ISSN (Print) - 0012-9976 | ISSN (Online) - 2349-8846

தப்பியோடியவர்களின் பின்னால் ஓடும் வீண் வேலை

தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளிகள் சட்டமானது எதற்கும் உதவாத ஊழல் எதிர்ப்பு நடவடிக்கை.

விஜய் மல்லையா, நிரவ் மோடி மற்றும் மெகுல் சோக்ஸி ஆகியோரின் விஷயத்தில் நடந்த படுதோல்விகள் நாடு முழுவதும் உருவாக்கிய கொந்தளிப்புகளின் விளைவாக தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கம் தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளிகள் சட்டம் (எஃப்.இ.ஒ.எ), 2018 என்ற புதிய சட்டத்தை 2018 ஜூலை 31ஆம் தேதி கொண்டுவந்துள்ளது. இந்திய சட்ட நடவடிக்கைகளிலிருந்து தப்பிக்க வெளிநாடுகளுக்கு தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளிகளை இந்தியாவிற்கு கொண்டுவரவும், தேர்தல் நேரத்தில் தனது மரியாதையைக் காப்பாற்றிக்கொள்ளவும் இந்த சட்டத்தை தேஜகூ கொண்டுவருகிறது. இந்தச் சட்டம் இத்தகைய குற்றங்களில் ஈடுபடக்கூடியவர்களை அச்சப்படவைக்கும், அதிலும் குறிப்பாக இத்தகைய குற்றங்களில் ஈடுபடுபவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என்ற விதி அச்சத்தை ஏற்படுத்தும் என்று அரசாங்கம் பெரிதாகப் பேசினாலும் நடைமுறையில் இது சாத்தியமாகும் வாய்ப்புகள் குறைவு.

இந்தச் சட்டம் (எஃப்.இ.ஒ.எ) பிறரை அச்சப்பட வைப்பதில் திறனற்றதாக இருக்கும் என்பதுடன், குற்றச்சாட்டப்பட்டவர்கள் தங்கள் குடிமை உரிமைகளை கோருவதற்கான உரிமையை இழக்கச் செய்யும் அதிகாரத்தை இந்தச் சட்டம் நீதிமன்றத்திற்கு வழங்குவது இயற்கை நீதிக்கே எதிரானது என்பதால் அரசியல்சட்ட ரீதியாக கேள்விக்குட்படுத்தப்படும். பெரிதும் நெருடலுக்குரிய விஷயம் என்னவெனில் இத்தகைய சட்டத்திற்கு அடிப்படையாக உள்ள கோட்பாடுகள் பிழையானவை என்பதுதான்.

தப்பியோடும் பொருளாதாரக் குற்றவாளிகளை தண்டிக்க இந்தியாவில் ஏற்கனவே ஏராளமான விதிமுறைகள் இருக்கின்றன. அப்படியெனில் எந்த சட்ட வெற்றிடத்தை இந்தப் புதிய சட்டம் நிரப்பப்போகிறது? பொருளாதாரக் குற்றங்களுக்கான இப்போதுள்ள சட்டங்கள் (பணச்சலவை தடுப்புச் சட்டம், 2002 போன்ற சட்டங்கள்) செய்யப்பட்ட குற்றத்திற்காக பறிமுதல் செய்யப்படுவதை தண்டனையாக அளிக்கின்றன, ஆனால் இந்தியச் சட்டங்களின் பிடியிலிருந்து வெளிநாடுகளுக்கு தப்பியோடுகிறவர்களை அச்சுறுத்த இவை போதாது. அந்தத் தேவையை எஃப்.இ.ஒ.எ பூர்த்தி செய்யுமென்று சட்ட விவகாரங்களுக்கான துறை கூறுகிறது. ஆனால் அது எப்படி என்பது தெளிவாகத் தெரியவில்லை. இந்த நிகழ்வுகள் நடந்த பிறகு இயற்றப்படுகிற சட்டம் இது என்பதால் இப்போது நடந்துள்ள தோல்விகளை இந்தச் சட்டத்தால் சரி செய்ய முடியாது. ஆனால், இந்தக் குற்றத்தை செய்பவர்கள் மோடி, மல்லையா போன்ற பெரும் அரசியல் செல்வாக்கு கொண்ட ஆட்களாக இருப்பதால் எதிர்காலத்திலாவது இந்த சட்டம் எந்த வழக்கையாவது தீர்க்குமா என்பதும் சந்தேகத்திற்குரியதே. குற்றத்தின் மூலம் சேர்க்கப்படும் சொத்து பறிமுதல் செய்யப்படுவது தீவிரமாக நடக்கும் என்ற அச்சம் மட்டுமே இவர்களை இந்திய சட்டத்திடம் சரணடைய வைக்கும் என்று கருதிக்கொள்வது அறியாமை.

