ISSN (Print) - 0012-9976 | ISSN (Online) - 2349-8846

திருமணத்திற்கு வெளியிலான பாலியல் உறவு பொது நலனுக்கு எதிரானதா?

பொது நலன் என்ற பெயரில் ஆணாதிக்க கருத்தாக்கங்களுக்கு அரசு அங்கீகாரம் அளிக்கிறது.

The translations of EPW Editorials have been made possible by a generous grant from the H T Parekh Foundation, Mumbai. The translations of English-language Editorials into other languages spoken in India is an attempt to engage with a wider, more diverse audience. In case of any discrepancy in the translation, the English-language original will prevail.

 

திருமணமான ஒருவருடன் அவரது கணவரோ/மனைவியோ அல்லாத ஒருவர் வைத்திருக்கும் பாலியல் உறவு பற்றி இந்திய தண்டனை தொகுப்புச் சட்டம் (ஐபிசி) பிரிவு 497ல் உள்ள விதிகள் அரசியல்சட்டத்தின்படி ஏற்புடையவையா என்பது பற்றிய உச்ச நீதிமன்ற வழக்கில் திருமண உறவிற்குள் பெண்களின் உரிமைகள் பற்றிய பிரச்னை பந்தாடப்பட்டுக்கொண்டிருக்கிறது. பின்வரும் நெறிசார்ந்த கேள்வி ஒன்றை மத்திய அரசை உச்ச நீதிமன்றம் கேட்டிருக்கிறது: திருமணமான ஒருவருடன் அவரது கணவரோ/மனைவியோ அல்லாத ஒருவர் வைத்திருக்கும் பாலியல் உறவை தண்டனைக்குரிய குற்றமாக ஆக்குவதில் என்ன பொது நலன் இருக்கிறது? மத்திய அரசு இதற்குத் தந்த பதிலை பிற்போக்குத்தனமானது என்று மட்டுமே சொல்ல முடியும். 497ஆம் பிரிவு ’’திருமணம் என்ற நிறுவனத்தை ஆதரிக்கிறது, பாதுகாக்கிறது, அதற்கு துணை நிற்கிறது’’ என்று கூறி மத்திய அரசு அதை நியாயப்படுத்தியிருக்கிறது. அந்தப் பிரிவை நீக்குவது ‘’திருமணம் என்ற நிறுவனத்திற்கு முக்கியத்துவத்தையும் புனிதத்தையும் வழங்கும் இந்தியாவின் உள்ளார்ந்த விழுமியங்களுக்கு’’ ஆபத்தாக முடியும் என்று மத்திய அரசு நம்புகிறது.

திருமணமான பெண்ணுடன் அவளது கணவனின் அனுமதியில்லாமல் ஓர் ஆண் பாலியல் உறவு வைத்துக்கொள்வதை தண்டனைக்குரிய குற்றம் என ஐபிசி-யின் 497ஆம் பிரிவு கூறுகிறது. ஆனால் இத்தகைய உறவை வைத்துக்கொள்ளும் தனது கணவன் மீதோ அல்லது அவன் உறவு வைத்திருக்கும் பெண்ணின் மீதோ ஒரு பெண் வழக்கு தொடுக்க முடியாது. திருமணத்திற்கு வெளியில் உறவு வைத்திருக்கும் பெண்ணின் கணவனுக்கு மட்டுமே தனது மனைவியுடன் உறவு வைத்திருக்கும் ஆண் மீது வழக்கு தொடுக்கும் உரிமை உள்ளது.

இதில் ஆண்கள் மட்டுமே ஏன் தண்டிக்கப்பட வேண்டும், பெண்களுக்கு ஏன் தண்டனை இல்லை என்பது பற்றி ஏற்கனவே வழக்குகள் உள்ளன. பெண்களுக்கு பாலியல் சுதந்திரத்தை அளிப்பதன் காரணமாகவே பெண்கள் மீது வழக்கு தொடுக்க 497ஆம் பிரிவு அனுமதி மறுக்கிறது என்று கருதிக்கொள்வது தவறு. பெண்களுக்கென்று தனியாக சுயமோ, சுயமாக நடந்துகொள்ளும் ஆற்றலோ கிடையாது என்று ஆணாதிக்க மனம் கருதிக்கொள்வதன் காரணமாகவே திருமண உறவிற்கு வெளியில் உறவு வைத்துக்கொள்ளும் பெண்கள் மீது வழக்கு தொடுக்கப்படுவதில்லை. இவர்களின்படி ஆணின் ‘’மயக்கும் ஆற்றலுக்கு’’ பெண் பலியாகிறாள்.

