில், வீடுகளில் பணமாக வைத்திருப்பது எந்த அளவில் இருக்கிறது, நாட்டின் பொருளாதார கட்டமைப்பு எப்படி என்பது போன்ற விஷயங்களைப் பற்றி ஆழமான பகுப்பாய்வு செய்யப்பட்டிருக்க வேண்டும். பணமதிப்புநீக்கத்தின் விளைவாக 2017ல் ‘’சுற்றில் இருக்கும் பணம்’’ 20% குறைந்த பின்னர், பணத்திற்கும் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும் இடையிலான விகிதமானது அதற்கு முந்தைய ஆண்டில் இருந்த 12.2%த்திலிருந்து 8.8%ஆக வீழ்ச்சியடைந்தது. ‘’இந்த நிலையில் பணத்திற்கும் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும் இடையிலான விகிதமானது முன்னேறிய மற்றும் வளரும் நாடுகளின் பொருளாதாரங்களுடன் ஒப்பிடுகிறபோது நன்றாகவே இருக்கிறது’’ என்று ரிசர்வ் வங்கி கூறியது. இதற்கு மாறாக, இந்தியப் பொருளாதாரத்தில் அமைப்புசார வர்த்தக, தொழிற்துறை அமைப்புகளும், அமைப்புசாரா வீட்டுத்தொழில்களும் ஆதிக்கம் செலுத்தும் நிலையில் வளரும் மற்று முன்னேறிய சந்தைகளுடன் ஒப்பிடும்போது பணத்திற்கும் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும் இடையிலான விகிதமானது மோசமாக இருக்கிறது.
ஆறாவது பொருளாதார கணக்கெடுப்பின்படி (2013) 454 லட்ச விவசாயமல்லாத நிறுவனங்களில் 92% தனியார் துறையைச் சேர்ந்தவை, தனிநபர்களுக்கு சொந்தமானவை, சிறு தனியார் நிறுவனங்கள். அதேபோன்று, நாட்டின் மொத்தப் பணியாளர்கள், தொழிலாளர்களில் 92% முறைசாரா வகையைச் சேர்ந்தவர்கள். இத்தகைய சூழலிலும், ’’குறைந்த-ரொக்க சமூகம்’’ (less-cash society) மாற்றத்திற்கான நெருக்கடி தரப்படும் நிலையில், 2017-18ல் ‘’சுற்றில் உள்ள பணம்’’ 37% அதிகரித்தது, பணத்திற்கும் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும் இடையிலான விகிதமானது 2016-17ல் 8.8%ஆக இருந்த து 2017-18ல் 10.9%ஆக அதிகரித்தது. இந்த மீட்சித்தன்மை அநேகமாக இந்தியாவில் பொருளாதார கட்டமைப்பிலேயே இருக்கிறது. இதற்கிடையில், ரிசர்வ் வங்கி தனது மாறிவிட்ட நிலைபாட்டின் அடிப்படையில் இதை புதிய மீட்டுருவாக்க நிகழ்வாக, இந்தியாவை ‘’தன்னையொத்த வளரும் பொருளாதாரங்களுடன் மற்றும் முன்னேறிய பொருளாதாரங்களுடன் ஒப்பிடுகையில் அதிகபட்ச அளவில் பணத்தை பயன்படுத்தும் நிலைக்கு கொண்டுவந்திருப்பதாக’’ கூறுகிறது.
நாட்டுப் பொருளாதாரத்தின் கட்டமைப்பு மற்றும் குடும்பங்களின் நடத்தை விதம் ஆகியவற்றைப் பற்றிய புரிதலானது, தங்களது அலட்சியமான நடவடிக்கை எத்தகைய சேதத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை பொறுப்பிலுள்ளவர்களை உணரச்செய்திருக்க முடியும். வேலையிழப்பு, வருமான இழப்பு ஆகியவற்றால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்ட கதைகள் ஊடகங்களிலும், அறிவுஜீவிகளின் கட்டுரைகளிலும் வெளியாயின. ஆனால் இழப்பைப் பற்றிய முறையான மதிப்பீடு எதுவும் இல்லை. முறைசாரா துறைகளின் பொருளாதாரம் பற்றி முறையான தரவுகள், புள்ளிவிவரங்கள் ஏதுமில்லை என்பது இதற்கான காரணமாக இருக்கலாம். முறைசாரா பொருளாதாரத்தில் முறைசாரா பொருளாதாரத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, முறையான பொருளாதாரத்தின் அளவீடுகளைக் கொண்டு கணக்கிடப்படுகிறது. உதாரணமாக, 2018-19ஆம் ஆண்டுக்கான முதல் காலாண்டின் வளர்ச்சி விகிதம் உற்பத்தித் துறையில் 13.5% இருக்கும்போது, 2017-18ல் இது (-) 1.8%ஆக இருக்கையில், முறைசாரா துறையின் மற்றும் அரைகுறை கார்ப்போரேட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அளவானது ‘’உற்பத்தியின் தொழிற்துறை குறியீட்டெண்ணை பயன்படுத்தி அளவிடப்படுகிறது.’’ ஆகவே, முறைசாரா பொருளாதாரத்தின் வளர்ச்சியை காட்டுவதாக மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியைக் கருதுவது தவறு.
கறுப்புப் பணத்தை பறிமுதல் செய்வது என்ற நோக்கம் நிறைவேறாதபோது, தீவிரவாதத்தையும் நக்சலிசத்தையும் ஒழிப்பது, போலி நிறுவனங்களை மூடுவது, வரி வசூலிப்பை அதிகப்படுத்துவது, எலெக்ட்ரானிக் முறை மூலம் பணம் செலுத்துதலை அதிகப்படுவத்துவது ஆகிய நோக்கங்களுக்காகவும் பணமதிப்புநீக்கம் செய்யப்பட்டதாக பணமதிப்புநீக்கத்திற்கான நோக்கங்கள் மாற்றப்பட்டன. இந்த நாட்டிற்கு, குறிப்பாக ஏழை மக்களுக்கு இவ்வளவு பெரிய வேதனைகளைத் தராமலே இவையனைத்தையும் சாதித்திருக்க முடியும்.