ISSN (Print) - 0012-9976 | ISSN (Online) - 2349-8846

காவல்துறையை கண்காணித்தல்

காவல்துறை மீதான மக்களின் நம்பிக்கை நிலைகுலைந்தபோதிலும் காவல் சீர்திருத்தம் கவலைக்கிடமான நிலையிலேயே இருக்கிறது.

The translations of EPW Editorials have been made possible by a generous grant from the H T Parekh Foundation, Mumbai. The translations of English-language Editorials into other languages spoken in India is an attempt to engage with a wider, more diverse audience. In case of any discrepancy in the translation, the English-language original will prevail.

 

முதன் முறையாக இந்தியாவில் இரண்டு காவலர்களுக்கு, கேரளாவில் காவலில் வைக்கப்பட்டிருந்தவர் இறந்தது தொடர்பான வழக்கில் மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது, மற்ற மூன்று காவலர்களுக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 2005ல் உதயகுமார் என்ற இளைஞர் சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கு கடந்த மாதம் மத்திய புலனாய்வுக் கழக (சிபிஐ) நீதிமன்றத்தால் காவலர்கள் தண்டிக்கப்பட்டனர். காவலில் இருக்கும்போது நடக்கும் மரணம் தொடர்பாக இந்தியாவில் முக்கியமான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படாத சூழலில், இந்த 13 ஆண்டுகளில் இத்தகைய விவகாரங்களில் தண்டனையை உறுதிபடுத்துவதற்கான பல அம்சங்கள் இப்போது ஒன்றுதிரண்டு வந்திருப்பது குறித்து விரிவாக ஆராயப்பட வேண்டும். சட்டபூர்வமான நடவடிக்கை, பதில் சொல்லும் பொறுப்பு ஆகிய விஷயங்களில் காவல்துறை காட்டும் அலட்சியம், ஏளனம் மற்றும் காவல் சீர்திருத்தம் குறித்து 2006ல் உச்ச நீதிமன்ற தந்த வழிகாட்டுதல்கள், மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து அலட்சியப்படுத்தி வருவது போன்ற அம்சங்களை ஏற்கனவே கணக்கிலடங்காத வழக்குகள் நமக்கு எடுத்துக்காட்டியிருப்பதைப்போல் இந்த வழக்கும் எடுத்துக்காட்டுகிறது.

இந்த வழக்கில் நீதி விசாரணை நடத்திய அதிகாரி காட்டிய தளராத முயற்சியும், மருத்துவரின் பிரேதப்பரிசோதனையும் முக்கியமானவை. மாநில அரசாங்கம் தனது பங்கிற்கு வட்ட ஆய்வாளரை தற்காலிக வேலைநீக்கம் செய்தது, குற்றவியல் காவல் துறை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்து, சித்திரவதை செய்த இரண்டு காவலர்களை கைது செய்தது, அரசுத் தரப்பின் முக்கிய சாட்சிகள் எதிராக திரும்பிவிட்டபோது உதயகுமாரின் அம்மா சிபிஐ விசாரணை வேண்டுமென்று கோரி கேரளா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். உதாரணமாக இருக்கத்தக்க வகையில் சிபிஐ நீதிமன்றம் வழக்கை நடத்தியது. இத்தகைய வழக்குகளில், அதாவது காவலில் இருக்கும்போது சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்படுவது பற்றிய வழக்குகளில் நமக்குத் தெரிந்த தடைகள் பல வருகின்றன: சாட்சிகள் எதிராகத் திரும்புவது அல்லது பின்வாங்குவது, தங்களுக்குத் தரப்படும் நெருக்கடியின் காரணமாக காவல்துறையை குற்றத்திலிருந்து விடுவிக்கும் வண்ணம் பிரேதப்பரிசோதனை அறிக்கையை மருத்துவர்கள் தருவது, குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு சாதகமான விசாரணைகள், சட்ட மற்றும் நிதி உதவி ஏதும் பெற முடியாத நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் இருப்பது ஆகிய தடைகள்.

தேசிய காவல் ஆணையத்தின் ஐந்து அறிக்கைகளை மற்றும் கடந்த பல ஆண்டுகளாக தலைசிறந்த நீதிபதிகள், காவல்துறை அதிகாரிகள் ஆகியோரின் தலைமையில் அமைக்கப்பட்ட பல்வேறு குழுக்கள் அளித்த அறிக்கைகளின் பரிந்துரைகளை 2006ல் உச்ச நீதிமன்றம் அளித்த வழிகாட்டுதல்கள் பெருமளவு பிரதிபலிக்கின்றன. காவல்துறை சீர்திருத்தம் கேட்பாரற்று இருந்த அந்தக் காலத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு நிர்ணயகரமாக தீர்ப்பு என்று புகழப்பட்டது. உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களில் தங்களுக்கு தேவையானதை, உகந்ததை மட்டும் அமல்படுத்துவது, பிறவற்றை புறக்கணிப்பது என மத்திய, மாநில அரசுகள் நடந்துகொண்டதால் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்கள் உருவாக்கிய நம்பிக்கையும் பொய்த்துப்போனது. இந்த வழிகாட்டுதல்களில் சில காவல்துறை விஷயத்தில் அரசு நிர்வாகத்தின் அதிகாரத்தை குறைப்பதாக இருப்பதால் இவற்றை அமல்படுத்துவதில் அரசுக்கு தயக்கம். இந்த வழிகாட்டுதல்கள் அமலாக்கப்படுவது தனது பார்வையின் செய்யப்படுவதை உச்ச நீதிமன்றம் உறுதிபடுத்தியிருந்தால் விளைவு வேறு மாதிரியாக இருந்திருக்கும்.