இந்தப் பிரிவு திருமணத்தின் புனிதத்தை உயர்த்திப்பிடிப்பதன் மூலம் இந்திய விழுமியங்களை உயர்த்திப்பிடிக்கிறது என்று பொது நலன் குறித்த உச்ச நீதிமன்றத்தின் கேள்விக்கு பதிலளிக்கையில் மத்திய அரசு கூறுவதிலிருந்து அனைவருக்குமான நல்லது என்ன என்பது பற்றி தான் அறிந்திருப்பதாக அது கருதிக்கொள்வது தெரிகிறது. இந்த நிலைபாட்டை பெண்ணியவாதிகள் கேள்விக்குட்படுத்தியிருப்பதுடன் தங்கள் சார்பாக பெண்களுக்கு எது நல்லது என்பதை அரசு முடிவு செய்வதற்கும் ஆட்சேபனை எழுப்பியிருக்கிறார்கள். இந்தச் சட்டப் பிரிவு அநீதியான முறையில் பெண்களுக்கு சாதகமாக இருக்கிறது என்று குற்றம் கூறுபவர்கள் கருதுவதைப்போல் இது பெண்களை நிச்சயம் பாதுகாக்கவில்லை.

பெண்கள் தங்களை குடும்பம் மற்றும் திருமணம் என்ற நிறுவனங்களுக்குள் சுயமாக வெளிப்படுத்திக்கொள்வதற்கான செயலாண்மையை இதற்கு முந்தைய நீதிமன்ற தீர்ப்புகளிலும் சரி, அரசும் சரி பெண்களுக்குத் தரவில்லை. இந்த நிறுவனங்களில் பெண்களின் இடர்பாடுகள் அதிகரிக்கவே செய்கின்றன என்று கூறுபவர்கள் அரசின் இந்த நிலைபாட்டை தொடர்ந்து விமர்சித்து வந்திருக்கிறார்கள்.

அனைவரின் நலன் பற்றிய அரசின் கருத்தாக்கம் பற்றியும், அந்தக் கருத்தாக்கம் பெண்ணின் பாலியல் பற்றிய ஆணாதிக்க கருத்தாக்கங்களை பாதுகாக்கிறதா என்பது பற்றியும் கேள்வி கேட்டாக வேண்டும். 497ஆம் பிரிவு பற்றிய பொதுவான விவாதமும், உச்ச நீதிமன்ற வழக்கில் நடந்துகொண்டிருக்கும் வழக்கும் காட்டுவதுபோல் திருமண உறவுக்கு வெளியிலான பாலியல் உறவானது அந்தரங்கம், பாலின பாகுபாடு, ஒழுக்கக் கருதுகோள்கள், திருமணம் என்ற நிறுவனத்தில் அரசும் சமூகமும் கொண்டுள்ள ஆதாயம் ஆகிய பிரச்னைகளை உட்கொண்டுள்ளது. ஒரு பெண் தனது கணவனுக்கு உண்மையாக இருக்க வேண்டும், ஆனால் கணவன் எந்தவொரு பெண்ணுடனும், அவள் வேறொருவரின் மனைவியாக இல்லாத பட்சத்தில், உறவு வைத்துக்கொள்ளலாம் என்ற நம்பிக்கையை 497ஆம் பிரிவு ஆதரிக்கிறது. மேலும், அவள் வேறொரு ஆணுடன் உறவு வைத்துக்கொள்வதற்கு கணவனின் ஒப்புதல் இருந்தால் அது குற்றமல்ல என்றும் இந்தப் பிரிவு கூறுகிறது. கணவனுக்கு மனைவியின் உடல் மீது உரிமையும், அதை பாலியல் ரீதியாக யார் பயன்படுத்துவது என்பதை நிர்ணயிக்கும் உரிமையும் இருப்பதாக கருதப்படுகிறது என்பது வெளிப்படை.

திருமணம் என்ற நெருக்கமான, தனிப்பட்ட உறவிற்குள் இருவரும் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பது சம்பந்தப்பட்ட கணவன், மனைவியை பொறுத்தது. ஆனால் அந்தரங்கம் மற்றும் அதற்கான உரிமை பற்றி அரசு கருத்தில் கொள்ளவில்லை. வயதுவந்தவர்களுக்கிடையில் மன ஒப்புதலுடன் நிகழும் திருமணம் மற்றும் பாலியல் உறவு போன்ற அந்தரங்கமான உறவு சட்ட சச்சரவிற்குட்பட்டதா என்பதுதான் மையமான பிரச்னை.

சட்டப்படியாக திருமணத்தை ரத்து செய்வதற்கும், இந்த நடவடிக்கையில் இரு தரப்பும் எந்த பாகுபாட்டிற்கு ஆளாகாதிருப்பதை உறுதி செய்யவும் இந்தச் சட்டத்தை பயன்படுத்த முடியும். திருமண உறவில் விசுவாசமாக இருப்பது சரியா, தவறா அல்லது திருமண உறவுக்கு வெளியில் பாலியல் உறவு வைத்துக்கொள்வது பாலியல் சுதந்திரத்தை குறிக்கிறதா இல்லையா என்பதல்ல இங்குள்ள முக்கியமான பிரச்னை. வயதுவந்த இருவருக்கிடையிலான சிக்கலான, உணர்ச்சிகரமான, அவர்களே நியாயமான முறையில் தீர்த்துக்கொள்ளக் கூடிய ஓர் உறவை அரசு கண்காணிக்கலாமா, கண்காணிக்க வேண்டுமான என்பதுதான் பிரச்னை.

Comments

(-) Hide

EPW looks forward to your comments. Please note that comments are moderated as per our comments policy. They may take some time to appear. A comment, if suitable, may be selected for publication in the Letters pages of EPW.

Back to Top