இந்த நாட்டில் பல சமயங்களில் பல அரசாங்கங்கள் தங்களது கட்சியின் நோக்கங்களுக்கு ஏற்ப சட்டமியற்றும் விளையாட்டில் ஈடுபடுகின்றன. அரசாங்கத்தின் நல்லெண்ணத்தை வாக்கு வங்கியின் பெரும்பான்மையாக இருக்கும் ஏழைகளுக்கு உணர்த்த சட்டங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் இந்த சட்டங்கங்களை அமலாக்குவதற்கான விதிமுறைகள் அரசியல் கட்சிகளின் பெரும் புரவலர்கலாக இருக்கும் பெரு நிறுவனங்களின் நலன்களுக்கு ஏற்ற வகையில் வளைக்கப்படுகின்றன. வெளியுறவுத்துறை அமைச்சகமும் அரசாங்கத்தின் புலனாய்வுத்துறைகளும் கூட்டாக சேர்ந்து செய்த வேலையின் காரணமாகவே நிரவ் மோடி இந்தியாவிற்கு கொண்டுவரப்படுவது தடுக்கப்பட்டதன் மூலம் வழக்கு ஒத்திவைக்கப்பட்ட து. விஜய் மல்லையா விஷயத்தில் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்கள் ஏலத்தில் விடப்பட்டபோது ஏலமெடுப்பதற்கு யாரும் வரவில்லை. இத்தகைய அமைப்பு ரீதியான தடைகளைக் கையாள இந்தப் புதிய சட்டத்தில் வழிவகைகள் இல்லை. இத்தகைய குற்றங்கள் நடப்பதை தடுப்பதிலிருந்து அரசாங்கம் தவறுகிறது. இதை மக்கள் கவனிப்பதை தடுக்க கொண்டுவரப்பட்டுள்ள மேலும் ஒரு புதிய ஊழல் தடுப்புச் சட்டம் இது. அவ்வளவே.

தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளிகள் திரும்ப செலுத்தாது நிலுவையிலிருக்கும் கடன்கள்தான் பொதுத் துறை வங்களின் வாராக் கடன்களின் பெரும் பகுதி. இந்த நெருக்கடியை எதிர்கொள்வதில் அரசாங்கத்திடம் பெரும் மந்தமே இருக்கிறது. மிகப் பெரும் பொதுத் துறை வங்கிகளின் வாராக் கடன்களை இனியும் குறுகிய கால பிரச்னையாக புறந்தள்ளிவிட முடியாது. இந்த வங்கிகளின் தலைமை நிர்வாகிகளை நியமிப்பது, திறனை மேம்படுத்துவது என்ற பெயரில் முதலீட்டை ஒதுக்கீடு செய்வது ஆகிய விஷயங்களில் அரசாங்கம் தனது உரிமைகளை சகட்டுமேனிக்கு பயன்படுத்துகிறது. இந்த நடவடிக்கைகள் இந்திய ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டு அதிகாரத்தில் குறுக்கிடுகின்றன. அரசியல்ரீதியாக நியமிக்கப்படும் வங்கியின் மூத்த நிர்வாகிகள் ஆட்சியிலிருப்பவர்களுடன் சேர்ந்துகொண்டு இந்திய ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறுகின்றனர். பொதுமக்கள் பணத்தை இப்படி பெருமளவில் தவறாக கையாண்டதற்கு எதிராக எழுந்த கடுமையான விமர்சனத்தின் காரணமாக, 2019 தேர்தல் வரும் நேரத்தில் அரசாங்கத்தின் கொள்கை முடங்கிப்போயிருப்பதை மறைக்க இரண்டு மசோதாக்களை நிறைவேற்ற அரசாங்கம் முயற்சி செய்கிறது: வாராக்கடன்களை வசூலிப்பதை விரைவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டு 2018ல் நிறைவேற்றப்பட்ட வங்கி கட்டுப்பாட்டு (திருத்தம்) மசோதா மற்றும் 2018 ஜூலையில் நிறைவேற்றப்பட்ட எஃப்.இ.ஒ.எ. நாட்டின் வங்கி மற்று நிதி அமைப்புகளை கட்டமைப்புரீதியாக மாற்றியமைப்பதற்கான எந்தவொரு வழிவகையும் இந்த சட்டங்களில் இல்லை.

இன்றைய நிதி ஊழலானது ஏதோ ஒரு அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட தற்காலிக பிரச்னை அல்ல. தாராளமயமாக்கல் காலகட்டத்தின் நவீன தாரளவாத அரசியலின் கொடை இது. கட்டுப்பாடுகளை தளர்த்துதல் மற்றும் தாராளமயமாக்கல் மூலம் தனியார் துறையின் வளர்ச்சியை ஊக்குவிக்க அரசு மேற்கொண்ட நடவடிக்கை இது. தனியார் பெரு நிறுவனங்களுக்கு நாட்டின் வளங்கள் தங்குதடையின்றி திறந்துவிடப்பட்டன, அரசின் கொள்கைகளும் தனியார் நலன்களும் ஒன்றுடனொன்று கலந்தன. தனியார் பெரு நிறுவனங்களுக்கு ஆதரவான அரசாங்க திட்டங்கள் மூலம் நாட்டின் செல்வாதாரங்கள் ஒரு சிலருக்கு மறுபங்கீடு செய்யப்பட்டது, பெரும்பான்மை மக்களுக்கு இது இழப்பாக முடிந்தது. இத்தகைய சமூக-பொருளாதார-கலாச்சார பிணைப்புகளை கருத்தில் எடுத்துக்கொள்ளாமல் வகுக்கப்படும் ஊழல் எதிர்ப்பு உத்திகளால் ஆழமாக வேர்கொண்டுள்ள, நாட்டை பீடித்துள்ள சீர்குலைவை தடுக்க முடியாது.

இன்றைக்கு இந்தியாவில் ஊழலுக்கு எதிராக செய்யப்படும் பிரச்சாரங்கள் பெருமளவு தார்மீகக் கோபத்தை அடிப்படையாகக் கொண்டவை இப்போதிருக்கும் அரசாங்கத்தின் உடனடி சட்டங்கள் இந்த அணுகுமுறையுடன் ஒத்திருக்கிறது. தார்மீக அணுகுமுறை ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்துகிறது என்றாலும், தொடக்கத்தில் பெரும் பரபரப்பை உருவாக்கினாலும் ஊழல் எதிர்ப்பு பிரச்சாரம் செய்பவர்களின் உயர்ந்த நோக்கங்களை அடைய இந்த அணுகுமுறை உதவாது.

Back to Top