பல்வேறு குழுக்களின் அறிக்கைகளும், உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களும் முழுமையான ஆலோசனையை வழங்குகின்றன.  1861ஆம் ஆண்டின் காவல் சட்டத்தை ஒழித்து புதிய ஒன்றை இயற்றுவது, வேலைக்கு ஆளெடுக்கும் (உச்சபட்ச அதிகாரிகளை நியமிப்பது உட்பட) முறைகளை மேம்படுத்துவதன் மூலம் காவல்துறையை சுதந்தரமானதாக்கி அரசு நிர்வாகத்தின் குறுக்கீடு இல்லாது பார்த்துக்கொள்வது, இடமாற்றம் மற்றும் பணி உயர்வு ஆகியவற்றில் மாற்றங்கள் கொண்டுவருவது, புலனாய்வுப் பிரிவையும் சட்ட-ஒழுங்குப் பிரிவையும் பிரிப்பது, காவல்துறைக்கு எதிரான புகார்களை விசாரிக்க தனி அமைப்பை உருவாக்குவது ஆகியவை இவற்றுள் அடங்கும்.

காவல்துறை என்ற நிறுவனத்தின் மீதான பொதுமக்களின் பார்வை மற்றும் அதன் மீது அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கை முற்றாக குலைந்து போகாதிருப்பதையும் காவல் சீர்திருத்தம் குறித்த பிரச்சாரம் உறுதி செய்ய வேண்டியிருக்கிறது. உண்மையைச் சொன்னால், குற்றங்களின் வீதம், காவல்துறை மற்றும் நீதிமன்றங்களால் முடிக்கப்படும் வழக்குகள், காவல்துறையில் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த மக்களின் சதவீதம், அடிப்படை கட்டமைப்பு வசதிகள், சிறை குறித்த புள்ளிவிவரங்கள், மற்றும் அட்டவணைப்படுத்தப்பட்ட சாதிகள்/பழங்குடியினர், பெண்கள், குழந்தைகள் ஆகியோருக்கு எதிரான குற்ற வழக்குகளை முடித்தல் என ஆறு பெரும் பிரிவுகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வெளியிடப்பட்ட ‘’இந்தியாவில் காவல்துறையின் நிலை’’ என்ற 2018ஆம் ஆண்டு அறிக்கையில் காவல்துறையின் செயல்பாடுகள் ஒடுக்கப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்களுக்கு எதிராக இருப்பது தெரியவருகிறது. காவல்துறையின் பாகுபாடான செயல்பாடு என்பது பெரும்பாலும் வர்க்கத்தின் அடிப்படையில் இருப்பதும், அதையடுத்து பால், சாதி, மதம் ஆகியவற்றின் அடிப்படையில் இருப்பதும் தெரிகிறது. பொதுமக்களில் காவல்துறை பற்றிய அச்சம் அதிகமாக இருப்பது சிறுபான்மை மக்களிடம்தான், அதிலும் முஸ்லிம்களிடம்.

காவல்துறை சீர்திருத்தம் அமலாவது என்பது இவ்வளவு மோசமாக உள்ள சூழ்நிலையில் தனது 2006ஆம் ஆண்டு வழிகாட்டுதல்களை கண்டிப்பாக அமல் செய்யவேண்டும், அப்படி செய்யாத மாநிலங்கள் நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக தண்டிக்கபடும் என்பதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும்.

நிறுவனங்களில் சார்பு நிலவுவது என்பது உலகளாவிய புலப்பாடு. அமெரிக்காவில் சிகாகோ காவல் படையானது நிற சார்புடன், பாகுபாட்டுடன் நடந்துகொண்டு அதீதமான படைகளை பயன்படுத்துவதையும்,  அங்கு ‘’மறைக்கும் கலாச்சாரம் மிகப் பரவலாக’’ இருப்பதையும் நீதித் துறை வெளியிட்ட 2017ஆம் ஆண்டு அறிக்கை குறிப்பிடுவதை சிகாகோ காவல் சீர்திருத்தம் காட்டுகிறது. வெள்ளை அதிகாரி ஒருவர் கறுப்பு இளைஞர் ஒருவரை கொன்றதையடுத்து இது நடந்தது. பதில் சொல்லும் பொறுப்பு பெடரல் நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் அமலாக்கப்படுவதற்கான விரிவான திட்டம் ஒன்றை சிகாகோ அரசும், காவல்துறை அதிகாரிகளும் வகுத்தனர்.

உதயகுமார் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் தண்டனை வழங்கியபோது குற்றம்சாட்டப்பட்டவர்களின் செயல்கள் காவல்துறை நிறுவனத்தை எதிர்மறையாக பாதிக்கும் என சிபிஐ நீதிபதி கூறினார். ‘’இந்த நிறுவனத்தின் மீதான நம்பிக்கையை மக்கள் இழந்துவிட்டால் அது சமூகத்தின் சட்ட ஒழுங்கை பாதிக்கும். அத்தகைய நிலை மிகவும் ஆபத்தானது’’ என்றும் அவர் குறிப்பிட்டார். தாபங் திரைப்படத்தில்  வரும் காவலர் ‘’லஞ்சம் வாங்குபவர்’’ என்றாலும் ஏழகளுக்கு பெரிதும் உதவுபவர். இது திரைப்படத்தில் மட்டும்தான். யதார்த்தம் வேறு. காவல் சீர்திருத்தம் வேகமாக நடந்தாக வேண்டும்.  

Back to Top